Advertisement

அத்தியாயம் – 14

கமிஷனர் அலுவலகம்.

இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை கமிஷனர் ஜெயராமிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அஜய்.

“ஆக டாக்டர் பிரபஞ்சன் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப மோசம்… அவன் வீட்டுல கிடைஞ்ச பென் டிரைவ்ல என்ன இருந்துச்சுன்னு பார்த்திங்களா…?”

“அது பாஸ்வர்ட் போட்டிருக்கு சார்… இன்னைக்கு பார்த்திடுவோம்…”

“ம்ம்… பிரகாஷ் சீட்டு விளையாட பணத்துக்கு வேண்டி சொத்தெல்லாம் இழந்து தற்கொலை வரைக்கும் போனவன்… அப்புறம் ஏதேதோ பண்ணி மெதுவா பிக்கப் பண்ணிருக்கார்…”

“எஸ் சார்…”

“லாயர் சந்தோஷை அவர் மனைவியும், ஜூனியரும் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டிருக்காங்க… அதுக்குள்ள அந்த அநாமிகா முந்திகிட்டா… அங்க எதுவும் ப்ரூவ் கிடைக்கலையா…?”

“வீட்டுல கிடைக்கல சார்… ஆனா அவரோட பாங்க் லாக்கர்ல நிறைய இல்லீகல் டாகுமெண்ட்ஸ் கிடைச்சிருக்கு…” அதற்குள் அலைபேசி சிணுங்கவே எடுத்துப் பார்த்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ சார், ஒன் அர்ஜென்ட் கால்…”

“பேசிட்டு வாங்க…” கமிஷனர் சொல்லவும் எழுந்து கொண்டவன் அறைக்கு வெளியே வந்தான்.

“சொல்லுங்க சச்சிதானந்தம்…”

“சார், உடனே அடையார்ல உள்ள ரத்னா கபே வந்திருங்க…”

“எனி அர்ஜன்ட்..?”

“மோஸ்ட் அர்ஜன்ட்…”

“கிளம்பிட்டேன்…” சொன்னவன் கமிஷனரிடம் சொல்லிவிட்டு புல்லட்டைப் பறக்க விட்டு, இருபது நிமிடத்தில் ரத்னா கபே பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தான். மதிய நேரமாதலால் கபே சற்று வெறிச்சோடி இருந்தது.

வெளியே மறைவாய் மப்டியில் காத்திருந்த சச்சி அவனைக் கண்டதும் ஓடி வந்தார்.

“எங்கே…?”

“உள்ளதான் இருக்காங்க, அனேகமா யாருக்கோ வெயிட்டிங்…”

“எந்த மீன் சிக்குச்சு…?”

“நீங்க சந்தேகப்பட்ட மீனோட புது மீன் ஒண்ணும் சிக்கிருக்கு… அநேகமா பெரிய மீனுக்கு தான் வெயிட்டிங் நினைக்கிறேன்… நாம உள்ள போயிடுவோம்…”

சொன்ன சச்சிதானந்தம் கண்ணாடித் தடுப்போடு காபின் காபினாய் பிரிக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு காபினில் அமர அஜயும் எதிரில் அமர்ந்தான். பின்னில் கை காட்டியவர் “இங்க தான் இருக்காங்க…” என்றார் சைகையில்.

“ஓகே…” என்றவன் பக்கத்து காபினில் பேசுவதைக் கேட்க முயன்றான்.

“இதுக்கு மேலயும் நான் இங்க இருக்கிறது ஆபத்து… நாளைக்கே மும்பை போயிடலாம்னு இருக்கேன்…”

“அப்படியா, ஏன் திடீர்னு…?”

“வீட்டுக்கு போலீஸ் விசாரிக்க வந்திருக்கு… என்னை வச்சு உங்களை மோப்பம் பிடிச்சிடக் கூடாது… அதான் சொல்லறேன்…”

“நாம தான் எந்த எவிடன்சும் விட்டு வைக்கலியே… பிளான் செம கிளியரா இருக்கு… போலீஸ் விசாரணை எல்லாம் அநாமிகா பேரை வச்சு இயல்பா நடந்தது…”

“ம்ம்… சரி, மேடம் என்ன சொல்லறாங்கன்னு பார்த்திட்டு அடுத்து மூவ் பண்ணிக்கலாம்…”

“ம்ம்… அதான் நல்லது, இன்னும் அவங்களைக் காணோமே, ஒரு போன் பண்ணிப் பாரு…”

“இதோ பண்ணறேன்…” என்றவன் அலைபேசியில் யாருக்கோ அழைத்தான்.

அழைப்பு எடுக்கப்பட்டு, எதையோ சொல்லி கட் ஆனது.

சட்டென்று அவர்களிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.

“இங்க போலீஸ் இருக்காம்… அப்படியே நம்மள கிளம்ப சொல்லறாங்க…” என்றதும் இருவரும் சுற்றிலும் பார்த்துவிட்டு எழுந்து நடக்க, அவர்களை அஜயும் சச்சியும் ஆளுக்கொருவராய் கோழியாய் அமுக்கினர்.

சட்டென்று பிடிபட்டதும் திமிறி விடுபட முயன்றவனின் கையை பின்பக்கமாய் வளைத்துப் பிடித்தான் அஜய்.

மற்றவன் சச்சியின் கையிலிருந்து நழுவப் பார்க்க அவன் முழங்காலுக்கு கீழே மெல்ல உதைக்கவும் தடுமாறி விழுந்தவனை சச்சி பிடித்துக் கொண்டார்.

“வி..விடுங்க, எதுக்கு எங்களைப் பிடிக்கறீங்க…” திமிறிக் கொண்டே விடுபட முயன்றான்.

“உங்களுக்கு மாமியார் வீட்டுல விருந்து வைக்க ஆசையா இருக்கு, அதான்…” என்றவன், “சச்சி, ஜீப்பை எடுத்துட்டு வர சொல்லுங்க…” என்றான்.

“எஸ் சார்…” என்ற சச்சி அலைபேசியில் விஷயத்தை சொல்ல, தயாராய் இருந்த போலீஸ் ஜீப் சைரனுடன் ஹோட்டல் முன் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கி வந்த இரண்டு கான்ஸ்டபிள்ஸ் இருவரையும் இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றினர்.

“சச்சி, இவங்களை ஸ்டேஷன் கூட்டிப் போயிடுங்க… நான் வண்டில வந்திடறேன்…” சொன்னவன் புல்லட்டை நோக்கிப் போனான்.

ஜமுனா சுந்தரின் அருகே தலை கவிழ்ந்து அமர்ந்திருக்க, அவளை விசாரித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணா.

“சுந்தரோட ஸ்டேட்மென்ட்ல, உங்க கணவர் சந்தோஷ் யாருகிட்டயோ உங்களை வெட்டிங் டே அன்னைக்குப் போட்டுத் தள்ளனும்னு பேசிட்டு இருந்ததா சொல்லிருக்கார், அது உண்மைதானா…?”

“ம்ம்… அவருக்கு எங்க விஷயம் தெரிஞ்சிருச்சு, என்னைக் கொல்ல முடிவு பண்ணிட்டதா அவர் போன்ல சொன்னதை நான் கேட்டேன்…”

“அவர் யாருகிட்ட பேசினார்னு தெரியுமா…?”

“அவரோட நண்பர் கஜவேல் கிட்ட…”

“கஜவேலா..? ஆளுங்கட்சி பிரமுகர் கஜவேலையா சொல்லறிங்க…?”

“ஆமா அவர்தான்…!”

“அவருக்கும், சந்தோஷ்க்கும் என்ன தொடர்பு…?”

“அந்த கஜவேலோட பல பிசினஸ்க்கு இவர்தான் லீகல் அட்வைசர், ஆனா செய்யறது எல்லாம் இல்லீகல் பிசினஸ் தான்… எனக்கு என் கணவர் செய்யறது பிடிக்கல… சுந்தர் எனக்கு காலேஜ்ல சீனியர்… அப்ப நட்பா இருந்த பழக்கம் என் கணவரைப் பத்தி அவர்கிட்ட புலம்பி, அவர் ஆறுதல் சொல்லி காதலா மாறிடுச்சு…”

“கள்ளக் காதலா மாறிடுச்சுன்னு சொல்லுங்க…”

“நல்ல காதல் இருந்தாத் தானே சார், அதான் இல்லையே… சந்தோஷ்க்கு தெரிஞ்சதெல்லாம் பணம், பணம் மட்டும் தான்… எத்தனை பேரோட வாழ்க்கையை இல்லாமப் பண்ணி அவங்க வயித்துல அடிச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சு வச்சிருக்கார்… எல்லாம் அந்த அரசியல்வாதி சப்போர்ட் இருக்கிற தைரியம்… பிடிக்காத வாழ்க்கையை நானும் எவ்ளோ நாள் தான் பொறுத்துக்கறது… அவரைப் பத்தி தெரிஞ்சதால எதிர்க்கவும் தைரியம் இல்லை…”

“பிடிக்கலேன்னா ரெண்டு பேரும் முறைப்படி டைவர்ஸ் வாங்கி இருக்கலாமே…?”

“அதுக்கு சந்தோஷ் சம்மதிக்க மாட்டார்… அவருக்கு ஒரு பழக்கம் இருக்கு… தனக்குப் பிடிக்கலேன்னா அதை யாருக்கும் கொடுக்க மாட்டார், அழிச்சிருவார்…” என்ற ஜமுனாவின் முகம் சிவந்து கிடந்தது.

“அதுக்காக நீங்களே அவரைக் கொல்ல முடிவு பண்ணுவீங்களா…?”

“அது ஒரு வேகத்துல எடுத்த முடிவு சார்… சுந்தர் வேண்டாம்னு தான் சொன்னார், ஒருவேளை சந்தோஷ் இறக்கறதுக்கு முன்னாடி போயிருந்தாலும் இவரால கொன்னிருக்க முடியுமான்னு தெரியல…” என்றாள் ஜமுனா.

“சந்தோஷ் ஏன் சுந்தரைப் போட்டுத் தள்ள நினைக்காம, உங்களை முதல்ல கொல்ல நினைச்சார்…?”

“என்னைக் கொல்ல நினைச்சதுக்கு எங்க தொடர்பு தெரிஞ்சது மட்டும் காரணமில்ல சார்…”

“பின்ன என்ன காரணம்…?”

“அவர் பண்ணின நிறைய தப்புகள் எனக்குத் தெரியும், எங்க நான் அதை போலீஸ்ல சொல்லிடுவனோங்கற பயம் தான்…”

“ஹோ… எந்த மாதிரி தப்புகள்னு சொல்ல முடியுமா…?” கிருஷ்ணா கேட்க சொல்லத் தொடங்கினாள் ஜமுனா.

“இத்தனை கேப்பமாரித்தனம் பண்ணி இருக்கானா அந்த சந்தோஷ்…?” மனதுக்குள் நினைத்துக் கொண்டவர், “சரி… நீங்க சொன்னதை எல்லாம் ரைட்டர் ஸ்டேட்மெண்டா எழுதித் தருவார், ரெண்டு பேரும் சைன் பண்ணிடுங்க… இப்ப ஜாமீன்ல உங்களை விடறோம்… எப்ப விசாரிக்க கூப்பிட்டாலும் வரணும்…” சொன்ன கிருஷ்ணா தனது இருக்கைக்கு சென்றார்.

“கோகுல்… அந்த கஜவேல் ஏதோ ட்ரீட்மென்ட்டுக்கு வெளிநாடு போனதா பேப்பர்ல படிச்ச நியாபகம்…?”

“ஆமா சார், பேருக்கு தான் ட்ரீட்மென்ட்… கவர்மென்ட் செலவுல வெளிநாட்டை சுத்திப் பார்க்கப் போயிருக்கார்…”

“ம்ம்… அவர் எப்ப திரும்பறார்னு எதுவும் நியூஸ் இருக்கா…?”

“நாளைக்கு வந்திருவார்னு இன்னைக்குப் பேப்பர்ல போட்டிருக்கான் சார்…”

“ஓகே… அந்த பென் டிரைவ் பாஸ்வர்டு ரிமூவ் பண்ண யாரையோ வர சொன்னிங்களே, வந்துட்டாரா…?”

“இப்ப தான் கால் பண்ணேன்… ஆன் தி வே ல இருக்கார்…”

“மிஸ்டர் அஜய் கால் பண்ணார்… கேசுல முக்கியமான ரெண்டு பேர் மாட்டிருக்காங்க, இப்ப ஸ்டேஷனுக்கு தான் கொண்டு வந்திட்டு இருக்காங்க…” சொல்லும்போதே ஜீப் உள்ளே வந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வந்தனர். பின்னிலேயே அஜயும் புல்லட்டில் வந்தான்.

“சார், இதுல ஒண்ணு அஸ்வின்… போட்டோல பார்த்திருக்கோம்… இன்னொருத்தன்…?” என்றார் கோகுல்.

“மித்ரன்…!” என்றான் அஜய்.

Advertisement