Advertisement

அத்தியாயம் – 17

வீடியோ ஓடத் தொடங்கியது.

“கனகராஜ் எப்படி இந்தக் கேஸ்ல வந்தார்னு எங்களுக்குப் புரியல, அதுக்கான விளக்கம் தேடி தான் அவர்கிட்ட போனோம்… மகளோட ஆப்பரேஷனுக்குப் பணம் கேட்க பிரகாஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தவர் அங்கே பிரகதிக்கு நடந்த கொடுமையைப் பார்த்து ஷாக் ஆயிட்டார்… அந்தப் பிஞ்சு இதைத் தாங்கிக்க முடியாம தொடக்கத்துலயே செத்துப் போயிருச்சு… கனகராஜ் இதைப் பத்தி வெளிய சொல்லிடுவாரோன்னு பயந்த அந்த பிசாசுங்க ரெண்டும் பழியை இவர் மேல போட்டு கூட்டுக்கு வக்கீல் சந்தோஷுக்கு பணத்தை வாரிக் கொடுத்து கேஸை ஸ்ட்ராங் பண்ணிகிட்டாங்க… கனகராஜ் கிட்ட பழியை ஒத்துகிட்டா பொண்ணு ஆபரேஷனுக்கு பணம் தர்றோம்னு சொல்ல, அவரும் வேற வழியில்லாம அமைதியா ஒத்துகிட்டார்… ஆனா, எந்த மகளுக்காக அவர் இந்தப் பழியை சுமந்தாரோ அந்தப் பொண்ணும் அவர் மனைவியும் அவமானம் தாங்க முடியாம தூக்குல தொங்கிட்டாங்க…” வருத்தத்துடன் நிறுத்தி தொடர்ந்தாள் தேவி.

“சுபாவோட கல்யாணத்துக்கு ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு ஓடியாடி எல்லாத்தையும் செய்துட்டு இருந்தவரைப் பார்க்க ஆத்திரமா வந்துச்சு… அப்பதான் இவன் பிரகாஷ் கிட்ட போன்ல சொன்னதைக் கேட்டேன்…”

“மகதியோட சொத்தெல்லாம் சீக்கிரமே எழுதி வாங்கிடு, பிரகதி விஷயம் தெரிஞ்சதால இத்தன நாள் போதை மாத்திரை கொடுத்து அவளை யோசிக்கவே விடாமப் பண்ணி பைத்தியம் போல மாத்திட்டோம்… அந்த மெடிசினால அவ மூளையும், நரம்பும் தன்னோட இயக்கத்தை கொஞ்ச கொஞ்சமா நிறுத்திட்டு இருக்கு… இன்னும் கொஞ்ச நாள் இதையே கண்டியூ பண்ணினா அப்புறம் அவ தானாவே மேலோகம் போயி சேர்ந்திடுவா…” சிரித்தவன் தொடர்ந்தான்.

“சுபாக்கு கல்யாணம் முடிஞ்சு போனாலும் அவ குடுமி என்கிட்டதான் இருக்கு, உடம்புல ஒட்டுத் துணி இல்லாம அவ குளிக்கிற வீடியோவைக் காட்டினா தானா சம்மதிச்சிட்டுப் போறா, இப்ப வீட்ல தேவி இருக்கிறதால எதுவும் பண்ண முடியல… சொத்தெல்லாம் அவ பேருல இருக்கிறதால கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிருக்கு…” தேவி வந்ததை கவனிக்காமல் பிரபஞ்சன் பால்கனியில் நின்று மெல்லிய குரலில் பிரகாஷிடம் சொல்லிக் கொண்டிருக்க அதிர்ந்து போனாள் தேவி.

“அவனைப் பற்றிய கேவலங்களை தெரிந்து வெறுப்பும், வேதனையுமாய் இருந்த எனக்கு இந்த விஷயங்களைக் கேட்டதும் உடனே அவனைக் கொல்லணும்னு ஆத்திரம் வந்திருச்சு… சுபா கல்யாணம் முடிந்து பேசிக்கலாம்னு விட்டு வைத்திருந்த எனக்கு அப்பவே அவனைக் கொல்ல மனசு துடித்தது… ஆனாலும் அடக்கிக்கிட்டு பொறுமையா எதுவும் தெரியாத போல கீழ போயிட்டேன்…”

“பாவம் அந்த மகதி, பொண்ணையும் பறிகொடுத்து தன்னையும் இவங்க மருந்துக்கு பறி கொடுத்துட்டு இருந்தா, அவளை காப்பத்தனும்னு தோணுச்சு… பிரகாஷ் இல்லாத நேரத்துல அவங்க வீட்டுக்குப் போயி மகதியோட அம்மா மாலதியைப் பார்த்து நடந்ததை சொன்னோம்… பேத்திக்கும், மகளுக்கும் நடந்த கொடுமையை நினைச்சு கொதிச்சுப் போயிட்டாங்க… இந்த மாதிரி அயோக்கியனுங்களை விட்டு வைக்கக் கூடாது… உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்ணறேன்னு சொல்லிட்டாங்க… நாங்க பிளான் பண்ணோம்…”

“சாதாரண சமயத்தை விட சுபா ரிசப்ஷன் டைம்ல பிரபஞ்சனைப் போட்டுத் தள்ளினா எங்க மேல சந்தேகம் வராதுன்னு நினைச்சோம்… அநாமிகா பேர்ல நான்தான் ரிசப்ஷன்க்கு கால் பண்ணி அவனை வரவழைச்சேன்…” அந்த காட்சியை அப்படியே கூறினாள்.

ரிஷப்ஷனில் யோசனையுடன் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்.

“அநாமிகா எப்படி கால் பண்ண முடியும்..? அவளை தான் அஞ்சு மாசம் முன்னாடியே ஆக்சிடன்ட் பண்ணி கொன்னாச்சே, அப்புறம் இது யாரு…?” குழம்பினான்.

“டாக்டர் சார், கால் பார் யூ…” ரிசப்ஷனிஸ்ட் பெண்ணின் கொஞ்சும் குரலில் நிமிர்ந்தவன் அவள் நீட்டிய ரிசீவரை வாங்கிக் கொண்டு யோசனையுடனே ஹலோவினான்.

“ஹலோ, டாக்டர் பிரபஞ்சன் ஹியர்…!”

“என்ன டாக்டர், பண்ணறதெல்லாம் பண்ணிட்டு குடும்பத்தோட கல்யாணத்துல ஜாலியா இருக்கியா…?” எதிர்ப்புறம் கேட்ட கரகர பெண் குரலில் குழம்பினான்.

“ஹலோ, யார் நீங்க..? எதுக்கு என்னோட பேசணும்னு சொன்னிங்க…?”

“என்ன டாக்டர், அதுக்குள்ள என்னை மறந்துட்டியா…? நான்தான் அ..நா..மி..கா…” அந்தக் குரலும், பெயரும் சில்லென்று இதயத்துள் இறங்கியது.

“எ..என்ன…? எப்பவோ செத்துப் போனவ பேரை வச்சு என்னை மிரட்டப் பார்க்கறியா…” சுற்றிலும் பார்வையை ஓட்டிக் கொண்டே மெல்லிய குரலில் பேசினான்.

“சேச்சே, நீ என்னைக் கொன்னுட்டேங்கற தைரியத்துல பேசற… ஆனா நான் சாகலியே, உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேச தான் கால் பண்ணேன்… நீ நம்பலேன்னா போலீஸ்க்கு அனுப்பிடறேன்…” எனவும் அதிர்ந்தான்.

“எ..என்ன முக்கியமான விஷயம்…” நீ சொல்லறதை எப்படி நம்ப முடியும்…? நான் நம்பமாட்டேன்…”

“நம்பித்தான் ஆகணும், உனக்கு நம்பிக்கை இல்லேன்னா ரிசப்ஷன் ஹாலுக்கு வெளிய உள்ள ஜென்ட்ஸ் ரெஸ்ட் ரூம் வா, நம்புவ…” சொல்லிவிட்டு அழைப்பு துண்டானது.

சட்டென்று நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு ரிசீவரை வைத்தவன், படப்படப்பாய் லிப்டுக்குள் நுழைந்தான். அவனுடனே பர்தா அணிந்த பெண்மணி ஒருத்தியும் உள்ளே நுழைந்தாள். அவர்களுக்கான புளோர் எண்ணை அழுத்தியவனின் இடுப்பில் ஏதோ உரச திடுக்கிட்டுத் திரும்பினான்.

பளபளக்கும் பிஸ்டல் ஒன்று அவன் இடுப்பை உரசிக் கொண்டிருக்க, அதிர்ச்சியுடன் பார்த்தான் பிரபஞ்சன்.

“ஹேய், யார் நீ…? நீதான் என்னை போன்ல மிரட்டினதா…?” அவன் கேள்விக்கு சிரிப்புடன் பர்தாவின் முகத் திரையை அப்பெண் விலக்க, அதற்குள் தெரிந்த தேவியின் முகத்தைக் கண்டு அதிர்ந்து நாவுலர்ந்து போனான் டாக்டர்.

“தே… தேவி, நீயா…?”

“ம்ம்… நானேதான்… வேற யாரையும் எதிர்பார்த்திங்களோ..?”

“அ… அது வந்து, இல்லியே… நீ எதுக்கு பர்தா எல்லாம் போட்டுக்கிட்டு… எதுக்கிந்த வேஷம்…?”

“அது ஒண்ணும் இல்ல, அவசரமா ஒரு கொலை பண்ண வேண்டி இருந்துச்சு, அதான் இந்த கெட் அப்… எப்படி, எனக்கு நல்லாருக்கா…” என்றவளின் முகத்தில் தெரிந்த இறுக்கம் அவன் வாயை மூடி மூளையை யோசிக்க சொன்னது.

“தேவி, என்னாச்சு…? ஏன் ஒரு மாதிரி பேசற…?” அதற்குள் லிப்ட் புளோரில் நிற்க, “பேசாம வாயை மூடிட்டு நட…” என்றவள் பிஸ்டலை அவன் இடுப்பில் பர்தாவுக்குள் மறைத்துக் கொண்டு பிடித்தபடி அமர்த்த, அவன் முகம் பயத்திலும் பதட்டத்திலும் வேர்க்கத் தொடங்கியது.

அவள் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைய அங்கே முன்னமே கிளீனிங் டிரஸ்சுடன் நின்ற இருவர் தாளிட்டனர்.

“என்ன மேடம், எல்லாம் ஓகே தானே…?”

“ம்ம்… என்ன பண்ணனுமோ சீக்கிரம் முடிங்க…” அவள் சொல்லவும் பிஸ்டலை வாங்கி நெற்றியில் வைத்த மித்ரனை அதிர்ச்சியுடன் பார்த்த பிரபஞ்சன், “மி… மித்ரன், நீயுமா… உங்களுக்கெல்லாம் என்ன வேணும்…?” என்றான்.

“நியாயம் வேணும்… எனக்கு, இவனுக்கு, உன் மனைவிக்கு, செத்துப் போன அநாமிகா, பிரகதிக்கு, கொஞ்ச கொஞ்சமா செத்துட்டு இருக்கிற மகதிக்கு… உன்னால தர முடியுமா…?” அஸ்வின் கோபத்துடன் கேட்க அதிர்ந்து மனைவியை நோக்கினான் பிரபஞ்சன். அவள் முகம் கோபத்தில் அக்னியாய் சிவந்து கிடந்தது.

“என்ன பார்க்கிற, உன்னோட கொஞ்சிட்டு இருக்க எங்களுக்கு நேரமில்லை, மித்ரன் ஹூம்…” என்றாள் வெறுப்புடன்.

“இங்க பாரு, இனியும் இந்த சமூகத்துல உன்னை விட்டு வைக்கறதா எங்களுக்கு ஐடியா இல்லை… நீ பண்ணின எல்லா தப்புக்கும் எங்க கிட்ட ஆதாரம் இருக்கு… அதை எல்லாம் போலீசுக்கு அனுப்பினா என்னாகும் தெரியுமா… சமூகத்துல பிரபல டாக்டர் போர்வைக்குள்ள பெருமையா இருக்கற உன்னை நாயை விட கேவலமாப் பார்ப்பாங்க, புனிதமான டாக்டர் தொழில்ல இருந்துட்டு இப்படிப் பண்ணினதுக்கு உன்னோட லைசன்ஸ் கான்சல் ஆகிடும்… சொசைட்டில உனக்கு இருக்கிற மதிப்பு, மரியாதை எல்லாம் போயிடும்… என்ன அனுப்பட்டுமா…?”

அவனை திகிலுடன் பார்த்த பிரபஞ்சன், “ஓ நோ… அப்படிலாம் பண்ணிடாதீங்க… தேவி..! ப்ளீஸ், நீயாச்சும் சொல்லு மா… நான் இனி எந்தத் தப்பும் பண்ணலை, என்னை மன்னிச்சி விட்டிருங்க, உங்களுக்கு எவ்ளோ வேணும்னாலும் பணம் தர்றேன்…” என்றான் கெஞ்சலுடன்.

“ச்சீ… யாருக்கு வேணும் உன் பணம், எங்களையும் உன் பிரண்டு பிரகாஷைப் போல நினைச்சியா… நீ என்ன கெஞ்சினாலும் எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாது… எவ்ளோ வேஷம்… எத்தனை நடிப்பு…? உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான்… ஒண்ணு நாங்க உன்னைக் கொல்லறது… இல்லேன்னா தற்கொலைன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு நீயே சுட்டுகிட்டு மானம், மரியாதையைக் காப்பாத்திக்கிறது… ரெண்டுல எதுன்னு நீயே முடிவு பண்ணிக்க… அஞ்சு நிமிஷம் தான் டைம்…” என்றாள் வெறுப்புடன்.

அஞ்சு நிமிஷத்தில் அவன் தற்கொலை செய்து கொள்வதாய் லெட்டரை எழுதி முடித்து பிஸ்டலுக்காய் தேவியிடம் கை நீட்ட, “உன்னைலாம் நம்பி இதைக் கொடுக்க முடியாது, நானே கொன்னுடறேன்… செத்துப் போ…” என்றவள் சைலன்சர் பொறுத்தப்பட்ட ரிவால்வரின் ட்ரிக்கரை சுண்ட, அவனது வலது பக்க காதுக்கு மேலே தலை ஓட்டைத் துளைத்து உள்ளே நுழைந்த புல்லட் வழியே அழகான கோடாய் குருதி வழிய அப்படியே மடிந்து விழுந்தான்.

மூவரும் முன்னமே கையில் கிளவுசுடன் இருந்ததால் சுற்றிலும் பார்த்துக் கொண்டனர்.

“அஸ்வின் அந்த லெட்டரை அவன் பாக்கெட்டில் வச்சுட்டு நீ முதல்ல கிளம்பு, இந்தா, இந்த பர்தாவைப் போட்டுக்க…” சொன்ன தேவி, பர்தாவைக் கழற்றிக் கொடுக்க வாங்கிப் போட்டுக் கொண்ட அஸ்வின் வெளியேறினான்.

CCTV சர்வர் ரூம் அருகே சென்றவன் தனது லாப்டாப்பில் இருந்த CCTV காமெரா ஹாக்கிங் சாப்ட்வேர் மூலமாய் அவர்கள் சிஸ்டத்துக்குள் நுழைந்து ஏதோ செய்துகொண்டே மித்ரனுக்கு செல்லில் அழைக்க, சவுண்ட் இல்லாமல் வைப்ரேஷனில் இருந்த செல் அதிர்ந்தது. உடனே தேவியுடன் அங்கிருந்து வெளியேறினான்.

“அடுத்து மாலதியோட டிரைவர் நாராயணன் உதவியால பிரகாஷ்க்கு குறி வச்சோம்…” அவர்கள் வீடியோவைப் பார்க்கும்போதே நர்ஸின் குரல் பதட்டமாய் கேட்டது. அறைக்கு வெளியே யாரிடமோ பேசிக் கொண்டிருந்த டாக்டரை பதட்டத்துடன் அழைத்தாள்.

“டாக்டர், சீக்கிரம் வாங்க… பேஷன்ட்க்கு சட்டுன்னு பல்ஸ் குறைஞ்சுட்டு வருது…” என்றதும் டாக்டர் உடனே உள்ளே செல்ல இவர்களும் அதைக் கேட்டு ஓடினர். தேவியைப் பரிசோதித்த டாக்டர் டென்ஷனாய் உதட்டைப் பிதுக்கிக் கொண்டார்.

“ஹவ் இட்ஸ் பாசிபிள்…? டேஞ்சர் ஜோனைத் தாண்டின பின்னாடி எப்படி இப்படி ஆச்சு…?” சொல்லிக் கொண்டே கற்ற வைத்திய முறைகளை அவளிடம் முயன்று நோக்க பலன் இன்றி தேவியின் ஆன்மா பூவுலகில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உடல் துடித்து அடங்கியது.

Advertisement