Advertisement

அத்தியாயம் – 22

“சார், காமேஷ் பத்தி என்ன நினைக்கறீங்க…?”

“ஒரு தப்பை இன்னொரு தப்பால சரி பண்ணப் பார்த்திருக்கான்னு நினைக்கறேன்…” அஜய் சொல்லவும் கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. இருவரும் இன்ஸ்பெக்டர் கோவிந்தனை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.

“காமேஷை சந்தேகப் படறீங்களா சார்…?”

“சந்தேகப் பட்டா தப்பில்லைன்னு நினைக்கறேன்…” என்றவன் யோசனையுடன் அமர்ந்திருக்க, கிருஷ்ணாவும் யோசிக்கத் தொடங்கினார்.

“சார், எனக்கு இந்தக் கேஸ்ல நிறைய டவுட்ஸ் இருக்கு… கொஞ்சம் கிளியர் பண்ண முடியுமா…?”

“ஷ்யூர், என்ன டவுட்ஸ்…? கேளுங்க…”

“சார், நீங்க அந்த அநாமிகா பேருக்கு ஒரு விளக்கம் சொன்னிங்க… அதுல அஸ்வின், நாராயணன், மித்ரன், கனகராஜ் மேல தான டவுட் இருந்துச்சு, இந்த காமேஷ் எப்படி நடுவுல வந்தான்…?”

“அதுக்குக் காரணம் இருக்கு மிஸ்டர் கிருஷ்ணா… அஸ்வின், மித்ரன் கிட்ட விசாரணை பண்ணி, தேவியோட மரண வாக்கு மூலத்தைக் கேட்டதுல இருந்து எனக்கு மகதி, அவங்க அம்மா மாலதி, டிரைவர் நாராயணன் மேல சந்தேகம் அதிகமாச்சு… அவங்களை நேரடியா விசாரிச்சா அலர்ட் ஆகிடுவாங்கன்னு ஸ்பை இண்டலிஜென்ஸ் ஏஜன்சில வேலை செய்யற என் பிரண்டு ராகவ் மூலமா ரகசியமா அவங்களை விசாரிக்க சொன்னேன்…” அஜய் சொல்ல திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணா.

“ராகவ் எனக்கு இந்தக் கேஸ்ல இதுவரை அறிமுகம் ஆகாத புது ஒருத்தரை கண்டு பிடிச்சு சில விஷயங்கள் சொல்லவும் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா இருந்துச்சு…”

“என்ன சொன்னார்…?”

“நாராயணன் பிரகாஷ் வீட்டுல வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் ஆயிருக்கு… அதுக்கு முன்னாடி அங்க டிரைவரா வேலை செய்தவன் பேரு காமேஷ்… அந்த காமேஷைப் பத்தி விசாரிச்சப்ப அவர் ஒரு வருஷம் முன்னாடி ஆக்சிடன்ட் ஆகி படுக்கைல இருக்கார்… அந்த காமேஷோட அண்ணன் தான் பிரகாஷ் கிட்ட வேலை செய்யற நாராயணன்னு சொன்னார்…”

“ஓ…” என்ற கிருஷ்ணாவின் புருவம் வியப்பில் உயர்ந்தது.

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி அம்மாவைப் பார்க்கக் கிளம்பிப் போன காமேஷ் அடுத்த நாள் விடியக் காலைல சென்னைக்கு பஸ் ஏற வந்திட்டிருக்கும் போது ஒரு லாரி அவனை இடிச்சிட்டு நிக்காமப் போயிருச்சு… அதைப் பார்த்த ஒருத்தர் கால்லயும், மண்டைலயும் அடிபட்டு உயிருக்குப் போராடிட்டு இருந்தவனை உடனே ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கார்… ஆனாலும் பின் மண்டைல அடிபட்டு பேசற சக்தியை இழந்த காமேஷ்க்கு, கால் நரம்புகள் டேமேஜ் ஆனதால காலையும் ரிமூவ் பண்ணியிருக்காங்க…”

“ஓ… இவ்வளவு நடந்திருக்கா…?”

“ஆமா, இது தெரிஞ்சு வெளிநாட்டுல இருந்து வந்த அண்ணன் நாராயணன் அஞ்சாறு மாசம் தம்பி ட்ரீட்மென்ட்டுக்கு அலஞ்சிருக்கான்… அப்புறம் தான் பிரகாஷ் கிட்ட வேலைக்கு சேர்ந்திருக்கான்… ஏன் தம்பி வேலை செய்த ஓனர்கிட்டயே இவனும் வேலைக்குப் போகணும்…? யார் வீட்டுலயோ வேலைக்கு சேர்ந்ததா அம்மாகிட்ட பொய் சொல்லணும்…?” அஜய் நிறுத்திவிட்டு கிருஷ்ணாவை நோக்க மெல்ல அவர் சந்தேகம் தெளியத் தொடங்கியது.

“அப்படின்னா, லாரி ஆக்சிடன்ட்…? பேக் ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் காமேஷைக் கொல்லத் திட்டம் போட்டு செய்த சதியா…?”

“மே பி, இருக்கலாம்….”

“அவனைக் கொல்லணும்னு யாருக்கு மோட்டிவ் இருந்திருக்கும்…?” யோசித்தவர், “பிரகாஷ்… பிரகாஷா…?” பதில் சொல்லாமல் புன்னகைத்தான் அஜய்.

“வாவ், பென்டாஸ்டிக் சார்…”

“ஒருத்தனோட ரகசியத்தை அவனோட டிரைவரை விட அதிகமாத் தெரிஞ்சவன் இருக்க முடியாது…”

“கரக்ட்… பிரகாஷ் பத்தின ரகசியம் காமேஷ்க்குத் தெரிஞ்சிருக்கலாம்…” என்றார் கிருஷ்ணா உற்சாகத்துடன்.

“இப்ப அந்த அநாமிகா வார்த்தைக்கு கனகராஜை விட அதிகமா சூட் ஆகறது யாரு…?”

“காமேஷ்…! அவனா இதெல்லாம் பண்ணறான்…” அவனால தான் நடக்க, பேச முடியாம படுக்கைல இருக்கானே…”

“அவனுக்குப் பதிலா வேற யாரும் பண்ணக் கூடாதா…?”

அஜய் கேட்கவும், சட்டென்று கிருஷ்ணாவுக்கு நாராயணன் நினைவு வர, “தம்பிக்கு வேண்டி அண்ணன்… அப்படின்னா நாராயணன் தான் அக்யூஸ்ட்டா…?”

“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்…” அஜய் சிரிப்புடன் சொல்ல, அடுத்து ஏதோ கேட்க வந்த கிருஷ்ணாவை அவரது பாக்கெட்டில் சிணுங்கிய அலைபேசி தடுக்க எடுத்தார்.

ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

“ஹலோ, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா ஹியர்…”

“சார், அஜய் சாரைப் பார்க்க நாராயணன் வந்திருக்கார்…” எதிர்ப்பக்கம் எஸ்ஐ கோகுலின் குரல் கேட்டது.

“நாராயணன்…? பிரகாஷ் டிரைவர் நாராயணனா…?” வியப்புடன் கேட்க, “அவரேதான் சார்… நீங்க பக்கத்துல வந்துட்டீங்களா…?” என்றார் கோகுல்.

“ம்ம்… பக்கத்துல வந்துட்டோம்… இன்னும் 15 மினிட்ஸ், வீ வில் பி தேர்…”

“ஓகே சார், சொல்லிடறேன்…” என்ற கோகுல் அழைப்பைத் துண்டிக்க ஆச்சர்யத்துடன் அஜயை ஏறிட்டார் கிருஷ்ணா.

“சார், அந்த நாராயணன் ஸ்டேஷன்ல உங்களைப் பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்கானாம்…”

“ஓகே, வெயிட் பண்ணட்டும்…” என்றவன் அமைதியாகிவிட கிருஷ்ணாவும் அமைதியாய் யோசிக்கத் தொடங்கினார்.

ஸ்டேஷனுக்குள் நுழைந்த இன்னோவாவைக் கண்டதும் முன்னில் காத்திருந்த நாராயணன் எழுந்து நின்றான்.

வண்டியிலிருந்து இறங்கிய அஜய், கிருஷ்ணாவிடம் அவனை உள்ளே அழைத்து வருமாறு கூறிவிட்டு ஸ்டேஷனுக்குள் செல்ல தயங்கிக் கொண்டே வந்தான்.

“வணக்கம் சார்…!”

“ம்ம்… என்னைப் பார்க்கணும்னு சொன்னிங்களாம்…”

“ஆமா சார், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”

“என்ன பேசணும்…?”

“அது…” தயங்கியவன், “கொஞ்சம் தனியாப் பேசணும் சார்…” என்றதும் எழுந்த அஜய், “வாங்க…” என்று விசாரணை ரூமுக்கு நடக்க, “போய் பேசுங்க…” என்றார் கிருஷ்ணா. சிறிது தயங்கியவன் வேகமாய் அந்த அறைக்கு நடந்தான்.

நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருந்த அஜய், “உக்காருங்க நாராயணன்…” என்றதும் அமர்ந்தான்.

“பரவால்லியே, நாங்க உங்களைத் தேடி வரதுக்கு முன்னாடி நீங்களே ஸ்டேஷனுக்கு வந்துட்டீங்க…?”

“ஆமா சார், உங்களோட அடுத்த மூவ் என்னை நோக்கியா தான் இருக்கும்னு தெரியும்… அதான், நானே வந்து சரண்டர் ஆகிடலாம்னு வந்துட்டேன்…”

“அப்ப, நீங்கதான் அநாமிகா பேரை சம்மந்தப்படுத்தி டாக்டர் பிரபஞ்சனையும், உங்க ஓனர் பிரகாஷையும் கொன்னீங்க, அப்படித்தானே…?”

“ஆ..ஆமாம் சார்…”

“ம்ம்… எதுக்காக அவங்களைக் கொன்னிங்க…?”

சற்று மௌனித்தவன் பேசத் தொடங்கினான்.

“அவங்க ரெண்டு பேரும் இந்த உலகத்துல வாழவே தகுதி இல்லாத அயோக்கியனுங்க சார்… கடவுளுக்குப் பிறகு டாக்டரை தான் நாம ரொம்ப நம்பறோம்… அப்படிப்பட்ட டாக்டர் தொழில்ல இருந்துகிட்டு பண்ணக் கூடாத தப்பெல்லாம் அந்த பிரபஞ்சன் பண்ணிட்டு இருந்தான்… தன் கிட்ட வேலை பார்க்குற நர்ஸ் அநாமிகால இருந்து குழந்தையாப் பார்க்க வேண்டிய பத்து வயசுப் பிரகதி வரைக்கும் அவனுக்கு காமம் தீர்க்குற போகப் பொருளாத் தான் தெரிஞ்சாங்க… தன்னோட ஆசைக்கு அடிபணியாத அநாமிகாவை வேலையை விட்டு, இந்த உலகத்தை விட்டே துரத்துன மகாபாவி… சொந்த மகளையே பணத்துக்காக நண்பனுக்கு கூட்டிக் கொடுக்கிற கேடு கெட்ட பொறுக்கி தான் அந்தப் பிரகாஷ்… அது மட்டுமில்ல, அதைத் தெரிஞ்சுகிட்ட மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து அவங்களை ஒரு நரம்பு நோயாளி ஆக்கி வச்சிருக்கிற கேடு கெட்ட ஈனப் பிறவி… தன்னோட தவறை மறைக்க ஒரு பாவமும் அறியாத கனகராஜ் மேல பழியைப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அவரோட மனைவி, மகள் தற்கொலை பண்ணிக்கக் காரணமா இருந்த கொலைகாரப் பாவிங்க… பிரகாஷ் கிட்ட வேலைக்கு இருந்த என் தம்பி காமேஷ் இதைத் தெரிஞ்சுகிட்டதால அவனை லாரி ஆக்சிடன்ட் மூலமா படுக்கைல தள்ளின சைத்தான்… இதுக்கு மேலயும் இவங்களை விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது, இந்த விஷயம் தெரிஞ்சதும் அஸ்வின், நான், மித்ரன் எல்லாருமா சேர்ந்து தான் அவங்களைக் கொல்ல பிளான் பண்ணினோம்… அவங்க எனக்கு உதவி செய்தாங்க… நாந்தான் ரெண்டு பேரையும் கொலை செய்தேன்… என்னை அரஸ்ட் பண்ணி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க, மத்தவங்களை மன்னிச்சு விட்டிருங்க…” முகத்தில் வலியும், வருத்தமும் மாறி மாறித் தோன்ற சொல்லி நிறுத்தினான்.

“நாராயணன், இதெல்லாமே விசாரணைல நாங்க தெரிஞ்சுகிட்ட விஷயங்கள்… கனகராஜ் உங்களுக்கு இதுல எந்த உதவியும் பண்ணலயா…?”

“இல்ல சார், பிரகதி விஷயத்துல நடந்த உண்மையை மட்டும் எங்ககிட்ட சொன்னார்…”

“நீங்கதான் அவங்க ரெண்டு பேரையும் கொன்னதுன்னு அவருக்குத் தெரியுமா…?”

“இ..இல்ல, தெரியாது…” என்றவனை நம்பாமல் பார்த்தான்.

“ஓ… ஓகே, ஆனா தேவியோட வீடியோ வாக்குமூலம் வேற மாதிரி இருந்துச்சே…?” என்றான் மேசை மீதிருந்த பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டே.

“அது அவங்களுக்கு பயம் சார், எங்க மாட்டிப்பமோ, போலீஸ் ரொம்ப டார்ச்சர் பண்ணிருவாங்களோன்னு பயந்தாங்க… தான் இதுல சம்மந்தப்பட்டதால தன்னோட தங்கச்சி வாழ்க்கை பாதிக்கப் படுமோன்னு நினைச்சாங்க… அப்புறம், எங்களையும் காப்பாத்த நினைச்சு கொஞ்சம் பொய்யும், உண்மையுமா வாக்குமூலம் கொடுத்துட்டாங்க சார்…”

“ஓகே, டாக்டர் பிரபஞ்சனை எப்படி கொன்னீங்க…?”

“தேவி சொன்ன போல வாக்குமூலம் வாங்கிட்டோம்… போறது, வர்றது எல்லாம் ஜாமர் மூலமா CCTV ல தெரியாமப் பார்த்துகிட்டோம்…”

“அந்த பர்தா போட்டுட்டு வந்தது மட்டும் எப்படி தெரிஞ்சது…?”

“வேணும்னே நீங்க செக் பண்ணும்போது டவுட் வரட்டும்னு ஜாமர் ஆப் பண்ணின பிறகு பர்தாவோட வந்தேன் சார்…”

“ம்ம்… ரொம்ப சாமர்த்தியமா போலீஸை ஏமாத்திட்டதா நினைச்சிருக்கீங்க… எங்களை கன்பியூஸ் பண்ண நீங்க கொடுத்த ஆதாரம்தான் எங்களுக்கு நீங்க கொடுத்த க்ளூன்னு உங்களுக்குப் புரியாமப் போயிருச்சு…” அஜய் சொல்லவும் புரியாமல் குழம்பினான் நாராயணன்.

“அதுல என்ன க்ளூ கிடைச்சது சார்…?”

“சொல்லறேன், அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க…”

“கேளுங்க சார்…”

“நீங்க சொன்னதுல அ நா மி முதல் மூணு எழுத்துக்கு சொந்தக்காரங்களை சொன்னிங்க, நாலாவதா உள்ள கா எழுத்துக்கு சொந்தக்காரர் யாருன்னு சொல்லலியே…” அஜய் கேட்க நாராயணனுக்கு உள்ளில் வியர்க்கத் தொடங்கியது.

Advertisement