தான் நினைத்ததை பகிர்ந்தவன், “அப்பாம்மா விளையாட்டு விளையாடுறோம்னு ஃபீல் வந்திடுச்சு” என கிண்டலாக சொன்னான்.
அவளும் சிரித்துக்கொண்டே சமையலறை சென்று விட்டாள்.
உடல் கழுவி வேறு உடை மாற்றி அவன் வந்த போது சூடான தேநீர் அவனுக்கு சுகமாகத்தான் இருந்தது.
“ஹ்ம்ம்…” என தேநீரை மட்டுமல்ல மனைவியின் அந்த கவனிப்பையும் ரசித்துக் கொண்டே பருகினான்.
“உன் வீட்ல எப்படி மீரா, உங்கப்பா இருந்த வரை உங்கம்மா எப்படி பார்ப்பாங்க?” என விசாரித்தான்.
“எங்கப்பா முகத்தை ஃபோட்டோலதான் பார்த்திருக்கேன். வேற நினைவுகள் இல்லை சஞ்சய்” என்றவளின் முகம் சுணங்கியது.
“ஹேய்… நான் இந்த பேச்சை எடுத்திருக்க கூடாது. ஸாரி!” என்றான்.
“இல்லையில்ல அப்பா ஃபீலிங்ஸ்லாம் இல்லை. ஒரு வேளை அந்த உறவு என்ன எப்படின்னு அனுபவிச்ச பிறகு அப்பா இறந்திருந்தா அப்பாவை மிஸ் பண்ணியிருப்பேனோ என்னவோ… எனக்கு எல்லாமே அம்மாதான்” என்றவள் திடீரென வேகமான குரலில், “ஏன் சஞ்சய்… இப்போதான் நான் எங்க இருக்கேன்னு ராஜசேகரனுக்கு தெரிஞ்சிடுச்சே. அம்மாகிட்ட நான் பேசலாம்தானே?” எனக் கேட்டாள்.
தினமும் அம்மாவிடம் பேசும் சஞ்சய்க்கு மீராவின் மனநிலை நன்றாகவே புரிந்தது. அதிலும் எல்லாமுமாக இருந்து வளர்த்த மீராவின் அம்மாவும் இவளை மனதளவில் வெகுவாக தேடுவார்தானே?
சொல்வதை பற்றி அவனுக்கு ஒன்றுமில்லை, எதற்கும் கார்த்திகேயன் ஸாரிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ள நினைத்தான்.
அவன் மறுத்து விடுவானோ என்ற பயத்தில், “கண்டிப்பா அம்மாகிட்ட சொல்லணும் சஞ்சய், அப்போதான் எனக்கு சமாதானம் ஆகும்” என வேகமாக சொன்னாள்.
“அப்போ ஆன்ட்டிகிட்ட பேசு மீரா. வேணும்னா நானும் பேசுறேன், அதுக்கு முன்னாடி ஸார்கிட்ட சொல்லிடலாம். அவருக்கு தெரிஞ்சப்புறம் ஆன்ட்டிக்கு தெரிய படுத்தலாம்” என்றான்.
“ஸார்கிட்ட பேசுங்க, நானும் அம்மாட்ட இதை சொல்ல பிரிப்பேர் ஆகிக்கிறேன்” என்றாள்.
கையோடு கார்த்திகேயனுக்கு அழைத்தான் சஞ்சய், அவர் ஏற்கவில்லை. ‘ஃப்ரீ ஆனதும் கால் பண்ணுங்க’ செய்தி அனுப்பி வைத்தான்.
மீரா அமைதியாக இருக்க, “ஸார் டியூஷன்ல இருப்பார்ல, அவரே கூப்பிடட்டும். சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டோம், இன்னிக்கு முடியலைன்னாலும் நாளைக்கு சொல்லிட்டா போச்சு. நீ டல் ஆகாத” என்றான்.
அவள் தலையாட்டிக் கொள்ள, “ப்ச் வாயை தொறந்து பேசு மீரா. எனக்கு யாராவது பேசிட்டே இருக்கனும். அப்போதான் தனியா இருக்க ஃபீல் வராது. ஸ்கூல்ல கார்த்தி ஸார் டியூசன்ல கும்பலோட கும்பலா உட்கார்ந்து படிச்சுதான் பாஸ் பண்ணினேன். காலேஜ் டைம்ல கூட எனக்கு படிக்க கம்பெனி வேணும். என் ஃபிரெண்ட்ஸ் கேங்’கோட சேர்ந்து என் வீட்லதான் க்ரூப் ஸ்டடி பண்ணுவோம்” என்றவன் குரலின் சத்தத்தை குறைத்து, “படிக்கிறது கொஞ்ச நேரம்தான். மத்த நேரம்லாம் செமயா என்ஜாய் பண்ணுவோம்” என்றான்.
“ஹையோ வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”
“ரூம்குள்ள என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு எதுவும் தெரியாது” கண்களை சிமிட்டி சொன்னான்.
“அப்படி யாருக்கும் தெரிய கூடாத அளவுக்கு என்ன பண்ணுவீங்களாம்?” முகத்தை சுளித்துக் கொண்டு கேட்டாள்.
“ஹையோ மூஞ்சு அப்படியே கோணிக்க போகுது. யங்ஸ்டர்ஸ் என்ன செய்வாங்களோ அதைத்தான் செய்வோம். ஏன் நீயும் ஹாஸ்டல்ல தங்கி படிச்சவதானே? கேர்ள்ஸ்லாம் சேர்ந்து எதுவு…மே… செஞ்சது இல்லியா?”
“நிஜமா அப்படி எதுவும் இல்லை. கவர்மெண்ட் நர்சிங் ஹாஸ்டல் ரொம்ப ஸ்ட்ரிக்ட். படிக்கும் போதே ஹாஸ்பிடல் டியூட்டி உண்டு, நைட் டியூட்டியும் போடுவாங்க. டெய்லி ரூம் வந்து செக் பண்ணுவாங்க. நினைச்சாலும் எதுவும் செய்ய முடியாது”
“என்னவோ சொல்ற நானும் நம்புறேன். நாங்களும் ஏதும் கிரிமினல் வேலைலாம் செய்யலை, ஓகே?”
“ம்ம்… அப்ப ஏன் வீட்டுக்கு பயப்படணும். என்னன்னு சொல்லுங்க, குத்தமா இல்லையான்னு நான் சொல்றேன்”
“அதெல்லாம் சொல்ற அளவுக்கு நமக்குள்ள நெருக்கம் வரல மீரா”
“அப்ப வில்லங்கமா ஏதோதான்”
“ஹான்… ஜஸ்ட் ஃபன் பண்ணுவோம் அவ்ளோதான். அதெல்லாம் பாய்ஸ் திங்ஸ்! என் கூட யாரும் இல்லாம எங்க ஃபெயில் ஆகிடுவேனோன்னு அப்பா கூட இருந்து தொலைங்கடான்னு விட்ருவார். அதனால என்ன சொல்ல வர்றேன்னா என்கிட்ட நல்லா பேசணும் நீ, நிறைய பேசணும்” என்றான்.
“என்ன பேசுறது சஞ்சய்?” பாவமாக கேட்டாள்.
“இன்னிக்கு உன் ஹாஸ்பிடல் டியூட்டி எப்படி இருந்துச்சு சொல்லு” என அவன் கூறவுமே அவளின் முகத்தில் லேசான மாற்றம்.
“ஹேய் அப்போ இன்ட்ரெஸ்ட்டிங்கா என்னவோ நடந்திருக்கு போல… சொல்லு சொல்லு” என ஆர்வமானான்.
அக்ஷய் பற்றி அவள் சொல்லவும் அவனது முகம்தான் கறுத்து போனது.
“என்ன சஞ்சய்… நம்ம ஃபர்ஸ்ட் மீட் ஞாபகம் வருதா?” எனக் கிண்டலாக கேட்டாள்.
“அப்போ நீ மிஸ், அதனால நான் செஞ்சது அவ்ளோ தப்பில்ல. இப்போ நீ என் மிஸஸ், அதனால இவன் மேல ரொம்ப தப்பு”
“எப்படி இருந்தாலும் வேலைல இருக்கவங்களுக்கு இதெல்லாம் தொந்தரவுதான். இந்த பையனுக்கு நான் மிஸஸ்னு தெரியாது. ஒவ்வொருத்தரா போய் நான் கல்யாணம் ஆனவன்னு சொல்லிட்டா இருக்க முடியும்? ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி போக போறான்” என்றாள்.
சஞ்சய்க்கு என்னவோ அவள் போல அதை எளிதாக எடுக்க முடியவில்லை. மீரா தன் பொருள் என்பது போல அவனுள் உரிமை உணர்வு தலை தூக்கிக் கொண்டது.
“ஸார் கால் பண்ணினாலும் பண்ணுவார்ல, அதுக்கு முன்னாடி நான் சமைச்சிடுறேன்” என சொல்லி சென்று விட்டாள் அவள்.
“டென் மினிட்ஸ்ல வந்திடுறேன் மீரா” என குரல் கொடுத்த சஞ்சய், மீரா எட்டிப் பார்ப்பதற்குள் வெளியேறி இருந்தான்.
சொன்னது போலவே சீக்கிரமே வந்தும் விட்டான். புலாவ் செய்து முடித்து அடுப்பு மேடையை துடைத்துக் கொண்டிருந்தவளின் பின்னால் போய் நின்றான்.
திடுக்கிட்டு திரும்பிய மீரா, “சத்தமில்லாம இப்படியா வருவீங்க, பயந்திட்டேன்” என்றாள்.
சஞ்சயின் கையில் பேப்பர் கவர் இருக்க, அதிலிருந்த சிந்தூர் லிக்விட்’டை எடுத்துக் காண்பித்தான்.
புருவம் உயர்த்தி எதற்கு என வினவினாள்.
“ம்ம்…” என சற்றே இடக்காக ம் போட்டவன் சிந்தூர் குப்பியை திறந்து அவளின் வகிட்டில் வைத்து விட்டான்.
“சரி சரி இழுப்பிடாதீங்க, நானே வச்சுக்கிறேன்” என சொல்லி அவனது கையை பிடித்துக் கொண்டாள்.
“டெய்லி மறக்காம வச்சிட்டு போற” என்றான்.
“ஷப்பா அதிகாரம் தூள் பறக்குது! ஏன் உங்களை ஆஃபிஸ்ல யாரும் பார்க்கிறது இல்லையா? உங்களுக்கு நான் என்ன வச்சு விட்டு அனுப்புறதாம்?”
“இது நான் யோசிச்சு உனக்கு தர்றேன். உனக்கும் கவலைனா நீயே யோசிச்சு ஏதாவது பண்ணி விடு”
“வேணாம் வேணாம், பொழச்சு போங்க சஞ்சய்”
“ஹேய் சீரியஸா சொல்றேன் நான். ஏன் என்னை யாரும் ரசனையா பார்க்க மாட்டாங்களா? இல்லை பார்த்தா உனக்கு கவலை இல்லையா?”
“ஹையோ இப்போ இந்த சிந்தூர் என்னத்துக்கு, நீ கரைஞ்சு போயிடுவேன்னா?”
“அச்சோ போதும் சஞ்சய். ஸார் ரிப்லை பண்ணினாங்களான்னு செக் பண்ணுங்க” என பேச்சை மாற்றப் பார்த்தாள்.
அவளை முறைத்துக் கொண்டே அகலப் போனவனின் கையை பிடித்துக்கொண்டவள், “ஆயிரம் அழகிங்க உங்களை சுத்தி வந்தாலும் மனசு தடுமாறாதவர் சஞ்சய்ங்கிற நினைப்பை நீங்கதான் எனக்குள்ள கொண்டு வரணும். மத்தபடி யார் உங்களை பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை” என்றாள்.
“அது கொஞ்சம் கஷ்டமாச்சே!” என குறும்பாக சொன்னான்.
“ஏது?” என அவள் பொய்யாக கோவம் கொண்டாள்.
“ஆயிரம் அழகில்லாம் ஒரே சமயத்துல எப்படி என்னை சுத்தி வரும்? யாரைன்னு பார்ப்பேன்? எனக்கெல்லாம் ரெண்டு அழகி ஒரு டைம்ல வந்தாலே என்னடா ஆண்டவா இது சோதனைனு ஆகிடும். ஒன் டைம் ஒன் பியூட்டி. பேராசை புடிச்சிவன் இல்லை நான்”
“ஹையோ பாவம்!” என பொய்யாக பாவப்பட்டாள்.
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவனை பார்த்து அவளுக்கு சிரிப்பு பீறிட, அவனும் சேர்ந்து சிரித்தான்.