“கிருஷ்ணா, பிரகாஷ் பாமிலியைப் பத்தி விசாரிக்க சொன்னனே, விசாரிச்சிங்களா…?” கேட்டுக் கொண்டே புல்லட்டை பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அஜய்.
“விசாரிச்சேன் சார், வீட்ல பிரகாஷும், மனைவி மகதியும் மட்டும் தான்… மகதி கொஞ்சம் மனநிலை சரியில்லாதவங்க, அவங்க துணைக்கு மகதியோட அம்மா இருக்காங்க…”
“ம்ம்… அவர் எந்த மாதிரி பிசினஸ் பண்ணிட்டிருக்கார், பினான்சியல்லி சவுன்டான ஆளு தானா…?”
“பிரகதி எக்ஸ்போர்ட்ஸ் பேர்ல வெளிநாடுகளுக்கு டீஷர்ட்ஸ் எக்ஸ்போர்ட் பண்ணற கம்பெனி வச்சிருக்கார்… அஞ்சாறு வருஷம் முன்னாடி பிசினஸ் ரொம்ப லாஸ் ஆகி, கடன் தாங்க முடியாம தற்கொலை வரைக்கும் போனவர், அதுக்கப்புறம் முழுமூச்சா தன்னோட உழைப்பால நல்ல நிலைமைக்கு வந்திருக்கார்… இப்ப வளர்ந்து வரும் இளம் பிசினஸ் மேன்ல அவர் பெயரும் இருக்கு…”
“ஓ… பிரகாஷ் மனைவியால நம்ம கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா… அவங்களுக்கு என்ன பிராப்ளம்…?”
“அவங்க ஒரே பொண்ணு பிரகதி ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க, அதுல இருந்தே ஒருமாதிரி மென்டல் டிப்ரஷன்ல இருப்பாங்க போலருக்கு…”
“ம்ம்… பிரகாஷ் டெய்லி மார்னிங் பெசன்ட் நகர் பீச்சுல வாக்கிங் போறவர் தானே…?”
“ஆமா சார்…”
“அங்கே அவரை யாருக்காச்சும் தெரிஞ்சிருக்கலாம் தானே…”
“இருக்கலாம் சார்… அப்ப அடுத்து பெசன்ட் நகரா…?”
“நோ…! அது நாளைக்கு மார்னிங், இப்ப நாம போகப் போறது GH க்கு…” சொன்ன அஜய் புல்லட்டை முறுக்க தடதடத்தது.
சென்னை GH.
அந்த நேரத்திலும் பரபரப்பாய் தெரிந்தது. கவலை தாங்கிய முகங்களுடன் மக்கள் நிறைந்திருக்க, “இத்தனை பேருக்கும் என்ன தான் உடம்புக்குப் பிரச்சனையோ…?” தோன்றிய எண்ணத்தை ஒதுக்கிக் கொண்டு உள்ளே நடந்தனர்.
ரிசப்ஷன் கவுண்டரில் இருந்த வெள்ளுடுப்பு தேவதையிடம், “எக்ஸ்கியூஸ் மீ, நான் அஜய், கமிங் பிரம் போலீஸ்…” என்றவன் ஐடி கார்டைக் காட்டவும், அவள் கண்ணில் மரியாதை தெரிய, “எஸ், சொல்லுங்க சார்…” என்றாள்.
“ஒன் மினிட் சார்…” என்றவள் இண்டர்காமில் அவரிடம் பர்மிஷன் கேட்டுவிட்டு நிமிர்ந்தாள்.
“சார் உங்களை வர சொன்னார்… பர்ஸ்ட் புளோர்ல லாஸ்ட் ரூம்…” என்றதும் இருவரும் மாடிப்படிக்கு நகர்ந்தனர். படிகளைக் கடந்து முதல் மாடியில் இருந்த இறுதி அறைக்கு முன்பாய் நின்றார்கள். கதவில் பளபளத்த பெயர்ப்பலகை, “டாக்டர் ஹரிகிருஷ்ணன் எம்.டி, எம்.எஸ்” என்றது.
வெறுமனே சாத்தியிருந்த கதவை மெல்லத் தட்ட, உள்ளேயிருந்து “ப்ளீஸ் கெட் இன்…!” என்ற குரல் வந்தது.
அஜயும், கிருஷ்ணாவும் உள்ளே நுழைந்தனர்.
பரந்த மேஜைக்குப் பின்னால் ஐம்பதுகளில் இருந்த நபர் ஒருவர் நாற்காலியில் சாய்ந்திருந்தார். மேஜை மீதிருந்த பைல் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தார். மண்டைக்குள் இருந்த அதிகப்படியான அறிவு முக்கால்வாசி முடியைக் காவு வாங்கி இருக்க, மூக்குக் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களில் அதிகம் கூர்மை இருந்தது.
அறை நிசப்தமாய் இருக்க அவர்களை ஏறிட்டவர், முன்னில் இருந்த வெறுமையான நாற்காலிகளைக் காட்ட அமர்ந்தனர்.
நிதானமாய் பார்த்த அஜய், “உங்க ஹாஸ்பிடல் டாக்டர் பிரபஞ்சன் மரணத்தைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க…?
“டாக்டர் பிரபஞ்சன் சிறந்த நியூரோ சர்ஜன்… எந்தக் கேஸா இருந்தாலும் ஒரு டெடிகேஷனோட அட்டன்ட் பண்ணுவார்… அவரோட இழப்பு மருத்துவத் துறைக்கே பெரிய இழப்பு…”
“டாக்டர் பிரபஞ்சன் புரபஷனல்ல நல்ல டாக்டரா இருக்கறது சந்தோஷம், ஆனா அவரோட பர்சனல் பத்தி தெரிஞ்சுக்கணும், இங்கே அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார்னு சொல்ல முடியுமா…?”
“டாக்டர் ஜெய்ஷங்கர்… இங்க அவரோட தான் பிரபஞ்சனை அதிகமா பார்த்திருக்கேன்… அவர் கூட இப்ப டியூட்டில தான் இருக்கார்… ஹீ ஆல்ஸோ எ நியூரோ சர்ஜன்…”
“ஓகே சார், அவரை மீட் பண்ண பர்மிஷன் வேணும்…”
“ஷ்யூர்..!” என்றவர் இண்டர்காமில் அழைக்க ஜெய்ஷங்கர் ஆப்பரேஷன் தியேட்டரில் இருப்பதாய் கூறினர்.
“இன்னைக்கு ஒரு சின்ன சர்ஜரி இருக்கு, ஜெய்ஷங்கர் தான் பண்ணிட்டு இருக்கார், நீங்க அவர் அறைல வெயிட் பண்ணுங்க, கொஞ்ச நேரத்துல வந்திருவார்…”
“ஓகே டாக்டர், தேங்க்ஸ்…” நன்றி கூறி எழுந்தனர். ஹரி கிருஷ்ணன் சொன்ன அறைக்கு முன் சென்று ஜெய்ஷங்கர் வருவதற்காய் காத்திருந்தனர். அதற்குள் அஜயின் அலைபேசி சிணுங்கலை வெளியிட, கிருஷ்ணாவிடம் சொல்லிவிட்டு பேசுவதற்காய் எழுந்தான்.
அந்த நீண்ட வராண்டாவில் பேசிக் கொண்டே நடந்தவன் காதில் ஒரு அறைக்குள் இருந்து இரு பெண்களின் பேச்சு சத்தம் கேட்க, அதில் அவர்கள் குறிப்பிட்ட டாக்டர் பிரபஞ்சன் என்ற பெயரில் அங்கேயே நின்றான்.
“விஜி, உனக்குத் தெரியுமா…? டாக்டர் பிரபஞ்சன் தற்கொலை பண்ணிக்கலையாம், கொலையா இருக்கலாம்னு போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காம்…!”
“அதானே… அந்தாளு மத்தவங்களைத் தான் தற்கொலை பண்ணிக்க வைப்பான், அவன் எதுக்கு சாகப் போறான்னு நினைச்சேன், யாரோ போட்டுத் தள்ளிட்டாங்களா…?”
“ம்ம்… அவனைக் கொன்னது யாரா இருந்தாலும் நல்லாருக்கட்டும், கொஞ்ச நஞ்ச இம்சையா பண்ணான், ச்சே, சரியான பொம்பளைப் பொறுக்கி…”
“ஹூம், எப்படியோ அந்தாளு தொல்லை இனி இல்லை, அதே போல டாக்டர் ஜெய்ஷங்கரையும் யாராச்சும் போட்டுத் தள்ளிட்டா ரொம்ப நிம்மதியா இருப்போம்… எவ்ளோ படிச்சும் கழிசடை புத்தி போக மாட்டேங்குதே…” லெட்ஜரில் எதையோ எழுதிக் கொண்டிருந்த விஜயசாந்தி நிமிர அறைக்குள் நுழைந்த அஜயை கண்டதும் திடுக்கிட்டாள்.
“ஹ..ஹலோ, யார் நீங்க… பர்மிஷன் இல்லாம எதுக்கு உள்ள வர்றீங்க…?” சிடுசிடுக்க மற்றவளும் வந்தாள்.
“மிஸ்டர்! யார் நீங்க…? இங்க என்ன பண்ணறீங்க?”
அவர்கள் இருவரையும் சிறு புன்னகையோடு பார்த்தவன், “போலீஸ்…!” என்றதும் மிரண்டனர்.
“போ..போலீஸா…?”
“எஸ்…! டாக்டர் பிரபஞ்சன் மரணத்தைப் பத்தி விசாரிக்கறது நானேதான்…” என்றதும் ஒருவரை ஒருவர் தவிப்புடன் பார்த்துக் கொண்டனர்.
“ரெண்டு பேரும் டாக்டரைப் பத்தி ஏதோ பாராட்டிப் பேசிட்டு இருந்த போல இருந்தது…?”
“அ..அது வந்து, அப்படில்லாம் எதுவும் இல்ல சார்…”
“இல்லையே..! பொம்பளைப் பொறுக்கி, கொன்னவன் நல்லா இருக்கட்டும்னு எல்லாம் காதுல விழுந்துச்சே…? என்றதும் பயத்துடன் எச்சிலை விழுங்கிக் கொண்டனர்.
“இல்ல சார், அது வந்து…”
“பயப்படாதீங்க, நீங்க பேசினதை நான் வெளிய சொல்லப் போறதில்லை… ஆனா, டாக்டர் பிரபஞ்சனோட உண்மையான முகம் தெரியணும்னா நீங்க பேசணும்…”
“இல்ல சார், அதுவந்து… நாங்க சும்மா…”
“உங்க பேர் வெளிய வராமப் பார்த்துக்கறேன்… உங்களுக்கு அவரைப் பத்தி தெரிஞ்ச உண்மைகளை தயவுசெய்து சொல்லுங்க…”
“சரி சார், நாங்க சொல்லறதை வெளிய மட்டும் சொல்லிடாதீங்க, அப்புறம் எங்க வேலை போயிடும்…” என்ற சுதா தயக்கத்துடன் வெளியே பார்த்துக் கொண்டே அஜயிடம் சொல்லத் தொடங்கினாள்
“டாக்டர் பிரபஞ்சனைப் பொறுத்தவரை ஒரு நல்ல டாக்டர் தான், ஆனா மோசமான மனுஷன்… அவன் பண்ணுற அட்டூழியம் எல்லாம் அவன் சம்சாரத்துக்கு கூடத் தெரியாது… அவங்க முன்னாடி ஸ்ரீராமன் போல தான் இருப்பான்… ஆனா, அவன் இருக்கும்போது நைட் டியூட்டி போட்டா எல்லா நர்ஸும் பயந்துட்டே இருப்போம்… ரொம்ப மோசமான ஆளு… சிலர் அவனோட அதிகாரத்துக்கு பயந்து பணிஞ்சு கூடப் போயிருக்காங்க… நாங்களும் பொழப்புக்கு தானே வேலைக்கு வர்றோம், அந்த வேலைலயே மண்ணள்ளிப் போட்டிருவான்… ஏதோ, நாங்க கொஞ்சம் சீனியரா இருக்கிறதால எங்களை விட்டு வச்சிருக்கான்… புதுசா வர்ற சின்னப் பொண்ணுங்க பாடு தான் ரொம்பத் திண்டாட்டம்…”
“ம்ம்… இதைப் பத்தி ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்க்கு யாரும் ரிபோர்ட் பண்ணலியா…?”
“பண்ணியும் பிரயோசனம் இல்ல சார், இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க… அவன் பண்ணின அட்டூழியம் தாங்காம தான் யாரோ கொன்னுட்டாங்க போலருக்கு…”
“ம்ம்… அப்படி அவனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க யாராச்சும் பிரச்சனை பண்ணி இருக்காங்களா…”
“ஒரு பொண்ணு அவன் மேல கம்ப்ளெயின்ட் பண்ணி இருந்தா…! அவளை ஒரு ஆப்பரேஷன்ல தப்பா மருந்து எடுத்துக் கொடுத்துட்டதா சொல்லி வேலையை விட்டே தூக்க வச்சுட்டான்… அப்புறம் ஒரு பொண்ணு இவன் இம்சை தாங்காம வேற ஊருக்கு மாத்தல் வாங்கிட்டுப் போயிருச்சு…” சொன்னவளின் பார்வை அச்சத்துடன் அவன் மேல் படிய,
“அவர் பிரபஞ்சன் அளவுக்கு மோசமில்லை… ஆனாலும் டிரை பண்ணி, வாய்ப்புக் கிடைச்சா யூஸ் பண்ணறதுல கில்லாடி…”
“ம்ம்…!” என்றவன், “உங்க பேரென்ன…? வேற எதுவும் டீடைல் வேணும்னா தொடர்பு கொள்ளலாமா…”
“சரி சார், ஆனா வெளிய மட்டும் எங்களைப் பத்தி சொல்லிட வேண்டாம்… நான் விஜயசாந்தி, இது லாவண்யா…” என்றவள் அவர்களின் எண்ணை ஒரு பேப்பரில் எழுதி நீட்டினாள்.
“நீங்களும் ஏதாவது சொல்லனும்னா என் நம்பர்ல கான்டாக்ட் பண்ணலாம்… உதவிக்கு நன்றி, டாக்டர் ஜெய்ஷங்கரால இனி உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது… வர்றேன்…” எனவும் அவர்கள் முகத்தில் நிம்மதிப் புன்னகை. ரெண்டடி நடந்தவன் திரும்பி வந்தான்.