Advertisement

அத்தியாயம் – 20

“நாளைக்கு பிரகதி இறந்த நாள்…” பிரகாஷ் சொல்லவும் பிரபஞ்சனின் முகம் அந்நாளைய நினைவில் சுருங்கியது.

“ப்ச்… சின்னப் பொண்ணுன்னு யோசிக்காம கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், இல்லேன்னா செத்திருக்க மாட்டா…”

“ஹேய், உன்னை வருத்தப்படுத்த சொல்லலை… அவ செத்ததுனால தான சூதாட்டத்துல எல்லாத்தையும் இழந்து உயிரையும் விடத் தயாரா இருந்த எனக்கும், பிசினசுக்கும் மறுவாழ்க்கை கிடைச்சுது… இல்லேனா நீ எனக்கு சும்மா தூக்கி பத்து லட்சத்தைக் கொடுத்திருப்பியா…?”

“ம்ம், பணம் என்ன பணம்… அதான் என் மாமனார் இஷ்டம் போல சம்பாதிச்சு வச்சிருக்காரே… அவ்ளோ பணத்தை செலவாக்க நான் ஒருத்தன் தான இருக்கேன்…”

“ம்ம்… நீ அதிர்ஷ்டசாலி தான்…” மேசை மீது கண்ணாடிக் கோப்பையில் மின்னிய பொன் திரவத்தை உள்ளே தள்ளிக் கொண்டே சொன்னான் பிரகாஷ்.

“அதிர்ஷ்டசாலியே தான்… எனக்கு அழகான மகளைக் கட்டிக் கொடுத்ததோட கிளினிக் வச்சுக் கொடுத்து, இனாமா இப்ப மச்சினிச்சியை என் பொறுப்புல விட்டுட்டு ரெண்டு பேரும் மேலோகம் போயி சேர்ந்துட்டாங்க… இனி அவளும் என் பொறுப்புதான்…”

“ஹூம், மச்சினின்னு சொல்லும்போதே கண்ணுல போதை தெரியுது, ஆளு எப்படி…? செம கட்டையா…?”

“செம கட்டை இல்லை, மெழுகு சிலை… என் பொண்டாட்டியை விட செம அழகு…”

“ஓ… அப்ப டிரை பண்ணிப் பார்த்துட வேண்டியதுதான…”

“அது அவசரப்பட முடியாது பிரகாஷ்… லைட்டா பிரச்சனை ஆனாலும் சொத்தெல்லாம் கைவிட்டுப் போயிரும்… எட்டி நின்னே அவளை ரசிச்சுக்க வேண்டியது தான்… பார்ப்போம், வாய்ப்புக் கிடைச்சா நமக்கு யூஸ் பண்ணத் தெரியாதா…?”

“ம்ம்… அதானே, பிரகதியைக் கொன்ன பழியை அழகா கனகராஜ் மேல போட்டு எப்படி எஸ்கேப் ஆனோம்… அப்படி இதுக்கும் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டியது தான்…” அவர்கள் பேசுவதை தூணுக்குப் பின்னிலிருந்து கேட்ட காமேஷின் இதயம் அதிர்ச்சியில் வேகமாய் துடித்துக் கொண்டிருந்தது.

பிரபஞ்சனை எப்போதுமே அவனுக்குப் பிடிக்காது. பிரகாஷ் அவனிடம் ரகசியமாய் ஏதோ பேசுவதும், மகதியை அவனிடம் ட்ரீட்மெண்டுக்கு அழைத்துச் செல்வதிலும் கூட ஒரு கள்ளத்தனம் ஒளிந்திருப்பது போல் முன்னமே உணர்ந்திருக்கிறான். இப்போது அவர்கள் பேசியதில் அதிர்ந்து பதட்டத்துடன் கேட்டு நின்றான்.

காரிலேயே பிரகாஷ் அலைபேசியை விட்டுச் சென்றிருக்க, யாரோ பிசினஸ் விஷயமாய் அழைக்கவே, அவனிடம் கொடுப்பதற்காய் பாருக்குள் வந்தவனை, பெரிய தூணுக்குப் பின்னில் இருந்த மேசையில் அமர்ந்திருந்த இருவரும் கவனிக்கவில்லை. அருகிலுள்ள மேசையில் யாருமில்லாத தைரியத்தில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர். இவனும் அவர்களின் ரகசியப் பேச்சு என்னவென்று தெரிவதற்காய் மறுபக்கம் நின்றிருந்தான்.

“பிரகாஷ்… தேவியும், சுபாவும் பொன் முட்டை போடுற வாத்துங்க, அவ்ளோ சீக்கிரம் அவங்களைப் போட்டுத் தள்ளிடக் கூடாது…”

“ஹூம்… எனக்கும்தான் ஒருத்தி இருக்காளே, என் மாமியார்க்கிழவி அவ பேருல இருக்கிற கொஞ்சம் சொத்தை விக்கவும் செய்யாம அதை அதோட காலத்துக்குப் பிறகு மகளுக்கு எழுதி வச்சிருக்கு… இல்லேன்னா பிரகதி விஷயம் தெரிஞ்ச பைத்தியக்கார மகதியை மககிட்டயே அனுப்பிட்டு, அந்த சொத்தையும் சுருட்டி இருக்கலாம்… தேவையில்லாம இப்படி தினம் போதை மாத்திரையைக் கொடுத்து அவளை பைத்தியக்காரி போல வச்சிருக்க வேண்டிய அவசியமில்லை, எங்க, அந்த தாய்க்கிழவிக்கு விஷயம் தெரிஞ்சு மாட்டிப்பமோன்னு பயமா இருக்கு…” பிரகாஷ் சொன்னதைக் கேட்ட காமேஷின் மனம் கோபத்தில் கொந்தளித்தது.

“அட சாக்கடைப் பன்னிங்களா, பணத்துக்காக எத்தனை கேடு கெட்ட வேலையும் பண்ணுவீங்களா… பாவம் வீட்டிலிருக்கிற லேடீஸ், உங்களை எவ்ளோ நம்பறாங்க, நீங்க என்னடான்னா இவ்ளோ கேடு கெட்டவனா இருக்கீங்க… உங்களை எல்லாம் தூங்கும்போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னாலும் தப்பில்லை…” யோசித்துக் கொண்டே அவர்கள் பேச்சை செவி மடுத்தான்.

“அதெல்லாம் யாராலும் கண்டு பிடிக்க முடியாது பிரகாஷ், அவளை செக் பண்ணாலும் நரம்புத் தளர்ச்சி இருக்கிற போல தான் தெரியும்… நீ பயப்படாத…”

“ம்ம், அந்த நர்ஸ் அநாமிகா பத்தி சொல்லி இருந்தியே, என்னாச்சு, படிஞ்சுதா…?”

“ப்ச்… இல்ல, அவ கைக்கு சிக்காம ரொம்பத் துள்ளறா… அவ மட்டும் என் கைக்கு கிடைச்சா உனக்கு பெரிய ஒரு ட்ரீட் தரேன்…” பிரபஞ்சன் போதையுடன் சொல்ல பிரகாஷ் சந்தோஷமாய் இளித்தான்.

“அவ்ளோதான, நீ ஓகேன்னு சொல்லு, அவளை கோழிக்குஞ்சைத் தூக்கற மாதிரி அலேக்கா தூக்கிட்டு வந்து உன் கால்ல போடறேன்…”

“இல்ல, வேண்டாம் பிரகாஷ்… பிரகதி விஷயத்துக்குப் பிறகு படியாத கழுதை வேணாம்னு முடிவு பண்ணிருக்கேன்… அவளா வந்தா ஓகே… இல்லேன்னா வேற விதத்துல வழிக்கு கொண்டு வரணும்…”

“ம்ம்… தட்ஸ் ஸ்பிரிட்… உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த டேக் இட் ஈசி ஊர்வசி தான்…” குழறலாய் சொன்னவன்,

“அப்புறம் எனக்கு கொஞ்சம் பணம் வேணும் பிரபா… நாம வாடகைக்கு இருக்கிற கம்பெனியை லீசுக்கு எடுத்துக்க முடியுமான்னு பில்டிங் ஓனர் கேக்கறார், அவருக்கு எதும் பணத் தேவை இருக்கும் போலருக்கு… இல்லேன்னா, வேற பில்டிங் பார்த்து காலி பண்ணிக்க சொல்லறார்…”

“ஓ… கொஞ்சம் டைம் கொடு, ஏற்பாடு பண்ணித் தரேன்…”

“தேங்க்ஸ் பிரபா… கேட்டதும் மறுக்காம ஓகே சொல்லற நண்பன் யாருக்குக் கிடைப்பான்…” அவன் கையைப் பிடித்துக் குலுக்கிய பிரகாஷை நோக்கி சிரித்த பிரபஞ்சன்,

“சொந்தப் பொண்ணையே நண்பன் ஆசைப்பட்டான்னு தூக்கிக் கொடுத்த உன்னை விடவா நான் கொடுக்கிற பணம் பெருசு… உனக்காக எதுவும் செய்வேன்…” என்றான் சிரிப்புடன்.

“ஹாஹா, சரி, கிக் ஏறத் தொடங்கிருச்சு, எனக்குப் போதும்… அப்புறம் அந்த மாமியார்க் கிழவி முறைச்சுட்டே பார்ப்பா…”

“ம்ம்… எனக்கும் கார் டிரைவ் பண்ணனும், போதும்… நானும் கிளம்பறேன்…” என்ற பிரபஞ்சனும் எழுந்து கொண்டான்.

காமேஷ் வேகமாய் அங்கிருந்து காருக்கு சென்று விட்டான்.

இருவரும் பாருக்கு வெளியே வந்து பார்க்கிங்கை நோக்கி நடந்தனர். அளவான போதையில் இருந்ததால் தங்களது காரை நோக்கி சென்றனர்.

“காமேஷ், கிளம்பலாம்…” என்றதும் வண்டியை எடுத்தான்.

சிறிது தூரம் சென்றதும், “என்ன காமேஷ், எப்பவும் பாட்டுப் போடுவ, ஏதாச்சும் பேசிட்டு வருவ… இன்னைக்கு மௌன விரதமா…?” என்றவனை நினைத்து ஆத்திரமாய் வந்தாலும் அடக்கிக் கொண்டு அமைதியாய் வண்டி ஓட்டினான்.

வீட்டுக்கு அருகில் சற்றுத் தள்ளியே வண்டியை நிறுத்த, கண்ணை சுருக்கிக் கொண்டு வெளியே பார்த்த பிரகாஷ், “ஏன் இங்கயே வண்டிய நிறுத்திட்ட… நம்ம வீடு இன்னும் வரலியே…” என்றான் புரியாமல்.

“சார், அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… கொஞ்சம் இறங்குங்க…” என்றவன் காரிலிருந்து இறங்க, “என்கிட்டே நீ என்ன பேசணும், லோன் ஏதாச்சும் வேணுமா… அதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போயி பேசிக்கலாமே…”

“ப்ளீஸ் அஞ்சே நிமிஷம், இறங்குங்க சார்…”

“ஹோ, என்னடா இது… ராத்திரி நேரத்துல இம்சை பண்ணற…” சொல்லிக்கொண்டே இறங்கியவன் அருகில் வந்து நின்றான் காமேஷ்.

நேரம் பத்தரையைத் தாண்டி இருக்க, ரோட்டில் செல்லும் சில வாகனங்கள் தவிர ஊர் முழுதும் உறக்கத்துக்குள் நுழையத் தயாராகிக் கொண்டிருந்தது.

“சார், நீங்க பேசினதெல்லாம் கேட்டேன்…” என்றதும் புரியாமல் முழித்தான் பிரகாஷ்.

“என்ன பேசினோம், நீ என்ன கேட்ட…?”

“டாக்டரோட நீங்க பேசிட்டு இருந்த எல்லாமே கேட்டேன்… பிரகதியோட கொலை, கனகராஜ், நர்ஸ் அநாமிகா, நம்ம மேடத்துக்கு தப்பான ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கறது வரைக்கும் எல்லாமே கேட்டேன்…” அவன் சொல்லவும் அந்த இருட்டிலும் பிரகாஷ்க்கு வியர்க்கத் தொடங்கியது. குடித்த போதை எல்லாம் காணாமல் போயிருக்க அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் இதயத்தில் அதிர்ச்சியை இறக்கிக் கொண்டிருந்தது.

“காமேஷ்…! நீ என்ன சொல்லற…?” தனது பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் அதட்டினான்.

“உண்மையைத் தான் சொல்லறேன்… நடந்த, கடந்த எதையும் நான் யாருகிட்டயும் சொல்லாம இருக்கணும்னா நீங்க இனியாச்சும் உங்களை மாத்திக்கணும்…” அதிகாரமாய் ஒலித்த காமேஷின் குரல் அவனுக்குள் ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும் காட்டிக் கொள்ளாமல் பேசினான்.

“காமேஷ், அதெல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்ச கதை அதைப் பத்தி பேசி இனி ஆகப் போறது எதுவுமில்ல, உனக்குத் தெரிஞ்ச உண்மையை வெளிய சொல்லாம இருக்க உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு, தரேன்… ஆனா இந்த விஷயத்தை இதோட மறந்துடணும்… அதான், எனக்கு மட்டுமில்ல, உனக்கும் நல்லது…”

“என்ன மிரட்டறீங்களா…? பணம்னு சொன்னதும் உங்களைப் போல நானும் நாக்கைத் தொங்கப் போட்டு ஒத்துப்பேன்னு நினைச்சிங்களா… நடக்காது சார், எனக்குப் பணமும், மண்ணாங்கட்டியும் எல்லாம் வேண்டாம், உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புத் தரேன்… மகதி மேடத்துக்கு நீங்க கொடுக்கிற தப்பான சிகிச்சையை நிறுத்தி அவங்களை சரி பண்ணனும்… இனி யாருக்கும் எந்த துரோகமும் செய்யக்கூடாது… இதுக்கு நீங்க சம்மதிச்சா என் வாய் அமைதியா இருக்கும்…”

“இல்லேன்னா….?”

“சாரி சார், இதுக்கு நீங்க சம்மதிக்கலேன்னா வரப்போற பின்விளைவுகளை நீங்க தான் எதிர்கொள்ளணும்…”

“என்ன மிரட்டறியா…”

“இல்ல சார், அந்தப் பாவம் மேடத்தை வாழ விடுங்கன்னு கெஞ்சிக் கேட்டுக்கறேன்… உங்ககிட்ட என்ன இல்லை, எதுக்கு இப்படி மேல மேல தப்பு பண்ணனும், இனியாச்சும் திருந்தி புதுசா ஒரு வாழ்க்கை வாழக் கூடாதா…?” அவன் சொல்லுவதை அமைதியாய் கேட்டிருந்தான் பிரகாஷ்.

“ம்ம்… சரி, யோசிக்கறேன்… ஒரே நாள்ல யாராலும் உத்தம புத்திரன் ஆக முடியாது, எனக்கு கொஞ்சம் டைம் கொடு…”

“ஓகே சார்… நீங்க இப்படி சொன்னதே எனக்கு நம்பிக்கையா இருக்கு, நிச்சயம் நீங்க மாறுவீங்க சார்… பொண்ணு இறந்து பொண்டாட்டியை இப்படி ஆக்கி நீங்க வாழற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கு… யாருக்காக இந்த வாழ்க்கையும், பணமும் எல்லாம்… கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க சார்… உண்மையான வாழ்க்கை வேறன்னு புரியும்…” என்றவனை சிறு புன்னகையுடன் நோக்கினான் பிரகாஷ்.

“ம்ம்… நீ சொல்லறதும் சரின்னு தான் தோணுது… டிரை பண்ணறேன், இப்ப வீட்டுக்குப் போகலாமா…?”

“கிளம்பலாம் சார்…” சொன்னவன் வண்டியை எடுத்தான்.

“காமேஷ் நீ எப்ப ஊருக்குப் போகணும்னு சொன்ன…?”

“நாளைக்குக் காலைல போயிட்டு நாளான்னிக்கு விடியக் காலை பஸ் ஏறிடுவேன் சார்… நான் திரும்பி வரும்போது புது பிரகாஷ் சாரைப் பார்ப்பேன்னு நினைக்கறேன்…” ஒரு கெட்டவனைத் திருத்தி விட்ட சந்தோஷம் அவன் முகத்தில்.

ஆனால், தான் பேசிக் கொண்டிருப்பது ஒரு கேடு கெட்ட அயோக்கியனிடம் என்று யோசிக்காமல் சாதாரணமாய் நினைத்து விட்டான் அந்த இருபது வயசுக்காரன்.

வீட்டுக்கு முன் காரை நிறுத்தியவன், “சார், நான் கொஞ்சம் அதட்டலா பேசி இருந்தா மன்னிச்சுக்கங்க… நீங்களும், மேடமும் நல்லாருக்கனும்னு தான் இப்படிப் பேசிட்டேன்… நான் யாருகிட்டயும் இதைப் பத்தி பேச மாட்டேன்… நீங்களும் எதையும் மனசுல வச்சுக்காதீங்க சார்…”

“ம்ம்… நீ என் நல்லதுக்கு தான் சொல்லறேன்னு புரிஞ்சுகிட்டேன் காமேஷ்… உன் நல்ல மனசுக்கு நானும் நிச்சயம் உனக்கு ஒரு பரிசு கொடுப்பேன்… நாளைக்கு நல்லபடியா ஊருக்குப் போயிட்டு வா…”

“ரொம்ப சந்தோஷம் சார்…” என்றவனுக்கு அப்போது விளங்கவில்லை தான் பேசிக் கொண்டிருப்பது பிரகாஷ் வடிவத்தில் உள்ள எமதர்மனிடம் என்று.

அடுத்தநாள் விடியலில் கொளத்தூரை நோக்கி, அவன் பயணத்தை தொடங்கியிருந்தான்.

Advertisement