Advertisement

அத்தியாயம் – 8
பெசன்ட் நகர் பீச்.
கதிரவன் உலகத்தின் இருட்டை விரட்ட கிழக்கு திசையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கடல் பறவைகள் அதிகாலையிலேயே தங்கள் பாஷையில், கீச் கீச்சென்று சங்கீதம் படிக்கத் தொடங்கியிருந்தன.
கடற்கரையில் சிலர் வாக்கிங்கிலும், ஜாகிங்கிலும், உடற் பயிற்சியிலுமாய் மும்முரமாய் தொப்பையைக் கரைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர். சில பெண்கள் ஜாகிங் சூட்டில் ஓடியபடி இள வட்டங்களை சூடேற்றிக் கொண்டிருந்த அழகான அதிகாலை. புல்லட்டை ஓரமாய் நிறுத்திவிட்டு கண்களால் சுற்றிலும் ஆராய்ந்து கொண்டிருந்தான் அஜய். அவனுக்கு அருகில் ஜாகிங் உடையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவும் இருந்தார்.
எல்லாரும் அவரவர் வேலையில் மும்முரமாயிருக்க, அந்தக் காலை வேளையில் நான்கைந்து பெரிய பாத்திரங்களை தள்ளு வண்டியில் வைத்துக் கொண்டு ஒரு ஜூஸ் வண்டிக்காரர் தெரிந்தார். அவரிடம் சிலர் நின்று ஜூஸ் வாங்கிக் குடித்துக் கொண்டிருக்க அதை கவனித்த அஜய், “அவரைப் புடிப்போம், வாங்க கிருஷ்ணா…” என்று நடந்தான்.
அருகம்புல் ஜூஸ், நெல்லிக்கா ஜூஸ், கற்றாழை ஜூஸ், புதினா ஜூஸ், ஆவாரம் பூ ஜூஸ் என விலைப் பட்டியலுடன் ஒரு அட்டை, வண்டியின் முன்னில் தொங்கிக் கொண்டிருக்க, நடைபயிற்சி செய்வோர் சிலர் காலையிலேயே அங்கு முற்றுகை இட்டு, ஜூஸை உள்ளே தள்ளி வெளியே தள்ளி இருந்த தொப்பையை உள்ளே தள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
தலையில் கட்டிய முண்டாசுடன் அந்த குட்டிக் கடையின் முதலாளி வெகு பிஸியாய் வியாபாரத்தில் இருந்தார்.
அருகில் சென்றவரைக் கண்டு இன்முகமாய் புன்னகைத்தார்.
“வாங்க தம்பி, என்ன ஜூஸ் வேணும்…”
“டெய்லி இங்க வியாபாரம் பண்ணிட்டு இருக்கீங்களா…?”
“ஆமா தம்பி, நடக்க வர்றவங்க நிறையப் பேரு நம்ம ரெகுலர் கஸ்டமர், உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும்…” வியாபாரத்தில் கண்ணாய் இருந்தார்.
“எத்தன மணி வரைக்கும் வியாபாரம் பண்ணுவீங்க…?” அவனது கேள்வியில் மெல்ல எரிச்சலடையத் துவங்கினார்.
“அதெல்லாம் கேட்டு என்ன பண்ணப் போறீங்க தம்பி…? கொஞ்ச நேரத்துல இதெல்லாம் காலியாப் போயிரும், முடிஞ்சதும் வூட்டுக்கு கிளம்பிருவேன்.., உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும்னு சொல்லுங்க…!”
“எனக்கு ஒரு தகவல் வேணும்…”
“என்ன தம்பி, வியாபார நேரத்துல தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க, என்ன தகவல்…?” அவர் சலிப்பாய் கேட்க தனது அடையாள அட்டையை எடுத்து நீட்டினான் அஜய்.
“போலீஸ்…! இப்ப தகவல் கிடைக்குமா…” என்றதும் மிரண்டார்.
“எ..என்ன தகவல் வேணும், சார்…?”
“பரவால்ல, தம்பியே இருக்கட்டும்… உங்க பேர் என்ன…?”
“மருதமுத்து தம்பி…!”
“நீங்க தினமும் எத்தனை மணில இருந்து எத்தனை மணி வரை இங்கே வியாபாரம் பண்ணுவீங்க…?”
“காலைல அஞ்சு மணிக்கு வியாபாரம் தொடங்கிருவேன் தம்பி… ஆறரை, ஏழு மணிக்குள்ள எல்லாம் வித்திருவேன்…”
“ஹூம், தினமும் இங்கே வாக்கிங் வர்றவங்களை உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்குமே…?”
“ஓரளவுக்குத் தெரியும் தம்பி…!”
“கிருஷ்ணா, பிரகாஷ் போட்டோவைக் காட்டுங்க…” அஜய் சொல்லவும் மொபைலில் பிரகாஷ் போட்டோவை எடுத்து மருதுவிடம் நீட்டினார் கிருஷ்ணா.
“இவரைத் தெரியுமா…?”
மொபைலை உற்று நோக்கிவிட்டு, “நல்லாத் தெரியும் தம்பி… இவரு நம்ம ரெகுலர் கஸ்டமரு… தினமும் வாக்கிங் முடிஞ்சு நம்மகிட்ட அருகம்புல் ஜூஸ் குடிச்சிட்டு தான் போவாரு…” என்றார் சிரிப்புடன்.
“ம்ம்… இவரை கடைசியா எப்பப் பார்த்திங்க…” என்றதும் யோசித்தார்.
“ரெண்டு, மூணு நாளா இவரைக் காணோம், புதன்கிழமை பார்த்ததா நியாபகம்…”
“ஓ… புதனும் உங்ககிட்ட ஜூஸ் குடிக்க வந்தாரா…?” என்றதும், “ஹா… வந்தார்…” என்றவர் நிறுத்தி யோசித்தார்.
“இல்ல தம்பி, அன்னைக்கு ஒரு பொண்ணு கூட பேசிட்டு அப்படியே காருல கிளம்பிப் போயிட்டார்…”
“பொண்ணா, எந்தப் பொண்ணு…?”
“அது தெரியல தம்பி, ஒரு பொண்ணு கிட்ட ரெண்டு மூணு பசங்க கிண்டல் பண்ணி தொந்தரவு பண்ணிட்டு இருந்தாங்க, அப்ப இந்த சார் தான் அந்தப் பொண்ணுகிட்ட பேசி பசங்களை விரட்டி விட்டாரு… அப்புறம் ரெண்டு பேரும் பேசிகிட்டே நடந்து வந்தாங்க, நான் கூட சார், ஜூஸ் குடிக்கலியான்னு கேட்டேன், இல்ல, நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு…”
“ஹோ, அந்தப் பொண்ணை இதுக்கு முன்னாடி எங்காச்சும் பார்த்திருக்கீங்களா…?”
“இல்ல தம்பி, அன்னைக்கு தான் புதுசா பார்க்கறேன்…”
“எப்படி இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா…?”
“சரியா கவனிக்கல, பேன்ட் ஷர்ட் போட்டுட்டு உயரமா இருந்துச்சு தம்பி…”
“ஓகே, இந்த பிரகாஷ் நடக்க வரும்போது வேற யாரோடவும் பேசிப் பார்த்து இருக்கீங்களா…?”
“அது கவனிச்சதில்ல தம்பி…”
“மறுபடியும் அந்தப் பொண்ணை இங்கே பார்த்திங்களா…?” கிருஷ்ணா கேட்க,
“இல்ல சார், அதுக்குப் பொறவு அந்த சாரும் வரல, பொண்ணும் வரல…! எதுக்கு சார், இவ்ளோ விவரம் கேக்கறிங்க…? என்றார் மருது.
“நீங்க நியூஸ் பேப்பர் படிப்பிங்களா…?” அஜய்.
“எனக்கு எங்க தம்பி அதுக்கெல்லாம் நேரம், காலைல நாலு மணிக்கு எழுந்தா தான் அஞ்சு மணிக்கு இங்க ஜூஸ் போட்டு கொண்டு வந்து விக்க முடியும்… வீட்டுக்குப் போனதும் காய்கறியை தள்ளுவண்டில வச்சு விக்கப் போயிருவேன், பேப்பருக்கு செலவு பண்ணற அளவுக்கு வருமானமும் இல்ல தம்பி…” என்றார் அவர்.
அதற்குள் வேறு சிலர் ஜூஸ் குடிக்க வரவும், “சரி, மறுபடி அந்தப் பொண்ணைப் பார்த்தா ஸ்டேஷன்ல விவரம் குடுங்க…” சொல்லவும் அவர் தலையாட்ட நகர்ந்தனர்.
சிறிது நடப்பதற்குள் பின்னிலிருந்து அவர் அழைத்தார்.
“தம்பி, தம்பி… ஒரு நிமிஷம்…” என்றதும் திரும்ப வந்தனர்.
“சொல்லுங்க…!”
“இப்பதான் எனக்கு அந்தப் பொண்ணைப் பத்தி ஒரு விஷயம் நினைவு வந்துச்சு…” என்றார் மருது.
“என்ன விஷயம், சொல்லுங்க…?” என்றனர் ஆர்வத்துடன்.
“ரெண்டு மூணு பசங்க அந்தப் பொண்ணுகிட்ட வம்பு பண்ணினாங்கன்னு சொன்னன்ல…”
“ஆமா, அந்தப் பசங்க யாருன்னு தெரியுமா…?”
“இல்ல தம்பி, அந்தப் பொண்ணு அந்தப் பசங்களோட தான் முதல்ல இங்க வந்து பேசிட்டு இருந்துச்சு, அப்புறம் ஓடப் போச்சு, கொஞ்ச நேரத்துக்கு பிறகு அந்த சார் வரும்போது தான் அவங்க வந்து கிண்டல் பண்ணி வம்பு பண்ணினாங்க, இந்தப் பொண்ணு அவங்க யாருன்னே தெரியாத போல கத்தவும் தான் அந்த சாரு ஹெல்ப் பண்ணி கூட்டிப் போனாரு…” மருது சொல்ல யோசனையுடன் கண்ணை சுருக்கிய அஜய்க்கு எதுவோ புரிவது போல் இருந்தது.
“நான் கூட நினைச்சேன், இந்தப் பொண்ணு அந்தப் பசங்களோட தான பேசிட்டு வந்துச்சு, அப்புறம் ஏன் தெரிஞ்ச பொண்ணை இந்தப் பசங்க வம்பிழுக்கிறாங்கன்னு… சரி, வேற ஏதோ பிரச்சனையா இருக்கும்னு நினைச்சுகிட்டேன்…” அவர் சொல்லவும், பிரகாஷை அவர்கள் வலையில் விழ வைக்க போடப்பட்ட நாடகம் தான் அது என இருவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஐயா, ரொம்ப தேங்க்ஸ், மறுபடி அவங்க யாரையாச்சும் இங்க பார்த்தா மறக்காம பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல விவரம் கொடுங்க… நாங்க வர்றோம்…” என்று கிளம்பினர்.
“என்ன சார், எல்லாமே பக்கா பிளான் பண்ணி நடத்தி இருப்பாங்க போலருக்கு, யார் அந்தப் பொண்ணு…? ஒருவேளை அவதான் நாம தேடற அநாமிகாவா…?”
“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்…”
“அடுத்து நம்ம மூவ் என்ன சார்…?
“நர்ஸ் அநாமிகா பத்தி விசாரிக்கணும், அவங்க அட்ரஸ் கலக்ட் பண்ணிட்டிங்க தானே…?”
“ஹாஸ்பிடல் ரெகார்டுல இருந்து வாங்கிட்டேன் சார்…”
“இந்த அநாமிகா ரொம்ப சுத்தல்ல விடுது… வீட்டுக்குப் போயிட்டு ஒன் அவர்ல ஸ்டேஷன் வந்திருங்க, அந்த அட்ரஸ்ல போயி பார்த்திடுவோம்… அப்புறம் நம்ம ஸ்டேஷன் SI அனுப்பி அந்த ஜூனியர் வக்கீல் சுந்தரை லேசா அதட்டி விசாரிக்க சொல்லிடுங்க… நேத்து அவன் சொன்ன பொய் மனசுல உறுத்திட்டே இருக்கு…”
“எஸ் ஸார்…” என்ற கிருஷ்ணா அவரது வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப அஜய் புல்லட்டில் பறந்தான்.
சரியாய் ஒரு மணி நேரம் கழித்து அஜய் ஸ்டேஷனுக்கு வர, கிருஷ்ணாவுடன் கிளம்பினர்.
புல்லட் அநாமிகாவின் முகவரி இருந்த வளசரவாக்கத்தை நோக்கிப் பறந்தது. அங்கிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து அவளது முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து வீடு இருந்த சந்துக்குள் நுழைந்தனர்.
“இந்தத் தெரு தானா…? அஜய் கிருஷ்ணாவிடம் கேட்கும்போதே அவனது சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்த செல்போன் சிணுங்கி கூப்பிட்டது.
எடுத்து டிஸ்பிளேயில் தெரிந்த பெயரைப் பார்க்க, “கௌஷிக், பாரன்சிக்…” என்றதும் அழைப்பை எடுத்து காதில் வைத்தவன்  ஆர்வமாய் பேசத் தொடங்கினான்.
“சொல்லுங்க கௌஷிக்…”
“சார், ஒரு முக்கியமான விஷயம்…”
“அப்படியா, ஏதும் க்ளு கிடைச்சுதா…?
“அந்த பிரகாஷ் காருக்குள்ள இருந்து ஒரு கிளிப் முடியோட கிடைச்சுதே, அதை நீங்க பரிசோதனை பண்ணிப் பார்க்க சொன்னிங்களே…”
“ஆமா கௌஷிக், அந்த ரிப்போர்ட் வந்திடுச்சா…?
“எஸ் சார், நான்கூட அதுல பெருசா என்ன விஷயம் கிடைக்கப் போகுதுன்னு நினைச்சேன்…”
“ம்ம்… ரிப்போர்ட் என்ன சொல்லுது கௌஷிக்…?”
“சார், அந்த கிளிப்புல இருந்தது உண்மையான முடியே கிடையாது…”
“அப்புறம்…?”
“அந்த கிளிப்புல நீளமா இருந்தது ஒரு செயற்கைக் கூந்தல், அதாவது சவுரி முடி…”
“ஹோ, அந்தப் பொண்ணு சவுரி முடி வச்சிருக்குமோ…?”
“நான் சொல்ல வந்தது அதில்ல சார், அந்த கிளிப்புல சவுரி முடிகூட குட்டியா சின்ன, சின்ன முடியும் இருந்துச்சு…”
கௌஷிக் சொல்லவும் திகைத்தான் அஜய்.
“என்ன சொல்லறீங்க, கௌஷிக்…? அது யாரோடது…?”
“அந்தக் குட்டி முடிக்கு சொந்தக்காரன் ஒரு ஆண்…!”

Advertisement