அறியாமல் தொலைந்தேனே -14

அத்தியாயம் -14

வேலைக்கு செல்லத் தயாராகிய மீரா தன் கை வளையல்களை கழட்டினாள். சற்று சிரமமாக இருக்க வளையல்களுக்கு சேதமாகி விடக்கூடாது என்பதில் கவனம் வைத்தாள்.

பார்த்திருந்த சஞ்சய், “அதென்ன அவ்ளோ டைட்டா இருக்கா? அப்புறம் எப்படி போட்ட நீ?” எனக் கேட்டான்.

“போடும் போது பைரவ் ஸார் வைஃப் போட்டு விட்டுட்டாங்க, அப்பவே கொஞ்சம் டைட்டாதான் இருந்துச்சு. இங்க மேரேஜ்ல இந்த பேங்கல்ஸ் இல்லாம செய்ய மாட்டாங்களாம். பத்திரமா வச்சுப்பாங்களாம். ஏதாவது விஷேஷ நாள்னா போட்டுப்பாங்களாம்”

“இவ்ளோ விஷயம் யார் சொன்னா உனக்கு?”

“அந்த ஆன்ட்டிதான்”

“தாதா வைஃப் ஆன்ட்டி ஆகிட்டாங்களா? சரிதான். அவங்க பேசினது புரிஞ்சுதா உனக்கு?”

“இடையிடைல யூஸ் பண்ணின வேர்ட்ஸ் வச்சு அப்படி இருக்குமோன்னு நினைச்சிருந்தேன். அப்புறம் ஃபோன்ல பார்த்து தெரிஞ்சுகிட்டேன்” அவனுடன் பேசிக் கொண்டே வளையல்களை கழட்டி விட்டாள்.

“ஒவ்வொரு முறையும் இவ்ளோ கஷ்ட பட்டு மாட்டி, கஷ்ட பட்டு கழட்டுவியா?”

“இப்போதைக்கு பத்திரமா வைக்கிறேன், மத்தது அப்போ பார்த்துக்கலாம்”

“எந்த ஊரா இருந்தாலும் கல்யாணம்னா பொண்ணுங்களுக்கு மட்டும் ஏதாச்சும் மாட்டி விட்டிடுறாங்க. நான் வெஸ்டர்ன் ஸ்டைல்ல மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருந்தேன். கடைசில வெஸ்ட் பெங்கால் ஸ்டைல்ல நடந்திடுச்சு”

“என்ன மோதிரம் மாத்திக்கணுமா?”

“ஹ்ம்ம்… அதுவும்தான்”

“அதுவும்தான்னா வேற என்ன?”

“அது… வந்து… உனக்கு டைம் ஆகலையா? லஞ்ச் வாங்கிட்டு வரட்டுமா?” என பேச்சை மாற்றினான்.

காலை உணவு சாப்பிடவே தமாதமாகியிருக்க மதிய உணவு இப்போது சாப்பிட முடியும் என அவளுக்கு தோன்றவில்லை. ஒன்றரை மணிக்கு அவள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

“வாங்கி கொடுத்திடுங்க, ஹாஸ்பிடல்ல சாப்பிட்டுக்கிறேன்”

“டைம் கிடைக்குமா?”

“ஹேண்ட் ஓவர் பண்ணின ஸ்டாஃபையே கொஞ்ச நேரம் இருக்க சொல்லிட்டு சாப்பிட்டுப்பேன்” என அவள் சொல்லவும் சரி என சொல்லி விட்டான்.

வழியில் தயிர்சாதம் பார்சல் வாங்கிக் கொடுத்து மருத்துவமனையில் விட்டான் சஞ்சய்.

“நீங்களும் சாப்பிடுங்க சஞ்சய்” என சொல்லி முறுவலித்தாள்.

தலையாட்டிக் கொண்டவன், “நைட் ஏழு மணிக்கு முடிஞ்சிடுமா உனக்கு? நான் கூப்பிட வரேன்” என்றான்.

“ஹையோ எத்தன தடவ வருவீங்க? ஒரு பஸ்தானே நானே வந்திடுவேன்” என்றாள்.

“வீட்ல சும்மாதான் இருப்பேன். பைக்ல தனியா ரைட் வந்து வீட்டுக்கு திரும்பும் போது கம்பெனியோட போவேன்”

“ஏழரைக்குத்தான் முடியும். நீங்க ஏழே முக்கால் மணி போல வந்தா சரியா இருக்கும்” என சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.

அவன் சரியாக ஏழே முக்காலுக்கு எல்லாம் மருத்துவமனை வந்து விட்டான். அவள் வெளியில் வர எட்டே கால்  ஆகி விட்டது.

“இதென்ன ஓவர்டைம் பார்க்கிறியா?” என கேட்டுக் கொண்டேதான் பைக்கை எடுத்தான்.

“நான் ஹேண்ட் ஓவர் பண்றவங்க டென் மினிட்ஸ் லேட், கிளம்பும் போது நைட் இன்சார்ஜ் என் கல்யாண கதை கேட்கிறேன்னு பிடிச்சு வச்சுக்கிட்டாங்க. காலைல சொல்றேன்னு தப்பிச்சு ஓடி வர்றேன்” என்றாள்.

“இதுல சொல்ல என்ன இருக்கு?”

“நாம பல வருஷமா லவ் பண்ணி, நம்ம வீட்ல ஒத்துக்காம போனதால இங்க வந்திட்டதா நினைக்கிறாங்க. எப்போ ஃபர்ஸ்ட் மீட் பண்ணின, ஏன் வீட்ல ஓகே சொல்லலை? ஹப்பா எவ்ளோ கேள்வி கேட்கிறாங்க!”  என அவள் புலம்ப, சத்தமாக சிரித்தான்.

“எனக்கு என்ன கதை சொல்றதுன்னே தெரியல. இதுல வீக் எண்ட்  பார்ட்டி கொடுக்கவாம். அப்போ எல்லாருக்கும் என் கதையை கண்டிப்பா சொல்லனுமாம்”

“உங்க எல்லாருக்கும் சேர்ந்த மாதிரி ஒரே நாள் லீவ் கிடைக்குமா என்ன? அப்படியே லவ் ஸ்டோரி சொல்ல சொன்னாலும் எவ்ளோ மூவீஸ் பார்த்திருக்க, அங்கங்க ஒரு சீன் உருவி நீயா ஒரு கதையை அடிச்சி விடு”

“அப்படிலாம் எனக்கு பொய் சொல்ல வேணாம், ஒன்னும் சொல்லாமலே தப்பிச்சுப்பேன்”

“அது உன் சாமர்த்தியம்” என அந்த பேச்சை முடித்து வைத்தான்.

மீரா லிஸ்ட் போட்டு கொடுத்தவை எல்லாம் வாங்கி வைத்திருந்தான் சஞ்சய். அட்டைப் பெட்டியில் மளிகை சாமான்களும் துணிப் பையில் காய்கறிகளும் அப்படியே இருந்தன. மதியம் அவள் ஓரளவு வீட்டை ஒதுங்க வைத்திருக்க, அவள் எப்படி விட்டுச் சென்றாளோ அப்படியே அவளை வரவேற்றது வீடு.

இரவே சமைக்க திட்டம். நேரமாகிற்றே செய்ய முடியுமா என கேட்டான்தான். முதல் முறை சமைக்க என முயற்சிக்கும் போது தள்ளிப் போட மீராவுக்கு மனமில்லை. ஆகவே உடல் சோர்வு கூட அவளுக்கு தெரியவில்லை.

வேகமாக குளித்து வந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். அவன் டிவி பார்க்க ஆரம்பித்து விட்டான்.

முன்பே யோசித்து வைத்திருந்த படி கோதுமை தோசை, தேங்காய் சட்னி தயார் செய்து முடிக்கையில் நேரம் ஒன்பதரையாகி விட்டது.

“கோதுமை தோசையா…” என ராகம் இழுத்தாலும் சாப்பிட மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை அவன். ஒரு வாய் சாப்பிட்டவனுக்கு பிடிக்கவும் செய்ய நன்றாக சாப்பிட்டான். சொதப்பாமல் செய்து விட்டோமே என அவளுக்கும் மகிழ்ச்சி.

சாப்பிட்டு முடித்ததும், பொருட்களை எடுத்து வைத்து வீட்டை ஒதுங்க வைக்கலாமா என அவள் யோசித்துக் கொண்டிருக்க, “வாக் போலாம் மீரா” என அவளை அழைத்தான் சஞ்சய்.

மருத்துவமனையிலேயே நிற்க நேரமில்லாமல் வேலை இருந்தது, இப்போதும்  சமைத்ததில் சோர்ந்தாலும் வீட்டு வேலை செய்ய நினைத்திருக்க, நடக்கவெல்லாம் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் சஞ்சய்க்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல் சரி என்றாள்.

பாத்திரங்களை எடுத்துப் போட்டு விட்டு அவனுடன் மாடிக்கு சென்றாள். இரவின் குளுமையில் அமைதியாக அப்படி நடப்பது மனதுக்கு இதம் தந்ததுதான்.

சில நிமிடங்களில் அவன் மட்டுமே நடந்தான். அவள் இடுப்பளவு இருந்த சுற்று சுவற்றில் சாய்ந்த படி நின்று கொண்டாள்.

அவளை பார்த்து விட்டு யோசித்தவனாக, “கால் வலிக்குதா?” எனக் கேட்டான்.

“லைட்டா” என்றாள்.

“அப்பவே சொல்றதுக்கென்ன மீரா? கீழ போலாம் வா” என்றான்.

அப்படியே தரையில் கால்கள் நீட்டி அமர்ந்து கொண்டவள், “வேணாம், நீங்க நடங்க” என சொல்லி விட்டாள்.

“சென்னைல டெய்லி ஜிம் போவேன். இங்க கூட போகலாம்னு நல்ல ஜிம்மா பார்த்திட்டு இருந்தேன். இடைல என்னென்னமோ பிராப்லம்ஸ். இந்த ஐஸக் அங்கிள் இன்னும் வரல பாரு. ஒரு கால் பண்ணி கூட நம்மள பத்தி ஏதும் கேட்டுக்கல அவர். வரட்டும் பேசிக்கிறேன்” என அவளிடம் பேசிக் கொண்டே நடந்தான்.

பேசும் போதுதான் நாளைக்கு அவளுக்கு காலை ஷிப்ட் என்பது அவனுக்கு தெரிந்தது. முன்பு அவள் விடுதியில் இருக்கும் போதே அடுத்த நாள் காலை ஷிப்ட் என்றால் கைப்பேசியில் இவனிடம் பேசிக் கொண்டிருந்தால் இந்த நேரத்துக்கு எல்லாம் உறங்கப் போவதாக சொல்லி பேச்சை முடித்து விடுவாள்.

அது நினைவுக்கு வரவும் அவனே நடந்தது போதும் என சொல்லி அவளுடன் கீழே வந்து விட்டான்.

மளிகை சாமான்களை அடுக்க  என அவள் சமையலறை சென்றாள்.

“நாளைக்கு பார்த்துக்கலாம் மீரா, ஆல்ரெடி நீ டயர்ட்  ஆகிட்ட” என்றான். அவளுக்கும் உறக்கம் வழிய, காய்கறிகளை மட்டும் அப்படியே குளிர் சாதன பெட்டிக்குள் திணித்து விட்டு உறங்க சென்று விட்டாள்.

அவனுக்கு உறக்கம் வராத காரணத்தால் கைப்பேசி பார்த்து விட்டு நடு இரவுக்குத்தான் கண் அயர்ந்தான்.

மீரா வைத்த அலாரம் காலை ஐந்து மணிக்கெல்லாம் அவளை எழுப்பி விட்டு விட்டது.