Advertisement

அத்தியாயம் – 2
“ஜமுனா..!”
கண்ணாடி முன் நின்று நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டிருந்த ஐந்தடி, நான்கங்குல ரசகுல்லா  கணவன் சந்தோஷின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தது.
“ஓ வந்துட்டிங்களா…?” அருகே வந்தவன் அவளை இடுப்பில் கையிட்டு வளைத்துக் கொண்டான்.
“என்ன, கோர்ட்டுல இருந்து வரும்போதே ஐயா செம மூடுல இருக்கற போல இருக்கு…?”
“வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கப் போறோம்னு நினைக்கும்போதே உடம்புல நாடி, நரம்பெல்லாம் முறுக்கேறி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு…” சொன்னவனின் கையை மெல்ல விலக்கியவள் சிரித்தாள்.
“கல்யாணமாகி நாளையோட அஞ்சு வருஷம் முடியப் போகுது, இப்பவும் உங்க அலும்பு குறையலை…”
“எதுக்குக் குறையணும், இல்ல எதுக்குக் குறையணும்னு கேக்கறேன்…? என் பொண்டாட்டியை முதன் முதலா எப்படிப் பார்த்தேனோ, அதை விட இன்னும் அழகு கூடியிருக்கே ஒழிய குறையலயே…! இப்பவும் அப்சரஸ் போல அதே ஆளை அசத்தற அழகுல இருக்கியே…” சொன்ன சந்தோஷ் போன மாதம் தான் 36 வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தான். அவன் வயதுக்கு சற்று முதிர்ச்சியைக் காட்டும் தோற்றம், லீடிங் லாயர்களில் ஒருவன்.
“போங்க, சும்மா கிண்டல் பண்ணிட்டு…”
“சரி அது இருக்கட்டும், உனக்கு நம்ம வெட்டிங் டேக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கறேன்னு சொன்னனே, கிளம்பு, கடைக்குப் போயிட்டு வரலாம்…”
“கிஷோர் டியூஷனுக்குப் போயிருக்கான், வந்ததும் போவமே”
“அவன் வந்தா சர்வன்ட் அம்மா பார்த்துப்பாங்க, நம்ம சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்…”
“உங்க அன்புத் தொல்லைக்கு அளவில்லாமப் போயிருச்சு… இருங்க, வந்திடறேன்…” சொன்னவள் ஹான்ட்பேகை எடுத்து வர வாசலில் காத்திருந்த சிவப்பு போலோவில் கிளம்பினர்.
“ஆமா, அப்படி என்ன சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப் போறீங்க…”
ஸ்டீயரிங்கை ஒடித்துக் கொண்டே அவளை நோக்கி சிரித்த சந்தோஷ், “நீயே பார்த்து தெரிஞ்சுக்க…” என்றதும் சிரித்தாள்.
“நீங்க பண்ணறதெல்லாம் பார்த்தா நமக்கு என்னவோ நேத்து தான் கல்யாணமாகி இன்னைக்கு கொஞ்சிட்டு இருக்கற போலத் தோணுது, நமக்கும் வயசாகத் தொடங்கிருச்சு…”
“என்னது, நமக்கு வயசாச்சா… உன்னைப் பார்த்தா நாலுவயசு பையனுக்கு அம்மான்னு யாராச்சும் சொல்லுவாங்களா, அடுத்த ரவுண்டுல கிஷோருக்கு ஒரு தங்கச்சிப் பாப்பாவைக் கொண்டு வந்துடனும்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன், நீ என்னடான்னா வயசைப் பத்திப் பேசிட்டு…”
“ஹூம், அதானே… ஐயா அதுக்கு தான் அடி போடுறீங்களா, வக்கீல்னு அப்பப்ப நிரூபிச்சிடறீங்க…” என்றவளைக் காதலாய் நோக்கி சிரித்தான் சந்தோஷ்.
“அந்த அளவுக்கு நீ என்னை ஹவுஸ் அரஸ்ட்ல வச்சிருக்க…” சொல்லிக் கொண்டே பளபளப்புடன் இருந்த பெரிய நகைக் கடை முன் வண்டியை நிறுத்தினான்.
இருவரும் உள்ளே செல்ல வழக்கமாய் செல்லும் கடை என்பதால் காஷ் கவுண்டரில் இருந்தவன் பரிச்சயமாய் புன்னகைத்தான்.
“வாங்க சார், என்ன பார்க்கணும்…”
“டயமண்ட் நெக்லஸ் ஆர்டர் கொடுத்திருந்தேன்… ரெடியாகிருச்சுன்னு உங்க முதலாளி வாங்க வர சொல்லி கால் பண்ணிருந்தார், அவர் இல்லியா…?”
“பர்ஸ்ட் புளோர்ல வெயிட் பண்ணுங்க சார்… சாரை வர சொல்லறேன்…” என்றதும் மாடிப்படி ஏறினர். சிறிது நேரத்தில் 
தலையில் வழுக்கையும், வயிற்றில் பணத் தொப்பையுமாய் அங்கே வந்தார் கடை முதலாளி.
“ஹலோ வக்கீல் சார் வாங்க, வணக்கம் மேடம்…”
“அந்த நெக்லஸ் வாங்க வந்தோம், ரெடியாகிருச்சுன்னு போன் பண்ணினீங்களே…”
“ஆமா, கொண்டு வர சொல்லறேன்…” என்றவர் அங்கிருந்த பணியாளிடம் எதையோ சொல்லி எடுத்து வரச் செய்ய கண்ணைப் பறிக்கும் பளிச்சுடன், அழகான வைர நெக்லஸ் கைக்கு வந்தது. அதைக் கண்டதும் ஜமுனாவின் கண்கள் வியப்பில் விரிந்தன.
“வாவ், இது அன்னைக்கு நாம வாங்க வந்துட்டு, வேற யாரோ வாங்கிட்டதா சொன்ன டிஸைன் தானே…”
“அதேதான், உனக்குப் பிடிச்சிருக்கா…”
“ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்குங்க…” என்றவள் ஆசையுடன் அதைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கழுத்துல போட்டுப் பாருங்க மேடம்…” கடை முதலாளி சொல்ல ஆவலுடன் கணவனைப் பார்த்தாள். அந்த நேரத்தில் சந்தோஷின் அலைபேசி ரிங் டோனை வெளியிட எடுத்துப் பார்த்தான். ஆபீசிலிருந்து ஜூனியர் லைனில் வந்தார்.
“பேசிட்டு வந்திடறேன்…” அலைபேசியுடன் நகர்ந்தான்
“என்ன சுந்தர்…”
“சார், கேஸ் விஷயமா உங்களை உடனே பார்க்கணும்னு ஒரு லேடி வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… என்ன சொல்லறது சார்…”
“லேடியா, எந்தக் கேஸ்…”
“புது கேஸ் போலருக்கு… உங்ககிட்ட தான் சொல்ல முடியும்னு சொல்லுறாங்க…”
“இன்னைக்கு வர முடியாது, அவங்களை நாளான்னிக்கு வர சொல்லிடேன்…”
“சொல்லிப் பார்த்தேன் சார், ரொம்ப டென்ஷனா இருக்காங்க, இன்னைக்கே பார்க்கணும்னு சொல்லுறாங்க…”
“ம்ம், அவங்க பேரென்னன்னு கேட்டியா?
“அநாமிகான்னு சொன்னாங்க…”
“அநாமிகா…! புதுப் பெயரா இருக்கே, இப்பவே டைம் ஆறாகப் போகுது, ஓகே! வெயிட் பண்ண சொல்லு, 7 மணிக்குள்ள வந்திடறேன்…”
“சரி சார், சொல்லிடறேன்…” அழைப்பைத் துண்டித்து மனைவியிடம் திரும்பினான். அதற்குள் வைர நெக்லஸை கழுத்தில் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டு புன்னகை முகமாய் கணவனின் பார்வைக்குக் காத்திருந்தாள் ஜமுனா.
“வாவ், உனக்குன்னே செய்ததாச்சே, ரொம்ப அழகா இருக்கு ஜமுனா! வேற எதுவும் பார்க்கறியா, பில் போட்டுடலாமா…?”
“ஒண்ணும் வேண்டாம் போதும்…” என்றவளின் பார்வையில் தெரிந்த சந்தோஷம் நெக்லஸ் எத்தனை பிடித்திருக்கிறது என்பதை உணர்த்த புன்னகையுடன் எழுந்தான்.
கண்கள் தெறித்துப் போகும் அளவுக்கு அதற்கு ஒரு தொகையை பில்லில் எழுதி நீட்ட லட்சங்கள் எனக்கு சாதாரணம் என்பதுபோல் பணத்தை எண்ணி வைத்தான்.
“என்னங்க, நான் எதிர்பார்க்கவே இல்ல! இந்த நெக்லஸ் அன்னைக்கு டெமோல வச்சிருக்கிறதைப் பார்த்து ரொம்பப் பிடிச்சுது, கேட்டப்ப யாரோ ஆர்டர் கொடுத்து செய்து வச்சிருக்கிறதா சொல்லவும் ஏமாத்தமாப் போயிருச்சு… அதையே ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்துட்டீங்க… என் செல்லப் புருஷா…” காருக்குள் கணவனின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள் ஜமுனா.
“லட்ச லட்சமா நான் சம்பாதிக்கிறது உங்களுக்கு வேண்டி தானே, நீ ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்கறதை விட பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும்…”
“ஹாஹா, உங்களுக்கு எது சந்தோஷம்னு எனக்குத் தெரியுமே, உங்க ஆசைப்படியே கிஷோர்க்கு தங்கச்சிப் பாப்பாவை ரெடி பண்ணிடலாம்…” வெட்கத்துடன் அவள் சொல்ல அவன் துள்ளாத குறை தான். இருவரும் சந்தோஷமாய் வீட்டுக்கு வர, ஜமுனாவை கேட்டில் இறக்கிவிட்டு, ஆபீசுக்கு சென்றான்.
இரவு உணவுக்காய் கணவனை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜமுனா, மகனுக்கு சாப்பிடக் கொடுத்து உறங்க அனுப்பினாள்.
“ஒன்பது மணி ஆச்சு, இன்னும் இவரைக் காணமே…” யோசனையுடன் அலைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
“அச்சோ! போன் வேற சார்ஜ் இல்லாம ஆப் ஆகிருச்சு போலருக்கே… லான்ட்லைனுக்கு கால் பண்ணுவோம்…”
லான்ட்லைனுக்கான எண்ணை அலைபேசியில் ஒப்பிவிட்டுக் காத்திருக்க மணி அடித்து நிற்கும் வேளை எடுக்கப்பட்டது.
“ஹலோ, நான் ஜமுனா பேசறேன்… வக்கீல் இருக்காரா…” அவளது கேள்விக்கு எதிர்ப்புறம் சற்று மௌனித்துவிட்டு பதில் கூறியது.
“வக்கீல் போயிட்டார்…” சொல்லிவிட்டு சட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட அதிர்ந்தாள்.
“யார் அது, ஏன் இப்படி சொன்னாங்க, குரல் புதுசா இருக்கே…” கரகரவென்ற புதிய குரலை அடையாளம் காண முடியாமல் திகைத்தவள் மீண்டும் அழைக்க அது என்கேஞ்டு டோனை வெளியிடவும் மனதுக்குள் சட்டென்று குளிர் பாய்ந்தது.
சுந்தரின் எண்ணை அவசரமாய் அலைபேசியில் தேடி அழைக்க, நான்கைந்து ரிங்கில் அவன் குரல் கேட்டது.
“ஹலோ, சொல்லுங்க மேடம்…!”
“சுந்தர், எங்கிருக்கே…? அவர் வீட்டுக்கு கிளம்பிட்டாரா…?”
“சார் ஆபீசுல தான் இருந்தார், என்னை வீட்டுக்குப் போக சொன்னார்னு கிளம்பிட்டேன் மேடம்… என்னாச்சு…?”
“சுந்தர், அவர் போனுக்கு கூப்பிட்டா சுவிட்ச் ஆப் வருதுன்னு லான்ட்லைன்க்கு கால் பண்ணேன், யாரோ எடுத்து வக்கீல் போயிட்டார்னு சொல்லுறாங்க, எனக்கென்னவோ பயமா இருக்கு, கொஞ்சம் ஆபீசுக்குப் போயி பார்க்கறியா…” பதட்டத்துடன் கூறினாள்.
“அப்படியா சொன்னாங்க, புது கிளையன்ட் ஒருத்தரோட தான் பேசிட்டு இருந்தார்… சரி, நீங்க பதறாதீங்க, நான் பக்கத்துல தான் இருக்கேன், பார்த்திட்டு கூப்பிடறேன்…” சொன்னவன் வண்டியைத் திருப்பி அலுவலகத்துக்கே விட்டான்.
ஆனால் சிறிது நேரத்தில் ஜமுனாவின் காதை வந்தடைந்த செய்தி சந்தோஷமாய் இல்லை.
சுந்தர் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்த அவர்களின் அலுவலகத்துக்கு சென்று பார்க்கும்போது சந்தோஷ் மேசையின் மீது தலை கவிழ்த்து கிடக்க, வேறு யாரும் அறையில் இல்லை.
அழைத்து நோக்கி எழாததால் அசைத்து நோக்கியவன் அதிர்ந்தான். உடம்பில் எல்லா உறுப்புகளும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டிருக்க, உடம்பில் எந்தக் காயமும் இன்றி சந்தோஷ் மரணித்திருந்தான்.

Advertisement