அந்த ஆளுக்கு ராஜசேகரன் பெரும் தொகை கொடுத்திருக்க, இதை இத்தோடு விட மனமில்லை. பைரவ் இல்லையென்றால் என்ன, வேறு வழி இருக்கிறது இன்னும் கொஞ்சம் செலவாகும் என ராஜசேகரனிடம் சொல்லி முதல் முறையை காட்டிலும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்டான்.

இந்த முறை மீராவை கூட்டிப் போக அவன் நாடியது இன்ஸ்பெக்டர் சௌரப் கோஷ். அவனது யோசனைதான் இந்த பணத் திருட்டு. ரிமாண்டில் வைக்க அழைத்து செல்லும் போது தப்பிச் சென்று விட்டது போல கட்டமைத்து அவளை ராஜசேகரனிடம் அனுப்பி வைக்க திட்டம் தீட்டியிருந்தான்.

சௌரப் கோஷும் மீராவிடம் இயல்பாக விசாரிக்காமல் கொடிய கைதியை விசாரிக்கும் தொனியில் பேசினான். அவனது அரைகுறை ஆங்கிலம் கூட அவளை பயமுறுத்தியது. மீரா சொல்லும் எதையும் காது கொடுத்து கேட்க மறுத்தான். தவறாக ஏதோ நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட மீராவுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

எதனால் இப்படி, அடுத்து என்ன என எதுவும் அவளுக்கு புரியவில்லை.

இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என மீரா நினைத்திருக்கவே இல்லையே. அவமானம், பயம், அதிர்ச்சி என நிலை குலைந்து போயிருந்தாள் மீரா.

பைரவ்வே நேரில் வந்து விட்டார். அவரை கண்டதும் வார்டன் பெண் நடுங்கி விட்டாள்.

பைரவ் மஜும்தாருக்கும் சௌரப் கோஷுக்கும் ஏற்கனவே முன்பகை இருக்கிறது. இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். புரியவில்லை என்றாலும் மீராவுக்கு பார்க்க பயமாகத்தான் இருந்தது.

சௌரப்க்கு உயரதிகாரியிடமிருந்து மீராவை விடுவிக்கச் சொல்லி கட்டளை வந்து சேர்ந்தது.

பைரவ்விடம் தோற்றதை சௌரப்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேசையில் ஓங்கிக் குத்தி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினான். பைரவ் அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தார்.

சௌரப்பின் பார்வை மீராவிடம் சென்றது. பின் பைரவ்வை பார்த்து இளக்காரமாக சிரித்தான். ‘இப்போது கூட்டிப் போ, நான் இதை விட மாட்டேன்’ எனதான் தன்னிடம் சொல்கிறான் என புரிந்து கொண்ட பைரவ்வின் முகம் இறுகியது.

அதுவரை மீராவுக்கு உதவுவது மட்டுமே பைரவ்வின் எண்ணமாக இருந்தது. இப்போது என்னை மீறி சௌரப் ஏதும் செய்வானா எனும் கேள்வி அவரது ஈகோவை சீண்டிப் பார்த்தது.

இருவருக்குள்ளும் கனன்று கொண்டிருக்கும் முன் பகையில் மீரா தீப்பொறி போல் ஆனாள். மீராவின் விவகாரத்தை தங்களின் தனிப்பட்ட விஷயமாகவே எடுத்துக் கொண்டனர் இருவரும். யார் சக்தி வாய்ந்தவன் என்பதை நிரூபிக்க மீராவை பயன்படுத்த நினைத்தனர் இருவரும்.

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பகைமை என்றால் கூட ஏதாவது ஒரு பக்கம் மேல் மட்டத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். இங்கே இருவருமே அக்மார்க் நல்லவர்கள் இல்லை. பைரவ் சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்கிறார். சௌரப் சட்டத்தின் ஓட்டைகளை தெரிந்து கொண்டு பணத்துக்காக அந்த ஓட்டைகளின் வழியே தவறுகள் செய்கிறான்.

ஒரே வித்தியாசம் பைரவ்க்கு சில விஷயங்களில் மனசாட்சி விழித்துக் கொள்ளும், சௌரப் மனசாட்சியை எல்லாம் எப்போதோ விற்று விட்டான்.

இருவருக்குமே மேல் மட்டத்தில் தெரிந்தவர்கள் உண்டு. அந்த நேரம் யாரால் என்ன உபயோகம் எனப் பார்த்துதான் அவர்களுக்கும் மேலே உள்ளவர்கள் யார் பக்கம் சாயலாம் என்பதை முடிவு செய்வார்கள்.

இப்போது காற்று பைரவ் பக்கமாக வீசவே அவரின் பேச்சு உயர்மட்டத்தில் எடுபட்டு விட்டது. ஆனால் எத்தனை காலம் வரை என்பது அவருக்கே தெரியாது.

என்னவான போதும் மீராவின் விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாக இல்லை பைரவ். தன் பக்கத்தை பலப் படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் என வேகமாக யோசிக்கத் தொடங்கியிருந்தார்.

பைரவ்வின் காதுக்கு விஷயம் செல்லும் முன் மீராவை இந்த ஊரிலிருந்து அப்புறப் படுத்தத்தான் நினைத்திருந்தான் சௌரப். எங்கே சொதப்பியது என குழம்பியவனுக்கு பின்னர்தான் பைரவ்வின் ஆள் காவல் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.

அவனை இங்கு அழைத்து வந்த கான்ஸ்டபிளை வாய்க்கு வந்தப்படி அர்ச்சித்து தன் ஆத்திரத்தை தணிக்க முயன்றான்.

இறுதியில் மீராவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் பைரவ் மஜும்தார். மீராவிடம் கைப்பேசி இல்லை. ஆகவே சஞ்சயை நேரில் போய் அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பி விட்டார்.

நடந்ததில் தன் பார்வையில் தான் புரிந்து கொண்டதை சஞ்சயிடம் சொன்னாள் மீரா.

இவ்வளவு நடந்திருக்கிறதா என சஞ்சய்க்கும் அதிர்ச்சிதான். அவளின் மனநிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் கையை ஆதரவாக பற்றிக்கொண்டவன், “ஸாரி மீரா, உனக்கு இவ்ளோ ப்ராப்லம்ஸ் நடந்திருக்கு, ஒன்னும் தெரியாம நான் தூங்கிட்டு இருந்திருக்கேன்” என்றான்.

“எனக்கு இன்னும் ஷிவரிங் குறையல சஞ்சய். எதையுமே யோசிக்க முடியல. எனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது?” எனக் கேட்டவளை பார்க்க பார்க்க அவனுக்கு மிகவும் பாவமாகி விட்டது.

“லாஸ்ட் மினிட்ல உன்னை தாதா காப்பாத்திட்டாரே மீரா. நீ இப்போ ஸேஃபா இருக்க. நான் உன் கூட இருக்கேன், பயப்படாத. எம்மேலதான் தப்பு, உன்னை நான் அந்த ஹாஸ்டல்ல சேர்த்து விட்ருக்க கூடாது. அந்த வார்டனுக்கு உம்மேல என்ன கோவம்னு இப்படி பண்ணிட்டா? அவளை நான் சும்மா விட மாட்டேன்” என்றான்.

“இல்லை சஞ்சய். இது கோவத்துல நடந்தது இல்லை. என்னை இங்கேருந்து அனுப்ப போட்ட பிளான் போல. அப்படித்தான் பைரவ் ஸார் சொன்னாங்க” என்றாள்.

ராஜசேகரின் பெயர், பிளான் போன்ற வார்த்தைகளை உபயோகித்து பெங்காலியில் பைரவ் அவளிடம் சொன்னதை வைத்து அவள் புரிந்து கொண்டது இது.

“இதென்ன ஒரு ஸ்மால் டவுன்ல இருக்க பினாமி இவ்ளோ தூரம் உன்னை துரத்தி வர்றான்? அவனுக்கு நேரம் சரியில்லை” என கோவமாக சொன்னான் சஞ்சய்.

அப்போது அந்த இடம் திடீரென அமைதியானது. கைப்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டே வெளியில் வந்தார் பைரவ். சுற்றியிருந்தோரின் உடல்மொழியில் பவ்யம் கூடியது. மீராவும் சஞ்சயும் எழுந்து நின்றனர்.

இவர்களிடம் வந்தவர் மீராவை கனிவாக பார்த்து விட்டு சஞ்சயை கோவமாக பார்த்தார். ‘உன்னை நம்பி வந்த பெண்ணை ஒழுங்காக பார்த்துக் கொள்ள மாட்டாயா?’ என்ற பொருளில் பெங்காலியில் கேட்டார்.

இந்தி என்றாலாவது சஞ்சய்க்கு ஓரளவு புரியும். ஒரு வார்த்தை கூட அவனுக்கு விளங்கவில்லை. தன்னை திட்டுவதாக கருதாமல் மீராவுக்கு இப்படியாக காரணமானவர்கள் பற்றி கோவமாக ஏதோ சொல்கிறாரோ எனதான் முதலில் நினைத்தான். ஆனால் தன்னை இவர் பார்க்கும் பார்வையே சரியில்லை என்பதை உணரவும் குழப்பத்தில் மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு.

மீராவும் ‘எதற்காக சஞ்சயை கடிந்து கொள்கிறார்?’ எனப் புரியாமல் விழித்தாள்.