Advertisement

அத்தியாயம் – 5
டிவி திரைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உடலைப் பொருத்திக் கொண்டு கிரணிடம் கேட்டான் அஜய்.
“மிஸ்டர் கிரண்! இந்த ஹோட்டல்ல உள்ள எல்லா சிசிடீவி சிஸ்டத்தையும் நீங்கதான் மானிட்டர் பண்ணறீங்களா…?
“ஆமா சார்.”
“மன்டே ஈவனிங் டாக்டர் பிரபஞ்சன் ரிசப்ஷன் நடந்த புளோர்ல வீடியோ புட்டேஜஸ் காட்டுங்க…”
“ஒரு நிமிஷம் சார்…” சொன்ன கிரண் அங்கிருந்த கம்ப்யூட்டரில் அமர்ந்து திங்கள் மாலை பதிவான வீடியோ புட்டேஜ்களை ஸ்க்ரீனில் மெல்ல நகர்த்தத் தொடங்கினான். அஜயும், கிருஷ்ணாவும் ஒவ்வொரு வீடியோவையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
புன்னகை முகமாய் பிரபஞ்சனும், தேவியும் வருபவர்களை வரவேற்பதும் யார் யாரோ உள்ளே நுழைவதும், வருவதுமாய் இருக்க, அரைமணி நேரத்துக்குப் பின் பிரபஞ்சன் ஹாலுக்கு வெளியே வந்து லிப்டில் நுழையும் காட்சி வந்தது.
“குட்… இதுக்கு கனக்சன் வீடியோவைக் காட்டுங்க…” அஜய் சொல்ல, அடுத்த வீடியோவில் பிரபஞ்சன் ரிசப்ஷனில் நின்று விசாரிப்பதும் அங்கே சிறிது நேரம் அமர்ந்து வெயிட் பண்ணுவதும் தெரிந்தது.
அவர்கள் உன்னிப்பாய் கவனிக்கும்போதே போன் அடிக்க, மஞ்சு எடுத்துவிட்டு பிரபஞ்சனை அழைக்க, ரிசீவரை வாங்கிப் பேசத் தொடங்கியவனின் முகத்தில் அதிர்ச்சியும், குழப்பமுமாய் கலவையான உணர்வுகள் மின்னி மறைந்தன.
ரிசீவரை வைத்துவிட்டு மீண்டும் லிப்டுக்குள் நுழைந்தவனுடன் பர்தா அணிந்த ஒரு பெண்ணும் நுழைவதைக் கண்ட அஜய், “கிரண்! கொஞ்சம் ஸ்டாப் பண்ணி, அந்தப் பொண்ணை ஜூம் பண்ணுங்க…” என்றான்.
கிரண் ஜூம் செய்யவும் முழுதாய் கறுப்பு பர்தாவுக்குள் நுழைந்திருந்த அந்தப் பெண் பார்வைக்குக் கிடைக்க, அவளைத் தலையிலிருந்து கால்வரை கவனமாய் எக்ஸ்ரே எடுத்த அஜய்யின் கண்களில் அலாரம் அடித்தது.
அடுத்த வீடியோவில் பிரபஞ்சன் லிப்டில் இருந்து வெளிப்பட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி செல்ல அந்த பர்தா பெண்ணும் அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தாள். சிறிது நேரத்தில் பர்தாப் பெண் மட்டும் திரும்பி காஷுவலாய் வெளியே வந்து சுற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு லிப்டுக்கு நகர்ந்தாள்.
“கிரண்! இதுவரை உள்ள வீடியோ புட்டேஜஸ் காப்பி பண்ணிக் கொடுங்க…” என்றதும் அவன் காப்பி செய்யத் தொடங்க கிருஷ்ணா குழப்பமாய் கேட்டார்.
“சார், இந்தப் பொண்ணு எதுக்கு டாக்டர் பின்னாடியே ஜென்ட்ஸ் ரெஸ்ட் ரூமுக்குப் போகுது…”
“ஏன்னா, அது பொண்ணே இல்ல…” என்றதும் அவர் முகம் அதிர்ச்சிக்குப் போக, “நாம இப்ப லாயர் சந்தோஷ் ஆபீசுக்குப் போறோம்…” என்றான் கிரண் நீட்டிய பென் டிரைவை வாங்கிக் கொண்டே.
கோர்ட் வளாகத்தில் நிறைய கறுப்பு வெள்ளை, உடுப்புகள் கையில் கேஸ் கட்டோடு தென்பட, பலவித மக்கள் பலவிதப் பிரச்சினைகளுக்காய் நியாயம் தேடி காத்துக் கிடந்தனர். அந்த வளாகத்தைச் சுற்றி நிறைய குட்டி குட்டி வக்கீல் ஆபீசுகள் இருக்க, சந்தோஷின் அலுவலக அறையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தனர் இருவரும்.
யாருடனோ பேசிக் கொண்டிருந்த சந்தோஷின் ஜூனியர் சுந்தர் முன்னில் நின்றவர்களை ஏறிட்டான்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவை முன்னமே பரிச்சயம் இருந்ததால் அவரை நோக்கியவன், “வாங்க இன்ஸ்பெக்டர்..” என்றுவிட்டு, “நீங்க கோர்ட்டுல வெயிட் பண்ணுங்க, வந்துடறேன்…” அந்த கிளையண்டை அனுப்பி வைத்தான்.
“உக்காருங்க சார்…” அவன் காட்டிய நாற்காலியில் அமர்ந்த இன்ஸ்பெக்டர், “இவர் மிஸ்டர் அஜய், கிரைம் பிராஞ்ச் ஆபீசர், உங்ககிட்ட சில டீடைல்ஸ் கேக்கனும்னு  சொன்னார்…” என்றதும் அஜயை ஏறிட்டான் சுந்தர்.
“எஸ் சார், என்ன கேக்கணும்…”
“மிஸ்டர் சுந்தர், சந்தோஷ் இறந்த செவ்வாக் கிழமை ஈவனிங் யாரோ ஒரு கிளையன்டை மீட் பண்ணறதுக்காக, வீட்டுக்குப் போனவர் ஆபீசுக்கு மறுபடி திரும்பி வந்தார்னு ரிப்போர்ட்ல சொல்லிருக்கீங்க, ஆம் ஐ ரைட்…?”
“ஆமா சார்…”
“அந்த கிளையன்ட் யாரு? இதுக்கு முன்னாடி பரிச்சயம் உள்ளவங்களா…?”
“இல்ல சார், அன்னைக்கு புதுசா வந்தாங்க… செங்கல்பட்ல இருந்து லாயர் சாரைப் பார்க்க வந்திட்டு பார்க்காம திரும்பிப் போனா கஷ்டம், ரொம்ப அர்ஜன்டா குடும்ப சொத்து விஷயமாப் பேசணும்னு சொன்னாங்க…”
“அவங்க பேரு என்னன்னு சொன்னிங்க…”
“அவந்திகாவோ என்னமோ, புதுசா ஒரு பேரு சொன்னாங்க, ஒரு நிமிஷம் சார், விசிட்டர் லிஸ்ட்ல பார்த்துடறேன்…” சொன்ன சுந்தர், ஓரமாய் ஒரு மேசையில் அமர்ந்து இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை நோக்கி, “ஹேமா, அந்த லெட்ஜரை எடுத்திட்டு வாங்க…” எனவும் அப்பெண் ஒரு லாங் சைஸ் நோட்டுடன் வந்தாள்.
அதை வாங்கிப் பார்த்து நிமிர்ந்த சுந்தர், “அவங்க பேரு அநாமிகான்னு சொன்னாங்க சார்…”
சுந்தர் சொன்ன பேரைக் கேட்டதும் கிருஷ்ணா வியப்புடன் அஜயைப் பார்க்க அவன் கண் சிமிட்டிவிட்டு திரும்பினான்.
“அவங்க எப்படி இருந்தாங்க, பர்தா போட்டிருந்தாங்களா…” அஜய்யின் கேள்விக்கு யோசனையாய் நெற்றியை சுருக்கிய சுந்தர், “இல்லையே சார், சுரிதார் போட்டிருந்தாங்க, முகத்துக்கு மாஸ்க் போட்டிருந்தாங்க…” என்றதும் இருவரும் குழப்பமாய் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.
“இங்க சிசிடிவி இருக்கா…?
“இல்ல சார், கொட்டேஷன் வாங்கிருக்கோம் அடுத்த மாசம் பிட் பண்ணலாம்னு லாயர் சார் சொல்லிட்டு இருந்தார்…”
“ஓ… அந்த அநாமிகா எப்படி இருந்தாங்க…? என்ன வயசுல இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா…?”
“ம்ம்… கொஞ்சம் குண்டா, கறுப்பா இருந்தாங்க… கையில கிளவுஸ் போட்டிருந்தாங்க… உடல்வாகை வச்சு சொன்னா ஒரு முப்பது வயசு இருக்கலாம் சார். பழைய நடிகை பிரமீளா டைப்புல முகம், கண்ணுக்கு மை போட்டு, லிப்ஸ்டிக் எல்லாம் போட்டிருந்தாங்க… நான் கூட, ஏதோ அர்ஜென்ட், பிராப்ளம்னு சொல்லுறாங்க, ஆனா அப்பவும் மேக்கப் போட்டு வந்திருக்காங்களேன்னு நினைச்சேன்…”
“ஓகே… உங்க கம்ப்யூட்டர்ல இந்த பென் டிரைவ் போடுங்க… ஒரு வீடியோ காட்டறேன்… அந்த அநாமிகா இவங்களைப் போல இருந்தாங்களான்னு சொல்ல முடியுமா…”
“ஓகே சார்…” சுந்தர் பென் டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்க, அஜய் ஓபன் செய்து சில வீடியோ கிளிப்சைக் கடந்து பர்தா அணிந்த பெண் திரையில் வர நிறுத்தினான்.
“இந்தப் பெண்ணை கவனமாப் பாருங்க, நீங்க பார்த்த அநாமிகா இவங்களைப் போல தான் இருந்தாங்களா…?”
அந்தப் பெண்ணை வெகு நேரம் நன்றாய் உற்று நோக்கிய சுந்தர் உதட்டைப் பிதுக்கினான்.
“இல்ல சார், இதுல பர்தா போட்டிருக்கவங்க ஒல்லியா, ஹைட்டா இருக்காங்க… இங்க வந்த பொண்ணு கொஞ்சம் குட்டையா, குண்டா இருந்துச்சு…” உறுதியாய் சுந்தர் சொல்லவும் அஜய், கிருஷ்ணா இருவரும் குழப்பமாய் பார்த்துக் கொண்டனர்.
“இந்தக் கேசுக்கான நூலைப் பிடித்து விட்டாயிற்று, அதைப் பிடித்து மேலே ஏறி விடலாம் என நினைத்தால் இதென்ன இப்படி குழப்புகிறது… அப்படியானால்…? இருவரும் வேறு வேறா…?
அநாமிகா என்ற பெயர் எதார்த்தமாய் ஒன்றாய் அமைந்ததா… இல்லை, அநாமிகா என்பது ஒரு பெண் கிடையாதா…? நிறைய கேள்விகள் மனதுக்குள் குடைய,
“ஓகே மிஸ்டர் சுந்தர், இந்த வளாகத்துல வேற எங்காச்சும் சிசிடிவி இருக்கா…” என்றான்.
“இல்ல சார், எல்லா ஆபீஸ்லயும் ஒண்ணா கொட்டேஷன் வாங்கி ஒரு பேக்கேஜ் மாதிரி ஒரே நேரத்துல இன்ஸ்டால் பண்ணா, ஆபர் தரதா சொல்லவும் எல்லாருமே அடுத்த மாசம் இன்ஸ்டால் பண்ண தான் பிளான் பண்ணிருந்தோம்…”
“ம்ம்… கோர்ட்டுக்கு முன்னாடி நிச்சயம் சிசிடிவி இருக்கும்ல அதைக் கடந்து தானே உங்க ஆபீஸ் பில்டிங்க்கு வரனும்…?
“ம்ம்… ஆமாம் சார்…” சுந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அஜயின் அலைபேசி வைப்ரேஷனில் நடுங்க, எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ, அஜய் ஹியர்…”
எதிர்ப்புறம் ஏதோ சொல்லவும் லேசாய் அதிர்ந்தான்.
“ஓகே, நாங்க ஸ்பாட்டுக்கு வந்திடறோம்…” சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், “ஓகே சுந்தர், அப்புறம் எதுவும் தேவைன்னா வர்றோம், இப்ப கிளம்பறோம்… இன்ஸ்பெக்டர், வாங்க…” என்றதும் கிருஷ்ணா எழுந்தார்.
இருவரும் வேகமாய் வெளியே வர, “என்ன சார், எதுவும் எமர்ஜன்சியா…?” என்றார் கிருஷ்ணா.
“எஸ்… முட்டுக்காடு பக்கத்துல ஒரு டெட் பாடி கிடக்காம்…”
“ஓ! ஆணா, பெண்ணா சார்…”
“ஆண்…! பாடி கண்டிஷன் பார்த்தா அநேகமா புதன் மர்டர் நடந்திருக்கலாம்னு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சொல்லறார்… ரொம்ப குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்காராம்…”
“ஆள் யாருன்னு தெரிஞ்சுதா சார்…”
“ம்ம்… மிஸ்டர் பிரகாஷ், பிரகதி எக்ஸ்போர்ட்ஸ் எம்டி…” சொல்லிக் கொண்டே தனது புல்லட்டை உதைக்க அது டுடுடு என்று செல்லப் பிள்ளையாய் சிணுங்கலோடு ஸ்டார்ட் ஆனது.
பின்னில் கிருஷ்ணாவைத் தாங்கிக் கொண்டு முட்டுக்காடு நோக்கி சீரான வேகத்தில் செல்லத் தொடங்கியது.

Advertisement