Advertisement

அத்தியாயம் – 21

கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷன்.

கடா மீசையும், வழுக்கைத் தலையுமாய், சற்றே வளர்ந்த செல்ல போலீஸ் தொப்பையுடன் நாற்காலியில் சாய்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் கோவிந்தன். ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அவசரமாய் உள்ளே வந்து சொன்ன கான்ஸ்டபிளின் குரலில் நிமிர்ந்தார்.

“சார், கிரைம் பிராஞ்ச் ஆபீசர் அஜயும், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவும் வந்துட்டாங்க சார்…”  சட்டென்று எழுந்தவர் வாசலுக்கு வரும் முன் அஜயும், கிருஷ்ணாவும் போலீஸ் இன்னோவா காரிலிருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தனர்.

அட்டன்ஷனுக்கு வந்து சல்யூட்டை உதிர்த்து தளர்ந்தார் கோவிந்தன்.

“வாங்க சார், உங்களுக்கு தான் வெயிட்டிங்…”

“அந்த பைலை எடுத்துட்டீங்களா…?”

“எடுத்தாச்சு, டீ, காபி எதுவும் குடிக்கறிங்களா…” என்றார் நாற்காலியில் அமர்ந்த அஜயிடம்.

“ம்ம்… குடிக்கலாமே…” என்றவன் ஸ்டேஷனை சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டு, “அந்த பைலை எடுத்திட்டு வாங்க…” என்றான்.

“இதோ சார்…” என்ற கிருஷ்ணா கொஞ்சம் அழுக்கடைந்த நீல நிற பைல் ஒன்றை எடுத்து நீட்டினார்.

அதைத் திறந்து உன்னிப்பாய் பக்கங்களைப் புரட்டியவன் சில நிமிடத்திற்குப் பிறகு நிமிர்ந்தான். அதற்குள் டீ அவனுக்காய் மேசையில் ஆடையைப் போர்த்திக் கொண்டு ஆறத் தொடங்கி இருக்க அதை ஒரே மூச்சில் வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டு எழுந்தான்.

கிருஷ்ணா கோவிந்தனிடம் மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டிருக்க அஜய் அழைத்தான்.

“மிஸ்டர் கோவிந்தன்…”

“சார்…”

“இதுல மென்ஷன் பண்ணி இருக்கிற முகவரிக்குப் போக எவ்ளோ நேரமாகும்…”

“வித் இன் 30 மினிட்ஸ் சார்…”

“ஓ..! கிளம்பலாம், நீங்களும் எங்களோட வாங்க…”

“கிளம்பிட்டேன் சார்…” என்றவர் ஸ்டேஷன் எஸ் ஐயிடம் சொல்லிவிட்டு நடந்தார். மூவரும் இன்னோவா இருக்கைகளில் நிரம்ப டிரைவர் வண்டியை எடுத்தார்.

சரியாய் இருபத்தைந்தாம் நிமிடம் இன்னோவா அந்த முகவரி இருந்த ஏரியாவுக்குள் நுழைந்தது.

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பல் குத்திக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த வண்டியைக் கண்டதும் பவ்யமாய் எழுந்து கவனிக்க, அவர் அருகே வண்டியை நிறுத்தினார் டிரைவர்.

“பெரியவரே, இந்த அட்ரஸ் எங்கிருக்கு…?”

“அட..! நம்ம வாத்தியார் வீடு… இப்படியே போயி வலதுபக்கம் திரும்புங்க… ஒரு ஓட்டு வீடு தெரியும், அந்த வீடுதான்… அங்க யாரைப் பார்க்கணும்…?” என்றார் ஆர்வத்துடன்.

“சும்மா நலம் விசாரிக்கலாம்னு தான்…” என்ற கோவிந்தன் வேறு எதுவும் சொல்லாவிட்டாலும் பெரியவர் மகனிடம் சொல்லுவதற்காய் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தார்.

அவர் சொன்னதுபோல் திரும்பியதும் ஒரு ஓடிட்ட வீடு தென்பட வண்டியை நிறுத்தி இறங்கினர்.

வீட்டை சுற்றிலும் மூங்கில் வேலி அமைத்திருக்க அந்தத் தடுப்பைத் தள்ளித் திறந்தனர்.

உள்ளே சுற்றிக் கொண்டிருந்த கோழிக் குஞ்சுகள் புதிய ஆட்களைக் கண்டு பயந்து ஒதுங்கிக் கொள்ள வீட்டை நோக்கி நடந்தனர். பழைய முறையில் கட்டப்பட்ட திண்ணையுடன் கூடிய அழகான ஓட்டுவீடு.

திண்ணையில் அமர்ந்து முருங்கை இலையை உருவிக் கொண்டிருந்த பெண்மணி கண்ணை சுருக்கி இவர்களைப் பார்த்துப் புரியாமல் கேள்வியுடன் எழுந்தார்.

“யாரு…?”

“அம்மா, இங்க ராசாத்தியம்மான்னு…”

“நாந்தான்… நீங்க போலீசா…” என்றார் கோவிந்தனின் உடையைப் பார்த்து சற்று மிரட்சியுடன்.

“ஆமாம்மா, பயப்படாதீங்க… ஒரு சின்ன விசாரணை, அவ்ளோதான்…”

“என்ன விசாரிக்கணும்…” தயக்கத்துடன் அவர் கேட்க, அதற்குள் அந்தப் பெரியவரும் மகனும் வேறு சிலரும் வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“”அம்மா, உங்களுக்கு எத்தன புள்ளைங்க…”

“ரெண்டு பசங்க…!”

“ரெண்டு பேரும் என்ன பண்ணறாங்க…?”

“பெரியவன் சென்னைல டிரைவரா இருக்கான்… சின்னவன்…” என்றவரின் முகம் வாடிப் போக அப்படியே நிறுத்தினார்.

“எதுக்கு கேக்கறிங்க, என் புள்ளைக்கு என்னாச்சு…?” என்றார் கலக்கத்துடன்.

“யாருக்கும் எதுவும் ஆகலைமா… ஒரு விசாரணைக்கு வேண்டி சில விவரம் தெரிஞ்சுக்க வந்தோம்…”

“ம்ம்… கேளுங்க…”

“உங்க பசங்க பேரு என்ன…?”

“பெரியவன் நாராயணன், சின்னவன் காமேஷ்… பெரியவனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு, அவனுக்கு நிசமா ஒண்ணும் பிரச்சனை இல்ல தான…” என்றார் அப்போதும் அவர்களை முழுமையாய் நம்ப முடியாமல்.

“உங்க பெரிய மகன் எப்ப உங்களைப் பார்க்க வந்தார்…?”

“ரெண்டு மாசம் முன்னாடி போனவன், எப்பவாச்சும் போன் பண்ணுவான், பணத்தை அனுப்பி வைப்பான்…”

“காமேஷ் என்ன பண்ணறார்…” என்றதும் அவர் முகம் வாட, கண்களில் குளமாய் கண்ணீர் தேங்கியது.

“அ..அவனால எதுவும் பண்ண முடியாது…” என்றதும், அவர்கள் புரியாமல் நிமிர, “உள்ள வாங்க சார்…” என்றவர் வீட்டுக்குள் செல்ல இவர்களும் ஷூவைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.

ஒரு அறை முன் நின்றவர், சாத்தியிருந்த கதவைத் திறக்க  கட்டிலில் ஒரு உருவம் படுத்திருந்தது.

கதவு திறக்கும் ஓசை கேட்டு கண்ணைத் திறந்து பார்த்தது.

“இவன்தான் காமேஷ்… என் ரெண்டாவது பையன்…” என்றார் ராசாத்தி கலங்கிய கண்களுடன்.

அவர்களை சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த காமேஷை சற்று அதிர்ச்சியுடன் பார்த்தனர் மூவரும்.

“இவருக்கு ஒரு வருஷம் முன்னாடி ஆக்சிடன்ட் ஆனது கேஸ் ஆகிருக்கு, ஆனா இன்னுமா படுக்கைல இருக்கார்…?” கோவிந்தன் கேட்க வாடிய முகத்துடன் பதில் சொன்னார்.

“ஆமா சார், அந்த ஆக்சிடண்ட்ல கால் எலும்பு உடைஞ்சு நடக்க முடியாமப் போயிடுச்சு… லாரி இடிச்சு கீழ விழுந்ததுல மண்டைல அடிபட்டு, ஏதோ நரம்பு கட்டாகி பேசவும் முடியலை… புத்தியும் ஒரு நிலைல எப்பவும் இருக்கிறதில்லை… எப்பவாச்சும் நாம கேக்கறதைப் புரிஞ்சுப்பான், அதிக நேரமும் எங்காச்சும் வெறிச்சுப் பார்த்திட்டு தான் இருப்பான்…” என்றார் கண்ணீருடன்.

அமைதியாய் அவனையே அஜய் பார்த்துக் கொண்டிருக்க அவர்களை நோக்காமல் காமேஷ் எங்கோ பார்த்திருந்தான்.

“இவருக்கு ட்ரீட்மென்ட் எதுவும் கொடுக்கலையாம்மா…?”

“சித்த வைத்தியம் தான் பார்த்திட்டு இருக்கோம்… உடம்பு தேறி வந்தாலும் பேச்சு வரலை…”

“மிஸ்டர் கோவிந்தன், இவரை ஆக்சிடன்ட் பண்ண லாரி எதுன்னு கண்டு பிடிக்க முடியலையா…?”

“இல்ல சார், லாரிக்கு fake நம்பர் பிளேட் வச்சு ஓட்டிட்டு வந்திருக்கான்… விபத்து நடந்ததைப் பார்த்தவர் கொடுத்த வண்டி நம்பர்ல பைக் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் தான் இருந்துச்சு, அதனாலா விசாரணை முடியல சார்…”

“ம்ம்…” என்றவன் யோசனையுடன் ராசாத்தியிடம் திரும்பினான்.

“உங்க பையன் மேல யாருக்காச்சும் முன்விரோதம் இருந்துச்சா?… இதை யாரு பண்ணி இருப்பாங்கன்னு உங்களுக்குத் தோணுது…?”

“தெரியல சார், என் பையன் ரொம்ப நல்லவன், சூதுவாது தெரியாதவன், எல்லார் கிட்டயும் அன்பா இருப்பான்… இவனுக்கு யாரும் எதிரிங்க இருப்பாங்களான்னு யோசிக்கக் கூட முடியல, வாழ வேண்டிய வயசுல இப்படிப் படுக்கைல கிடக்கறதைப் பார்த்தா பெத்த வயிறு பதறுது…” சொல்லிக் கொண்டே கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

“ம்ம்… சரி, பீல் பண்ணாதீங்க மா… உங்க பிள்ளை காமேஷ் சென்னைல யாருகிட்ட வொர்க் பண்ணான்னு தெரியுமா…?”

“ம்ம்… ஏதோ எக்ஸ்போர்ட்ஸ் ஓனர் பிரகாஷ்னு சொல்லி இருக்கான் சார்…”

“உங்க மூத்த பிள்ளை நாராயணன் வெளிநாட்டுல தான இருந்தார்… அவர் எப்ப இந்தியா வந்தார்…?”

“இவனுக்கு இப்படி ஆக்சிடன்ட் ஆனது தெரிஞ்சு அவனால அங்க இருக்க முடியல சார், உடனே கிளம்பி வந்துட்டான்… மறுபடி வெளிநாடு போகல…”

“நாராயணன் இப்ப எங்க வேலைக்குப் போறார்…?”

“அவன் சென்னைல ஏதோ ஒரு வீட்டுல டிரைவர் வேலை கிடைச்சு,  ஆறு மாசமா அங்க தான் போயிட்டு இருக்கான்…”

“ம்ம்… குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்கமா…” என்றான் அஜய் யோசனையுடன்.

“தர்றேன் சார்…” என்றவர் அடுக்களைக்கு செல்ல, அந்த அறையைப் பார்வையாலேயே அலசினான்.

சுவரிலிருந்த செல்பில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்க, வெறுமனே எடுத்துப் பார்த்தான்.

“காமேஷ்…”

எதிர்பாராத அழைப்பில் காமேஷின் கண்கள் சட்டென்று அவனிடம் திரும்பி மீண்டும் பழைய திசையில் வெறிக்கத் தொடங்கியது.

“இந்தாங்க சார் தண்ணி…” ராசாத்தி கொடுத்த தண்ணீர் சொம்பை வாங்கி இயல்பாய் குடித்துவிட்டுக் கொடுத்தான்.

“அம்மா, உங்க பிள்ளை காமேஷ் வேலை பார்த்த எக்ஸ்போர்ட் கம்பெனி ஓனரை யாரோ கொன்னுட்டாங்க, உங்களுக்குத் தெரியுமா…?”

“அச்சோ அப்படியா, எனக்குத் தெரியாது சார்…” என்றார் வருத்தத்துடன்.

“ம்ம்… அடுத்த முறை உங்க பிள்ளை நாராயணன் போன் பண்ணும்போது யார் வீட்டுல வேலைக்கு சேர்ந்திருக்கார்னு விசாரிச்சு தெரிஞ்சு வச்சுக்கங்க…”

“கிருஷ்ணா, கிளம்பலாம்…” சொன்னவன்,

“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி மா… காமேஷை நல்லாப் பார்த்துக்கங்க… நாங்க வர்றோம்…” என்றுவிட்டு வாசலை நோக்கி நடக்க பின்னில் கிருஷ்ணாவும், கோவிந்தனும் அவனைத் தொடர்ந்தனர்.

மூவரும் இன்னோவாவில் நிறைய வண்டி கிளம்பியது.

Advertisement