அன்றைய அப்பாவின் பேச்சில் இப்போதும் அவனது முகம் கன்றியது.

 ‘நான் யார் என உங்களுக்கு காட்டுறேன் ப்பா’ என மனதில் சத்தமாக சொல்லிக் கொண்டான்.

மனதை இலகுவாக்கலாம் என எண்ணி சற்று நேரம் படுத்துக் கொண்டே கைப்பேசி பார்த்திருந்தவன் அப்படியே உறங்கிப் போய் விட்டான்.

மாலையில் எழுந்து கொண்ட மீரா, திருமண புடவையை களைந்து காலையில் உடுத்தியிருந்த சுடிதாரை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள். இப்போது அவளுக்கு தலைவலி பரவாயில்லையாக இருந்தது. சஞ்சயும் எழுந்திருந்தான்.

உறங்குவதற்கு முன்னர் மீராவின் மீது உண்டாகியிருந்த மனத்தாங்கல் இப்போது அவனிடமிருந்து மறைந்து போயிருந்தது.

வீட்டில் உண்பதற்கு பருகுவதற்கு என எதுவுமே இல்லை. மருத்துவமனைக்கு முறையாக விடுப்பு கூட சொல்லியிருக்கவில்லை மீரா. கைப்பேசி அவளிடம் இல்லாத காரணத்தால் மருத்துவமனையிலும் விடுதியிலும் என்ன நிலவரம் என்றே அவளுக்கு தெரியவில்லை.

“பெட்டரா மீரா இப்போ?” எனக் கேட்டவனுக்கு ஆம் என்பதாக புன்னகையால் பதில் சொன்னாள்.

“வீட்ல ஒன்னும் இல்லை, வெளில போய் டீ சாப்பிட்டு வரலாம்” என்றான்.

“என் திங்க்ஸ் எல்லாம் ஹாஸ்டல்ல இருக்கு சஞ்சய், ஹாஸ்பிடலுக்கு நாளைக்கு வேலைக்கு போனா எதுவும் சொல்வாங்கல்ல? நான் ஹாஸ்பிடல் போய்ட்டு அப்படியே ஹாஸ்டலுக்கும் போய்ட்டு வரட்டுமா?”

“தனியா போவியா? வா வா…” என்றவன் வீட்டு சாவியை கையில் எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். அவளும் வெளியில் வர வீட்டை பூட்டியவன், “இந்த பேங்கல்ஸ் எல்லாம் போட்டுட்டே இருக்க போறியா என்ன?” எனக் கேட்டான்.

“அதெப்படி முடியும் சஞ்சய்? ஆனா இன்னிக்கு கழட்ட வேணாம்னு பார்த்தேன்” என்றாள். அவளை கவனித்துப் பார்த்தான். வகிட்டில் அவனிட்ட திலகம் கூட அப்படியே இருந்தது.

அவனது பார்வையை கண்டவள் வகிட்டில் கை வைத்துக் கொண்டே, “இதை மறைக்கணுமா என்ன?” எனக் கேட்டாள்.

“ஏன் மறைக்கணும், சொல்லிடு” என்றே சொன்னான்.

“சீரியஸாதானே?” என சந்தேகமாக கேட்டாள்.

“டேம் சீரியஸ்!” என வெகு சாதாரணமாக சொல்லி அவன் பைக்கை எடுக்க, “ம்ம்…” என சொல்லிக் கொண்டே அவள் அமர்ந்து கொண்டாள்.

முதலில் சூடான தேநீர் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டனர்.

மாலை நேரம் என்பதால் அவளின் வார்டு அமைதியாகத்தான் இருந்தது.  இவளது விடுதியில் இந்த மருத்துவமனையில் பணி செய்பவர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை.

ஆகவே மீரா காவல்நிலையம் சென்ற கதையெல்லாம் அங்கே யாருக்கும் தெரியவில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும் கொடுக்கப்படும் விடுப்பு கூட அந்த வார்டுக்கு என இருக்கும் சூப்பர்வைசர் தருவதுதான். இப்படி திடீரென யாராவது வராமல் போய் அடுத்த நாள் அதை விடுப்பாக மாற்றிக் கொள்வதும் எப்போதாவது நடப்பதுதான் என்பதால் மீரா அன்று வராதது கூட விடுப்பு எனதான் குறிக்கப் பட்டிருந்தது.

அவளது வகிட்டு குங்குமம் மற்றும் கை வளையல்களை பார்த்த அவளின் சகாக்கள் என்னவானது என விசாரிக்க, இன்சார்ஜ் மினி மட்டும் ஏதும் அவசரம் என்றால் அழைத்துக் கூட சொல்ல மாட்டாயா, என் அழைப்பையும் ஏற்காமல் போவாயா என கடிந்து கொண்டே வந்து அவளின் மாற்றங்களை கவனித்து விட்டு திகைத்துப் போய் நின்றாள்.

பின்னர்தான் மீராவின் பின்னால் அமைதியாக நின்றிருந்த சஞ்சயை கவனித்து விட்டு யார் இவன் என்பது போல பார்த்தாள்.

மீராவும் பின்னால் திரும்பி சஞ்சயை பார்த்தாள்.

“மீராவோட ஃபிரெண்ட் இவர்” என்றாள் ஒருத்தி.

மினியிடம் வந்த சஞ்சய், “ஹாய் நான் மீராவோட ஹஸ்பண்ட்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

சில நிமிடங்கள் அதிர்ச்சி, வியப்பு, கேலி என ஓடியது. மீராவுக்கு தெரிந்த நோயாளிகளின் அட்டென்ட்டர்கள் கூட வந்து விட்டனர். நிலைமையை சமாளித்து மற்றவர்களை வேலையை பாருங்கள் என அனுப்பி, திடீர் தம்பதியரை அறைக்கு அழைத்துச் சென்றாள் மினி.

அவசரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது, செய்து கொண்டோம் என சஞ்சய் சொல்ல, மீராவும் அவனை பின்பற்றியே பேசினாள். சொந்த விவகாரங்களில் மினியால் தலையிட முடியுமா என்ன? காதல் பிரச்சனையால்தான் ஊரை விட்டு வந்து விட்டார்கள் போலும் என்றே அவளும் எண்ணிக் கொண்டாள்.

“இனி உன் கனடா பிளானை என்ன செய்ய போற?” என மலையாளத்தில் கேட்டாள் மினி.

“திடீர்னு கல்யாணம் ஆகிடுச்சு சிஸ்டர், வேற எதுவும் யோசிக்கல. லீவ் சொல்லலையேன்னு வந்தேன், இப்போ கொஞ்சம் அர்ஜன்ட் வேலை, போகணும்” என்றாள் மீரா.

நாளைக்கு பணிக்கு வருவாய்தானே என உறுதி படுத்திக் கொண்ட மினி, “ஃபர்ஸ்ட் ஷிப்ட் வேணாம், செகண்ட் ஷிப்ட் வா” என சொல்லி அனுப்பி வைத்தாள்.

மீராவின் தோழிகள் பின்னர் கைப்பேசியில் பேசுவதாக சொல்லி அவளுக்கு விடை கொடுத்தனர்.

விடுதி நெருங்கவுமே மீராவின் முகம் பசையிழந்து விட்டது. காலையில் எத்தனை அநியாயமாக திருடி பட்டம் கட்டி காவல் நிலையம் வரை அழைத்து செல்லப் பட்டேன் என நினைக்கையில் இப்போதும் அவளுக்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“நானெல்லாம் தப்பு செஞ்சா கூட அலட்டிக்க மாட்டேன் மீரா. நீயென்ன செய்யாத விஷயத்துக்கு இவ்ளோ ஃபீல் ஆகுற. ஆச்சுவலி அந்த வார்டன் லேடிதான் கூனி குறுகனும். உள்ள போய் வச்சுக்கிறேன்” என்றான் சஞ்சய்.

“தயவுசெஞ்சு எந்த பிரச்சனையும் வேணாம் சஞ்சய். எனக்கு போதும்னு இருக்கு” என கெஞ்சலாக சொன்னாள் மீரா.

சரி என்றாலும் கோவத்துடன்தான் உள்ளே சென்றான் சஞ்சய். ஆனால் வார்டனுக்கு பதில் வேறொருத்திதான் இருந்தாள்.

காலையில் பைரவ் தாதா விட்ட டோஸிலேயே குளிர் ஜுரம் கண்டு அறையில் முடங்கிப் போயிருந்தாள் வார்டன். அவளுக்கும் அடுத்த நிலையில் இருப்பவள்தான் இப்போது இருந்தாள். மீராவை காணவுமே பாவமாக பார்த்துக் கொண்டே எழுந்தாள். உடன் சஞ்சய் இருந்ததால் எதுவும் அவள் விசாரிக்கவில்லை.

மீராவுக்கு நடந்த அநியாயத்தை கண்ட பல பெண்கள் விரைவில் விடுதியை காலி செய்யப் போவதாக சொல்லியிருந்தனர். வார்டன் பற்றியும் புகார் தெரிவித்திருந்தனர். ஓனர் உள்ளூர் கிடையாது, நாளை இங்கு வருகிறாராம். அதைப் பற்றியெல்லாம் மீரா விசாரித்துக் கொள்ளவில்லை.

மீரா விடுதியை காலி செய்யப் போவதாக சஞ்சய்தான் சொன்னான். அந்தப் பெண் நடைமுறை என்னவென சொல்லி சில பதிவேடுகளை எடுத்தாள். தன் அறையின் சாவியை பெற்றுக் கொண்டு சென்று விட்டாள் மீரா.

மீராவிடம் அதிக பொருட்கள் இல்லை. அவளின் அறைத் தோழிகள் இன்னும் அவரவர் பணி முடித்து திரும்பியிருக்கவில்லை. ஆகவே நேர விரயம் செய்யாமல் வேகமாக தன் உடைமைகளுடன் திரும்பி வந்து விட்டாள். அதற்குள் அவள் கையெழுத்து போட வேண்டியது எல்லாம் தயாராக இருந்தது.

கேப் புக் செய்து அதில் மீராவை அவளது பொருட்களுடன் ஏற்றி விட்டு சஞ்சய் அவனது பைக்கில் பயணித்தான்.

அவர்கள் வீடு வந்து சேர்வதற்குள் நன்றாக இருட்டிப் போயிருந்தது.

மாதத்தின் இடையில்தான் மீரா வேலைக்கு சேர்ந்திருந்தாள். ஆகவே பாதி மாதத்திற்கான சம்பளம் அவளிடம் இருந்தது. ஆனால் சஞ்சய் அவளுக்கு முன் கேப்’பிற்கு பணம் கொடுத்து விட்டான்.

வீட்டுக்குள் வந்து அப்பாடா என அமர்ந்தான் சஞ்சய். இனி இங்குதான் வாசம் என்பதில் வித்தியாசமாக உணர்ந்தாள் மீரா. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இயல்பாக பார்த்துக் கொள்ள முடியாமல் இருவருக்குமே ஒருவித சங்கடம்.

அவன் வேகமாக கைப்பேசிக்குள் முகத்தை புதைக்க, அவளும் வேகமாக திரும்பி தன் அணைந்து போயிருந்த கைப்பேசிக்கு சார்ஜ் போட்டாள்.

‘டேய் டேய்! என்ன திடீர்னு ஷை எல்லாம் ஆகுற? பாவம் அவளை கவனி!’ என உள்மனம் சொல்ல நிமிர்ந்தான் அவன்.

அதற்குள் டிராலியை இழுத்துக் கொண்டு மதியம் தான் உறங்கிய அறைக்கு சென்று விட்டாள் மீரா. ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பது தனக்கே என்னவோ போலிருக்க, ஒரே அறையில் இருப்பதெல்லாம் அதிகம் என்றே  அவனுக்கு பட்டது. ஆகவே அவளின் செயலை தவறாக நினைக்கவில்லை அவன்.

சஞ்சய் அவளுக்கு புதியவன் இல்லை என்றாலும் திடீரென கணவன் என்ற உறவாகிப் போகவும் தனிமையில் அவனை எதிர்கொள்ள அவளுக்கு எளிதாக இல்லை. அதனால்தான் துணிகளை எடுத்து வைக்கிறேன் என அறைக்கு வந்து விட்டாள். என்னதான் பொறுமையாக செய்தாலும் அரை மணி நேரத்தில் வேலை முடிந்து விட்டது.