Advertisement

அத்தியாயம் – 25

கமிஷனர் ஆபீஸ்.

புன்னகையுடன் அமர்ந்திருந்த கமிஷனர் ஜெயராம் முன்னர் பவ்யமாய் அமர்ந்திருந்தான் அஜய்.

“சூப்பர் அஜய், இவ்ளோ சீக்கிரம் இந்த மூணு கேஸயும் முடிவுக்கு கொண்டு வருவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல… என்ன இருந்தாலும் விவேக் சீனிவாசனோட சிஷ்யன்னு நிரூபிச்சுட்டீங்க…” கமிஷனர் பாராட்ட அமைதியாய் புன்னகைத்தான் அஜய்.

“தேங்க்ஸ் சார்… ஆக்சுவலா விவேக் சார் கிட்ட இந்த கேஸ் ஹிஸ்டரியைப் பத்தி பேசிட்டு இருந்தப்ப தான் இதுக்கான முடிச்சு அவிழத் தொடங்குச்சு…”

“ஹோ, வெல்டன் மை டியர் யங் மேன்…”

“நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் சார், என்னோட பர்சனல் ரிக்வஸ்ட்டைப் புரிஞ்சுகிட்டு காமேஷை இந்தக் கேஸ்ல கொண்டு வராம இருந்ததுக்கும், அஸ்வின், நாராயணன், மித்ரன் மேல கொலை செய்ய உதவி செய்ததா சொல்லி சின்ன அளவுல தண்டனை கிடைக்கற போல கேஸ் ஹிஸ்டரியை மாத்தி எழுத சம்மதிச்சதுக்கும், உண்மைலயே ரொம்பப் பெரிய மனசு வேணும் சார்…”

“அஜய், காக்கி சட்டை போட்டிருந்தாலும் நாமளும் மனுஷங்க தான்… அ நா மி கா நாலு பேரும் பிறவி கிரிமினல்ஸ் கிடையாது… சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டவங்க… பிரபஞ்சனும், பிரகாஷும் அவங்களுக்கு ரொம்பவே பாதிப்பைக் கொடுத்துட்டாங்க, இனியும் அவங்களை பெரிய அளவுல தண்டிக்கறது உங்களைப் போல எனக்கும் விருப்பமில்லை…”

“ஆமா சார், தேவி அவங்களைக் காப்பாத்தனும்னு தான் மரணவாக்கு மூலம் கொடுத்துட்டு அவசரப்பட்டு தற்கொலை பண்ணிகிட்டாங்க… அவங்க வாக்குமூலத்துல சொன்ன போல அவங்களே குற்றவாளியா இருக்கட்டும்… மூணு பேரும் உடந்தையா இருந்த போலவே சொல்லிடலாம்… தேவியும் காமேஷ் பெயரை சொல்லலை… நாமும் இந்தக் கேஸ்ல அவனைக் கொண்டு வராமலே முடிச்சிருவோம்…”

“எஸ் அஜய்… எத்தனயோ குற்றவாளிகளைக் கண்டு பிடிச்சு நாம சட்டத்து முன்னாடி நிறுத்தினாலும் பணம், பதவியை யூஸ் பண்ணி தண்டனை இல்லாம தப்பிச்சிடறாங்க… ஆல்ரெடி தண்டனையை அனுபவிச்சிட்ட இவங்களுக்கு நாம கொஞ்சம் போலீஸ் கண்ணை மூடிக்கிறது தப்பில்லன்னு எனக்கும் தோணுது… இந்த விஷயம் நம்ம மூணு பேருக்கு மட்டும் தெரிஞ்சதாவே இருக்கட்டும்… கிருஷ்ணா கிட்டயும், அந்தப் பசங்க கிட்டயும் சொல்லிடுங்க…”

“எஸ் சார், ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் சார்…”

“ஹாஹா… இட்ஸ் ஓகே அஜய், சந்தோஷ் கேஸ்ல அந்த அரசியல்வாதி, ஜூனியர் வக்கீல் சுந்தர், அவர் மனைவியை அரஸ்ட் பண்ணிட்டீங்க தானே…?”

“எஸ் சார், அவங்க கேஸ் சீக்கிரமே கோர்ட் விசாரணைக்கு வருது…”

“ஓகே… நடக்கட்டும்…”

“சார், அப்புறம் என்னோட லீவ் பத்தி எதுவும் சொல்லலை…”

“ஹாஹா, என்ன மேன்… புதுப் பொண்டாட்டி ரொம்ப முறைக்குதா, கூல் பண்ணதானே லீவ் அப்ளிகேஷன்…?”

“ஆமா சார், நாலு நாள் ரிலாக்ஸா அவளோட இருக்கணும்னு ஆசைப்படறா…” அவன் சொல்லும்போது மேசை மீதிருந்த கமிஷனரின் அலைபேசி சிணுங்கி எடுக்க சொன்னது.

“ஒன் மினிட்…” என்றவர் அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்து ஹலோவினார்.

“ஹலோ, கமிஷனர் சார்…”

“எஸ், ஹோல்டிங்…”

“நான் மத்திய உளவுத்துறை அலுவலகத்துல இருந்து ஜவஹர் பேசறேன்…” எதிர்க்குரல் சொல்லவும் கமிஷனரின் முகம் யோசனையாய் சுளிந்தது.

“சொல்லுங்க மிஸ்டர் ஜவஹர், எனிதிங் இம்பார்டன்ட்…?

“எஸ், மிஸ்டர் ஜெயராம்… உங்ககிட்ட ஒரு கான்பிடன்ஷியல் மேட்டர் பத்திப் பேசணும்…”

“ஹோ, என்ன மேட்டர் சார்…?” இவரது கேள்விக்கு அவரது பதிலைக் கேட்டு யோசனையானது கமிஷனரின் முகம்.

அவருக்கு முன்னில் நின்ற அஜய் அவரது முகத்தில் தெரிந்த பாவனைகளில் இருந்தே ஏதோ முக்கியமான விஷயம் எனப் புரிந்து கொண்டு கவனமாய் பார்த்து நின்றான்.

ஐந்து நிமிட சீரியஸ் உரையாடலுக்குப் பிறகு ஜவஹர் அழைப்பைத் துண்டிக்க, கமிஷனர் அலைபேசியை வைத்துவிட்டு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தார்.

“அஜய், சென்ட்ரல் இண்டலிஜன்ஸ் ஆபீஸ்ல இருந்து சீனியர் ஆபீசர் மிஸ்டர் ஜவஹர் தான் கால் பண்ணார்… ஒரு எமர்ஜன்சி வேலை, நீங்க உடனே டெல்லி கிளம்பனும்…”

“டெல்லியா..? என்ன விஷயம் சார்…?”

“அங்கே டிபன்ஸ் இன்டலிஜன்ஸ் ஏஜன்சில மிஸ்டர் அஷோக் மல்ஹோத்ராவைப் போயிப் பாருங்க… அவர் உங்களுக்கான வொர்க் என்னன்னு சொல்லுவார்…”

“எப்ப கிளம்பனும் சார்…?”

“நாளைக்கே… பிளைட்ல டிக்கட் புக் பண்ண சொல்லிடுங்க… ” என்றதும் யோசித்த அஜய்,

“சார், என் ஒயிபை கூட கூட்டிப் போகலாமா…?” என்றதும் கமிஷனர் திகைத்து பின் சிரித்தார்.

“அங்கே எந்த மாதிரி வொர்க்குன்னு தெரியல, பட் ஜவஹர் சொல்லறதை வச்சுப் பார்க்கும்போது விஷயம் சீரியஸ்னு மட்டும் புரியுது… ஓகே, உங்க விருப்பம் போல மனைவியும் அழைச்சிட்டுப் போங்க… பட் கவனமா இருங்க…”

“ஷ்யூர், தேங்க் யூ சார்… நான் கிளம்பறேன்…” என்றவன் சல்யூட் வைத்து தளர்ந்து கதவை நோக்கி நகர்ந்தான். அவன் மனது அங்கே என்ன பிரச்சனை காத்திருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தது.

“என்னங்க, டெல்லிக்குப் போறமே, எத்தனை ஸ்வெட்டர் எடுத்து வச்சுக்கறது… அங்கே நல்ல குளிரா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்… எங்கிட்ட ரெண்டு ஸ்வெட்டர் தான் இருக்கு, போதுமா…?”

கேட்ட மனைவியின் தலையில் செல்லமாய் முட்டிய அஜய், “உனக்கு எதுக்கு ஸ்வெட்டர்…? அதான் நான் இருக்கனே… என்னைக் கட்டிக்க, குளிர் போயிடும்…” என்றதும் அவளது அழகான கன்னத்தில் சிவப்பு ரோஜாக்கள்.

“ப்ச்… போங்க, உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான்… நான் இதுவரை சவுத் தாண்டினதில்லை… முதல்முறையா டெல்லி கூட்டிட்டுப் போறிங்க… அதுவும் எனக்கே எனக்குன்னு என்னோடவே இருக்கப் போறீங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” சொன்னவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள “ஆ…” அலறியவள் சற்று விலகி நின்று முறைத்தாள்.

“அச்சு மா… அதெல்லாம் எடுத்து வச்ச வரைக்கும் போதும்… அத்தானுக்கு சூடா ஒரு காபி கொண்டு வரியா…”

“இதோ, டூ மினிட்ஸ்…” சொன்னவள் அடுக்களைக்குள் நுழைய தலையைக் குலுக்கிக் கொண்டான் அஜய்.

“உப்ப்ப்… நாம எதுக்கு டெல்லி போறோம்னு தெரியாம இவ வேற ஓவர் எக்சைட்டடா இருக்காளே… அங்கே பெரிய பிரச்சனை எதுவும் இல்லாம இருக்கணும் கடவுளே…” என யோசிக்கும்போதே அவனது அலைபேசி மேசை மீது வைப்ரேஷனில் அதிர்ந்தது.

அதில் ஒளிர்ந்த கிருஷ்ணாவின் பெயரைக் கண்டதும் புன்னகையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ஹலோ, சொல்லுங்க கிருஷ்ணா…”

“குட் ஈவனிங் சார், நாளைக்கு நீங்க டெல்லி கிளம்பறிங்களாமே…?”

“எஸ்… மார்னிங்க் பிளைட்..!”

“ஓ… எப்ப ரிட்டர்ன் சார்…”

“இன்னும் தெரியலை, மே பி ஒன் வீக்…”

“ஓகே சார், அப்புறம் நீங்க சொன்ன போல அவங்க மூணு பேரையும் அரஸ்ட் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்… அவங்க ரொம்ப ஹாப்பி… உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கோம், நன்றி சொல்ல சொன்னாங்க…”

“ம்ம்… அந்த ரெண்டு அயோக்கியங்களால ஆல்ரெடி நிறைய உயிர் போயிருச்சு… தேவியும் இவங்களைக் காப்பாத்த சூசைட் பண்ணிட்டாங்க… இனியும் அந்த காமேஷை தண்டிக்கிறது அவசியம் இல்லேன்னு தோணுச்சு…”

“நீங்க சொல்லறது ரொம்ப சரி சார், எனக்கும் அவங்க நிலையைப் பார்த்து பரிதாபமா இருந்துச்சு, பட் கமிஷனர் நேர்மை, நியாயம்னு பார்க்கிறவர்… நீங்க சொன்னதைப் புரிஞ்சுகிட்டு காமேஷை சும்மா விட்டதுதான் ஆச்சர்யம்… எப்படியோ, இனியாச்சும் அந்தப் பசங்க நிம்மதியா வாழட்டும்…” அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அர்ச்சனா இரண்டு காபிக் கோப்பையுடன் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.

“ஓகே, கிருஷ்ணா, ரெண்டு கேஸ்லயும் அடுத்து என்ன பண்ணனும்னு பார்த்து புரசீட் பண்ணிக்கங்க… அவசியம்னா கால் பண்ணுங்க… நான் டெல்லில இருந்து வந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன்…”

“ஓகே சார்… அடுத்து நீங்க இறங்கப் போற டெல்லி கேஸும் நல்லபடியா முடிய வாழ்த்துகள் சார்…”

“நன்றி கிருஷ்ணா, வச்சிடறேன்…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, அவனையே குறுகுறுவெனப் பார்த்தபடி அமர்ந்திருந்த அர்ச்சனாவை நோக்கிப் புன்னகைத்தான்.

“அருகே வா அநாமிகா…” அவளை நோக்கி சொன்னவனை மெல்ல முறைத்தாள்.

“மிஸ்டர் அஜய், நான் அநாமிகா இல்ல, உங்க பொண்டாட்டி அர்ச்சனா… இருந்தாலும் அந்த அநாமிகா கேஸ்ல ரொம்ப தான் இன்வால்வ் ஆகிட்டீங்க… என் பேரு கூட உங்களுக்கு மறந்து போயிடுச்சா…” என முகத்தைத் தூக்கிக் கொண்டு சிணுங்கியவளை நோக்கிப் புன்னகைத்தான்.

“சாரி, சாரி அச்சு, அருகே வா அர்ச்சனா…”

“ஹூக்கும்… நான் வரவே இல்ல… அந்த அநாமிகாவையே கட்டிட்டு அழுங்க…” சொன்னவள் எழுந்து செல்ல எட்டி கையைப் பிடித்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“என்ன அச்சு, இதுக்கெலாம் கோவிச்சுகிட்டு…”

“என்னதான் உங்களுக்கு வேலை தான் முதல் பொண்டாட்டின்னு சொன்னாலும் என் பேரு கூடவா மறந்திடும்…? அநாமிகாவாம், அநாமிகா…!”

“ஏய் அசடு… அது கற்பனை, நீ தான் நிஜம்… ஆனாலும் இந்தப் பேரை சொல்லும்போதே ஒரு சுகம் தோணுது, நீயும் சொல்லிப் பாரேன்…” என்றவன்,

“அருகே வா அநாமிகா…” அவன் மீண்டும் சொல்ல, “வர முடியாது போடா…” குறும்புடன் சொல்லிவிட்டு ஓடியவளை நோக்கி காதலுடன் சிரித்தான் அவள் கணவன்.

அடுத்தநாள் அவர்களின் பயணம் இனிதே டெல்லி நோக்கித் தொடங்க புதிய மனிதர்களை புதிய பிரச்சனைகளுடன் எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான் அஜய்.

————————————சுபம்——————————————-

Advertisement