Advertisement

அத்தியாயம் – 24

“கண்ணீருடன் அன்று காமேஷ்க்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருந்த நாராயணன் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.

“ஆறு மாசம்… அவனுக்கு வைத்தியம் பண்ண ஆசுபத்திரிக்கு அலையா அலைஞ்சோம்… கால் பாதம் நசுங்கிப் போனதால காலைக் கொஞ்சம் கட் பண்ணிட்டாங்க… மண்டைல அடிபட்டத்துல பேச்சு வராதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… அப்பப்ப சுயநினைவும் இல்லாம இருக்கான்னு சித்த மருத்துவம் பண்ணத் தொடங்கினோம், கொஞ்சம் சரியாச்சு… எப்பவும் எங்கயோ வெறிச்சுகிட்டு படுக்கைல கிடந்தவனைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா அழுதுட்டே இருப்பாங்க… ஆறு மாசத்துக்குப் பிறகு தான் சுயநினைவு தப்பாம இருக்கத் தொடங்கினான்…”

“ஓ… செயற்கைக் கால் எப்ப வச்சிங்க…?”

“அது நாலு மாசம் தான் ஆச்சு சார்… வெளிநாட்டுல உள்ள நண்பன் மூலமா இவனுக்குப் பொருத்தமா கால் செய்து பிட் பண்ணினோம்…”

“ம்ம்… பிரகாஷ் பத்தி எப்படி தெரிஞ்சுகிட்டீங்க…”

“ட்ரீட்மென்ட் முடிஞ்சு காமேஷ்க்கு நினைவு தப்பாம இருக்கிற சமயத்துல அவன் ரூம்ல உள்ள செல்பில் இருந்த டயரியைக் காட்டி எடுக்க சொன்னவன் என்னைப் பிரிச்சுப் படிக்க சொல்லி சைகைல காட்டினான்…”

“ஓ… அந்த டயரில காமேஷ் எழுதினதைப் பார்த்து நடந்ததைப் புரிஞ்சுகிட்டீங்க, அப்படித்தானே..?”

“ஆமாம் சார்… அதைப் படிச்சதும் அவ்ளோ ஆத்திரம் வந்தது… இவனை லாரில ஆக்ஸிடன்ட் பண்ணது கூட பிரகாஷ் வேலையா தான் இருக்கும்னு புரிஞ்சது…”

“ம்ம்… உங்க அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா…?”

“தெரியும், முதல்ல அவங்க பயந்துட்டு பழி வாங்கறது எல்லாம் வேண்டாம்னு ஒத்துக்கல, நாங்க ரெண்டு பேரும் பிடிவாதமா கொல்லுவோம்னு நிக்கவும் அவங்களும் மனசை மாத்திகிட்டாங்க… இனி யாரும் அந்த அயோக்கியனால பாதிக்கப்படக் கூடாதுன்னு சொன்னாங்க…” என்றவன் நிறுத்திவிட்டு தொடர்ந்தான்.

“நான் உடனே அவனைக் கொல்லனும்னு கிளம்பினேன்… அம்மாவும், காமேஷும் தடுத்துட்டாங்க… அவ்ளோ ஈசியா அவனைக் கொல்ல முடியாது… காமேஷ் போல நானும் அவசரப்பட்டு மாட்டிக்கக் கூடாதுன்னு பயந்தாங்க, எதுவா இருந்தாலும் பிளான் பண்ணிப் பண்ணனும், அதுக்கு அவனால பாதிக்கப்பட்ட எல்லாரயும் மீட் பண்ணி ஒரு முடிவுக்கு வரணும்னு முடிவு பண்ணோம்… அதுக்கு வசதியா முதல்ல பிரகாஷ் கிட்ட நானே வேலைக்கு ஜாயின் பண்ண முடிவு பண்ணினேன்… இந்த டயரியை எடுத்திட்டு மாலதி மேடத்தை போயி பார்த்தேன்… அவங்ககிட்ட நடந்ததை சொன்னேன், காமேஷ் மேல அவங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது… பிரகாஷ் மேல முன்னமே கொஞ்சம் சந்தேகமும் இருந்ததால பிரகாஷ்க்கு தெரியாம காமேஷைப் பார்க்க வந்தாங்க… அப்புறம் அவங்க மூலமா வேலைக்கு சேர்ந்தேன்… அநாமிகாவை லவ் பண்ண அஸ்வின்கிட்ட விஷயத்தை சொன்னேன்… அவனுக்கும் அந்தப் பொண்ணு சாவுல பிரகாஷ் மேல சந்தேகம் இருந்துச்சு… அவனோட கனகராஜைப் பார்க்கப் போனேன், உண்மையா அன்னைக்கு என்ன நடந்துசுன்னு கேட்டு கிளியர் பண்ணி கிட்டோம்… அஸ்வினோட பிரண்டு மித்ரனை பிரபஞ்சன் சுபாவுக்கு மாப்பிள்ளையா முடிவு பண்ணவும் எங்களுக்கு அவன்கிட்ட விஷயத்தை சொல்லி தேவிக்குப் புரிய வைக்க முடிஞ்சது… அவங்க முதல்ல அழுது ஆத்திரப்பட்டாலும் அப்புறம் எங்களுக்கு சப்போர்ட் பண்ண சம்மதிச்சாங்க… எல்லாருமா ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்ட முடிவு பண்ணி பிளான் பண்ணத் தொடங்கினோம்…”

“ஹூம்… ஏன் காலுக்கு முடியாத காமேஷை வைத்து கொல்ல நினைச்சீங்க…?”

“இப்படி ஒரு பிளான் பண்ணம்னு காமேஷ்க்கு சொன்னதுமே நாந்தான் அவங்களைக் கொல்லுவேன், எனக்கு பேச முடியாம, முடக்கிக் போட்டவனைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்கே போயிக்கறேன்னு காமேஷ் தீர்மானமா இருந்தான்…”

“ஓகே, பிரபஞ்சனைக் கொன்னது பர்தா போட்டுட்டு வந்த காமேஷ், பிரகாஷை எப்படிக் கொன்னிங்க…?”

“பிரகாஷ் வீட்டுல வேலைக்கு இருந்ததால அவன் எந்த நேரத்துக்கு என்ன பண்ணுவான்னு எனக்கு அத்துப்படி… அவனைக் கொல்ல அவன் ஜாகிங் போற நேரத்தை முடிவு பண்ணோம்… மித்ரனை பொண்ணு வேஷம் போட வச்சு பெசன்ட் நகர் பீச்சுக்கு அழைச்சிட்டுப் போனோம்…” என்றவன் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தான்.

“நானும், அஸ்வினும் பெண் வேஷம் போட்ட மித்ரனுடன் பிரகாஷ்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்… அவன் வர்றதைப் பார்த்ததும் விலகிப் போயி ரெண்டு மூணு பசங்க ஒரு திண்டுல உக்கார்ந்து நிஜமாலுமே வர்ற போற பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருக்கவும் அவங்க பக்கத்துல நின்னுகிட்டோம்… மித்ரன் பெண் வேஷத்துல தனியா உடற்பயிற்சி செய்துட்டு இருந்தான்…” என்றவன் அந்தக் காட்சியை அப்படியே சொல்லத் தொடங்கினான்.

பேவ்மென்ட் அதிர ஓடிக் கொண்டிருந்த பிரகாஷ் அதைவிட்டுக் கீழிறங்கி கை, கால்களை வார்ம் அப் செய்து அசைத்துக் கொண்டிருக்க, அவன் கண்ணில் உயரமாய் ஒல்லியாய் சற்றுத் தள்ளி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அப்பெண் பார்வையில் பட்டாள். அவளைச் சுற்றி சில இளவட்டங்கள் நின்று கொண்டிருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் குனிந்து எழுந்து, உடல் வளைத்து அவள் பாட்டுக்கு தனது பயிற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அதில் இரண்டு பேர் கிண்டல் செய்து பாட்டுப் பாடினர்.

“பின்னழகைக் காட்டி சின்னப் பையன்களை வாட்டி… ஹூம்…” பெருமூச்சுடன் அவளைப் பார்த்துப் பாட, நின்றவள் அவர்களை நோக்கி ஏதோ திட்டுவது தெரிந்தது. அதற்கு அந்த இளைஞர்கள் ஏதோ சொல்ல பிரச்சனையாகிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் சென்றான். பிரகாஷைக் கண்டதும் அப்பெண்ணின் முகம் மலர்ந்தது.

“ஹலோ கிஷன், எவ்ளோ நேரமா உங்களுக்கு வெயிட் பண்ணறது…?” அவனை நோக்கி கண்ணடித்தவள், தெரிந்தவள் போல் சொல்ல அவனும் புரிந்து கொண்டான். முகத்தை மாஸ்க் மறைத்திருந்தாலும் கிண்ணென்று அரேபியன் குதிரை போல நின்றவளைக் கண்டதும் அவனுக்குள் ஒரு கிளுகிளு தோன்ற இவனைக் கண்டதும் அந்த இளைஞர்கள் நகர்ந்தனர்.

“இருங்க, உங்களை பிரகாஷ்க்கு அடையாளம் தெரியலியா..?” என்றான் அஜய் இடையிட்டு.

“நான் கொஞ்சம் விக், தாடி, மாஸ்க்கோட வேற கெட்டப்புல போயிருந்தேன், அவர் என்னை கவனிக்கலை சார்…” என்ற நாராயணன் தொடர்ந்தான்.

“மித்ரன் பிரகாஷ்க்கு தேங்க்ஸ் சொல்லி பேச்சைத் தொடங்கினான்…”

“தேங்க்ஸ் சார், நல்ல நேரத்துல வந்து காப்பாத்துனிங்க…”

“இட்ஸ் ஓகே, யார் அவங்க…?” என்றவனிடம் இயல்பாய் அவள் பேசத் தொடங்க சற்றுத் தள்ளி நின்று அவர்கள் இருவரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அவள் அநாமிகா என்று தன்னை அறிமுகம் செய்ததும் பிரகாஷின் முகம் மாறியது எட்டி நின்ற அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது. அதற்குப் பிறகு இருவரும் சிறிது நேரம் ஏதோ பேசியபடி நடந்தனர்.

“சார், அருகம்புல் ஜூஸ் தரட்டுமா…?” தினமும் காணும் பிரகாஷிடம் ஜூஸ் கடைக்காரர் கேட்க,

“இல்ல, வேண்டாம்… நாளைக்கு குடிச்சுக்கறேன்…” என்று  அவன் மறுக்க,

“சரி சார்…” என்றார் அவர்.

சிறிது நேரத்தில் மித்ரனாகிய அநாமிகாவுடன் பிரகாஷ் காரில் ஏறுவது வரை பார்த்துவிட்டு இருவரும் பைக்கில் கிளம்பினர்.

“வண்டி கிளம்பி கொஞ்ச நேரத்துல மித்ரன், பிரகாஷ் கழுத்துல கத்தியை வச்சு மிரட்டி வண்டியை நிறுத்தவும் நாங்க வண்டில ஏறிகிட்டோம்… அவனுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே பண்ணி முட்டுக்காடு கொண்டு போயிட்டோம்… அங்கே முன்னமே மாலதி மேடம் காமேஷை காருல கூட்டிட்டு வந்து இறக்கி விட்டுப் போயிருந்தாங்க… ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு காரைக் கொண்டு போயிட்டோம்… காமேஷ் அவன் கணக்கைத் தீர்த்துட்டான்… அவன் சீக்கிரம் செத்துடக் கூடாதுன்னு கம்பியால முக்கியமான இடத்துல எல்லாம் ஓட்டை போட்டு கொடூரமா கொன்னான்… பிரகாஷ் செய்த பாவத்துக்கு அவனுக்கு அந்த சாவு சரிதான்…” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

“அவனுங்க செய்த தப்புக்கு நீங்க செய்த கொலையைத் தீர்வா எடுத்துக்க முடியாது நாராயணன்… காமேஷ்க்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடனே போலீஸ்ல சொல்லியிருந்தா நாங்க ஆக்ஷன் எடுத்திருப்போம்… அதை விட்டுட்டு பிரகாஷ்க்கு திருந்த சந்தர்ப்பம் கொடுத்து, அவன் இவனை ஆக்சிடன்ட் பண்ணி, நீங்க அதுக்குப் பழி வாங்கி… இது எதுவுமே சட்டத்துக்கு உட்பட்ட செயல் கிடையாது… உங்களுடைய காரணங்களும், நியாயங்களும் சட்டத்துக்குத் தேவை இல்லை… ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் எப்பவுமே தீர்வு கிடையாது…”

“நீங்க சொல்லறது சரின்னு மூளைக்குப் புரியுது சார், நாங்க கொன்னது ரெண்டு கேடு கெட்ட அயோக்கியன்களை… அதுக்காக கொலை சரின்னு சொல்ல வரலை, என் தம்பிக்கு ஆல்ரெடி அவன் கொடுத்த தண்டனையே போதும்… அவனுக்கு பதிலா என்னை அரஸ்ட் பண்ணுங்கன்னு தான் சொல்லறேன், ப்ளீஸ் சார், தயவு செய்து மறுபடி அவனை தண்டிச்சுடாதீங்க…” என்றான் கையைக் கூப்பி.

“ஹூம்… அப்படி எல்லாம் சட்டத்தை எங்க இஷ்டத்துக்கு கைல எடுத்துக்க முடியாது நாராயணன்…” சொன்ன அஜய்,

“கிருஷ்ணா அடுத்து முடிக்க வேண்டிய பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிருங்க… அஸ்வின், மித்ரன் ஜாமீனைக் கான்சல் பண்ணி அரஸ்ட் பண்ணி அழைச்சிட்டு வாங்க…”

“சார் காமேஷ்…”

“நான் கம்மிஷனர் கிட்ட பேசிட்டு வர்றேன்… அப்புறம் காமேஷ் மேல ஆக்ஷன் எடுத்துக்கலாம்…” சொன்னவன், எழுந்து கொள்ள காலில் விழுந்து கெஞ்சினான் நாராயணன்.

“சார், ப்ளீஸ் சார்… என் தம்பியை விட்டிருங்க சார்…” கண்ணீருடன் கேட்டவனைப் பரிதாபமாய் பார்த்தவன்,

“எங்களை எங்க டியூட்டி செய்ய விடுங்க நாராயணன்…” என்றுவிட்டு லாப்டாப்புடன் கம்பீரமாய் கிளம்ப கண்களில் திரையிட்ட கண்ணீருடன் வெறித்துப் பார்த்து நின்றான் நாராயணன்.

Advertisement