“யூ டியூப் பார்த்து பார்த்துதானே சமைக்கிற, அப்படி இதையும் ட்ரை பண்ணு. மாலினிக்கும் சேர்த்து செய்” என்றவனை முறைத்தாள்.
“பாவம் மீரா அவ. மார்னிங் அவ அம்மாவையும் கவனிச்சுக்கிட்டு சமைக்க முடியாம பிரட் பன்னுன்னு எடுத்திட்டு வர்றா. எல்லா நாளும் இல்லை, இப்படி செகண்ட் ஷிப்ட் அப்போ செய்து கொடேன், ப்ளீஸ்” என அவன் கெஞ்ச, மறுக்கவில்லை அவள்.
சஞ்சய் கிளம்புவதற்குள் செய்ய வேண்டுமே என வேக வேகமாக எல்லாம் தயார் செய்து வைத்தாள்.
வாங்கி வந்து கொடுத்தவன் அலுவலகம் தயாராக நேரமிருப்பதாக சொல்லி ஐஸக் கூப்பிட்டதாக சொல்லி அவரிடம் சென்று விட்டான். அவர் புதிய கைப்பேசி வாங்கியிருந்தார், அதில் நிறைய விஷயங்கள் எப்படி பயன்படுத்த என தெரியாமல் சஞ்சயிடம் எல்லாம் விளக்கமாக கேட்டுக் கொண்டார்.
அவரின் சந்தேகங்கள் தீர்ந்த பின்னும் அவருடன் பொதுவாக பேசிக் கொண்டு அங்கேயே நின்று விட்டான்.
சஞ்சய்க்காக முதன் முதலில் செய்யும் பிரியாணி, சரியாக வர வேண்டுமே என பார்த்து பார்த்து சமைத்தாள் மீரா.
நேரமாவதை உணர்ந்து அவசரமாக வெளியில் ஓடிச் சென்று, தயாராகும் படி அவனுக்கு குரல் கொடுத்தாள் மீரா.
“போ தம்பி, நீ என்ன இஸ்கூல் போற குழந்தை புள்ளையா? நீயே ரெடி ஆக மாட்டியா?” என்றார் ஐஸக்.
“அவதான் அங்கிள் டீச்சர் மாதிரி நடந்துக்கிறா. டைம் இருக்கு இன்னும்” என சொல்லிக் கொண்டே அகன்றான் சஞ்சய்.
அவன் குளித்து விட்டு வர, சுவை பார்க்க சூடான பிரியாணியோடு நின்றிருந்தாள் மீரா.
“ஹ்ம்ம்… ஆஹா வாசமே பட்டைய கிளப்புதே” என்றான்.
கையில் எடுத்து ஊதி அவனுக்கு ஊட்டி விட்டாள். மிதமான சூட்டில்தான் இருந்தது, ஆனால் வாயை சுட்டு விட்டது போல ஆ ஊ என குதித்து அவளை மிரளச் செய்தான்.
“ஹையோ நான் பார்த்துதான் கொடுத்தேன்” என அவள் பதறவும் விளையாட்டை கை விட்டவன் கண்கள் சிமிட்டி சும்மா என பார்வையால் சொல்லி சுவைத்து சாப்பிட்டான்.
“நல்லாருக்கா?” ஆவலாக கேட்டாள்.
அவளை இழுத்து கன்னத்தில் இதழ் பதித்து, “இந்த டேஸ்ட் விட கம்மிதான்” என்றான்.
“உடம்ப துடைங்க, எம்மேல எல்லாம் ஈரம், போங்க சஞ்சய்…” என்றாள்.
“எங்க போக?” என கேட்டுக் கொண்டே அவளை விட்டான்.
“ச்சீ எப்ப பாரு… என் முன்னாடி இப்படி அரையும் குறையுமா கூச்சமே இல்லாம நிக்கிறீங்க” பார்வையை தழைத்து அவனை குறை சொன்னாள்.
“அபாண்டாமா பேசாத. குளிச்சிட்டு வர்றவன் இப்படித்தான் டவலோட வருவான். நான் எப்படி வருவேன்னு உனக்கு தெரியாதா? டேஸ்ட் பார்க்க வைக்கிறேங்கிற சாக்குல ஆசையா உள்ள வந்திட்டு இப்போ அப்பிராணி மாதிரி ஆக்ட் கொடுக்காத” என்றான்.
“என்ன!” என அதிர்ந்து போனாள்.
“பாரு நான் இப்போ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணணும், சரி போவோம்னு இல்லாம இங்கேயே நிக்கிற. சரி இன்னும் ஆசை படறா போலன்னுதானே எனக்கு நினைக்க தோணும்?” என கேட்டுக் கொண்டே அவன் இடுப்புத் துண்டில் கை வைத்தான்.
ஒரே ஓட்டமாக ஓடி சமையலறை வந்தவளுக்கு நெஞ்சின் படபடப்பு இன்னும் குறையவில்லை.
முழுதாக தயாராகி வந்தவனின் முகத்தை பார்க்காமல் ஏதோ வேலையில் மும்முரமாக இருப்பது போல காண்பித்துக் கொண்டாள்.
“பசியில்ல மீரா, ஆனா பிரியாணி டெம்ப்ட் பண்ணுது, கொஞ்சமா கொடேன்” எனக் கேட்டான்.
பிரியாணியுடன் கத்திரிக்காய் கத்தாசு கொஞ்சமும் வெள்ளரிக்காய் ரைத்தா கொஞ்சமும் வைத்து அவனுக்கு ஊட்டி விட்டாள். அப்போதும் அவனது பார்வையை தவிர்த்தாள்.
“என் ஸ்டைல்ல உன்னை பாராட்டணும், ஆனா இப்போ டைம் இல்லை. நைட் வச்சுக்கிறேன்”
“என்ன?”
“பாராட்டு விழாவை” என கண்கள் சிமிட்டி சொன்னவன், “மாலினிக்கும் இருக்குதானே?” எனக் கேட்டான்.
“ம்ம்… கூடத்தான் வச்சிருக்கேன்”
“ஏய் என்ன சுருதி உள்ள போவுது, நிறைஞ்ச மனசோட சாப்பாடு கொடுக்கணும் மீரா”
“நான் என்ன சொன்னேன் இப்போ? டைம் ஆகிடுச்சு, கிளம்புங்க” என்றாள்.
“உன் கோவத்தையும் நைட் வச்சுக்க. இப்போ வா டாடா பை பை சொல்லு” என சொல்லி அவளின் கையை பிடித்து இழுத்தான்.
அவளும் கேட் வரை வந்து அவனுக்கு விடை கொடுத்தனுப்பினாள். அதன் பின் வீட்டு வேலைகள் அவளுக்கு காத்துக் கிடக்க, பணிக்கு புறப்படும் வரை சரியாக இருந்தது.
மாலை சரியாக ஆறு மணிக்கெல்லாம் அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டான் சஞ்சய். வீடு போய் மீண்டும் மீராவை அழைக்க வந்தால் அலைச்சல் என கருதி நேராக மருத்துவமனைக்கே சென்று விட்டான். அருகிலிருக்கும் கடைகள் பக்கமாக சுற்றி நேரத்தை ஓட்டி, மீராவையும் அழைத்துக் கொண்டுதான் வீடு வந்து சேர்ந்தான்.