அவளின் தலையை தன் மார்போடு அழுத்திக் கொண்டவனுக்கும் நெஞ்சம் கலங்கியது.

“பொண்ணுங்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லையா சஞ்சய்? நான் எங்கேதான் போய் நிம்மதியா வாழ? எல்லா இடத்திலேயும் ஏதாவது பிரச்சனை வருது” என்றாள்.

“அங்கேயே அவனுக்கு நாலு அறை கொடுத்திருக்கணும் நீ, எதுக்காக அழற?”

“நான் அப்படி பண்ணுவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை சஞ்சய். திடீர்னு பின்னாலே இருந்து என்னை கட்டி பிடிச்சிட்டான். அவன் கை எம்மேல…” என்றவள் அதற்கு மேல் சொல்ல இயலாமல் உடலை குறுக்கிக் கொண்டாள்.

அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டே இருந்தான். சில நிமிடங்கள் கடந்தும் அவள் அவனை விட்டு விலகியிருக்கவில்லை. அவன்தான் விலக்கி நிறுத்தி, “நல்ல விஷயங்களை மட்டும்தான் நினைவு வச்சுக்கணும் மீரா. இதை இப்பவே மறந்து போற. போ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ” என்றான்.

அவனது அருகாமையில் அவளுக்கும் ஓரளவு சமாதானமாக இருந்தது. நன்றாக குளித்து விட்டு வேறு ஆடைக்கு மாறினாள். இருவருக்குமே பசியில்லை. பிரட் டோஸ்ட் செய்தாள் அவள். மாடிக்கு செல்லாமல் ஹாலிலேயே உணவை முடித்துக் கொண்டனர்.

சஞ்சய் அவனை அடித்ததும் காரில் அவர்கள் துரத்தியதும் இவளுக்கு நினைவிலாடியது. பெரிய இடத்து பசங்கள் இதை சும்மா விடுவார்களா என அச்சமாக இருந்தது. அந்த லிஃப்டில் கண்காணிப்பு கேமரா இருந்திருந்தால் நடந்தது தெளிவாக பதிவாகியிருக்குமே என நினைக்கும் போதே, ஓய்வறையின் வெளிப் பக்கத்திலும் கேமரா இருந்து அங்கு நடந்ததும் பதிவாகியிருக்குமா என அவளுக்கு கவலையானது.

சஞ்சய் அவளின் கை பிடிக்கவும்தான் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டு அவனை பார்த்தாள். சோஃபாவில் அவளை அமர்த்தி தன் மீது சாய்த்துக் கொண்டான். அவளுக்கும் அவனது ஆறுதல் தேவையாக இருக்க, வாகாக சாய்ந்திருந்தாள்.

“இன்னும் அதே யோசனையா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்றான்.

தன் பயத்தை சொன்னாள்.

“இல்லையில்லை அங்க ரெஸ்ட் ரூம் ஏரியால கேமரா ஆக்ஸஸ் இல்லை, நான் செக் பண்ணினேன். பயப்படாத” என்றான்.

“லிஃப்ட்ல?”

“அதை நான் கவனிக்கல. அந்த நாதாரிய சும்மா விட்டுட்டு வர்றோமேன்னு எம்மேலயே எனக்கு கோவம். பார்த்தா அவனே தொக்கா வந்து என்கிட்ட மாட்டினான். அவ்ளோ பொளந்தும் எனக்கு இன்னும் சேட்டீஸ்ஃபை ஆகல. கேமரா இருந்தாலும் பார்த்துக்கலாம், விடு”

“ஏன் அப்படி பண்ணுனீங்க? நாம அந்த பொறுக்கியை அவாய்ட் பண்ணிட்டு வந்திருக்கலாம்”

“நைட் தூங்கவே முடியாது என்னால… எனக்கு ரெஸ்ட்லெஸ் ஸ்லீப் பிடிக்காதுன்னு  உனக்கு தெரியாதா?”

“உங்களுக்குள்ள இப்படி ஒருத்தன் இருப்பான்னு நினைக்கவே இல்லை” என்றாள்.

“ஹேய் என்ன இப்படி சொல்லிட்ட? காலேஜ் டைம்ல நாங்க தனி கேங்க். ரெண்டு தடவ சஸ்பென்ட் ஆகியிருக்கேன்”

“நிஜமாவா?”

“ம்ம்… பிரின்சிபல் பனிஷ் பண்றதா நினைச்சு எங்களை சஸ்பென்ட் பண்ணினார். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லிட்டு கொடைக்கானல் பிக்னிக் போயிட்டோம், செம என்ஜாய்மென்ட்”

“வீட்ல ஒன்னும் சொல்லலையா?”

“அதெல்லாம் அப்பா போதும் போதுங்கிற அளவுக்கு வச்சு செஞ்சார் என்னை”

“ப்ச் அப்படி இருந்ததுல பெருமை வேற?”

“அப்போ அப்படி மீரா. அந்த வயசுல தப்பு சரியெல்லாம் எனக்கு தெரியல. இப்போ மட்டும் தெரியுதான்னு கேட்காத, எனக்கு பதில் தெரியாது. உன்கிட்ட எதுக்கு சொல்றேன்னா நான் ஃபன்னா இருக்கேங்கிறதுக்காக கோவம் வராதுன்னுலாம் கிடையாதுன்னு நீ தெரிஞ்சுக்கணும்” என்றான்.

அவள் ம் போட்டுக் கொள்ள, “அதுக்குன்னு பயந்துக்காத. ரெண்டு தடவ நான் சஸ்பென்ட் ஆனப்போவும் எல்லா தப்புமே எம்மேல மட்டுமே இல்லை.. சொல்ல போனா நான் எதுவுமே செய்யல. சிச்சுவேஷன் என்னை அப்படி காட்டிடுச்சு” என்றான்.

“தப்பு செய்யலன்னு நீங்க சொல்லலையா?”

“சொல்லி என்னாக போகுது? எல்லாத்தையும் சொன்னா என் கிளாஸ் மேட் இன்னொரு பையன் மாட்டியிருப்பான். அவன் எங்கள மாதிரி கிடையாது. அப்பா இல்லாத பையன். வில்லேஜ்ல இருந்து மெரிட்ல சீட் கிடைச்சு படிக்க வந்தவன். அவன் கேங்குக்கும் எங்களுக்கும் நல்ல மிஸ்அண்டர்ஸ்டான்டிங், அவனுக்கும் அந்த நேர கோவம், அவன் மாட்டிக்க வேணாம்னு நான் வாய் தொறக்கல, நான் சொன்னேன்னு என் ஃபிரெண்ட்ஸும் அமைதியா வாங்கி கட்டிக்கிட்டாங்க”

“ஏன் அப்படி கெட்ட பேர் வாங்கணும்?”

“நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவன்னு தெரிஞ்சா போதும்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் அவன் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டாள்.

“என்ன… நான் நல்லவன் இல்லியா?” எனக் கேட்டான்.

“உங்களை போல ஒருத்தரை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை”

“என்ன சொல்ல வர்ற? நான் நல்லவனா கெட்டவனா?”

“அது உங்க மனசாட்சிக்கு தெரிஞ்சா போதாதா?”

“ஓ அப்படி வர்றீங்களா? ம்ம்…” என்றான்.

நாளை மீராவுக்கு மதிய ஷிப்ட் பணி. சஞ்சய் காலையிலேயே அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால், “தூங்கலாம் சஞ்சய்” என சொல்லி விலகினாள்.

“ம்ம்… நாளைக்கு லீவ் போட்டுக்கிறியா?” எனக் கேட்டான்.

“இல்லையில்ல, நான் போறேன்” என்றாள்.

“நீ போய் படு, எனக்கு கொஞ்ச நேரம் ஆகும்” என்றான்.

“டைம் ஆச்சுல்ல சஞ்சய்?”

“லேட்டா தூங்கியே பழகிட்டேன். இப்போ படுத்தாலும் தூக்கம் வராது, நான் என்ன பண்ண?” எனக் கேட்டவனுக்கு என்ன பதில் சொல்லவென அவளுக்கும் தெரியவில்லை.

சஞ்சயின் மார்பில் சாய்ந்திருந்த போது நிலையாக இருந்த மனம், தள்ளியிருக்கவும் அலைக்கழிய ஆரம்பித்தது.

சஞ்சயிடமிருந்து அடி வாங்கியவனுக்கு ஏதோ ஆவது போலவும், அதனால் இவனுக்கு ஏதோ ஆபத்து வருவது போலவும் காட்சிகள் விரிய, திடுக்கிட்டுப் போய் நெஞ்சில் கை வைத்தாள்.

அவளையே பார்த்திருந்தவன், “என்ன மீரா, உனக்கும் தூக்கம் வரலையா?” எனக் கேட்டான்.

ஆம் என்பதாக தலையாட்டினாள். அரை நிமிடம் அவளையே ஆழ்ந்து பார்த்தவன், சட்டென அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“என்ன!” திகைப்புடன் கேட்டாள்.

“நீ டிஸ்டர்ப்டா இருக்க மீரா. இப்படி இருக்கும் போது பெட்டரா ஃபீல் ஆகுற போல. இப்படியே இரு, தூக்கம் வரும் போது போலாம்” என்றான்.

அப்படி அவளை நெருக்கமாக வைத்திருப்பது தனக்கும் பிடித்திருக்கிறது, மனதிற்கு இதமாக இருக்கிறது என்பதையெல்லாம் அவன் உணரவே இல்லை.

மீராவுக்கு இன்னதென்று விவரிக்க இயலாத உணர்வுகள். அதிகமாக அழுததில் கண்கள் எரிந்து கொண்டிருக்க, உள்ளமோ ‘எனக்கு சஞ்சய் இருக்கிறான்’ என்பதில்  குளிர்ந்து போனது.

அப்படியே சோஃபாவிலேயே சஞ்சய் கால்களை நீட்டி படுத்திருக்க, அவன் மீதே படுத்து உறங்கிப் போயிருந்தாள் மீரா. அவளை அறையில் படுக்க வைக்கலாமா என நினைத்தான்தான். ஆனால் செயல்படுத்த மனம் வரவில்லை.

தான் படுத்திருக்கும் விதத்தை கொஞ்சம் இலகுவாக்கி அவளை வசதியாக தன் மீது கிடத்திக் கொண்டான். சில நிமிடங்களில் அவனும் உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.

அந்த சிறிய சோஃபாவில் அவர்களுக்குள் இருந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரம்பித்திருந்தது.