Advertisement

அத்தியாயம் – 9
“என்ன சொல்லறீங்க கௌஷிக்…? அதுல இருந்தது ஆணோட முடியா…?” திகைப்புடன் கேட்டான் அஜய்.
“ஆமாம் சார்…!”
“ஒரு ஆண் எதுக்கு தலைல ஹேர்பின் குத்தணும்…”
“அதான் எனக்கும் புரியல சார்..”
“எனக்குப் புரியுது கௌஷிக்… ஒரு ஆண், பொண்ணா நடிக்கணும்னா, சவுரி வச்சு ஸ்லைடு குத்தலாமே…?”
“கரக்ட் சார்… சரியான கெஸ்ஸிங்…”
“ஓகே, உடனே விவரம் சொன்னதுக்கு தேங்க்ஸ் கௌஷிக்… நான் ஒரு முக்கிய விசாரணைக்கு வளசரவாக்கம் வந்திருக்கேன்… இங்க முடிச்சிட்டு உங்களை வந்து பார்க்கறேன்…”
“சரி சார்…” சொன்ன கௌஷிக் அழைப்பைத் துண்டிக்க அஜய் முகத்தையே பாதி புரிந்தும் புரியாமலும் பார்த்து நின்ற கிருஷ்ணாவை ஏறிட்டான்.
“என்ன சார், கௌஷிக் என்ன சொன்னார்…? ஏதும் விவரம் கிடைச்சுதா…?”
“ம்ம்… வாங்க சொல்லறேன்…!” என்றவன் சொல்லிக் கொண்டே நடந்தான். சின்ன சின்னதாய் வீடுகள் வரிசையாய் வர டோர் நம்பரை கவனித்துக் கொண்டே நடந்தனர்.
“ம்ம், இந்தக் கொலைலயாச்சும் ஒரு க்ளூ கிடைச்சதே…” கிருஷ்ணா சொல்ல, “டாக்டர் மரணத்திலேயே இந்த சந்தேகம் எனக்கு வந்திருச்சு கிருஷ்ணா…” என்றான் அஜய்.
“என்ன சந்தேகம் சார்…?” கிருஷ்ணா கேட்க, அதற்குள் அநாமிகாவின் முகவரியில் இருந்த வீட்டு எண்ணை அவர்கள் நெருங்கியிருந்தனர்.
“போகும்போது பேசிக்கலாம்…” சொன்னவன் “இந்த டோர் நம்பர் தானே…” என்றான் கிருஷ்ணாவிடம்.
“ஆமாம் சார்…” என்ற கிருஷ்ணா அழைப்பு மணியில் கை வைக்க உள்ளே கிர்ர்ர்ர்ர்ரியது.
ஒரு முதிய பெண்மணி கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி, “யாரு…?” என்றார்.
“இது, நர்ஸ் அநாமிகா வீடுதானே…?”
“ஆமா, நீங்க யாரு…?” கேட்டபடி இன்னும் சற்று கதவைத் திறந்த பெண்மணி மங்களகரமான முகத்துடன், அம்பதுகளில் இருந்தார்.
“என்ன ருக்கு, யாரு வந்திருக்கா…?” உள்ளிருந்து வயதானவர் ஒருவர் கேட்டுக் கொண்டே வர, இவர்களைக் கண்டதும் புரியாத பார்வை பார்த்தார்.
“உங்களுக்கு யார் வேணும்…?”
“நீங்க அநாமிகாவுக்கு என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கலாமா…?”
“முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க, என் பொண்ணைப் பத்தி எதுக்கு கேக்கறிங்க…?”
“ஓ, அநாமிகா உங்க பொண்ணு தானா…? அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும், கூப்பிட முடியுமா…?”
அவர்கள் சொல்லவும் முதியவர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு யோசனையுடன் இவர்களிடம் திரும்பினர்.
“முதல்ல நீங்க யாரு..? என்ன விஷயமா என் பொண்ணுகிட்ட பேசணும்னு சொல்லறீங்களா…?”
“சார், என் பேரு அஜய், கிரைம் பிராஞ்சுல வொர்க் பண்ணறேன், இவர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா… ஒரு கேஸ் விஷயமா உங்க பொண்ணு அநாமிகா கிட்ட சில விவரம் கேக்க வேண்டி இருக்கு… இது எங்க ஐடி…” என்றவன் தனது ஐடி கார்டை நீட்ட அவர்களின் முகம் குழப்பத்துக்கு போனது.
“ஓ..! போலீஸா..? உள்ள வாங்க சார்…” கதவைத் திறந்து வழிவிட உள்ளே நுழைந்தனர்.
“அநாமிகா வீட்ல இருக்காங்களா…?” அஜய் கேட்க, அந்த ருக்மணி அம்மா கண்கள் கலங்க முந்தானையால் வாயை மூடிக் கொண்டு உள்ளே செல்ல, மனைவியைக் கலக்கமாய் பார்த்த பெரியவரைப் புரியாமல் பார்த்தனர் இருவரும்.
“சார், நீங்க என்ன விஷயமா என் பொண்ணைப்  பார்க்க வந்திங்கன்னு தெரியாது, ஆனா அவளைப் பார்க்க முடியாது…”
“ஏன் சார், அவங்க ஊருல இல்லையா…?”
“அவ உலகத்துலயே இல்ல சார்…” என்றவரின் கண்களும் கலங்க அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டனர்.
“அதான் என் பொண்ணு அநாமிகா…” பெரியவரின் பார்வை சென்ற திசையில் பார்க்க, சுவரில் மாலையுடன் போட்டோவுக்குள் தொங்கிக் கொண்டிருந்த அழகிய பெண்தான் அநாமிகா எனப் புரிய திகைப்புடன் பார்த்தனர்.
“ஐ ஆம் சாரி சார், எங்களுக்கு தெரியாது… எப்ப, எப்படி இறந்தாங்க…?” என்றான் அஜய் வருத்தத்துடன்.
“என் பொண்ணு ஆசையா பொதுமக்களுக்கு சேவை செய்யணும்னு நர்சுக்குப் படிச்சு வேலைக்கு சேர்ந்தா… ஒரு ஆப்பரேஷன்ல தவறான மருந்தை எடுத்துக் கொடுத்து ஒருத்தர் இறந்துட்டார்னு ஹாஸ்பிடல்ல ரிபோர்ட் பண்ணி வேலையை விட்டு நீக்கிட்டாங்க, அப்ப இருந்தே மனசளவுல ரொம்பத் தளர்ந்து போயிட்டா, வேற ஹாஸ்பிடல்ல முயற்சி பண்ணியும் எங்கயும் வேலை சரியாகல, ரொம்ப மனசு விட்டுப் போயிருந்தா… அந்த சமயத்துல ஒரு கார் விபத்துல இறந்து போயிட்டா…”
“ஓ… இது எப்ப நடந்தது…?
“அஞ்சு மாசமாச்சு…”
“விபத்து எப்படி நடந்துச்சு…?”
“கார் வந்ததை கவனிக்காம அவ ஏதோ யோசனைல ரோடு கிராஸ் பண்ணும்போது இடிச்சிட்டுப் போயிருச்சு…”
“எந்தக் கார், யார் இடிச்சதுன்னு விசாரணை நடந்துச்சா…?”
“போலீசுல முதல்ல ஏதோ விசாரணைன்னு வர சொல்லிட்டு இருந்தாங்க, அப்புறம் அதைப் பத்தி எந்த விவரமும் இல்ல… சரி, பொண்ணே போயாச்சு, இனி இடிச்சவனைக் கண்டு பிடிச்சு என்னாகப் போகுதுன்னு நாங்களும் விட்டுட்டோம்…”
“ஹூம், எந்த ஸ்டேஷன்ல கேஸ் பைல் பண்ணிங்க…?”
“வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்…!”
“ஓகே…! நன்றி, நாங்க கிளம்பறோம்…” சொன்னவன் எழுந்து கொண்டான். வெளியே நடந்தனர்.
“என்ன சார், சரியா எந்தத் தகவலும் கிடைக்கலியே, எப்படி இந்தக் கேஸை டீல் பண்ணப் போறோம்…?”
“எங்கயோ நம்ம கண்ணுக்குத் தெரியாம ஒரு லூப்ஹோல் இருக்கு, அது என்னன்னு கண்டு பிடிச்சா இந்தக் கேசுக்கு ஒரு அவுட்லைன் கிடைச்சிரும்னு நினைக்கறேன், பார்ப்போம்…”
“அடுத்து எங்க சார்…?”
“இன்னைக்கு கம்மிஷனர்கிட்ட ரிப்போர்ட் பண்ணறேன்னு சொல்லிருக்கேன், உங்களை ஸ்டேஷன்ல விடறேன், நீங்க கௌஷிக் பார்த்து, ரிப்போர்ட் கலக்ட் பண்ணிட்டு வந்திருங்க… நான் கம்மிஷனரைப் பார்த்திட்டு வந்துடறேன்…”
“டன் சார்…” என்றவர் அவனுக்குப் பின்னில் அமர, வண்டி சாலையில் தடதடத்துப் பறந்தது.
சட்டென்று அஜய்க்கு பிரபஞ்சனின் கிளினிக்கில் இன்னும் விசாரணை செய்யவில்லையே என்று தோன்ற கிருஷ்ணாவிடம் கூறினான்.
“ஆமா சார், அங்க விசாரிச்சா ஏதும் விவரம் கிடைக்கலாம்…”
“போற வழில தானே பிரபஞ்சன் கிளினிக் இருக்கு, அங்க போயிட்டே போவோம்…” என்றவன் கிளினிக்கிற்கு விட்டான்.
“தேவி கிளினிக்…”
முதல் மாடியில் நியான் போர்டுடன் தெரிந்தது. GH ல் வேலை நேரம் போக மாலை நேரம் கிளினிக்கில் நோயாளிகளைப் பரிசோதிக்க பிரபஞ்சன் சென்று வந்தான்.
முன்னில் இரண்டு நர்ஸ்கள் மட்டும் இருக்க கிளினிக் காலியாகவே இருந்தது.
“இன்னைக்கு டாக்டர் இல்ல, நாளைக்கு வாங்க சார்…” என்றாள் அதில் ஒருத்தி.
“நாளைக்கு எந்த டாக்டர் வர்றார்…?”
“டாக்டர் ஜெய்ஷங்கர் தான் இனி ஈவனிங் கன்சல்டிங்க்கு வருவார்… உங்களுக்கு என்ன பிராப்ளம் சார்…?”
“நாங்க போலீஸ், ஒரு விசாரணைக்கு வந்திருக்கோம்…” அஜய் சொல்ல அப்பெண்களின் கண்ணில் பயம் தெரிந்தது. ஐடி கார்டைக் காட்டியவனிடம்,
“எ..என்ன விசாரணை சார்…” என்றாள் அப்பெண்.
“டாக்டர் பிரபஞ்சன் தினமும் எத்தன மணிக்கு இங்கே வருவார்…?”
“ஈவனிங் 7 க்கு வந்துட்டு 9.30, 10 வரை இருப்பார் சார்…”
“எந்த மாதிரி பேஷன்ட்ஸ் வருவாங்க…?”
“அவர் நியூரோ ஸ்பெஷலிஸ்ட், நரம்பு சம்மந்தமான பிரச்சனை உள்ளவங்க கன்சல்டிங்க்கு வருவாங்க சார்…”
“அவரோட ரூமைப் பார்க்கணுமே…?” அஜய் சொல்ல, “வாங்க சார்…” என்று சுற்றிலும் பாதி வரை கண்ணாடியால் மறைக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றாள் நர்ஸ்.
“டாக்டர் பிரபஞ்சன் ஆள் எப்படி…?” கிருஷ்ணா டாக்டரின் மேஜைக்குள் குடைந்து கொண்டிருக்க, அஜய் கேட்டுக் கொண்டே மேசை மீதிருந்தவற்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“டாக்டர் நல்ல டைப் தான் சார்…” அப்பெண் சொல்ல அவளை ஏறிட்டவன், “நிசமாலுமா…? என்றதும் தயக்கமாய் தலையைக் குனிந்து கொண்டாள்.
“ரெகுலரா டாக்டரை மீட் பண்ண யாராச்சும் வருவாங்களா…?”
“மெடிக்கல் ரெப்ஸ் வருவாங்க, எப்பவாச்சும் சில டாக்டர்ஸ், அப்புறம் டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கிற சில பேஷன்ட்ஸ் வருவாங்க…?”
“ரெகுலர் பேஷன்ட் டீடைல்ஸ் நான் பார்க்கணுமே…?” அஜய் சொல்ல, மற்ற பெண்ணிடம் கண்ணைக் காட்டி எடுத்துவர அனுப்பினாள் அப்பெண்.
“என்ன கிருஷ்ணா, ஏதாச்சும் கிடைச்சுதா…?” கேட்டவனின் பார்வை மேசை மீதிருந்த விசிட்டிங் கார்டு போல்டர் பாக்ஸில் படிய எடுத்துப் புரட்டினான். அதில் ஒரு கார்டைக் கண்டதும் ஆர்வத்துடன் எடுத்தான்.
  1. பிரகாஷ், பிரகதி எக்ஸ்போர்ட்ஸ் – MD, வெள்ளை அட்டையில் பளிச்சென்று பிரவுன் நிற எழுத்துகள் தெரிய, யோசனையுடன் நர்ஸ் பெண்ணிடம் திரும்பினான்.
“உங்களுக்கு இந்த பிரகாஷ் யாருன்னு தெரியுமா…?”
“தெரியும் சார், இந்த பிரகாஷோட ஒயிப் மகதி எங்க டாக்டரோட பேஷன்ட் தான்… அவங்களை எப்பவாச்சும் மிஸ்டர் பிரகாஷ் கிளினிக் அழைச்சிட்டு வருவாங்க…”
“ஓ…!” என்றவனுக்கு லேசாய் எங்கோ கனெக்ட் ஆவது போல் தோன்றியது.
“எவ்ளோ நாளா அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்கார்…?”
“சரியாத் தெரியல சார், ஆனா நாலஞ்சு வருஷம் இருக்கும்னு நினைக்கறேன்… நாங்க இங்கே ஜாயின் பண்ணறதுக்கு முன்னாடி இருந்தே அவர் தான் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கார்…”
“ஹோ, மிசஸ் மகதிக்கு என்ன பிராப்ளம்…?”
“அது சரியா தெரியலை சார், ஏதோ நரம்புப் பிரச்சனைன்னு மட்டும் தான் தெரியும்…”
“உங்களுக்கு அநாமிகான்னு யாரையாச்சும் தெரியுமா…?”
“அநாமிகா…! டாக்டர் சில நேரம் போன்ல பேசும்போது இந்தப் பெயரை சொல்லிக் கேட்டிருக்கேன்… மத்தபடி யாருன்னு தெரியாது சார்…!”
“சார்…” அதற்குள் கிருஷ்ணா அழைக்க திரும்பினான்.
“சொல்லுங்க கிருஷ்ணா… இது டாக்டரோட டைரியா…?”
“ஆமா சார், இதுல எழுதி இருக்கிறதைப் பாருங்க…?” என்றதும் ஆர்வத்துடன் பார்வையைப் பதித்தான்.
“அநாமிகா – பெயரில்லாதவள்…” என எழுதப்பட்டு அதன் மீது கிராசாய் பெருக்கல் குறி போடப்பட்டிருந்தது.

Advertisement