அவனுமே கைப்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் முழுக் கவனத்தையும் வைக்க முடியவில்லை.
வெளியில் சென்றிருந்த போது தோன்றாத சங்கடம் வீட்டுக்குள் ஏன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
இருவருமே தங்களுக்குள் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்பது போல நடந்து கொண்டனர். அப்படியே நேரம் நகர்ந்தது.
பசி என்ற ஒன்று இல்லையென்றால் பேசாமலே படுக்க போயிருப்பார்களா இருக்கும்.
“சாப்பிட என்ன வாங்கட்டும் மீரா?” என வந்து நின்றான் அவன்.
“இட்லி கிடைக்குமா?” என தயக்கத்துடன் கேட்டாள்.
இரண்டடி அவளை நோக்கி எடுத்து வைத்தவன், “அது கிடைக்குது கிடைக்கல. அதை ஏன் நீ இவ்ளோ தயங்கி தயங்கி கேட்குற?” எனக் கேட்டான்.
பதில் சொல்லவும் தயங்கினாள். அவன் உச்சு கொட்டி அவளை பார்க்க, “எனக்கு லைட்டா சாப்பிட்டா போதும்னு இருக்கு. இட்லி கிடைக்குமான்னு தெரியாம கேட்கிறது உங்களை தொல்லை செய்ற மாதிரி பட்டது” என்றாள்.
“இன்னிக்கு நமக்கு மேரேஜ் ஆனதை விடு மீரா. நேத்து வரைக்கும் நாம ஃபிரெண்ட்ஸ்தானே? திடீர்னு நாம ஒருத்தரை ஒருத்தர் ஃபேஸ் பண்ணவும் ஃபிரீயா ஒரு விஷயத்தை கேட்டுக்கவும் ஏன் இப்படி தயங்குறோம்? ப்ச்… நல்லாவா இருக்கு?” என்றான்.
“உங்களுக்கு அப்படி தோணக் கூடாது சஞ்சய். எனக்கு அப்படியில்லை. என்னாலதான் உங்களுக்கு இப்போ இப்படி”
“எப்படி?”
“வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிற நிலை”
“ஒரு விஷயம் கிளியர் பண்றேன் மீரா. நடந்து முடிஞ்ச விஷயத்தை ஏன் எப்படினு ஆராய்ச்சி பண்றது வேஸ்ட். இனிமே இதை எப்படி எடுத்திட்டு போறதுன்னு வேணும்னா டிஸ்கஸ் பண்ணலாம். நீ இப்படி என்கிட்ட யோசிச்சு யோசிச்சு பேசுற பார்… அது எனக்கு ஆக்வர்டா இருக்கு. அதனால நார்மலா இரு. சவுத் இண்டியன் ஓட்டல் இருக்கு பக்கத்துல. மதியம் உனக்கு தயிர் சாதம் கூட அங்கேருந்துதான் வாங்கிட்டு வந்தேன். என்ன… இட்லி சீக்கிரம் முடிஞ்சிடும். கேட்டு பார்க்கிறேன், இல்லைனா அங்க என்ன இருக்குனு கேட்டுட்டு உனக்கு கால் பண்றேன்” என்றான்.
அவள் தலையாட்டிக் கொள்ள, எச்சரிப்பது போல ஒரு விரல் காட்டியவன், “என்கிட்ட வார்த்தைகளை விட எப்பவும் கஞ்சத்தனம் பார்க்காத” என்றான்.
சரி என அவள் வாய் மொழியாக சொல்லவும், “குட்!” என சொல்லி கடைக்கு சென்றான்.
கடையில் இட்லி முடிந்திருந்தது. என் மனைவிக்கு உடம்பு முடியவில்லை கண்டிப்பாக இட்லி வேண்டும் என கேட்டான் சஞ்சய். அங்கு அவன் ரெகுலர் கஸ்டமர் என்பதால் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதாகத்தான் அங்குள்ளவர்களுக்கு தெரியும்.
எப்போது கல்யாணம் ஆனது காதல் திருமணமா போன்ற விசாரிப்புகளுடன் அவனுக்காக மீண்டும் இட்லி தயார் செய்து கொடுத்தனர். அதில் கொஞ்சம் நேரமாகி விட்டது.
குளித்து இரவு உடைக்கு மாறி வந்த மீரா, இன்னும் சஞ்சய் வரவில்லையே என கவலை கொண்டாள்.
காலையில் சௌரப் கோஷ் மீராவை பார்த்த பார்வை இன்னுமே அவளை அச்சுறுத்திக் கொண்டுதான் இருந்தது. சஞ்சய்க்கு ஏதும் கஷ்டம் கொடுப்பானோ என்றெல்லாம் யோசித்து விட்டாள். அவனது பைக் சத்தம் கேட்கவும் வேகமாக வெளியில் வந்தாள்.
வண்டியை நிறுத்திக் கொண்டே, “என்னாச்சு மீரா?” என அவனும் பதற்றத்துடன் கேட்டான். தான் இல்லாத நேரத்தில் யாரும் வந்து மிரட்டியிருப்பார்களோ என அவனுக்கும் சந்தேகம்.
இருவரும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டனர்.
“ஃபர்ஸ்ட் இந்த பயத்திலேருந்து வெளில வா மீரா. நான் இல்லாதப்போ வீட்டை லாக் பண்ணிக்கோ. நான் வெளில போறேன்னா அவ்ளோ ஆளுங்க இருக்காங்க. அப்படிலாம் அந்த போலீசால ஒன்னும் பண்ணிட முடியாது” என அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்தான்.
சாப்பாடு இருவருக்கும் சரியாக இருந்தது. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தனர்.
“எதையும் யோசிக்காம தூங்க போ” என சொல்லித்தான் அவளை அனுப்பி வைத்தான். ஆனாலும் இருவருக்குமே பலவித யோசனைகள். பகலில் வேறு உறங்கியதால் அரைகுறை உறக்கம்தான்.
விடிந்த காலை அவர்களுக்கு தெளிவை கொடுத்திருந்தது. ஞாயிறு என்பதால் சஞ்சய்க்கு இன்றும் விடுமுறைதான். ஆயினும் நேரத்துக்கு எழுந்திருந்தான்.
மீரா இருவருக்கும் தேநீர் போட்டாள். மீராவுக்கு காலை ஷிப்ட் போக வேண்டும் என்றால் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். அந்த நேரத்துக்கு காலை உணவு வாங்க ஓட்டல் திறந்திருக்காது. அதை அவளிடம் சொன்னான்.
“வீட்லதானே இருக்கோம், எனக்கு ஓரளவு சமைக்க வரும். கடை சாப்பாடு வேணாம்” என்றாள் மீரா.
தேவையான சமையல் பாத்திரங்கள் எல்லாம் வீட்டில் இருக்கின்றன. இருப்பினும் யோசனையுடன், “ஏழு மணிக்கு போகணும்னா எப்போ எழுந்து எப்போ சமைப்ப? சீரியஸாதான் சொல்றியா?” எனக் கேட்டான்.
“செய்திடுவேன் சஞ்சய்”
“அப்படி கஷ்ட படணுமா என்ன?”
“ஹாஸ்பிடல்ல என் கூட ஒர்க் பண்றவங்க பாதிக்கும் மேல மேரீட்தான். ஸ்கூல் போற பிள்ளைங்க வேற இருக்காங்க. வீட்லதான் சமைக்கிறாங்க” என்றாள்.
சஞ்சயின் வீட்டில் வேலையாட்கள் இருக்கிறார்கள். வீட்டுப் பெண்கள் சமைத்தால் கூட மேல் வேலையெல்லாம் ஆட்கள் பார்த்து விடுவார்கள். அதனால் வீட்டு வேலை, நர்ஸ் வேலை இரண்டையும் மீரா தனியொருத்தியாக எப்படி சமாளிப்பாள் என அவனுக்கு கவலையாகத்தான் இருந்தது.
தற்போதைய நிலைமைக்கு தினம் கடை சாப்பாடு, சமையலுக்கு ஆள் வைப்பது என இரண்டுமே அவர்களால் இயலாது என்பதால் மீராவின் யோசனைக்கு சரி என்றே சொன்னான்.
“அம்மாகிட்ட இந்த மேரேஜ் பத்தி சொல்லணும் சஞ்சய். ஸார் மூலமா சொல்ல வைக்கலாமா?” எனக் கேட்டாள்.
“அவசர பட வேணாம் மீரா. நாம ரெண்டு பேருமே ஷாக்ல இருக்கோம். கொஞ்சம் செட்டில் ஆகிப்போம். என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாதுன்னு பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணலாம்” என்றான்.
கொல்கத்தாவில் புதிய வங்கிக் கணக்கு ஆரம்பித்திருந்தாள் மீரா. வங்கி சேமிப்பு அட்டையை அவனிடம் நீட்டினாள். எதற்கு என்பது போல பார்த்தான்.
“என்னால ஏற்கனவே உங்களுக்கு நிறைய செலவு. இப்போ சமைக்க திங்ஸ் எல்லாம் வாங்கணும். வச்சுக்கோங்க” என்றவள் அதன் ரகசிய இலக்கத்தையும் சொன்னாள்.
முன்பு என்றால் அண்ணனிடம் கேட்டு வாங்கிக் கொள்வான் சஞ்சய். தன் சம்பளம் போக மேற்கொண்டு எவ்வளவு வீட்டு செலவுக்கு தேவைப்படும் என்பது பற்றிய தெளிவு அவனிடம் இல்லை. மீராவைப் போலத்தான் அவனுக்கும் வேலை பார்த்த நாட்களுக்கு மட்டும் கணக்கு செய்து சம்பளம் வழங்கப் பட்டிருந்தது.
எக்காரணம் கொண்டும் வீட்டில் பணம் பெறக் கூடாது என்பதில் மட்டும் ரோஷத்துடன் இருந்தான்.
ஓராண்டுக்குப் பின் அப்பாவின் முன் போய் நிற்கும் போது ‘உங்களின் மகன் என தெரியாமலே ஒருத்தி என்னை மணந்து கொண்டாள், அவளின் அத்தனை தேவைகளையும் நானே என் சுய சம்பாத்யத்தில் பார்த்துக் கொண்டேன், இப்போது நானும் ஒரு குடும்பஸ்தன், அப்பா மற்றும் அண்ணனின் தயவில்லாமல் வாழும் ஆண்மகன்!’ என சத்தமாக சொல்ல வேண்டும் என்பதில் முடிவாக இருந்தான்.
இருவரின் சம்பளத்தில் இவ்வளவு பெரிய வீட்டுக்கு வாடகை கொடுத்து ஓட்டி விடலாமா என கணக்கு போட்டுப் பார்த்தான். எதற்கு எவ்வளவு ஆகும் என்று சரியாக அவனால் கணிக்க முடியவில்லை.
இப்படியெல்லாம் ஒருநாள் தான் யோசனை செய்யக் கூடும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
“வாங்குங்க சஞ்சய்” என சொல்லி வங்கி சேமிப்பு அட்டையை அவனது கையில் திணித்தாள் மீரா.
அவளிடமே திருப்பித் தந்து விட்டவன், “இந்த பட்ஜெட் மேட்டர்லாம் என்னால ஹேண்டில் செய்ய முடியும்னு எனக்கு தோணல மீரா. இது நீயே மேனேஜ் பண்றது பெட்டர்” என்றான்.
“நானா?”
“நீதான்” என மீண்டும் தீர்மானமாக சொன்னான்.
அவளுக்கு மட்டும் என்ன தெரியும்? சென்னையில் இருந்த போது கூட சம்பளத்தில் தனக்கென சிறிய தொகையை வைத்துக் கொண்டு மிச்சத்தை அபப்டியே அம்மாவுக்கு அனுப்புவதுதான் அவளின் வழக்கம்.
அம்மா கஷ்ட படுகிறார் என்பது தெரியுமே தவிர்த்து குடும்ப பொருளாதாரத்தை எப்படி நிர்வகித்தார் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.
படிப்பு முடித்து உடனே வேலைக்கு சென்ற இருபத்திரெண்டு வயது சின்னப் பெண் அவள்.
மேற்படிப்பு முடித்தும் வேலைக்கு செல்லாமல் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த, இன்னும் ஆறு மாதங்களில் இருபத்தைந்து ஆகப் போகும், குடும்ப வாழ்க்கையை முன்னின்று நடத்துவது பற்றிய விவரம் அறியா பையன் அவன்.
இந்த இரண்டு சின்னக் குருவிகளும் எடை எவ்வளவு எனத் தெரியாத இந்த குடும்ப பாரத்தை சுமந்து தேறுவார்களா என்றுதான் தெரியவில்லை.