Advertisement

அத்தியாயம் – 18

போலீஸ் ஸ்டேஷனில் அஜய் யோசனையுடன் அமர்ந்திருக்க அவன் முன்னே கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார் கிருஷ்ணா.

“என்ன அஜய் சார், குற்றவாளியை நெருங்கிட்டோம்னு நினைக்கறப்ப அந்த தேவி பாய்சன் குடிச்சிட்டாங்க…? சரி, உடனே ஹாஸ்பிடல் கொண்டு போனதால டாக்டர் காப்பாத்திடுவார்னு பார்த்தா ஹார்ட் அட்டாக் வந்திருச்சு…?”

“ம்ம்… விதி அப்படிதான்னு இருக்கும்போது டாக்டரால மட்டும் எப்படி மாத்த முடியும்… அவங்க இறுதிக் காரியத்துக்கு மித்ரன், அஸ்வினை அனுப்பிட்டீங்களா…?”

“நீங்களே சொந்த ஜாமீன்ல அனுப்ப சொல்லிட்டீங்க, பார்மாலிட்டீஸ் முடிச்சு அனுப்பிட்டோம் சார்…”

“ம்ம்…”

“எனக்கென்னவோ தேவி கொடுத்த வீடியோ வாக்குமூலமும், இந்தப் பசங்க விசாரணைல சொன்ன விஷயமும் ஒண்ணுக்கொண்ணு முரணாத் தெரியுது…” கிருஷ்ணா சொல்ல புன்னகைத்தான் அஜய்.

“இன்னைக்கு தான கனகராஜ் ரிலீஸ் ஆகறார்…?”

“ஆமாம் சார்…”

அவரை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிட்டிங்களா…?”

“கனகராஜ் வெளில வந்த அடுத்த நிமிஷத்தில் இருந்து நம்மாளுங்க பார்வைக்குள்ள தான் இருப்பார்…”

“ம்ம்… தட்ஸ் குட்…”

“சார், அவரே செய்யாத குற்றத்துக்கு இத்தனை வருஷம் ஜெயில்ல தண்டனை அனுபவிச்சிட்டு வர்றார்… அவரை எதுக்கு வாட்ச் பண்ணனும், அவர் இந்தக் கொலைகளைப் பண்ணி இருப்பார்னு டவுட் பண்ணறீங்களா…?”

“கேஸ்ல முழுசா விசாரணை முடியுற வரைக்கும் எல்லார் மேலயும் நம்ம கவனம் இருந்துட்டே தான் இருக்கணும்…”

“ஷ்யூர் சார்…”

“ஓகே, நான் வீட்டுக்கு கிளம்பறேன், ஏதாச்சும் அப்டேட் இருந்தா கால் பண்ணுங்க…”

“ஓகே சார்…” கிருஷ்ணா அவனுக்கு சல்யூட் அடித்து தளர அஜய் கிளம்பினான்.

மனதுக்குள் அநாமிகா சம்மந்தப்பட்ட கொலைகளும் அதில் சம்மந்தப்பட்ட நபர்களும் மனதுள் வலம் வந்தனர்.

தொலைக்காட்சியில் நயன்தாராவின் கொலையுதிர் காலம் மூவி ஓடிக் கொண்டிருக்க, அதில் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. புல்லட் சத்தத்தைத் தொடர்ந்து முன் கேட் திறக்கும் ஓசை கேட்கவே எழுந்து வந்தவளின் முகம் கணவனைக் கண்டதும் திகைத்து மலர்ந்தது.

“அடடா, ஒரு நிமிஷம் அப்படியே இருங்க…” சொல்லிக் கொண்டே வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தவளை செல்லமாய் முறைத்தான் அஜய்.

“ஏய் லொள்ளி, என்ன..? வானத்துல வெள்ளைக் காக்கா பறக்குதான்னு பார்க்கறியா…?”

“ஆமா, உலக அதிசயமா இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கீங்களே… இது நிசம் தானா…?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவனைக் கிள்ள, அலறினான்.

“சரியான ராட்சசி, நான் ஸ்டேஷனுக்கே கிளம்பறேன்…” சொன்னவனை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் சோபாவில் தள்ளிவிட்டு தானும் அமர்ந்தாள்.

“என்ன அர்ச்சு, இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க…?” குறுகுறுவென்ற பார்வையுடன் கேட்டவனை முறைத்தாள்.

“ஆமா, கொலையுதிர்காலம் பார்த்திட்டு அடுத்து யாரைப் போட்டுத் தள்ளலாம்னு கொலை மார்க்கமா இருக்கேன்… ஆளப்பாரு, குடிக்க எதுவும் கொண்டு வரட்டா…?”

“ஹூம்… சில்லுன்னு மோர் கொடு…”

“கொண்டு வரேன்…” என்றவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அவள் நீட்டிய மோரை வாங்கிக் கொண்டவன் அருகே அமர்ந்த அர்ச்சனா டீவி திரையில் கண்ணைப் பதித்தாள்.

அதில் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான ஒருத்தன் அடுக்களையில் வேலையில் இருந்த குண்டுப் பெண்மணி ஒருத்தியின் முதுகில் ஈட்டி போன்ற ஆயுதத்தால் குத்தித் தூக்க, அவளுக்குப் பின்னில் சற்றுத் தள்ளி அமர்ந்து காதில் இயர் போனுடன் ஓவியம் வரைந்து கொண்டிருந்தாள். நயன்தாராவை அப்பெண்மணி அலறி அழைக்க முயல அவளுக்கு கேட்கவில்லை.

“அடக் கடவுளே, கொலைகாரன் அந்தம்மாவ இப்படிக் குத்திக் கொன்னுட்டு இருக்கான், இவ இயர் போனை மாட்டிகிட்டு கேக்காம உக்கார்ந்திருக்காளே… இதுக்கு தான் நான் இயர் போன் எல்லாம் யூஸ் பண்ணறதில்ல…”

“நல்ல விஷயம் தான்… இன்னைக்கு என்ன சமையல்…?”

“லஞ்சுக்கு நீங்க வர மாட்டீங்களே, எனக்கு தயிர் சாதம் போதும்னு நினைச்சு எதுவும் செய்யலை, உங்களுக்குப் பிடிச்ச காளான் பிரியாணியை ரெடி பண்ணிடறேன்…”

சொன்னவள் வெங்காயத்தை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து நறுக்கத் தொடங்க அஜயும் டீவியை ஆப் பண்ணிவிட்டு அவளுக்கு அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தான்.

“பாவங்க அந்த தேவி, மனசு எவ்ளோ வெறுத்துப் போயிருந்தா புருஷனையே கொல்லத் துணிஞ்சிருப்பா… சட்டம் கொடுக்காத தண்டனையை அவ கொடுத்திருக்கா, இந்த மாதிரி ஒருத்தனைக் கொன்னுட்டு செத்ததுக்கு அவ சொர்கத்துக்கு தான் போவா…”

“ம்ம்…”

“தேவி பிரபஞ்சனை எப்படிக் கொன்னாங்கன்னு  சொன்னிங்க, பிரகாஷைக் கொன்னதைப் பத்தி சொன்ன வீடியோ கேக்கலியே…” கதை கேட்கும் ஆர்வம் அவளிடம்.

“கமிஷனரை விட நீதான்டி அதிகமா கேள்வி கேக்கற…”

“ப்ளீஸ், சொல்லுங்க… எனக்கு தான் கிரைம் ஸ்டோரி, இன்வெஸ்டிகேசன் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ல…” கொஞ்சலாய் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தான்.

“நீயே பாரு…” என்றவன் மொபைலில் பிளே செய்தான்.

“அடுத்து மாலதியோட டிரைவர் நாராயணன் உதவியால பிரகாஷ்க்கு குறி வச்சோம்… அவன் எந்த டைம்ல, எங்கே, என்ன பண்ணுவான்னு தெரிஞ்சுகிட்டு காலைல வாக்கிங் போற பெசன்ட் நகர் பீச்சை செலக்ட் பண்ணோம்… அவனுக்கு மித்ரனைத் தெரியாததால பெண் வேஷம் போட்டு அநாமிகாங்கற பொண்ணா மாத்தி பேச விட்டோம்… ரெண்டு மூணு பசங்களை செட் பண்ணி வம்பிழுக்கிற போல செய்து பிரகாஷ் கவனத்தை ஈர்த்து அவனோடவே கார்ல கிளம்பிப் போனான்… போற வழியில பிரகாஷ் கழுத்துல கத்தியை வச்சு வண்டியை நிறுத்தி அஸ்வின், நான், நாராயணன் ஏறிகிட்டோம்… அப்பாங்கற புனிதமான பேரையே அசிங்கப்படுத்தின அவனுக்கு அன்னைக்கு முழுதும் மயக்க மருந்து கொடுத்து, ராத்திரி முட்டுக்காடு கொண்டு போயி, உடம்புல அங்கங்க இரும்புக் கம்பியால குத்தி ரத்தம் வழிய விட்டு தீர்த்துக் கட்டினேன்… இந்த ரெண்டு கொலைகளையும் செய்த என்னை போலீஸ் நிச்சயம் கண்டு பிடிச்சிடும்னு எனக்குத் தெரியும்… மத்த மூணு பேரும் அவங்களைக் கொல்ல எனக்கு உதவினாங்களே ஒழிய, கொலை பண்ணலை… அதனால இந்த சமூக துரோகிகளைக் கொல்ல உதவி செய்த அவங்களை மன்னிச்சு சின்னதா மட்டும் தண்டனை கொடுத்தாப் போதும்… இதுவே என்னோட இறுதி ஆசைன்னு சொல்லிக்கறேன்… இந்தக் கொலைகளைப் பண்ணினதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை… சட்டம் கொடுக்காத தண்டனையை நாங்க கொடுத்திருக்கோம்னு பெருமைப் படறேன்… நீங்க இந்த வீடியோவைப் பார்க்கும்போது நிச்சயம் நான் உயிரோட இருக்க மாட்டேன்… குட் பை…” என்றதுடன் வீடியோ முடிந்து போக வருத்தமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அஜயின் விரல்கள் வரிசையாய் அந்தப் பெயர்களை எழுதிக் கொண்டிருந்தது.

“ப்ச்… ரொம்பப் பாவமா இருக்குங்க… அவங்க நல்லதைத் தானே பண்ணிருக்காங்க, கடைசி ஆசையை நீங்க நினைச்சா நிறைவேத்தலாம்ல…” என்றவள் அவன் யோசனையுடன் எதையோ எழுதுவதைக் கண்டு எட்டிப் பார்த்தாள்.

Aswin –  A

Narayanan – Na

Mithran – Mi

Kangaraj – Ka

“என்னங்க இது, A for Apple னு எழுதுற போல A அஸ்வின், Na நாராயணன், Mi மித்ரன், Ka கனகராஜ் னு ஒவ்வொரு முதல் எழுத்துலயும் கோடு போட்டு எழுதி வச்சிருக்கீங்க…”

“ம்ம், ஏன்னா இந்த நாலு பேரு தான் அந்த அநாமிகா…!!” 

அதைக் கேட்டதும் ஆச்சர்யத்தில் புருவத்தைத் தூக்கினாள்.

“என்னங்க சொல்லறீங்க, அநாமிகா இவங்க நாலு பேருன்னா இதுல தேவி பேரு இல்லையே… அவங்க தான ரெண்டு பேரயும் கொன்னதா வாக்குமூலம் கொடுத்திருக்காங்க…”

அவள் கேள்விக்கு ஒரு நிமிடம் அமைதியாய் இருந்த அஜய், “அவங்க சொன்னதுல பாதி பொய், பாதி உண்மை…” எனவும் திகைப்புடன் பார்த்தாள் அர்ச்சனா.

“என்னங்க, எனக்கு சரியாப் புரியலயே…”

“எனக்குப் புரிஞ்சிடுச்சு, லஞ்ச் கேன்சல்… நான் கிளம்பறேன்… நீ தயிர் சாதமே சாப்பிட்டுக்க…” என்றவன் புல்லட் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் எழுதி வைத்ததை எடுத்து மறுபடியும் உன்னிப்பாய் ஏதாவது புரிகிறதா எனப் பார்த்தாள் அர்ச்சனா.

Advertisement