காலையில் மீராவை மருத்துவமனையில் விட கிளம்பினான் சஞ்சய். இருவரையும் அப்படி சேர்ந்து பார்க்கவும் ஐஸக்கிற்கு நிம்மதியாக இருந்தது.
அவரிடம் வரும் போது பைக்கின் வேகத்தை குறைத்தவன், “என்ன அங்கிள்… இப்போலேருந்து உங்க ஸ்பை வேலை ஸ்டார்ட் ஆகிருக்குமே. அவருக்கு ஃபோன் போட்டு நாங்க ரெண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்த போறோம்னு சொல்லுங்க” என்றான்.
“ஹையோ தம்பி! இனி உங்கப்பாக்கு ஃபோன் போடறாதவே இல்லை நான்” என்றார் ஐஸக்.
“சும்மா விளையாடுறார் அங்கிள், தப்பா எடுக்காதீங்க” என சமாதானம் போல சொன்னாள் மீரா.
“அதெல்லாம் இல்லைமா. கவனமா வண்டி ஓட்டு சஞ்சய்” என்றார். வேண்டுமென்றே பைக்கை உறுமச் செய்து, அவரை பயமுறுத்தி, பின் கண்கள் சிமிட்டி அவரிடம் கெஞ்சலாக மன்னிப்பு பாவத்தை காண்பித்து சென்றான் சஞ்சய். அவர் சிரித்துக்கொண்டார்.
வார்டு போனதுமே நேற்று விடுப்பு பற்றி அறிவிக்காமல் போனதற்காக மீராவை நன்றாக திட்டினாள் மினி. அவளின் கைப்பேசி அழைப்பையும் மீரா எடுத்திருக்கவில்லை. அதற்கு முந்தைய நாள் மீரா சொன்னதை வைத்து சஞ்சயின் வீட்டிலிருந்து வந்திருப்பார்கள் என அவளே ஊகம் செய்து சமாளித்திருந்தாள்.
“ம்ம்… மறப்ப மறப்ப. என்ன சஞ்சய் வீட்ல ஒத்துகிட்டாங்களா?” என விசாரித்தாள் மினி.
“இல்லை, எங்க மேல கோச்சுக்கிட்டு போயிட்டாங்க” என வருத்தப் பட்டாள் மீரா.
“பரவாயில்லை, நான் வேறல்லாம் கற்பனை பண்ணிட்டேன். என்ன நடந்துச்சுன்னு மதியம் முழுசா சொல்லனும்” என சொல்லி அவளை பணி செய்ய விட்டாள் மினி.
சஞ்சய் தன் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையில் மாலினியுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆமாம் அவர்களுக்குள் நட்பு மலர்ந்த பின் இப்படித்தான் சேர்ந்து சாப்பிடுகின்றனர்.
எலுமிச்சை சாதம், சௌசௌ கூட்டு எடுத்து வந்திருந்தான் சஞ்சய். சுவைத்துப் பார்த்த மாலினி, பிரமாதமாக இருப்பதாக சொன்னாள்.
“மீராவுக்கு அவ்வளவா சமைக்கவே தெரியாது. ஆனாலும் டேஸ்ட்டா செய்றால்ல?” என்ற சஞ்சய்க்கு ஒரே பெருமை.
“ம்ம்… உனக்கு சமையல் தெரியாதா?” எனக் கேட்டாள் மாலினி.
“அந்த ரிஸ்க்லாம் நான் எடுக்கிறது இல்லை. உனக்கு சமையல் வருமா?”
“வருதோ இல்லியோ… எதையாவது செய்ய வேண்டியதுதான். வீட்டுக்கு ஹெல்ப்புக்குன்னு ஒரு ஆன்ட்டி வச்சிருக்கேன். காலையில நான் ஆஃபிஸ் வர்றதுக்கு முன்னாடி அவங்களால வர முடியாது. எனக்கு மட்டும் சிம்பிலா ஏதாவது செய்துப்பேன். அம்மாக்கு அவங்கதான் சமைப்பாங்க, மத்த எல்லா வேலையும் கூட அவங்கதான்” என்றாள்.
“ஓ அதுதான் எப்பவும் சாண்ட்விச், இல்லைனா சப்பாத்தி வெறும் தால்’னு எடுத்திட்டு வர்றியா?”
“ம்ம்…”
“அந்த ஆன்ட்டிக்கு எவ்ளோ பே பண்ற மாலினி?” என விசாரித்தான் சஞ்சய்.
அவனுக்கு மீராவை நினைத்து கவலை, நாமும் அப்படியொருவரை உதவிக்கு வைத்துக் கொண்டால் மீராவுக்கு அதிக வேலைப்பளு இருக்காதே என்ற எண்ணத்தில் கேட்டான்.
மாலினி சொன்ன தொகையை கேட்ட பிறகு, “அவ்ளோதானா அவங்க சேலரி? அதுல எப்படி ஃபேமிலிய பார்ப்பாங்க?” என விசாரித்தான்.
“அவங்களுக்கு அது பெரிய தொகைதான் சஞ்சய். அவங்கவங்க தேவைகள், வாழுற சூழல் இதெல்லாம்தான் அவங்களுக்கு எவ்ளோ அமௌன்ட் வேணுங்கிறத தீர்மானிக்குது”
“நீ வாழ்ந்த சூழல் வேற இப்போ வாழற சூழல் வேற. இதைப் பத்தி உன்னை விட மீராவுக்குத்தான் நல்லா தெரியும்னு நினைக்கிறேன்” என்றாள்.
சஞ்சயின் குடும்பம் பற்றி முழு விவரங்களும் மாலினிக்கு தெரியாது. வசதியான வீட்டு பிள்ளை, காதலுக்காக வீட்டை பிரிந்து இங்கு இருக்கிறான் எனதான் நினைத்திருந்தாள்.
மாலினிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு தொடர தன்னைப் பற்றிய சில உண்மைகள் தெரியாமலே இருக்கட்டும் என சஞ்சயும் சொல்லியிருக்கவில்லை.
“எனக்கொன்னும் தெரியாதுன்னு எங்கப்பா மாதிரியே சொல்ல வர்றியா?” என சற்றே கோவமாக கேட்டான் சஞ்சய்.
“ஓ உன் அப்பா அப்படி சொல்வாரா?” என சிரிப்புடன் கேட்டவள், “நான் அந்த மீனிங்ல சொல்லலை. இதையெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கான வாய்ப்பு இனிமேல்தான் உனக்கு வரும். நான் அதிகமா சேலரி வாங்குறேன்னு நீ நினைக்கலாம். உண்மையை சொல்லப் போனா என் மன்த்லி சேலரிலேருந்து அவங்களுக்கு அவ்ளோ கொடுக்கிறதுக்கு நான் சில விஷயங்கள்ல என் செலவை சுருக்கிக்கணும். அம்மாவோட மெடிக்கல் எக்ஸ்பென்ஸஸ் எவ்ளோ ஆகும்னு தெரியுமா? என்னோட மத்த கமிட்மெண்ட்ஸ் என் ட்ரீமை நோக்கி போகன்னு எனக்கு நீ நினைக்க முடியாத அளவுக்கு செலவுகள் இருக்கு”
“ஸாரி மாலினி, நிஜமா உனக்கென்ன நல்ல சேலரி அப்படினு மனசுல ஓடிச்சுதான். எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிற நீ?”
“பார்ட் டைம் ஜாப்” என அவள் சொல்ல அவனுக்கு நல்ல வியப்பு.
“என்ன மாதிரின்னு சொல்லேன் மாலினி”
கல்லூரி மாணவர்களுக்கும் வேலை தேடும் பட்டதாரிகளுக்கும் ரெஸ்யூம் தயாரித்து தருவது அவர்களை நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி கொடுப்பது என ஆன்லைன் வழியாக செய்து தருகிறாள். அதில் பெரிதாக இல்லையென்றாலும் ஓரளவு வருமானம் வருகிறது. வார இறுதி நாட்களில் எப்போதாவது கார்ப்பரேட் ஈவன்ட்களில் தொகுப்பாளினியாகவும் கலந்து கொள்வாள். அதில் ஒரு நிகழ்ச்சிக்கே நல்ல வருமானம் கிடைக்கும்.
இதையெல்லாம் அவனிடம் சொன்னவள், “சில சமயம் இப்படி ஈவண்ட் ஹோஸ்ட் பண்றப்போ வர்ற அமௌன்ட் என் சேலரிய விட அதிகமா இருக்கும். அப்பவும் எனக்கு போதல. இப்போ நீயும் மீராவும் மட்டும்தான். குழந்தைன்னு வந்தா செலவுகள் அதிகமாகும். சமாளிக்கும் போதுதான் உன்னால புரிஞ்சுக்க முடியும்” என்றாள்.
சாதாரணமாக ஆரம்பித்த பேச்சுதான். ஆனால் அப்பா சொன்னது போல தன்னால் சமாளிக்க இயலாதோ என பயந்து விட்டான் சஞ்சய்.
அவளுக்கிருக்கும் திறமையை பயன்படுத்தி வார இறுதியில் கூட பணம் ஈட்டுகிறாள். தன்னால் அப்படி என்ன செய்ய முடியும் என யோசித்தவனுக்கு தன்னை நினைத்து கோவம் வந்தது.
இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். அவனையே கவனித்துக் கொண்டிருந்த மாலினி, “உனக்கும் பார்ட் டைம் ஜாப் போகணும், ஆனா என்ன செய்யன்னு தெரியலை, அதானே?” என சரியாக கணித்து கேட்டாள்.
“தெரியலைன்னு இல்லை மாலினி. உன்னைப் போல என்கிட்ட அப்படி எந்த டேலண்ட்டும் இல்லை”
“நீ ஃப்ளூயன்ட்டா இங்கிலிஷ் பேசுற. என்னை போல நீயும் ஈவண்ட்ஸ் ஹோஸ்ட் பண்ணலாம்”
“அப்படிலாம் நான் ஸ்டேஜ்ல பேசினது இல்லை”
“நான் ட்ரைன் பண்றேன். ஆனா இது ஆன்லைன்ல முடியாது. வீக் எண்ட் வீட்டுக்கு வா, ஈவ்னிங் நான் ஃப்ரீதான், அப்போ சொல்லித் தர்றேன்” என்றாள்.
“நிஜமாவா மாலினி?” என உற்சாகமாக கேட்டவன், “ஃபீஸ் எவ்வளவு?” என தயக்கமாக கேட்டான்.
தன் கையிலிருந்த உணவு டப்பாவை கொண்டு அவன் தலையில் வலிக்காமல் ஒரு அடி வைத்தவள், “இப்படி மீரா சமைக்கிற சாப்பாடு எப்பவாவது கொண்டு வந்து தா, அதான் ஃபீஸ்” என்றாள்.
“ஹேய் அது வேற. நீ எதாவது வாங்கிக்கனும் மாலினி”
“ப்ச் வேணாம் சஞ்சய். உன்னை திட்டிட்டேன்ல… ரொம்ப கில்ட் ஆகிடுச்சு. உனக்காக இதை நான் செஞ்சா அந்த கில்ட் போயிடுமா இருக்கும். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு” என அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்லி விட்டாள்.