மாநிலத்தின் ஆளும் கட்சியின் அரசியல் ஆலோசகர் மற்றும் வியூக அமைப்பாளர்தான் வீரராகவன். தன்னை விட அந்தஸ்தில் உயரத்தில் இருந்த குடும்பத்து பெண்ணான தேவகியை காதல் திருமணம் செய்து கொண்டு ஒன்றுமில்லாமல் சென்னை வந்தவர், தனது புத்தி சாதுர்யத்தால் தன்னை உயர்த்திக் கொண்டவர்.
நாட்டின் சக்தி வாய்ந்த இடங்களில் தன் காரியங்களை சாதித்துக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு.
ஆனாலும் தேவையின்றி தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள மாட்டார். குடும்பத்தின் சுதந்திர வாழ்க்கையை முக்கியமாக கருதுபவர். அதைவிட அவருக்கு என சில அடிப்படை கொள்கைகள் இருக்கின்றன. இந்த காரணங்களால் அவர் அரசியலில் சம்பந்த பட்டவர் என உயர் மட்டத்தில் இருப்பவர்களை தவிர வெளியில் யாருக்கும் தெரியாது.
குடும்பத்துக்கு என அவர் ஆரம்பித்த நிதி நிறுவனம்தான் அவரது அடையாளம். இப்போது அதனை அவரது மூத்த மகன் பிரவீண்தான் நிர்வகித்து வருகிறான். அவனுடைய மாமனார் மத்தியில் ஆளும் கட்சியின் காபினட் அமைச்சர்.
சோஃபாவில் படுத்திருந்த சஞ்சய், தன் அரவணைப்பில் இருந்த மீராவிடம் சொல்லவும் அவள் மலைப்பாக பார்த்தாள்.
“ஏற்கனவே நான் வசதியான வீட்டு பிள்ளைன்னு டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவ நீ. இவ்ளோ தூரம் உன்கிட்ட சொன்னா ரொம்ப விலகி போயிடுவியோன்னு எனக்கு பயம். அப்புறம் மேரேஜ் ஆகிடுச்சு, கொஞ்ச நாள் போனதும் சொல்லிக்கலாம்னு இருந்திட்டேன்” என்றான் சஞ்சய்.
“உங்கப்பாகிட்ட பேசினீங்களா?” எனக் கேட்டாள்.
“ம்ம்… ஸ்டேஷன்ல கமிஷ்னர் பேச வச்சார். வீட்டுக்கு போய் தூங்குன்னு மட்டும் சொல்லி வச்சிட்டார் அப்பா” என்றான்.
“வேற… நம்மள பத்தி ஏதும் கேட்டுக்கலையா?”
“இல்லை மீரா. நீ ரொம்ப பயப்படாத. எங்க வீட்ல லவ் மேரேஜ்லாம் சாதாரணம், ஈஸியா அக்செப்ட் பண்ணிப்பாங்க. உன்னைப் போல ஒரு பொண்ணை வேணாம்னு சொல்ல முடியுமா? அபப்டியே என் அப்பா எதுவும் சொன்னாலும் என் அம்மா எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அம்மா பேச்சை அப்பா மீறவே மாட்டார்”
“எவ்ளோ சொல்லிருக்கேன் என் அம்மா பத்தி. அவங்கள போல ஸாஃப்ட் அண்ட் கைண்ட் பெர்சனை நான் பார்த்ததே இல்லை. நான் கூட எங்கம்மா மாதிரிதான்னு அவங்களே சொல்லுவாங்க. என்ன… நான் இப்போ அவங்க யாருக்கும் ஷாக் தர வேணாம்னு நினைச்சிருந்தேன். என்னை மீறி இப்போவே தெரியற மாதிரி ஆகிடுச்சு” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள் மீரா.
“உன்னை ட்ரெயின்ல மீட் பண்ணின சமயத்துல நான் அப்பாகிட்ட சண்டை போட்ருந்தேன். ராஜசேகரன் உங்க ஊர் எம் எல் ஏவோட பினாமின்னுலாம் நீயும் என்கிட்ட சொல்லவே இல்லை. அப்பவே தெரிஞ்சு, எனக்கும் அப்பாக்கும் டெர்ம்ஸ் சரியா இருந்திருந்தா இந்நேரம் ராஜசேகரன் ஜெயில்ல இருந்திருப்பான். ப்ச்… தப்பிச்சிட்டான். நீயும் கனடா போக ட்ரை பண்ணிட்டு இருந்தியா? இங்கேருந்து போக வைக்க ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். அப்புறம் ஏதேதோ நடந்திடுச்சு”
“ஷாக் ஆகாத, அவர் ஒன்னும் நல்லவர் இல்லியே? உன் அண்ணிதான் உங்கம்மாக்கு ஃபோன் கொடுத்து உன்கிட்ட பேச வச்சாங்களாம், அது தெரிஞ்சு உன் அண்ணி கூட சண்டை. அவங்கள அடிச்சு இடைல வந்த அவர் பையனை தள்ளின்னு ஒரே அமக்களம் பண்ணிட்டாராம். ஆன்ட்டிய கூட தள்ளி விட்டு அவங்களுக்கு அடிலாம் பட்டிடுச்சாம்” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, திடுக்கிட்டு போய் அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றாள் மீரா.
“ஆன்ட்டி இப்போ நல்லாருக்காங்க மீரா. டென்ஷன் ஆகாத” என்றவன் அவளை தன்னருகிலேயே அமர வைத்துக் கொண்டான்.
“இன்னும் ராஜசேகரனுக்கு நம்ம கல்யாண விஷயம் தெரியல. உன் அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு ‘உன் மகன் வெளில வரணும்னா உன் மக இங்க வரணும்’னு மிரட்டலாம். உன்னை வரவழைக்க சொல்லி உன் அண்ணியும் ஒரே அழுகை ஆர்ப்பாட்டம்னு படுத்தி வைக்கிறாங்களாம்”
“ஏன் இதையெல்லாம் என்கிட்ட சொல்லலை சஞ்சய்?”
“உனக்கு தெரியறதால என்ன ஆக போகுது மீரா? லேடிஸ் அடிச்சு, சின்ன குழந்தையை வேற பயமுறுத்தி வச்ச உன் அண்ணன் மேல நான் ரொம்ப கோவத்துல இருந்தேன். அதனால ஜெயில்ல கொஞ்ச நாள் இருக்கட்டும்னு விட்டுட்டேன். கார்த்தி ஸாரும் மேரேஜ் மேட்டர்லாம் சொல்லி இன்னும் இன்னும் உங்கம்மாக்கு ஷாக் தர வேணாம்னு சொன்னார். உன் அண்ணன் அவரோட தப்பை ரியலைஸ் பண்ணட்டும், என் அண்ணங்கிட்ட சொல்லி மெதுவா வெளில எடுக்கலாம்னு நினைச்சிருந்தேன்” என்றான்.
“கவின்?” என கவலையாக கேட்டாள். பாஸ்கரின் நான்கு வயது மகன் அவன்.
“உன் ஊர்ல நடக்கிற விஷயத்தையெல்லாம் ஸார் மூலமா நான் ஃபாலோ பண்ணிட்டுதான் இருக்கேன். கவின், உன் அம்மா, உன் அண்ணி எல்லாரும் உன் அண்ணன் தொல்லை இல்லாம நல்லா இருக்காங்க” என்றான் சஞ்சய்.
கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள் மீரா.
“உன் மாமியார் நம்மள இனியும் இங்க விட்டு வைக்க மாட்டாங்க, சென்னைக்கு கூப்பிட்டுக்குவாங்க. என் அப்பாதான் திட்டுவார், ப்ச் எனக்கு அது பழக்கம்தான். நாம ஃபர்ஸ்ட் சென்னை போயிடலாம். உன் வீட்ல நடக்கிற பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்” என சொல்லிக் கொண்டே அவளின் கைகளை அவளின் முகத்திலிருந்து பிரித்தெடுத்தான்.
“இதையெல்லாம் உன்கிட்ட சொன்னது நீ அழறதுக்கு இல்லை மீரா. அடுத்து அப்பா இங்க வரும் போது உனக்கு இதெல்லாம் தெரியாம இருக்க கூடாதுன்னுதான் சொன்னேன். எல்லாம் சரியாக போகுது, நாம ஹாப்பியா இருக்க போறோம்” என சொல்லி அவளை அணைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் சனிக்கிழமை, மீராவுக்கு மருத்துவமனை செல்ல வேண்டும். எது செய்யவும் அவளுக்கு நாட்டமே இல்லை. சஞ்சயின் வீட்டிலிருந்து யார் எப்போது வருவார்கள் என தெரியாது, அந்த நேரம் விடுப்பு வேண்டும் என்பதால் இன்று பணிக்கு கிளம்பினாள்.
சஞ்சய் நல்ல உறக்கத்தில் இருந்தான். நடு இரவை கடந்துதானே இருவரும் உறங்கியிருந்தனர். சத்தம் செய்யாமல் காலை உணவு மட்டும் செய்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். ஐஸக் மரத்தடியில் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தார்.
“சஞ்சய் இன்னும் எந்திரிக்கல அங்கிள், கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாருங்க. நான் மதியம் வீட்டுக்கு வந்து சமைக்கிறேன்னு சொல்லுங்க” என்றாள்.
“சஞ்சயோட அப்பா யாருதான்மா, நைட்டு முழுக்க எனக்கு ஒரே மண்டை குடைச்சல்” என்றார் ஐஸக்.
விவரம் சொன்னாள் மீரா. வாய் பிளந்த படி கேட்டிருந்த ஐஸக், “உங்க கல்யாணத்தை ஒத்துக்கவும் செய்திட்டாங்களா?” என விசாரித்தார்.
“சஞ்சய்கிட்ட கேளுங்க அங்கிள், எனக்கு டைம் ஆச்சு” என்றவளை அனுப்பி வைத்து விட்டார்.
சற்று நேரத்தில் வீரராகவன் அவருக்கு அழைத்து பேசினார். எதையும் எடுத்து சொல்லும் நிலையில் இல்லை ஐஸக். அவர் என்ன சொன்னாரோ அதற்கு ம் போட்டுக் கொண்டார்.
சஞ்சய் பத்து மணிக்குத்தான் எழுந்தான். அவனிடம் பேசி விட்டு செல்ல வேண்டும் என காத்திருந்தார் ஐஸக்.
“உன் வீட்ல என்ன சொல்றாங்களோ அப்படி நடந்துக்க. உன் அப்பாகிட்ட சொல்லியே மீரா பொண்ணு பிரச்சனைக்கும் ஒரு முடிவை கட்டி அதுக்கொரு நல்ல வழி காட்டிடு” என்றார்.
“இப்படி பேசாதீங்கன்னு நேத்தே உங்கள்ட்ட சொன்னேன் நான்” என கண்டிப்புடன் சொன்னான்.
“மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக்காத சஞ்சய். உன் அப்பா சொல் படி கேட்டு நட” என அவர் சொல்ல, நெற்றி சுருக்கியவன், “அப்பா உங்கள்ட்ட பேசினாரா?” எனக் கேட்டான்.
ஆம் என்றவர், “அறியாத ஊருல நடந்த விஷயம் உன் ஊருலேயோ மீரா பொண்ணு ஊருலேயோ தெரிய போறது இல்லை. பெரியவங்கள அதுவும் உன் அப்பா மாதிரி பெரிய மனுஷரை எதித்து வாழ்ந்திட முடியுமா? புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க” என அறிவுரை வழங்கி புறப்பட்டு விட்டார்.
இன்னும் வீட்டினர் யாரும் தனக்கு கூப்பிடவில்லை என்பது நினைவுக்கு வர, கைப்பேசியை எடுத்து அம்மாவுக்கு அழைத்தான்.
அம்மா பேசிய விதமே அவருக்கு விஷயம் தெரிந்து விட்டது, கோவமாக இருக்கிறார் என்பதை இவனுக்கு உணர்த்தியது.
“அப்பா சொல்லிட்டாரா மா?” எனக் கேட்டான்.
“என் கண்ணு முன்னாடி இருந்தேன்னு வைடா… கன்னத்தை பழுக்க வச்சிருப்பேன். சின்ன புள்ள விவரம் இல்லாதவன்னு நான் நினைச்சிருந்தா எப்படி இப்படியொரு காரியத்தை செய்ய முடிஞ்சுது உன்னால?” என ஆரம்பித்தவர் பத்து நிமிடங்கள் இடைவெளி விடாமல் அவனை திட்டி தீர்த்தார்.
அம்மா வேதனைப்படுவார் என இவனுக்கு தெரியும், ஆனால் இப்படியொரு கோவத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.
சஞ்சய்க்கு நல்லது கெட்டது தெரியாது. உலக அனுபவம் இல்லாத விளையாட்டு பையன். அவனை எளிதாக ஏமாற்றி விடலாம். அடுத்தவருக்கு உதவுகிறோம் என உணர்ச்சிப் பெருக்கில் ஏடாகூடமாக ஏதாவது செய்து விட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வான். இப்படியாகத்தான் அவனைப் பற்றி அவனது வீட்டினருக்கு எண்ணம்.
மீராவை காதலித்து அவன் மணம் புரிந்திருந்தால் அது வேறு. இப்படி இக்கட்டான சூழலில் தாதாவின் தவறான புரிதலில் நடந்த சடங்கை அவர்கள் திருமணமாகவே நினைக்கவில்லை.
ஒரு பெண்ணுக்கு உதவ போய், அதற்காக அவளுடனே தன் மகன் காலம் முழுக்க வாழ வேண்டும் என்பதை தேவகியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சஞ்சயின் திருமணம் பற்றி அவருக்கு நிறைய கனவுகள் இருந்தன. அவனுக்கு வரப் போகும் பெண்ணை பற்றி எதிர்பார்ப்புகள் வைத்திருந்தார். மீராவை பற்றி அவர் கேள்விப்பட்ட வரை, சஞ்சய்க்கு துளியும் பொருத்தமில்லாத பெண் அவள்.
மகன் முன் யோசனை இல்லாமல் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டதை போலத்தான் நினைத்தார்.
“அப்பா நாளைக்கு வருவார், அவரோட கிளம்பி வர்ற நீ, நீ மட்டும்! புரிஞ்சுதா?” என கடுமையுடன் சொன்னார்.
“என்னம்மா நீ…”
“ஷ்ஷ்ஷ் சஞ்சு! எதுவா இருந்தாலும் இங்க நேர்ல வந்து பேசு” என அதட்டியவர், “அம்மாகிட்ட வந்திடுடா கண்ணா” என கெஞ்சலாக சொன்னார்.
“நான் பேசுறத கேட்காமல் வா வான்னா என்னம்மா அர்த்தம்?” கோவப்பட்டான் சஞ்சய்.
“நீ பேசுற எதிலேயும் அர்த்தம் இல்லைனு அர்த்தம்” என்றார்.
“என்னை நம்பின பொண்ணை விட்டுட்டு வர சொல்றியா நீ?”
“அந்த பொண்ணுக்கு என்ன தேவையோ எல்லாத்தையும் செஞ்சு கொடுக்க சொல்லியிருக்கேன் அப்பாக்கிட்ட”
“நான் அவ ஹஸ்பண்ட்மா, மீரா உங்க மருமக”
“வாயை மூடு சஞ்சய்!” பற்களை கடித்தார் தேவகி.
“லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்கதானே மா நீயும் அப்பாவும்? ஏன் அண்ணன் செய்யல, அக்கா செய்யல? நான் மட்டும் செய்யக் கூடாதா?”
“அவ்ளோதான் சஞ்சய் உனக்கு! நீ லவ் மேரேஜ் பண்ணிருக்கியா அந்த பொண்ண? உதவின்னு கேட்டா பணம் காசுதான் தரணும், இல்லை முடிஞ்ச வேற ஏதாவது உதவி செய்யணும். அத விட்டுட்டு முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு வாழ்க்கைல பங்கு கொடுப்பியா? அப்படி என்னடா தலையெழுத்து உனக்கு?”
“ம்மா ம்மா… மீரா பத்தி…”
“இனி அந்த பொண்ணு பத்தி ஒரு வார்த்தைக பேசக் கூடாது நீ! யார் செஞ்ச புண்ணியமோ இப்பவே நீ பண்ணி வச்ச கூத்து எங்களுக்கு தெரிய வந்தது. நீ முதல்ல வீடு வந்து சேரு” என முடிவாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.
தனக்கு ஆதரவு கிடைக்கும் என நினைத்த இடத்திலிருந்தே பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கவும் மனதளவில் மிகவும் துவண்டு விட்டான் சஞ்சய்.
அம்மாவை தொடர்ந்து அக்காக்களும் அவர்களின் கணவர்களும் வேறு எடுத்து சொன்னார்கள். அண்ணி அழைக்கவும் அவன் எடுக்கவே இல்லை. இன்னும் அண்ணன் பேசாதது வேறு உறுத்தலாக இருந்தது. பிரவீண்தான் தன் ஆருயிர் தம்பியின் வாழ்க்கையை சரி செய்ய, அப்பாவின் கட்டளை படி மீராவின் ஊருக்கு சென்றிருக்கிறானே?
சஞ்சய் எழுந்தானா சாப்பிட்டானா என விசாரிக்க, பணிக்கு இடையில் கிடைத்த நேரத்தில் அவனுக்கு அழைத்தாள் மீரா.
“பசிக்கல மீரா, அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என சலிப்பாக சொன்னான்.
“கொஞ்ச நேரம் போனா லஞ்ச்க்கே டைம் வந்திடும்”
“வரட்டுமே என்ன இப்போ? குழந்தைக்கு டிக்டேட் பண்ற மாதிரி பண்ணாத, இரிடேட் ஆகுது” என சிடு சிடுத்தான் சஞ்சய்.
அவள் அமைதியாக, வைக்கிறேன் என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் சஞ்சய்.
சஞ்சயின் கோவத்திற்கு பின்னால் என்னவோ இருக்கிறது என்பதை உணர்ந்த மீராவின் உள்ளுக்குள் இனம் தெரியாத பயம் படர்ந்தது.