Advertisement

அத்தியாயம் – 23

“நாலாவதா உள்ள ‘கா’ எழுத்துக்கு சொந்தக்காரர் யாருன்னு சொல்லலியே…?” நாராயணனின் முகத்தையே பார்த்தபடி கேட்ட அஜய் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு புன்னகைதத்தான்.

“ச..சார்… அ..அதுவந்து…”

“என்ன நாராயணன், சட்டுன்னு வேர்க்கறீங்க…? அந்த ‘கா’ எழுத்துக்கு சொந்தக்காரர் யார்னு நான் சொல்லட்டுமா…?”

“சார்…”

ஒரு நிமிடம் அவனையே உன்னிப்பாய் பார்த்தவன், “அது உங்க தம்பி காமேஷ் தானே..?” என்றதும் சட்டென்று எழுந்து நின்றவனின் கண்ணில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.

“சார்…!”

“என்ன எழுந்துட்டிங்க, நான் சொன்னது சரிதானே…?” அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்லவென்று திகைத்து நின்றவனை சிறு புன்னகையுடன் பார்த்தான் அஜய்.

“என்னதான் நீங்க எல்லாரும் சீன்ல உங்க தம்பி காமேஷைக் கொண்டு வரலேன்னாலும் அவுட் ஆப் த ஸ்க்ரீன்  அவர்தான் இந்த கொலைகளைப் பண்ணி இருக்கார், நான் சொன்னது சரியா…?”

“அ..அதெல்லாம் இல்ல சார், ரெண்டு கொலைகளையும் நான்தான் பண்ணேன்… என் தம்பிக்கும் இந்தக் கொலைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… அதுவும் இல்லாம அவன் உடம்புக்கு முடியாம இருக்கிறப்ப நீங்க சொன்னது போல எப்படி இருக்க முடியும்… ப்ளீஸ் சார், இனியும் இந்தக் கேஸை விசாரணை பண்ணி நீங்க கஷ்டப் பட வேண்டாம்… நான் சரண்டர் ஆகறேன், கோர்ட்ல புரசீட் பண்ணுங்க….” என்றவனின் முகத்தில் வேதனை தெரிந்தது.

“நாராயணன், உணர்ச்சிவசப் படாம முதல்ல உக்காருங்க…” அஜய் அமைதியாய் சொல்ல அமர்ந்தான்.

தலை குனிந்து அமர்ந்திருந்தவனை யோசனையுடன் பார்த்த அஜய், “காமேஷ் தான் இந்தக் கொலைகளைப் பண்ணார்னு எங்ககிட்ட ஆதாரம் இருக்கு…” என்றதும் நிமிர்ந்தான்.

“இ..இல்ல சார், அவன் சின்னப் பையன், இன்னும் வாழவே தொடங்கல, அதுக்குள்ள விதி அவனை முடக்கிப் போட்டிருச்சு, இனி நீங்களும் ஏதாவது பொய்யான ஆதாரம் வச்சு அவனை அரஸ்ட் பண்ணிடாதீங்க… இந்தக் கொலைகளைப் பண்ணது நான்தான், ப்ளீஸ..! என்னை அரஸ்ட் பண்ணுங்க…” என்றவனின் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.

“நாராயணன், உங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியுது, அதுக்காக எங்களுக்குக் கிடைச்ச ஆதாரம் பொய்யாகிடாது…”

அஜய் சொல்லவும் நிமிர்ந்தவன் கண்ணில் அச்சம் தெரிந்தது.

“எவ்வளவு புரபஷனல் கில்லரா இருந்தாலும், என்ன தான் பிளான் பண்ணிப் பண்ணாலும் ஏதாவது சின்னதா ஒரு அடையாளத்தை விட்டுட்டுப் போகாம இருக்க முடியாது… நீங்க புரபசனல் கில்லர்ஸ் கிடையாது, சிச்சுவேஷன் கில்லர்ஸ்..! அப்படி இருக்கும்போது உங்ககிட்ட இருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைக்கறது பெரிய விஷயமில்லை… ஆதாரத்தைக் காட்டினா ஒத்துக்கறீங்களா…?” என்றவனை நாராயணன் திகைப்புடன் நோக்க, வெளியே நோக்கிக் குரல் கொடுத்தான் அஜய்.

“கிருஷ்ணா, என்னோட லாப்டாப் எடுத்துட்டு வாங்க…” சொன்ன அடுத்த நிமிடத்தில் அவனது லாப்டாப்புடன் அந்த அறைக்குள் நுழைந்தார் கிருஷ்ணா.

அதை ஆன் பண்ணி வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான்.

அதில் Anamika என்ற போல்டரைத் தட்ட சில இமேஜ்களும், பைல்களும் தெரிந்தன.

CCTV புட்டேஜ்களை தட்ட ஓப்பன் ஆனது.

அதில் பார்வையை ஓட்டியவன் லிப்டுக்குள் பிரபஞ்சனுடன் பர்தா இட்ட உருவம் நுழைவதைக் காட்டி கேட்டான்.

“டாக்டர் கூட லிப்டுக்குள் நுழைஞ்சது யாரு…?”

“தே..தேவி…!”

“ம்ம்… அவங்க கால்ல ஸ்லிப்பரை நோட் பண்ணுங்க…” என்றவன் அடுத்து ரெஸ்ட் ரூமில் இருந்து பர்தாவில் வெளியேறும் உருவத்தைக் காட்டி நிறுத்தினான்.

“இந்த உருவம் யாருன்னு சொன்னிங்க…”

“நா..நான்…” திணறலாய் நாராயணன் கூற புன்னகைத்தான்.

“இவ்ளோ ஆதாரத்தோட காட்டறேன், இனியும் உங்க பொய் எடுபடாதுன்னு தோணலியா நாராயணன்…?” அஜய் கேட்க, அவனது பார்வை அந்த புட்டேஜை அலசிக் கொண்டிருந்தது.

“ஏதாவது வித்தியாசம் தெரியுதா…?”

“இ..இல்ல…!” திணறினான்.

“உங்களை விட உங்க தம்பி காமேஷ் ஹைட் கம்மி, சரியா…? உங்க வீட்டுல ரெண்டு பேரும் நிக்கற போட்டோல பார்த்தேன்… அதோட இப்ப பர்தாவுக்கு கீழ தெரியுற காலை நோட் பண்ணுங்க…” என்றதும் பார்வையைக் கீழே கொண்டு சென்றவன் அதிர்ந்தான்.

“ஏதாவது வித்தியாசம் தெரியுதா…?”

“அ..அது வந்து…”

“இனியும் நீங்க பொய் சொல்லறதில் யூஸ் இல்லை நாராயணன்… அந்த ஷூவை கவனிச்சீங்களா, அது செயற்கைக் காலுக்காக யூஸ் பண்ணறதுக்குன்னே பிரத்யேகமா செய்யப்பட்ட ஷூ… எங்களைக் குழப்பறதுக்கு வேண்டி நீங்க விட்டுட்டுப் போன இந்த புட்டேஜ் தான் எங்களுக்குக் கிடைச்ச முதல் ஆதாரம்… இந்த ஷூ காமேஷ் யூஸ் பண்ணற ஷூ இல்லேன்னு சொல்லிடாதீங்க… உங்க வீட்டுக்கு விசாரணைக்குப் போனப்ப அங்க இதே ஷூவைப் பார்த்துட்டேன்… உங்க தம்பிக்கு மனநிலைல எந்தப் பிரச்சனையும் இல்லேன்னும் தெரிஞ்சுகிட்டேன்…” அஜய் சொல்லும்போதே நாராயணனின் கண்கள் கலங்கின.

கண்ணீர் கன்னத்தில் வழிய அழத் தொடங்கினான்.

அஜய் கிருஷ்ணாவிடம் கண்ணைக் காட்ட அறையின் கதவை சாத்திவிட்டு அவன் அருகே வந்தார்.

“நாராயணன்… இனியும் பொய் சொல்லி உங்க தம்பியைக் காப்பாத்த நினைக்காம உண்மையை சொல்லுங்க… நாங்களும் மனுஷங்க தான், இந்தக் கேஸ்ல எங்களால் முடிஞ்ச உதவியை நிச்சயம் செய்வோம்…” என்றார்.

“எஸ் நாராயணன், முதல்ல என் கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க…” என்றதும் நிமிர்ந்தான்.

“கேளுங்க சார்…”

“காமேஷ்க்கு இப்பவும் பேச முடியாதா, இல்ல நடிக்கிறாரா..?”

“பாவம் சார் என் தம்பி, இருபது வயசுல வாழ முடியாம, பேச முடியாம, நடக்க முடியாம படுக்கைல முடங்கிப் போறது எவ்ளோ வேதனை… இத்தனை நாள் சிகிச்சை கொடுத்தும் பேச முடியல சார், முதல்ல மனநிலை அப்பப்ப தவறிட்டு இருந்துச்சு… சிகிச்சைக்குப் பிறகு சரியாகிடுச்சு, காலுக்கு செயற்கைக் கால் பொருத்தி இருக்கோம்…”

“காமேஷ்க்கு நடந்த விபத்துக்குக் காரணம் பிரகாஷ் தானே, எதுக்கு பிரபஞ்சனையும் கொல்ல நினைச்சீங்க…? அநாமிகாவைக் கொன்னதால அஸ்வினுக்கு பிரபஞ்சன் மேல கோபம், தம்பியை இப்படிப் பண்ணினதால உங்களுக்கு கோபம், சுபாவோட வீடியோ வச்சு மிரட்டினதால மித்ரன், தேவிக்கு கோபம்… மகளை நோயாளியாக்கி பேத்தியை கொலைக்கு கொடுத்ததால மாலதிக்கு கோபம்… தான் செய்யாத தப்பை சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி தண்டனை வாங்கிக் கொடுத்ததோட மனைவி, மகள் தற்கொலைக்கு காரணமானதால கனகராஜ்க்கு கோபம்… எப்படி நீங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்திங்க…?” என்றவனை கிருஷ்ணா திகைப்புடன் நோக்கிக் கொண்டிருக்க நாராயணன் நடந்ததை சொல்லத் தொடங்கினான்.

“பிரகாஷ் வீட்டுல இருந்து அம்மாவைப் பார்க்க ஊருக்கு வந்திருந்த காமேஷ் எனக்கு போன் பண்ணினான்…”

“அண்ணா, எப்படி இருக்க…?”

“நல்லாருக்கேண்டா தம்பி, நீ எப்படி இருக்க…?”

“எனக்கென்னணா, சிங்கக் குட்டி மாதிரி இருக்கேன்…”

“வேலை எல்லாம் நல்லாப் போகுதா..? அடுத்த தடவை என்னோட நீயும் அபுதாபி வந்திரு… உனக்கு இங்க வேலைக்கு சொல்லி வச்சிருக்கேன்…”

“ஓ… சூப்பர்ணே, அடுத்த மாசம் ஊருக்கு வருவன்னு அம்மாட்ட சொன்னியாமே…? நீ வரும்போது கல்யாணத்தைப் பண்ணிடணும்னு அம்மா உனக்கு பொண்ணு பார்க்கத் தொடங்கிருச்சு… எங்கிட்ட கூட ரெண்டு மூணு பொண்ணோட போட்டோ காட்டுச்சு…”

“ஆமாடா, அம்மாக்கு உன்னையும் என்னோட அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லவும் ஒரு வருத்தம்… தனியா இருக்க கஷ்டமாருக்கு, உனக்கு ஒரு பொண்டாட்டி வந்தா எனக்கும் துணையாச்சுன்னு புலம்புச்சு… சரி, உன் விருப்பம் போல பாருன்னு சம்மதம் சொல்லிட்டேன்…”

“ஹூம்… உனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டியை அம்மாக்குத் துணைக்கு விட்டுட்டுப் போறதெல்லாம் சரி, எனக்குக் கல்யாணம் ஆனதும் என் பொண்டாட்டியை விட்டுட்டுப் போக சொல்லக் கூடாது என்னால முடியாது, இப்பவே சொல்லிட்டேன்…” என்றதும் சிரித்தான் நாராயணன்.

“இருபது வயசுல என் சிங்கக்குட்டிக்கு கல்யாணம் கேக்குதா…? இரு, அம்மாகிட்ட சொல்லறேன்…”

“என்னண்ணே, விளையாட்டுக்கு சொன்னத நிசம்னு நம்பிட்டியா… சும்மா தமாசு…” சமாளித்தான் இளையவன்.

“ஹூம், அந்த பயம் இருக்கட்டும்… சரி, பத்திரமா இரு… டைம் கிடைக்கும்போது அம்மாவைப் பார்க்க வந்திரு… அதுக்கும் சந்தோஷமா இருக்கும்… சரி, நான் வச்சிடட்டா…?”

“ம்ம்… சரிண்ணா…” என்றவன் புன்னகையுடன் அடுக்களையில் இருந்த அன்னையிடம் சென்றான்.

“என்னம்மா, கமகமன்னு வாசனையா இருக்கு, என்ன சமையல்…?” மகனை நோக்கிப் புன்னகைத்தார் ராசாத்தி.

“உனக்குப் புடிக்குமேன்னு நாட்டுக்கோழி குழம்பும், அயிரை மீன் வருவலும் பண்ணிட்டு இருக்கேன் ராசா…”

“ம்ம்… உன் கையால சாப்பிடற ருசியே தனிம்மா… சீக்கிரம் செய்ங்க, மணத்துலயே வயிறு பசிக்கத் தொடங்கிருச்சு…”

“அரை மணி நேரத்துல ரெடியாகிரும் பா…”

“சரிம்மா, நான் ஒரு ரவுண்டு ஊரை சுத்திட்டு வர்றேன்…” என்றவன் பழைய சைக்கிளை எடுத்து கிளம்பினான். தெரிந்த முகங்கள் சிலரைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்ப சமையல் தயாராய் இருக்க மூக்கு பிடிக்க சாப்பிட்டான்.

இரவு உணவு முடிந்து தனது அறைக்கு வந்தவன் மனதில் பிரகாஷின் நினைவு வர, “முதலாளி என்ன முடிவு பண்ணி இருப்பார்… அவங்க செய்த தப்பை போலீஸ்ல சொல்லாம இருக்கிறது தப்பா…? தப்பு செய்தவங்களுக்கு திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கணும்னு அப்பா எப்பவும் சொல்லுவார்… முதலாளியும் கண்டிப்பா நான் சொன்னதுக்கு ஒத்துப்பார்… இல்லன்னா மாலதிம்மா கிட்ட நடந்ததை சொல்லிட்டு அவன் வேலையே வேண்டாம்னு அங்கிருந்து கிளம்பிட வேண்டியது தான்… ப்ச்… இதைப் பத்தி அண்ணன் கிட்டயாச்சும் சொல்லி கேட்டு இருக்கலாமோ…?”

“வேண்டாம், அண்ணனுக்கு தெரிஞ்சா தேவை இல்லாம பயப்படும்… நாமளே இந்தப் பிரச்சனையை டீல் பண்ணிட்டு அண்ணன் வரும்போது நாங்களும் பெரிய மனுஷன் ஆகிட்டோம்னு சொல்லிக்கலாம்… சந்தோஷப்படும்…” என நினைத்தவன், வழக்கம் போல் தனது டயரியை எடுத்து மனதிலுள்ளதை எல்லாம் எழுதத் தொடங்கினான்.

பிரகாஷ் பிரபஞ்சன் பேசிய எல்லாத் தவறுகளையும் எழுதி, தான் பிரகாஷிடம் பேசிய டீல் வரை எல்லாமும் எழுதிய பிறகு தான் மனது லேசாக உறங்க சென்றான்.

அடுத்த நாள் விடியல் அவனுக்கு உவப்பானதாய் இல்லை. விடியற்காலையில் தோளில் பாகுடன் பேருந்துக்காய் நடந்து கொண்டிருந்தவனை வேகமாய் வந்த லாரி தட்டிவிட பின்னங்காலில் ஏறிய டயரும், கீழே விழுந்த இடத்தில் இருந்த மைல்கல்லில் பதம் பார்த்த தலையும் அவன் ஜாதகத்தைப் புரட்டிப் போட்டிருந்தது.

Advertisement