Advertisement

அத்தியாயம் – 15

“அக்கா, என்ன சொல்லற… எதுக்கு இப்ப சொத்தெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கனும்னு நிக்கற…?”

“சுபா, அக்கா எது செய்தாலும் உன் நன்மைக்கு தான் செய்வேன்னு நம்பற தானே…?”

“ம்ம்…” என்றவளின் தலையை வாஞ்சையுடன் கோதி விட்டாள் தேவி.

“நான் வக்கீல் கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன்… கொஞ்ச நேரத்துல வந்திருவார், சைன் பண்ணிடலாம்…”

“எதுக்குக்கா, இவ்ளோ அவசரமா என் பேருல மாத்தணும்…?”

“எல்லாம் காரணமாத்தான்…” என்றவளின் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது.

சிறிது நேரத்தில் அவர்களின் குடும்ப வக்கீல் சொத்து டாகுமென்ட்ஸுடன் வந்து அதில் எல்லாம் கையெழுத்து வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

“சுபா… அக்கா மேல எதுவும் வருத்தம் இல்லையே…?”

“என்னக்கா, இப்படி கேக்கற… அம்மாப்பா போன பின்னாடி நீயும் மாமாவும் தானே எனக்கு எல்லாமா இருந்து பார்த்துகிட்டீங்க… உனக்கு இன்னைக்கு என்னாச்சு, ஏன் ஒரு மாதிரிப் பேசற…?”

தங்கையின் கேள்வியில் கலங்கிய கண்ணைத் துடைத்தவள், “ஒண்ணும் இல்லடா, கேக்கணும் போலத் தோணுச்சு… எந்த நிலமைலயும் நீ என்னை வெறுத்திட மாட்டியே…?”

“போக்கா, உனக்கு என்னமோ ஆயிருச்சு… மாமா இல்லன்னு கண்டதெல்லாம் யோசிச்சு குழப்பிக்கற…”

சலித்துக் கொண்ட தங்கையின் நெற்றியில் முத்தமிட்டவள், “என் கடமையை நான் சரியா செய்துட்டேன்னு நினைக்கிறேன்… எனக்கு தாகமாருக்கு, ஏதாச்சும் ஜூஸ் எடுத்திட்டு வா…” என்றாள்.

“சரிக்கா, கொண்டு வரேன்…” சொன்ன சுபா உள்ளே செல்ல, வாசலில் ஏதோ வண்டி நிற்கும் சத்தம் கேட்டது.

சுபா எட்டிப் பார்க்க அஜய், கிருஷ்ணா இருவரும் உள்ளே வர பின்னில் இரண்டு பெண் போலீசாரும் இருந்தனர்.

குழப்பமாய் பார்த்தவள், “என்ன சார், இன்னைக்கு பெண் போலீஸ் எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கிங்க…? மறுபடியும் அக்காகிட்ட விசாரணையா…?” என்றாள்.

“ஆமாம், மிசஸ் பிரபஞ்சன் எங்க இருக்காங்க…?’

“அக்கா ரூம்லதான் இருக்கா, உக்காருங்க வர சொல்லறேன்…” என்று சோபாவைக் காட்டிவிட்டு உள்ளே சென்றாள் சுபா.

வெறுமனே சாத்தியிருந்த கதவை மெல்லத் தள்ள உள்ளே கண்ட காட்சியில் விழிகள் பிதுங்க, விதிர்விதிர்த்து அதிர்ந்து போனாள் சுபா.

வாயில் நுரை தள்ள தொண்டையைப் பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தாள் தேவி.

“அ..அக்கா…!” அலறலுடன் சுபா உள்ளே ஓட, அதைக் கேட்டு அஜய், கிருஷ்ணாவும் எழுந்து சென்றனர்.

கை, கால்கள் இழுக்கத் தொடங்க வாயில் நுரை தள்ளி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தேவியை உடனடியாய் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த நாள் ஏர்போர்ட்டில் வந்திறங்கிய கஜவேலை வீட்டுக்கு கூட செல்ல விடாமல் ஏர்போர்ட் வாசலிலேயே போலீஸ் கைது செய்தது.

“நான் யார் தெரியுமா, என் மேல கை வைச்சா கட்சி மேலிடம் எப்படி கொந்தளிக்கும் தெரியுமா…? எங்கெல்லாம் மறியல் போராட்டம், கலவரம் வெடிக்கும் தெரியுமா…? எத்தனை கட்சித் தொண்டன் தீக்குளிப்பான் தெரியுமா…?” எனப் பொங்கியவனை கட்சியை விட்டு விலக்கி விட்டதாக கட்சித் தலைவர் வெளியிட்ட அறிக்கையைக் காண்பிக்கவும் வாயை மூடிக் கொண்டான் கஜவேல்.

“செய்யறதெல்லாம் பித்தலாட்டம், பேசறதெல்லாம் பொய், மக்கள் தொண்டன்னு பேரை வச்சிட்டு அவங்களுக்கு எதையும் கொடுக்க விடாம எல்லாத்துலயும் ஊழல் பண்ணி பாக்கெட்டுக்குள்ள போட்டுக்கறது… அவங்க வயித்துல அடிச்சு, இருக்கிற இடத்தை எல்லாம் உன் பேருல எழுதி வாங்கிக்கறது, அரசியல்ல இருந்தா நீ பெரிய தாதாவா…” அவன் கன்னத்தில் ஒன்று விட்ட கிருஷ்ணா கழுத்திலிருந்த துண்டைப் பிடித்து இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினார்.

“வேண்டாம், தேவையில்லாம மேல கை வைக்காத…” எகிறியவனிடம், “அமைதியா பண்ணின தப்பை எல்லாம் ஒத்துகிட்டு ஸ்டேஷன்ல சரண்டர் ஆகிட்டா உனக்கு நல்லது, இல்லேன்னா நீ சொல்லற வரைக்கும், உடம்புல உசுர் போகாம உன்னை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்…” என்றார் கோபத்துடன்.

கட்சியும் கை விட்ட நிலையில் அதற்குமேல் எதுவும் பேசி தன்னை டேமேஜ் ஆக்கிக் கொள்ள விரும்பாத கஜவேல் அமைதியாய் இருந்தார்.

போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்த ஜமுனா, சுந்தரைக் கண்டதும் உள்ளுக்குள் சுருக் என்றது.

“இவங்க எதுக்கு இங்க இருக்காங்க…?” யோசித்தார்.

“என்ன கஜவேல், இவங்களைப் பார்த்ததும் உள்ளுக்குள்ள டர் ஆன போலத் தெரியுது…?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, என்னை மோசடிக் கேஸ்ல தானே அரஸ்ட் பண்ணிட்டு வந்திருக்கீங்க…?”

“அப்படின்னு யாரு சொன்னா..? உன் மேல ஊழல், நில அபகரிப்பு கேஸோட கொலைக் கேஸும் சார்ஜ் பண்ணிருக்கோம்…” கிருஷ்ணா சொல்ல அதிர்ந்தார்.

“நான் இப்பதான் வெளிநாடு போயிட்டு வரேன், நான் எப்படி கொல்ல முடியும்…” கேட்டவரை நோக்கிப் புன்னகைத்த கிருஷ்ணா, “எல்லா டீடைலும் உடனே தெரிஞ்சுக்க நினைச்சா எப்படி கஜவேல்…? கொஞ்சம் வெயிட் பண்ணு, சார் வந்திடுவார்…” என்றவர், “கான்ஸ்டபிள், இவரை லாக்கப்புல உக்கார வை…” என்று தனது மேசைக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் அஜய் ஸ்டேஷனுக்கு வந்துவிட கஜவேலை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அவனை அமைதியாய் பார்த்தவன், “என்னெல்லாம் தப்பு பண்ணிருக்கியோ, வரிசையா நீயே சொல்லிட்டா எங்களுக்கு வேலை மிச்சம், சொல்லறியா…?” என்றான்.

“நான் எந்தத் தப்பும் பண்ணவே இல்லையே… எந்த ஆதாரத்தை வச்சிட்டு என் மேல இவ்ளோ கேஸ் சார்ஜ் பண்ணி இருக்கீங்க…?”

“கோகுல்… ம்ம்…” அஜய் சைகை செய்ய வெளியே சென்ற கோகுல் இரண்டு தடியன்களுடன் உள்ளே வர அவர்களைக் கண்டதும் முகம் மாறினான் கஜவேல்.

“இந்த ஆதாரம் போதும்னு நினைக்கறேன்… இனி பேசலாமா…? எதுக்கு சந்தோஷைக் கொன்ன…?”

அந்த தடியன்கள் இருவரும் தலை குனிந்து நிற்க, கஜவேல் அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“என்ன முழிக்கற… இவனுங்க ரெண்டு பேரும் உன் ஆளுங்க தானே…?”

அவன் அமைதியாய் இருக்க, “இப்ப பேசப் போறியா, இல்ல பேச வைக்கட்டுமா…” உறுமலாய் கேட்டது அஜயின் குரல்.

“ஆ..ஆமாம்…” என்றான் மெதுவாக.

“இவங்க கிட்ட சொல்லி சந்தோஷ்க்கு விஷத்தைக் கொடுத்து குடிக்க வச்சது நீ தான…”

“அ…அதுவந்து…”

“எனக்கு எஸ் ஆர் நோ ரெண்டுல ஒரு வார்த்தை தான் பதிலா வரணும்…” என்றான் அஜய்.

வசமாய் மாட்டிக் கொண்டோம் என்பது புரிய அதற்கு மேல் கஜவேலால் பிடித்து நிற்க முடியாமல் உண்மையை சொல்லத் தொடங்கினான்.

“என்னோட பல இல்லீகல் வேலைக்கு லீகல் அட்வைசர் சந்தோஷ் தான் துணையா இருந்தார்… சட்டத்துல உள்ள பாயின்ட் எல்லாம் அவருக்குத் தெரியுமோ இல்லையோ, அதுல உள்ள ஓட்டைகளை நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தார்… நான் செய்யற வேலைல என்ன பிரச்சனை வந்தாலும் அவர் அதை ஒண்ணும் இல்லாம உடைச்சிருவார்.. அதுக்கு அவருக்கு என்ன கொடுக்கணுமோ கொடுத்து நல்லா தான் கவனிச்சுகிட்டேன். ஆனா, அவன் என்கிட்டயே வாலாட்டிப் பார்க்க நினைச்சான். என்னுடைய கோல்மால் எல்லாத்துலயும் கூட இருந்துட்டே அதை வீடியோ எடுத்து ஆதாரமாக்கி வச்சுகிட்டான். அதைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பிச்சான். நான் வெளிநாடு போன சமயத்துல ஒரு பெரிய தொகை கேட்டு, தரலேன்னா இருக்கிற ஆதாரத்தை எதிர்க்கட்சிக்கு வித்துடப் போறதா மிரட்டத் தொடங்கினான்… நானும் அவன் சொன்ன பைசாவைத் தர ஒத்துகிட்டேன்…”

“இரு, இரு… இதுல உன்கிட்ட பேசினப்ப பொண்டாட்டியைத் தீர்த்துக் கட்டணும்னு சொன்னானா…?”

“ஆமாம், இனி இந்த மாதிரி பிளாக்மெயில் பண்ண மாட்டேன், வீடியோவை வாங்கிட்டு விஷயம்  தெரிஞ்ச என் பொண்டாட்டியைப் போட்டுத் தள்ளிடுன்னு சொன்னான்…”

“எனக்கென்னவோ, அவன் பொண்டாட்டியைப் போட்டுத் தள்ளறதுக்கு பதிலா அவனையே போட்டுத் தள்ளறது தான் நல்லதுன்னு தோணுச்சு… வெளிநாட்டுல இருந்ததால என் மேல எந்த சந்தேகமும் வராதுன்னு நினைச்சேன்… லாயர், பணத்தை ஆபீசுல தந்துட்டு, வீடியோவை வாங்கிக்க சொல்லவும் அதுதான் சரியான நேரம்னு யோசிச்சேன், இவங்களை விட்டு பிளானை முடிச்சேன்…”

“அதெப்படி சந்தோஷை சாகறதுக்கு முன்னாடி லெட்டர் எழுத வச்சிங்க..? அவனையே விஷம் குடிக்க வச்சிங்க…?” என்றான் அந்த தடியன்களிடம்.

“லாயர் சாருக்கு அவரு புள்ளன்னா ரொம்பப் பிடிக்கும்… அந்தாளு இந்த உலகத்துல பணத்தை விட ஒண்ணை நேசிச்சான்னா அது அவன் புள்ளைய தான்… அவனைக் கொன்னுடுவோம்னு மிரட்டி தான் எழுத வச்சோம்…” ஒருவன் சொல்ல மற்றவன் மீதியைத் தொடர்ந்தான்.

“அது தற்கொலை மாதிரி தெரியணும்னு தான் அப்படிப் பண்ணோம்… சந்தோஷை ஆபீசுல பார்த்து பணத்தைக் கொடுத்து வீடியோ இருந்த பென் டிரைவை வாங்கினதும், மிரட்டி லெட்டர் எழுத வச்சோம்… அதுக்காக அவன் பையன் படிக்கிற ஸ்கூலுக்குப் போயி முன்னாடி வெயிட் பண்ண வீடியோவைக் காட்டவும் பயந்துட்டான்… அவன்கிட்ட விஷத்தைக் கொடுத்து குடிக்க சொன்னா முடியாதுன்னு ரொம்ப ஓவரா பிலிம் காட்டினான்… சரின்னு லைட்டா மயக்க மருந்து அவன் முகத்துல ஸ்ப்ரே பண்ணோம்… அவன் கொஞ்சம் தடுமாறவும், வாயைத் திறந்து பிடிச்சு விஷத்தை ஊத்திட்டு கொஞ்சம் கழிச்சு பாட்டிலை அவன் கைல குடுத்துட்டு கிளம்பிட்டோம்…”

“ஹூம்… பெரிய மூளைக்காரங்கதான் போங்க… எல்லாம் பண்ணின நீங்க மண்டை மேல உள்ள கொண்டையை மறந்துட்டிங்களே… பார்த்துப் பார்த்து கவனமா செய்துட்டு ஒருத்தனோட கட்சி உறுப்பினர் அட்டையை அங்க தவற விட்டுட்டுப் போயிட்டிங்களே…” என்றதும் அவர்கள் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அதுதான் உங்களை பாலோ பண்ண எங்களுக்கு கிடைச்ச முதல் எவிடன்ஸ்…” என்றான் அஜய்.

“அப்புறம் லாயரோட பாங்கு லாக்கர்ல இருந்த உங்க சம்மந்தப்பட்ட இல்லீகல் டாகுமென்ட்ஸ்… அவரோட பர்சனல் லாப்டாப்ல இருந்த டெலீட்டட் அயிட்டம்ஸ் எல்லாம் சாப்ட்வேர் ரெக்கவரி ஆப்ஷன் மூலமா ரெகவரி பண்ணி எடுத்தோம்… உங்களோட எல்லா இல்லீகல் விஷயமும் அதுல கிடைச்சது… இதெல்லாம் கட்சி மேலிடத்துக்கு காட்டி தான் உங்களை கட்சில இருந்து டிஸ்மிஸ் பண்ணதும், அரஸ்ட் பண்ண வாரன்ட் வாங்கியதும்… இவ்ளோ ஆதாரம் போதும் தானே…?” புன்னகையுடன் கேட்டுவிட்டு எழுந்தான் அஜய்.

“நீங்க வெளிநாட்டுல இருந்து வர்றதுக்கு தான் வெயிட் பண்ணினோம்… அநாமிகான்னு ஒரு பேர்ல கொஞ்சம் குழம்பி சுத்தினாலும் அப்புறம் அநாமிகாவுக்கும் இந்தக் கொலைக்கும் சம்மந்தம் இல்லேன்னு எங்களுக்குப் புரிஞ்சிருச்சு… இப்ப எல்லாம் கிளியர் தானே, இனி நீங்க லாக்கப்புக்குப் போகலாம்…” என்றவன், “கிருஷ்ணா ஒண்ணு விடாம எல்லாத்தையும் எழுதி சைன் வாங்கிடுங்க… நான் கிளம்பறேன்…” ஸ்டைலாய் கூலரைக் கண்ணுக்குக் கொடுத்து புல்லட்டை நோக்கி கம்பீரமாய் நடந்தான்.

Advertisement