Advertisement

அத்தியாயம் – 16

ICU யூனிட்டுக்கு வெளியே இருந்த நாற்காலியில் இருண்டு போன முகத்தோடு அமர்ந்திருந்தாள் சுபா. கதவிலிருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தவளுக்கு, கண் மூடி இன்னும் சுயநினைவு திரும்பாமல் கிடக்கும் அக்காவின் நிலை கண்ணில் நீரை வரவழைத்தது.

“ஏன்க்கா..? ஏன் இப்படிப் பண்ணின… இதுக்குதான் காலைல இருந்து ஒரு மாதிரிப் பேசிட்டு இருந்தியா..? மாமாவோட மரணம் உன்னை ரொம்ப பாதிச்சிருக்குன்னு தெரியும்… ஆனாலும் இப்படி ஒரு முடிவுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலயே…?” மனது கலங்கிக் கொண்டிருந்தது.

“இந்த மித்து காலைல கிளம்பி எங்க தான் போனார்…? அக்காக்கு இப்படி ஆயிருச்சுன்னு வர சொல்லலாம்னு பார்த்தா போன் சுவிட்ச் ஆப் வருது… ஒரு அவசரத்துக்கு கூட ஆளில்லாம நான் என்ன பண்ணுவேன்…” தவிப்புடன் நின்று கொண்டிருந்தவளின் பார்வை வார்டுக்குள் டாக்டரிடம் பேசியபடியே உள்ளே வந்த அஜய் மீது படிந்தது.

“டாக்டர், மிசஸ் தேவியோட கண்டிஷன் இப்ப எப்படி இருக்கு…?”

“ஷி ஈஸ் இன் க்ரிடிகல் ஸ்டேஜ்…”

“காப்பாத்த முடியும் தானே…?”

“ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு, ஷீ ஹேஸ் டேக்கன் வெரி பவர்புல் பாய்சன்… உடனே நீங்க ஹாஸ்பிடலைஸ் பண்ணதால உயிருக்கு ஆபத்தில்லை, வெயிட் பண்ணிப் பார்ப்போம்…”

“அவங்களை நான் இப்ப பார்க்க முடியுமா…?”

“ஸாரி, டாக்டர்ஸ் தவிர வேற யாரும் உள்ள போக அனுமதியில்லை… யூ ஹேவ் டூ வெயிட் பார் சம் மோர் டைம்…”

“இட்ஸ் ஒகே டாக்டர், நான் வெயிட் பண்ணறேன்…” சொன்னவன் சுபாவிடம் வந்தான்.

“டாக்டர், என் அக்காக்கு எப்படி இருக்கு, எப்படியாச்சும் அவளைக் காப்பாத்திக் கொடுத்திடுங்க…” கை கூப்பியபடி கண்ணீருடன் கேட்டாள் சுபா.

“ஷ்யூர் மா… அவங்க உங்க அக்கா மட்டுமில்ல, எங்க கோ டாக்டர் பிரபஞ்சன் மனைவியும் கூட, வீ வில் டிரை அவர் பெஸ்ட்…” சொன்னவர் அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே இருந்த நர்சிடம் ஏதோ கேட்டுக் கொண்டு தேவியை பரிசோதித்துக் கொண்டு இருந்தார்.

“சார், டாக்டர் உங்ககிட்ட என்ன சொன்னார், அக்கா உயிருக்கு எதுவும் ஆபத்தில்லையே…”

“இல்ல, கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லிருக்கார் மா…” அவளது தவிப்பைக் கண்டு கரிசனத்துடனே கூறினான்.

“பாவம் சார் அக்கா, மாமா மரணத்தை அவளால தாங்கிக்க முடியல, இப்படி தன் உயிரை மாய்ச்சுக்கப் போயிட்டாளே…?”

“மிசஸ் சுபா, நீங்க நினைக்கிறது தப்பு..! அவங்க புருஷன் இழப்பைத் தாங்கிக்க முடியாம தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணல, போலீஸ் அரஸ்ட் பண்ணிடக் கூடாதுன்னு தான் இப்படி முயற்சி பண்ணிருக்காங்க…” அவன் சொல்லவும் அதிர்ந்து நோக்கினாள்.

“நீ…நீங்க என்ன சார் சொல்லறீங்க, என் அக்காவை எதுக்கு போலீஸ் அரஸ்ட் பண்ணனும்…?”

“உங்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு… உங்க கணவர் மித்ரன் இப்ப எங்கிருக்கார் தெரியுமா…?”

“எ…எங்க…?” என்றவளின் கண்கள் அச்சத்தில் விரிந்தன.

“போலீஸ் கஸ்டடில…!” அவன் சொல்லவும் திகைத்தாள்.

“எ..எதுக்கு, அவரை போலீஸ் கஸ்டடில எடுத்திருக்கு…?”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உங்க எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைக்கும்…” சொன்னவன் தனது அலைபேசியில் கமிஷனர் ஜெயராமை அழைத்தான். இரண்டாவது ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட்டு அவரது கரகர குரல் கேட்டது.

“ஹலோ, என்னாச்சு அஜய்… டாக்டர் பிரபஞ்சன் மனைவியை அரஸ்ட் பண்ணிட்டீங்களா…?”

“ஸாரி சார்…”

“எதுக்கு ஸாரி…?”

அஜய் தயங்கிக் கொண்டே நடந்ததை சொல்ல மறுமுனையில் கமிஷனரின் குரலில் கோபம் தெரிந்தது.

“என்ன அஜய், இப்படிக் கோட்டை விட்டுட்டீங்க..?”

“அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல சார்…”

“இப்ப அந்த லேடி உயிரோட இருக்காங்களா, இல்லையா…?”

“உயிருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார் சார்… அவங்களுக்கு இன்னும் கான்ஷியஸ் திரும்பாததால வெயிட் பண்ண சொல்லிருக்காங்க…”

“சரி, பார்த்துக்கங்க… கொஞ்ச நேரத்துல எனக்கு பாசிடிவ் ரிப்ளை சொல்லணும்…”

“எஸ் சார்…” சொன்ன அஜய், அலைபேசியை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா வந்து கொண்டிருந்தார்.

“ஸார், அவங்களுக்கு எப்படி இருக்கு…?”

“உயிருக்கு ஆபத்தில்லை, வெயிட் பண்ண சொன்னாங்க…” அஜய் சொல்லும்போதே நர்ஸ் வெளியே வந்தாள்.

“சார், பேஷன்ட்க்கு கான்ஷியஸ் வந்திருக்கு, டாக்டர் உங்களைப் கூப்பிடறார்…” நர்ஸ் சொல்லவும் வேகமாய் உள்ளே சென்றனர். அவர்களுடன் சுபாவும் உள்ளே வர அவளை அங்கேயே இருக்கும்படி கூறினார் கிருஷ்ணா.

பெரிதாய் மூச்சுகளை எடுத்துக் கொண்டு சிரமத்துடன் கனத்த இமைகளைப் பிரிக்க முயன்று கொண்டிருந்தாள் தேவி.

சுற்றிலும் பார்வையை ஓட்டியவள், “சு…சுபா எங்கே…?” எனவும், “அவங்களை வர சொல்லுங்க…” என்றான் அஜய்.

நர்ஸ் சுபாவை அழைக்க கண்ணீருடன் உள்ளே வந்தாள்.

“அக்கா, என்னக்கா… ஏன் இப்படிப் பண்ணிட்ட…? எனக்கு நீதானக்கா எல்லாமே, என்னைக் கூட நினைச்சுப் பார்க்காம எதுக்கு இப்படி ஒரு முடிவுக்கு வந்த…?” கண்ணீருடன் கேட்டவளின் கையைப் பற்றிக் கொண்ட தேவியின் கண்களும் நிறைந்தன.

“சு…சுபா, எ..ன்னை மன்னிச்சிடும்மா, உன் வாழ்க்கை நல்லாருக்க..ணும்னு நினைச்ச நானே கெடுத்துட்டேன்… இந்த அக்காவை வெறுத்துடாத…” அவள் சொல்வது புரியாவிட்டாலும் ஏதோ பெரிய விஷயம் என்பது மட்டும் புரிந்தது சுபாவுக்கு.

“அக்கா, நீ எதை செய்தாலும் அது என் நன்மைக்காக தான் இருக்கும்னு நம்பறேன்…” என்றாள்.

“மேடம், நீங்க கொஞ்சம் விலகி நின்னா, நாங்க கேக்க வேண்டியதைக் கேட்டுப்போம்…” அஜய் சொல்ல, “சார், அவளே செத்துப் பொழைச்சு முடியாம இருக்கா… இப்பவும் விசாரிக்கணுமா…?” என்றாள் சுபா கோபத்துடன்.

மெல்ல கையை மேலே தூக்கி, அவளை அமைதியாய் இருக்க சொன்ன தேவி, “எ..என்னோட மொபைல்…” என கஷ்டப்பட்டு சொல்ல, “அது எங்கிட்ட தான் இருக்கு… இப்ப எதுக்கு உனக்கு மொபைல்..?” என்றதும் பதில் சொல்லாமல் கையை நீட்டி தருமாறு கூறினாள்.

சுபா குழப்பத்துடன் கைப்பையில் வைத்திருந்த அக்காவின் மொபைலை எடுத்து நீட்ட அதை வாங்கி அஜயிடம் நீட்டியவள், “உ…ங்களுக்கு வேண்டியது இ..துல இருக்..கு…” சொல்லிவிட்டு ஆயாசத்துடன் கண்ணை மூடிக் கொண்டாள்.

“சார், அவங்க மறுபடி மயக்கத்துக்குப் போயிட்டாங்க போலருக்கு, மறுபடி கான்ஷியஸ் வர்ற வரை வெளிய வெயிட் பண்ணுங்க…” டாக்டர் சொல்ல இருவரும் வெளியே வந்தனர்.

“இந்த மொபைல்ல என்ன இருக்கு சார்…?’

“வீடியோ எதுவும் ரெக்கார்டு பண்ணி இருக்காங்களான்னு பாருங்க…” அஜய் சொல்ல போல்டரில் தேடினார் கிருஷ்ணா.

“இன்னைக்கு டேட்ல ரெண்டு வீடியோ இருக்கு சார்…”

“அதை ஓபன் பண்ணிப் பார்த்துடலாம்…” என்றவன் சற்று ஒதுக்குப்புறமாய் செல்ல, “சார், நானும் அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா…?” என்றாள் சுபா.

“வாங்க…” என்றவன் முன்னில் நடந்தான்.

ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்து அந்த வீடியோவை பிளே பண்ணத் தொடங்கினார் கிருஷ்ணா. அவனுக்கு அருகில் அஜய் அமர்ந்திருக்க, மறுபுறம் சுபா நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீடியோ ஓடத் தொடங்க பளிச்சென்று தேவியின் முகம் தெரிந்தது.

“வணக்கம், நான் தேவி பேசறேன்… நீங்க இந்த வீடியோவைப் பார்க்கும் போது நான் அனேகமா உயிரோட இருக்க மாட்டேன்னு நினைக்கறேன்…” என்றவள் தொடர்ந்தாள்.

“யார் இந்த அநாமிகா…? அவளுக்கும் பிரபஞ்சன் கொலைக்கும் என்ன சம்மந்தம்னு தொடங்கின விசாரணைல உங்களுக்கு பல விஷயங்கள் தெரிஞ்சிருக்கலாம்… நாந்தான் என் கணவனைக் கொன்னேன்னு கூட கண்டு பிடிச்சிருப்பிங்க…” அதைக் கேட்டதும் சுபா அதிர்ந்தாள்.

“ஆமா, நாந்தான் என் புருஷனைக் கொன்னேன்… எவ்வளவு அவர் மேல அன்பை வச்சிருந்தேனோ, அதை விட அதிகமான வெறுப்போட அவர் துப்பாக்கியாலயே சுட்டுக் கொன்னேன்… அவரை மட்டுமில்ல, அவரோட பிராடு பிரண்டு பிரகாஷையும் நாந்தான் கொன்னேன்… ரெண்டு பேரும் இந்த உலகத்துல வாழத் தகுதியே இல்லாத கேடு கெட்ட ஜென்மங்கள்…” அருகில் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

“புனிதமான டாக்டர் தொழிலை செய்யற பிரபஞ்சன் ஒண்ணாம் நம்பர் பொம்பளை பொறுக்கி… அழகான பொண்ணுங்க எல்லாம் அவன் சந்தோஷத்துக்காகவே படைக்கப்பட்ட ஜென்மங்கள்னு மனசுல நினைச்சிட்டு இருக்கான்… தன்னோட வேலை பார்க்கிறவங்கள்ள இருந்து நண்பனோட மகளைக் கூட விட்டு வைக்க நினைக்காத கடைஞ்செடுத்த அயோக்கியன்… பத்து வயசுப் பொண்ணை தன் உடல் சுகத்துக்காக நண்பனுக்குப் பணம் கொடுத்து வாங்கத் தயங்காதவன்… அவனால எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க… எல்லாத்தையும் வீடியோ எடுத்து வச்சு அவங்களை மிரட்டி மறுபடி காரியம் சாதிச்சுக்கற பச்சைத் துரோகி… அவனெல்லாம் உயிரோட இருக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்…” உணர்ச்சி வசப்பட்டதில் தேவிக்கு மூச்சு முட்டியது.

சற்று ஆசுவாசப்படுத்தி பெரிய மூச்சுகளுடன் தொடர்ந்தாள்.

“என் தங்கைக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனப்ப வீட்டுக்குப் பெயின்ட் அடிச்சோம்… அப்ப அவர் பர்சனல் ரூமை நான்தான் கிளீன் பண்ணேன்… பென் டிரைவ் ஒண்ணு, சிஸ்டம் டேபிள் கீழ விழுந்து கிடந்தது… இவர் எப்பவும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து ஒரு பென் டிரைவைக் குத்திட்டு எதையோ பார்த்திட்டு இருக்கிறதை பலமுறை நான் கவனிச்சிருக்கேன்… ஆனா நான் உள்ள வரும்போது ஸ்க்ரீனை மாத்திடுவார்… அந்தப் பென் டிரைவைப் பார்த்ததும் அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆவலா இருந்துச்சு… அதை கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்தப்ப தான் அவர் பண்ணின அயோக்கியத்தனம் எல்லாம் புரிஞ்சுகிட்டேன்… அதுல லாஸ்ட்டா இருந்த வீடியோவைப் பார்த்ததும் என் உயிரே போயிடுச்சு… அது சுபா குளிக்கிற வீடியோ…” சொன்னவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“அப்பதான் வீட்டுல ஸ்ரீராமன் வேஷம் போட்டுட்டு வெளிய அவர் பண்ணிட்டு இருந்த தகிடுதத்தம் எல்லாம் தெரிஞ்சது… இதை அப்படியே விடக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்… அந்த சமயத்துல தான் மித்ரன் என்னைப் பார்க்க வந்தார்…”

“மித்ரன் என் தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை…” என்றவள் தொடர்ந்தாள்.

மித்ரனோட நண்பன் அஸ்வின் எங்கிட்ட ஏதோ சொல்ல விரும்பறதா சொல்லி கூட்டிட்டு வந்தான்… அஸ்வின் மூலமா தான் அநாமிகாவை எனக்குத் தெரியும்… பாவம், ஆயிரம் கனவுகளோட சந்தோஷமா வாழ வேண்டிய வயசுல பிரபஞ்சனோட ஆசைக்கு சம்மதிக்காத காரணத்துக்காக ஓட ஓடத் துரத்தப்பட்டா… பொய்யா குத்தம் சுமத்தி வேலைல இருந்து மட்டுமில்லாம, உலகத்தை விட்டே அவளைத் துரத்தினதை சொல்லி அழுதான்… கேட்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… அப்பதான் இவனுங்களை விடக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம்… பிரகாஷ் பொண்ணு கேசுல குற்றவாளியாக்கப்பட்டு ஜெயில் தண்டனை அனுபவிச்சிட்டு இருந்த கனகராஜைப் போய் பார்த்தோம்…” அதோடு வீடியோ முடிந்திருக்க அடுத்த வீடியோவை ஆன் பண்ணினார் கிருஷ்ணா.

Advertisement