Advertisement

அத்தியாயம் – 4
பிரபஞ்சனின் கேஸ் ஹிஸ்டரியைப் படித்து விட்டு நிமிர்ந்த அஜய் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவை ஏறிட்டான்.
“இந்தக் கேஸ் பத்தி என்ன நினைக்கறீங்க இன்ஸ்பெக்டர்…?”
“இது தற்கொலை போல ஜோடிக்கப்பட்ட கொலை சார்… கல்யாண ரிசப்ஷனுக்கு துப்பாக்கியோட போக வேண்டிய அவசியம் என்ன…? அதும் இல்லாம ஒரு டாக்டருக்குத் தற்கொலை பண்ணனும்னா எத்தனையோ அஹிம்சை வழி இருக்கு, அதை விட்டுட்டு மண்டைல தன்னைத் தானே சுட்டு, வேதனையோட சாக வேண்டிய அவசியம் இல்லை, அதும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணின மச்சினிச்சி கல்யாண ரிசப்ஷன் நடக்கும்போது…”
“ம்ம்… சரி வாங்க, அவர் மனைவியை விசாரிச்சிட்டு வருவோம்…” இருவரும் கிளம்பினர்.
கல்யாண வீடு சந்தோஷத்தைத் தொலைத்து துக்கப் போர்வையை போர்த்திக் கொண்டிருந்தது. சின்னவளின் கழுத்தில் தாலி ஏறிய சந்தோஷம், பெரியவளின் கழுத்தில் இருந்து தாலி இறங்கியதி்ல் காணாமல் போயிருக்க, அந்த வீடு வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது.
அழுது அழுது களைத்திருந்தாள் தேவி. உள்ளத்தின் சோர்வு உடலையும் பலவீனப்படுத்தி இருக்க, கட்டிலில் களைத்துப் படுத்திருந்தவளை அழைத்தாள் சுபா.
“அக்கா, போலீஸ் வந்திருக்காங்க, உங்கிட்ட ஏதோ கேக்கணுமாம்…”
“இன்னும் என்ன தெரியணுமாம் அவங்களுக்கு…? என் பிரபாவை ஏதோ கிரிமினலைப் பத்தி விசாரிக்கிற போல விசாரிக்கிறாங்க, நான் வரலைன்னு சொல்லிடு…”
“அக்கா, இப்ப புதுசா ஒரு ஆபீஸர் விசாரிக்க வந்திருக்கார், அத்தான் நிச்சயமா தற்கொலை பண்ணிக்கிற டைப் இல்ல, அதுக்கான அவசியமும் இல்ல, அப்படி இருக்கும்போது இது கொலையா இருக்க தான் அதிகம் வாய்ப்பிருக்கு… அத்தானைக் கொன்னது யாருன்னு நமக்கும் தெரியணும்ல…?”
சுபா சொல்லவும் சட்டென்று எழுந்து அமர்ந்த தேவி, “நீ சொல்லறதும் சரிதான், என் பிரபாவைக் கொன்னது யாரா இருந்தாலும் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தா தான் அவரோட ஆத்மா சாந்தியடையும்… விடக் கூடாது…” என்றவள் எழுந்து வெளியே வந்தாள்.
சோபாவில் அமர்ந்திருந்த அஜய், கிருஷ்ணா முன்பு வந்தவள், “உங்களுக்கு என்ன தெரியணும் சார்…? ஏன் என்னை அடிக்கடி தொந்தரவு பண்ணறீங்க… என் பிரபா ரொம்ப நல்லவர்… தைரியமானவர், சந்தோஷமா என் தங்கை கல்யாணத்துக்கு எல்லாத்தையும் செய்திட்டு இருந்தார்… அவருக்கு இப்படி ஒரு மரணத்தை என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியலை…” கண்ணீருடன் சொன்ன தேவியின் வார்த்தையை கேட்ட காக்கி சட்டைகளின் இதயம் ஒரு நொடி கனத்துப் போனது.
“சாரி மிசஸ் பிரபஞ்சன், உங்களைத் தொந்தரவு பண்ணறது எங்க நோக்கம் இல்லை… ஆனா, உங்களை விசாரிக்காம அடுத்த நடவடிக்கை எடுக்க முடியாதில்லையா…”
தன்னை சிறிது ஆசுவாசப்படுத்தி, கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த தேவி, “உங்களுக்கு என்ன கேட்கணும் சார்…” என்றாள்.
“டாக்டர் பிரபஞ்சன் கிட்ட சமீப காலமா எதுவும் மாற்றம் தெரிஞ்சுதா…? ஐ மீன், தேவையில்லாத பதட்டம், டென்ஷன் இந்த மாதிரி எதுவும்… உங்ககிட்ட ஏதாச்சும் சொல்லி இருக்காரா… ஹாஸ்பிடல்ல எதுவும் பிராப்ளம் இருந்ததா…?”
அஜய் கேள்விக்கு சற்று யோசித்தாள் தேவி.
“நோ சார், அப்படி எதுவும் அவர்கிட்ட இருந்த போலத் தெரியல, ஹாஸ்பிடல்ல நடக்கிற முக்கிய விஷயம் எல்லாம் எங்கிட்ட சொல்லிடுவார்… எப்பவும் போல நார்மலா தான் இருந்தார்… அப்பா, அம்மா இல்லாத எங்களுக்கு அவர் தான் எல்லாமா இருந்தார்… சுபா கல்யாணத்தை சொந்தப் பொண்ணு கல்யாணம் போல சந்தோஷமா, தானே இழுத்துப் போட்டு எல்லா வேலைகளையும் செய்திட்டு இருந்தார்… அவர் எதுக்கு தற்கொலை பண்ணிக்கனும்…” சொல்லும் போதே குரல் நடுங்க கண்ணீர் கன்னத்தை நனைத்தது.
“வேற ஏதாவது சண்டை, யாரோடவாவது மனஸ்தாபம்…”
“அப்படியெல்லாம் எதுவும் நடக்கலை சார்… பிரபா எல்லார் கிட்டயும் ரொம்ப நல்லாப் பழகுவார், டாக்டரா இருந்தாலும் சீரியஸா இருக்காம ரொம்ப ஜாலியா இருப்பாரு, எந்த வம்புக்கும் போக மாட்டார்…”
“ஓகே, உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு…?”
“நாலு வருஷம் சார்…”
“அர்ரேஞ், ஆர் லவ் மேரேஜ்…?”
“அர்ரேஞ்டு மேரேஜ் தான்… ரெண்டு குடும்பத்துக்கும் ரொம்பப் பிடிச்சு தான் கல்யாணம் நடந்துச்சு…”
“ஓ… டாக்டரோட நேட்டிவ்…?
“கோவை சார், மேரேஜ்க்கு முன்னாடியே இங்க GH ல டாக்டரா ஜாயின் பண்ணார்… அப்புறம் என் அப்பா சப்போர்ட்டுல சொந்தமா ஒரு கிளினிக் வச்சோம்…”
“ம்ம்… ஓகே, சம்பவம் நடந்த அன்னைக்கு வித்தியாசமா எதுவும் நடந்துச்சா…? டாக்டர் என்ன மனநிலைல இருந்தார்னு யோசிச்சுப் பாருங்க…?”
“வித்தியாசமா… எதுவும் நடக்கல, நானும் பிரபாவும் ஒண்ணாதான் ரிசப்ஷனுக்கு வந்தவங்களை வெல்கம் பண்ணிட்டு இருந்தோம்… நான் கிட்சன்ல ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணினது வந்திருச்சான்னு செக் பண்ணப் போனேன்… திரும்பி வந்தப்ப பிரபா, கீழ ரிசப்ஷன்ல யாருடைய போன் காலையோ அட்டன்ட் பண்ணப் போயிருக்கார்னு ரிலேடிவ் சொன்னார்… கொஞ்ச நேரம் ஆகியும் இவர் திரும்பி வராததால நான் ரிசப்ஷன்ல போயி விசாரிச்சேன்…” அவள் சொல்ல சொல்ல அந்தக் காட்சி அப்படியே அஜய் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
“ரிசப்ஷன்ல என்ன சொன்னாங்க…? அப்படி ஒரு அழைப்பே வரலன்னு சொன்னாங்களா…”
“இல்ல சார், கால் வந்துச்சு, பேசிட்டுப் போயிட்டார்னு சொன்னாங்க, அப்புறம் தான் எல்லா இடத்துலயும் தேடிட்டு ரெஸ்ட் ரூம்ல தேடப் போனோம்… அ..அங்கதான் அவரு…” என்றவள் மேலே சொல்ல முடியாமல் கலங்கினாள்.
“அது யாரோட கால்னு தெரியுமா…” அஜய் கேட்க நிமிர்ந்தாள்.
“யாரோ அநாமிகான்னு சொன்னாங்க…”
“அநாமிகா…? உங்க ரிலேஷனா…?”
“அநாமிகான்னு எங்களுக்கு யாரும் ரிலேஷன் இல்ல… ஒருவேளை அவரோட மெடிக்கல் பீல்டுல உள்ள யாராச்சுமா இருக்கலாம்…”
“எதுக்கு மொபைல்ல கூப்பிடாம ஹோட்டல் ரிசப்ஷனுக்கு கால் பண்ணாங்க…?”
“தெரியல, அவர் மொபைலுக்கு ரீச் ஆகாம இருக்கலாம்…”
“ம்ம்…” என்றவனின் மூளை அந்தப் பெயரில் நிலைத்து இந்தப் பெயருக்கு இந்தக் கேஸில் நிச்சயம் சம்மந்தம் உள்ளது என்று கங்கணம் கட்டியது.
“ஓகே மேடம், உங்க ஒத்துழைப்புக்கு நன்றி, நாங்க கிளம்பறோம்…” இருவரும் எழுந்து கொண்டனர்.
“சார், எப்படியாச்சும் என் பிரபாவைக் கொன்னவனைக் கண்டு பிடிச்சுடுங்க…” கை கூப்பியவள் குரல் தழுதழுத்தாள்.
“கண்டிப்பா, அது எங்க டியூட்டி…” என்றவர் கிளம்பினர்.
“அடுத்து எங்க சார்…? கிருஷ்ணா கேட்க,
“ஹோட்டல், ரிச்சி டவர்…” என்றான் அஜய்.
சிட்டிக்கு நடுவே பிரம்மாண்டமாய் நிமிர்ந்திருந்த கட்டிடத்தின் மேல் ரிச்சி டவர் என்ற சிவப்பு போர்டு பளபளப்பாய் தெரிய, பரந்து விரிந்திருந்த அதன் பார்க்கிங் ஏரியாவுக்குள் புல்லட்டை சொருகி நிறுத்திவிட்டு இறங்கினான் அஜய். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா அவனைப் பின்தொடர ரிச்சியின் ரிச்சான ரிசப்ஷனுக்குள் நுழைந்தனர்.
மெழுகு பொம்மையாய் அமர்ந்திருந்த இரண்டு அழகுப் பெண்கள் லிப்ஸ்டிக் உதட்டில் ஒட்ட வைத்த புன்னகை மாறாமல் இவர்களை நோக்கிப் புன்னகைத்து, “வெல்கம் சார், வாட் கேன் ஐ டூ பார் யூ…” கொஞ்சலான குரலில் கேட்டனர்.
“கம்மிங் பிரம் போலீஸ்…! ஹேவ் அ லுக் ஆன் மை ஐடி…” சொன்ன அஜய் தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து அடையாள அட்டையை எடுத்துக் காட்டவும் அழகிய கண்களில் சற்று மிரட்சியோடு பார்த்தனர்.
“டாக்டர் பிரபஞ்சன் கேஸ் என்கொயரிக்காக வந்திருக்கோம்…”
“எ..எஸ்… சார்…”
“மன்டே ஈவனிங் டாக்டர் பிரபஞ்சன் பாமிலி ரிசப்ஷன் நடந்துச்சே, அப்ப யாரு டியூட்டில இருந்திங்க…?
“நான் சார்…” என்ற பெண்ணின் இடது பக்க மார்பில் குத்தப் பட்டிருந்த பாட்ஜில் பெயரைப் பார்த்த அஜய் கேட்டான்.
“மிஸ்.மஞ்சு, அன்னைக்கு பங்க்ஷன் நடந்துட்டு இருக்கப்ப ரிசப்ஷன் லாண்ட்லைன்ல டாக்டர் பிரபஞ்சனுக்கு எதுவும் போன் கால் வந்துச்சா…?”
யோசித்தவள், “ஆமா சார், ஹோட்டல் ஸ்டாஃப் ரவிகிட்ட நான் தான் டாக்டரை அழைச்சிட்டு வர சொன்னேன்…”
“யார் கால் பண்ணது…? டாக்டர் அட்டன்ட் பண்ணினாரா…?”
“எஸ், அநாமிகான்னு ஒரு பொண்ணு கால் பண்ணுச்சு, அவர் வரதுக்குள்ளே கால் டிஸ்கனக்ட் ஆகிருச்சு, வெயிட் பண்ணி மறுபடி கால் வந்ததும் பேசிட்டு கிளம்பினார்…”
“ம்ம்… அவர் என்ன பேசினார்னு கவனிச்சீங்களா, பேசி முடிச்சதும் டென்ஷனா எதுவும் இருந்தாரா, அவர் ரியாக்ஷன் கவனிச்சீங்களா?” அஜய் எடுத்து கேட்க அந்த மஞ்சு அழகான சின்ன நெற்றியை செல்லமாய் தடவியபடி யோசித்தாள்.
“அது..வந்து… சாரி சார், அப்ப வேற ஏதோ கஸ்டமர் வரவும் நான் அவரை கவனிச்சிட்டு இருந்தேன்… டாக்டர் போன் பேசிட்டு எதுவும் சொல்லாம திரும்பிப் போயிட்டார்…”
“தேங்க்ஸ் கூட சொல்லலியா…?”
“இல்ல சார்… போனை வச்சிட்டுப் போயிட்டார்…”
“ம்ம்…” என்ற அஜய் முகம் யோசனையைக் காட்டியது.
“இட்ஸ் ஓகே! இங்க சிசி டீவி கேமரா மானிட்டரிங் ரூம் எங்க இருக்கு…?”
“ஹோட்டல் மேனேஜர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு உங்களுக்கு சொல்லட்டுமா சார்…?”
“ஓகே, குயிக்…!”
அந்த மஞ்சு தன் முன்னில் இருந்த இண்டர்காம் ரிசீவரை எடுத்து மேனேஜர் அறைக்கான எண்ணை அழுத்திவிட்டு, மெல்லிய குரலில் பேசி பர்மிஷன் வாங்கினாள்.
“சார், அவர் அனுமதி கொடுத்துட்டார், அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் ஏரியா லெப்ட் சைடு ரூம்ல இருக்கு சார்…”
“அங்கே யார் டியூட்டில இருப்பாங்க…?
“மிஸ்டர் கிரண் இருப்பார்… ஹி வில் ஹெல்ப் யூ…”
“தேங்க்யூ…” மஞ்சுவுக்கு நன்றியை உதிர்த்துவிட்டு அண்டர்கிரவுன்ட் நோக்கி நகர கிருஷ்ணாவும் தொடர்ந்தார்.
“கிருஷ்ணா, இதுக்கு முன்னாடி சிசிடீவி புட்டேஜ் செக் பண்ணினீங்களா…?”
“இல்ல சார்… மேலோட்டமா தான் விசாரிச்சோம், அதுக்குள்ள லாயர் சார் இறக்கவும், கமிஷனர், ரெண்டு கேஸையும் கிரைம் பிராஞ்சுக்கு மாத்திட்டார்…” கிருஷ்ணா சொல்ல கேட்டுக் கொண்டே இடது பக்க அறையை நோக்கி நடந்தான்.
கிருஷ்ணா அவனைத் தொடர, இடது பக்கத்தில் இருந்த ஒரு அறையின் முகப்பில் பிளாஸ்டிக் செவ்வக போர்டு பொருத்தப்பட்டிருக்க, அதில் இருந்த வாசகங்கள் CCTV SURVEILLANCE ROOM என ஆங்கிலத்தில் பளிச்சிட்டது. கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே பிரவேசிக்க, மிதமான ஏஸி காற்று உடலைத் தழுவியது.
டீவியின் பெரிய திரையில் சிசிடிவி கவரேஜ் இருந்த இடங்கள் எல்லாம் பெட்டி பெட்டியாய் தெரிய, ஒவ்வொரு புளோரும் கண்ணுக்குக் கிடைத்தது. மானிட்டரிங் பொறுப்பில் இருந்த கண்ணாடி அணிந்த கிரண், அனுமதி இன்றி உள்ளே நுழைந்தவர்களை கோபமாய் ஏறிட, போலீஸ் என்றதும் லேசாய் பதறி மரியாதைக்குத் தாவினான்.

Advertisement