Advertisement

அத்தியாயம் – 19

மகதியின் அருகமர்ந்து கண்ணீருடன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார் மாலதி.

“எப்படி ஓடியாடிட்டு இருந்தவ, இப்படி அவளோட தேவையைக் கூடப் பார்த்துக்க முடியாம முடங்கிப் போயிட்டாளே…” மனம் வேதனையில் விம்மியது. சாப்பிட்டு முடித்ததும் மாத்திரை கொடுத்துப் படுக்க வைத்தார்.

பிரபஞ்சனைப் பற்றி தெரிந்தது முதல் அவன் கொடுத்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில்லை. நாராயணன் துணையுடன் வேறு சிறந்த மருத்துவர் மூலமாய் பிரகாஷ்க்கு தெரியாமலே மகதிக்கு சிகிச்சை கொடுக்கத் தொடங்கி இருந்தனர்.

வாசலில் கார் சத்தம் கேட்டதும் வாசலுக்கு வந்தார் மாலதி.

நாராயணனுடன், கனகராஜ் தயக்கத்துடனே இறங்கினார்.

“வாங்க கனகராஜ்…”

“வணக்கம் மா…” இவரைக் கண்டதும் வணங்கினார்.

“உக்காருங்க, எப்படி இருக்கீங்க…”

“நல்லாருக்கேன்னு சொல்ல முடியாது, இருக்கேன்…” அவர் சொல்லவும் ஒரு அவஸ்தையான மௌனம் நிலவியது.

“கடந்ததெல்லாம் போகட்டும்… இனியாச்சும் உங்க வாழ்க்கை நல்லா அமையணும்…”

“இனி எனக்குன்னு என்ன இருக்கு மா…”

“போன எதையும் மீட்க முடியாது, ஆனாலும் நமக்கான வாழ்க்கையை வாழத்தான செய்யணும்…”

கனகராஜ் அமைதியாய் இருப்பதை பார்த்தவர், “நீங்க நம்ம கம்பெனிலயே வேலைக்கு ஜாயின் பண்ணிக்கலாம். பசியோட வந்திருப்பீங்க, உக்காருங்க… சாப்பாடு எடுத்து வைக்க சொல்லறேன்…” என்றவர்,

“நாராயண், அமுதா கிச்சன்ல இருக்கா… ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்க…” என்றார்.

“சரிங்கம்மா…” என்ற நாராயணன் கனகராஜுடன் நகர்ந்தான்.

இருவரும் சாப்பிட்டு வந்தனர்.

“நடந்த எல்லாத்தையும் நாராயணன் சொல்லிருப்பான்னு நினைக்கறேன்…”

“சொன்னார்மா… தேவி மேடம் அவசரப்பட்டு இப்படிப் பண்ணிருக்க வேண்டாம், என்னை, மித்ரன், அஸ்வினை விசாரிச்ச போலீஸ், அவங்க நாராயணன் பேரை சொல்லியும் ஏன் இன்னும் விசாரணை பண்ண வரலைன்னு தான் புரியலை, கொஞ்சம் டவுட்டா இருக்கு…” கனகராஜ் சொன்னதைக் கேட்ட நாராயணன் சிரித்தான்.

“யாரு சொன்னா அவங்க விசாரிக்கலைன்னு… இப்ப என் ஜாதகத்தையே தோண்டி எடுத்திருப்பாங்க… இனி நான் அரஸ்ட் ஆனாலும் எனக்குக் கவலையில்லை… அந்த மிருகங்களைக் கொன்னு பழி தீர்த்தாச்சு… அது போதும்…” என்றவனின் கண்ணில் வலி தெரிந்தது.

“பேசாம நீங்க எங்காச்சும் வெளியூர் போயிடுங்க… இங்க எப்படியாச்சும் நான் சமாளிச்சுக்கறேன்…”

“இல்ல மா, என்னால அது முடியாது… இந்த விசாரணை, தண்டனை எல்லாம் என்னோட முடியட்டும்… அனேகமா போலீஸ் என்னை ஸ்மெல் பண்ணிருப்பாங்க…” என்றவனை அவர்கள் வேதனையுடன் நோக்கினர்.

“உங்க ரெண்டு பேரையும் துணையில்லாம விட்டுப் போறது தான் கஷ்டமாருக்கு… கனகு அண்ணனுக்குன்னு யாரும் இல்லை, அவர் எதுக்கு வெளிய தங்கணும், உங்ககூட இங்கயே இருக்கட்டுமே…”

“அது சரியாகாதுப்பா… இந்த உலகத்தோட பார்வைக்கு இவர் ஒரு குற்றவாளி… அதும் நம்ம வீட்டுலயே தங்க வைக்கிறது சரியா இருக்காது…” என்றவர் ஒரு கவரை நீட்டினார்.

“கனகராஜ், இதுல கொஞ்சம் பணம் இருக்கு… இப்போதைக்கு லாட்ஜ்ல தங்கிட்டு ஒரு நல்ல வாடகை வீடாப் பாருங்க… கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்திட்டு எப்பத் தோணுதோ நம்ம கம்பெனில ஜாயின் பண்ணிக்கங்க…”

“ஹூம்… சரிங்கம்மா, சின்னம்மா எப்படி இருக்காங்க…”

“இன்னும் பைத்தியம் ஆகாம இருக்கா… நாராயணனும், தேவியும் மட்டும் சரியான நேரத்தில் உதவலேன்னா அவளை உயிரோடவே பார்க்கறது கஷ்டமா இருந்திருக்கும்…”

“ம்ம்… அவங்களைப் பார்த்துக்கங்க மா, நான் கிளம்பறேன்…”

“கனகராஜ், ஒரு நிமிஷம் இருங்க…” என்றவர் இந்த மொபைலை வச்சுக்கங்க, சிம் போட்டிருக்கு, எதுவா இருந்தாலும் கால் பண்ணத் தயங்காதீங்க…”

“சரிம்மா, நான் வரேன்… நாராயண், வர்றேன் பா…” அவர் விடை பெற்றுக் கொள்ள, பெருமூச்சுடன் அவுட்ஹவுஸில் இருந்த தனது அறைக்கு சென்றான் நாராயணன். மனதுக்குள் பழைய நினைவுகள் காட்சிகளாய் விரிந்தன.

“காமேஷ்…!” தம்பியைப் பற்றி யோசிக்கையில் மனம் கனிந்து கண்ணில் நீர் கசிந்தது. காமேஷ், நாராயணனின் தம்பி.

கொளத்தூர் கிராமம்.

“அம்மா, நான் கிளம்பறேன்…” பெட்டி படுக்கைகளுடன் வெளிநாடு செல்ல புறப்பட்டான் மூத்த மகன் நாராயணன்.

“ம்ம்… பார்த்து பத்திரமா இருய்யா, நேரம் கிடைக்கும்போது போன் போடு… வேலைன்னு ஓடிட்டு இருக்காம உடம்பையும் பார்த்துக்க…” இதற்கு முன்னே பலமுறை சொல்லிவிட்ட பத்திரத்தை திரும்பப் படித்துக் கொண்டிருந்த அன்னையை நோக்கி சிரித்தான் நாராயணன்.

“அம்மா, நான் என்ன சின்னப் புள்ளையா… பார்த்துக்கறேன் மா, நீங்க உங்க உடம்பைப் பார்த்துக்கங்க…”

“அம்மாவை நான் நல்லாப் பார்த்துப்பேன் அண்ணா…” புன்னகையுடன் சொன்னான் இளையவன் காமேஷ்.

“ம்ம்… சிங்கக்குட்டிடா தம்பி, இவன் பார்த்துக்குவாங்கற தைரியத்துல தான் நான் கிளம்பறேன்…” என்றான் அவனது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொண்டே.

கணேசன் வாத்தியார், ராசாத்தி தம்பதியரின் பிள்ளைகள் தான் நாராயணனும், காமேஷும். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதற்கேற்ப இருவருக்கும் படிப்பு வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.

மூத்த மகன் நாராயணன் எப்படியோ கஷ்டப்பட்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்தான். டிரைவிங்கில் விருப்பம் இருந்ததால் பழகிக் கொண்டு டூரிஸ்ட் வேனில் டிரைவர் வேலைக்கு செல்லத் தொடங்கினான். இளையவன் காமேஷ் பனிரெண்டாவது படிக்கும் நேரத்தில் தந்தை கணேசன் ஹார்ட் பிரச்சனையில் உயிரை விட குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு நாராயணின் தலையில் விழுந்தது. தந்தையின் சிகிச்சைக்காக வாங்கிய கடனும் நிறைய இருக்க வெளிநாடு செல்ல முடிவெடுத்தான்.

டூரிஸ்ட்களுடன் பழக்கம் இருந்ததால் அவர்கள் உதவியுடன் அபுதாபியில் டிரைவர் வேலை கிடைத்தது.

“காமேஷ்… அண்ணனுக்கு தான் படிப்பு வரல, நீயாச்சும் டிகிரி படிக்கலாம்ல கண்ணா…?” அம்மாவின் கேள்விக்கு முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான் காமேஷ்.

“அண்ணன் எவ்வழியோ, தம்பி அவ்வழி… நானும் டிரைவிங் படிச்சிட்டு லேட்டஸ்ட் காரெல்லாம் ஓட்டப் போறேன்… எனக்கும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனதும் நாம ரெண்டு பேரும் அண்ணனோடவே வெளிநாடு போயிடலாம் மா…” என்ற மகனை பாவமாய் பார்த்தார் ராசாத்தி.

“என்னமோ போடா, உன் அப்பா விருப்பப்படி ஒருத்தன் கூட காலேஜுக்குப் போகலியே…”

“அம்மா காலேஜுக்குப் போனா தான் பெரிய படிப்புப் படிக்கணுமா என்ன… அப்பா எங்களுக்கு அதைவிட நல்ல குணத்தை சொல்லிக் கொடுத்திருக்கார்… தப்புன்னு தோணினா தட்டிக் கேட்கவும் செய்வோம்… நல்லது கண்ணுல பட்டா கொண்டாடவும் செய்வோம்… வாழ்க்கைக்கு இந்தப் படிப்பு போதும் மா…”

“இப்படிப் பேசியே என் வாயை அடைச்சிடு…” சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார் ராசாத்தி.

சரியாய் பதினெட்டு வயது முடிந்ததும் லைசன்ஸ் வாங்கியவன் முதலில் அந்த ஊரிலேயே ஒரு கம்பெனியில் டிரைவராய் செல்லத் தொடங்கினான். அங்கு சம்பளம் குறைவாக இருக்கவே பேப்பரில் வந்த விளம்பரம் பார்த்து பிரகாஷின் டிரைவராய் இரண்டு வருடம் முன்பு வேலைக்கு சேர்ந்தான். அவர்கள் அவுட்ஹவுஸில் தங்கிக் கொண்டான்.

சுறுசுறுப்பாய் எல்லா வேலைகளையும் செய்யும், மகதியின் உடல்நிலையைப் பற்றி நிறையவே கவலைப்படும் இருபது வயது காமேஷை மாலதிக்கும் பிடித்தது.

அவனை நம்பி மகதியைக் கூட விட்டுப் போகும் அளவுக்கு அந்த வீட்டில் ஒருவனாய் ஒரு வருடத்தில் மாறி இருந்தான் காமேஷ்.

மகதியை கிளினிக்கிற்கு செக்கப் அழைத்துச் செல்கையில் மட்டும் பிரகாஷ் தானே அழைத்துச் செல்வான்.

“காமேஷ், அம்மாவைப் பார்க்க ஈவனிங் ஊருக்குக் கிளம்பறேன்னு சொன்னியே, எத்தன மணிக்கு…?” கார் துடைத்துக் கொண்டிருந்தவனிடம் கேட்டார் மாலதி.

“சாருக்கு சாயந்திரம் ஏதோ ரிஷப்ஷனுக்குப் போகணும்னு சொன்னார் மா… நாளைக்கு விடியக்காலை பஸ்சுக்குப் கிளம்பிக்கறேன்…”

“ம்ம்… நாளான்னிக்கு வந்திருவ தான…”

“வந்திருவேன் மா… மகதி மேடம்க்கு இப்படி இருக்குன்னு அம்மாட்ட சொன்னேன்… அதான், கோவிலுக்கு நேர்ந்துகிட்டு பூஜை பண்ணி பிரசாதம் எடுத்து வச்சிருக்கேன், வந்து வாங்கிட்டுப் போக சொல்லுச்சு… இல்லேன்னா நான் பொங்கலுக்கு தான் போகலாம்னு இருந்தேன்…”

“சரிப்பா, மருத்துவத்தால சரியாகாததை என் பொண்ணுக்கு அந்தக் கடவுள் மனசு வச்சாலாவது மாறட்டும்…” சொன்னவர் உள்ளே சென்று விட்டார்.

“ச்சே… மகதி மேடத்தைப் பார்க்கவே கஷ்டமாருக்கு… சொந்தமா எதையும் யோசிக்கக் கூட முடியாம இப்படி பொம்மை போல ஆயிட்டாங்களே…” அவனது இளகிய மனது மகதியின் நிலை எண்ணித் தவித்தது.

மாலையில் பிரகாஷ் நேரமே வீட்டுக்கு வந்துவிட அவனுடன் ரிஷப்ஷனுக்குக் கிளம்பினான்.

அது ஒரு பிசினஸ் புள்ளியின் மகளின் கல்யாண ரிசப்ஷன்… காணும் இடமெல்லாம் பண சொட்டையும், பணத் தொப்பையுமாய் செழிப்பான மனிதர்கள். டாக்டர் பிரபஞ்சனும் அந்தப் பார்ட்டிக்கு வந்திருந்தான். ஒட்ட வைத்த செயற்கைப் புன்னகையுடன் இருவரும்  மணமக்களை வாழ்த்தி காமிராவுக்குப் புன்னகைத்து தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அது பார் அட்டேச்டு ஹால் என்பதால் மாடியில் ரிசப்ஷன் முடிந்து கீழே ஒதுக்குப்புறமாய் இருந்த பாருக்கு சென்று வேண்டியவர்கள் மதுவை அருந்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரகாஷும், பிரபஞ்சனும் உணவை முடித்துக் கொண்டு பாருக்குள் நுழைந்தனர்.

அழகழகான மதுக் குப்பிகளில், பொன் வண்ண நிறத்தில் அடைந்து கிடந்த மதுவைக் குடிக்க ரிசப்ஷன் ஹாலை விட அதிகக் கூட்டம் தெரிந்தது. தெரிந்த முகங்களை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்துக் கொண்டே ஓரமாய் இருந்த மேசை ஒன்றுக்கு நகர்ந்தனர்.

“என்ன பிரகாஷ், போன்ல பேசும்போது நாளைக்கு என்ன நாள்னு நினைவிருக்கான்னு கேட்ட, எனக்கு எதுவும் நினைவு இல்லையே, என்ன நாள்…?”

“என்ன டாக்டர் இப்படி பொசுக்குன்னு நினைவில்லன்னு சொல்லிட்ட, அதெல்லாம் நம்ம வாழ்க்கைல மறக்கக் கூடிய நாளா…? நல்லா யோசிச்சுட்டு பதில் சொல்லு…” அதற்குள் பார்மேன் என்ன வேண்டுமென்று கேட்க அவர்களுக்கு வேண்டிய மதுவை ஆர்டர் செய்தனர்.

“ஹூம்… என்னன்னு தெரியல மேன், நீயே சொல்லிடு…”

“நாளைக்கு பிரகதி இறந்த நாள்…” பிரகாஷ் சொல்ல, கையில் மொபைலுடன் உள்ளே வந்த காமேஷ் காதிலும் விழுந்தது.

Advertisement