Advertisement

அத்தியாயம் – 13

“அநாமிகாவை உங்களுக்குத் தெரியுமா…?” ஆச்சர்யமாய் கேட்டான் அஜய்.

“ம்ம்… எனக்குத் தெரிஞ்ச அநாமிகா ஒரு நர்ஸ்…”

“நாங்களும் அவங்களை தான் கேட்டோம்… உங்களுக்கு எப்படிப் பழக்கம்…?”

“என் பொண்ணு சுவாதிக்கு உடம்பு சரியில்லாம ஒருதடவை ரோட்டுல மயங்கி விழுந்துட்டா, அப்ப நர்ஸிங் படிச்சிட்டு இருந்த அநாமிகா தான் அவளுக்கு முதலுதவி பண்ணி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க…”

“ஓ… இது எப்ப நடந்தது…?”

“ஆறு வருஷம் இருக்கலாம்…”

“அந்த சின்ன உதவி செய்ததுக்கா இத்தனை வருஷமா நினைவில் வச்சிருக்கீங்க…” அஜய் கேள்வியில் சந்தேகம் தொக்கி நின்றது.

“அது சின்ன உதவி இல்ல, சார்… என் பொண்ணுக்கு சிறுநீரகத்துல ஏதோ பிரச்சனை இருந்திருக்கு, அது வரைக்கும் வெளிய தெரியாம இருந்த பிரச்சனை அன்னைக்கு மயங்கி விழுந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்ப தான் தெரிஞ்சது… அநாமிகா அந்த உதவியோட நிறுத்திக்கல, காலேஜ் போகும்போது தினமும் வீட்டுக்கு வந்து சுவாதியைப் பார்த்து ஆறுதலா பேசிட்டு போவா…”

“அந்த அநாமிகா ஒரு கார் ஆக்சிடன்ட்ல இறந்து போனது உங்களுக்குத் தெரியுமா…?”

“ஓ..! அந்தப் பொண்ணு இறந்திடுச்சா..? நல்லவங்களுக்கு எப்பவும் ஆயுள் கம்மி தானே..?” என்றார் விரக்தியுடன்.

“பொண்ணுக்கு கிட்னில பிரச்சனைன்னு தெரிஞ்சதும் அதை சரி பண்ணிட்டீங்களா…?”

“ஒரு ஆப்பரேஷன் பண்ணா சரியாகிடும்னு தான் டாக்டர் சொன்னாங்க… நானும் கஷ்டப்பட்டு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன், அப்பதான்…” என்றவர் நிறுத்திவிட்டு,

“நான் ஜெயிலுக்கு வர வேண்டிய சூழல் ஆகிடுச்சு… என் பொண்ணுக்கு எந்த ஆப்பரேஷனும் வேண்டாம்னு அம்மாவும், மகளும் தூக்குல தொங்கி மூச்சை நிறுத்தி கிட்டாங்க… இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காதிங்க ப்ளீஸ்…” என்றவரின் கண்கள் கண்ணீரில் தழும்பி நிற்க, இருவரும் எழுந்து கொண்டனர்.

“உங்களுக்கு டாக்டர் பிரபஞ்சன், லாயர் சந்தோஷ், உங்க பழைய எம்டி பிரகாஷ் மூணு பேரும் கொலையானது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்… ஐ மீன் யாராச்சும் சொல்லித் தெரிஞ்சிருப்பீங்கன்னு சொன்னேன்…”

“இ..இல்ல, யாரும் சொல்லலை…”

“அதை எல்லாம் யாரு பண்ணறாங்கன்னு தெரியுமா…?”

“எனக்கு எப்படித் தெரியும்…?”

“கரக்ட், உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை… உங்க தகவலுக்கு நன்றி, வர்றோம்…” என்றவன் வெளியே நடக்க கனகராஜ் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அமைதியாய் வெளியே வந்த அஜயின் மனது கனகராஜின் வார்த்தைகளில் கலங்கி அதற்குள் மீன் பிடிக்க முயல யோசித்தபடி நடந்தவனை தொடர்ந்தார் கிருஷ்ணா.

“சார், இந்த கனகராஜ் கிட்ட ஏதோ விஷயம் இருக்கு, ஓப்பனா பேசாம அவாய்டு பண்ணறார்… நாலு தட்டு தட்டி விசாரிச்சா எல்லாத்தையும் சொல்லிடுவார்…”

“கிருஷ்ணா, அவர் விசாரணைக் கைதி இல்லை, அஞ்சு வருஷமா தண்டனையை அனுபவிக்கிற தண்டனைக் குற்றவாளி… அவரை நாம பொறுமையா தான் டீல் பண்ணனும்… இவர் அடுத்த வாரம் தானே ரிலீஸ் ஆகறார்…”

“இன்னும் ஆறு நாள்ல சார்…”

“ஓகே… நாம இப்ப டாக்டர் வீட்டுக்குக் கிளம்பறோம்…” என்றவன் வேகமாய் நடக்க பின் தொடர்ந்தார்.

“அக்கா, நாங்க சீக்கிரம் வந்துடறோம்… பத்திரமா இரு…” தேவியிடம் சொல்லிவிட்டு சுபா கணவனுடன் வெளியே கிளம்ப அவர்களை அனுப்பிவிட்டு அங்கேயே நின்றவள் வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் திகைத்தாள்.

“ஹலோ மேடம், மறுபடி ஒரு சின்ன என்கொயரி…” சொன்னவனை நோக்கி சோகமாய் புன்னகைத்தவள், “வாங்க சார்…” உள்ளே அழைத்தாள்.

“என் பிரபாவை யார் கொன்னாங்கன்னு விசாரணைல எதுவும் தெரிஞ்சுதா சார்…” கேட்ட தேவியைக் கண்டு அந்தக் காக்கிச் சட்டைக்காரர்களுக்கும் பரிதாபமாய் இருந்தது.

“இன்னும் இல்ல மேடம், விசாரணை நடந்திட்டு இருக்கு… எங்களுக்கு டாக்டரோட பர்சனல் ரூமைக் கொஞ்சம் பார்க்கணுமே…?” என்றான் அஜய்.

“வாங்க…” ஹாலைக் கடந்து மாடிப் படியேறி படுக்கை அறையை ஒட்டி இருந்த அறை ஒன்றுக்குள் நுழைந்தாள்.

“இதான் சார், அவரோட பர்சனல் ரூம்… இந்த வீட்டுல அவர் அதிகமா இருக்கறது இந்த ரூம்ல தான்…”

“ஓகே! கிருஷ்ணா…” என்றதும் அவர் சுறுசுறுப்புடன் அங்கிருந்த செல்ப், அலமாரி எல்லாம் விடாமல் அலசத் தொடங்கினார்.

“மேடம்… உங்க ஹஸ்பன்ட் ஹாஸ்பிடல்ல நடக்கிற விஷயம் எல்லாத்தையும் வீட்டுல ஷேர் பண்ணிப்பாரா…?”

“இல்ல சார், வேலை வேற, வீடு வேற… ரெண்டையும் கன்பியூஸ் பண்ணிக்கவே கூடாதுன்னு அவர் சொல்லுவார்…”

“உங்களுக்கு அவர் ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ண நர்ஸ் அநாமிகாவை தெரியுமா…?”

“ரெண்டு வருஷம் முன்னாடி ஏதோ ஆப்பரேஷன்ல தப்பா மருந்தை எடுத்துக் கொடுத்து ஒரு உயிர் போகக் காரணமா இருந்தாளே, அந்தக் கொலைகார நர்ஸ் தானே…?”

“ம்ம்… ஆமாம்…!”

“பிரபா சொல்லிருக்கார், அந்தப் பொண்ணு கவனக்குறைவால அநியாயமா ஒரு உயிர் போயிடுச்சுன்னு வருத்தப்பட்டார்…”

“சம்பவம் அன்னைக்கு ஹோட்டல் ரிசப்ஷன்க்கு அநாமிகா பேருல ஒரு கால் வந்துச்சே, அப்ப உங்களுக்கு அந்தப் பேருல யாரையும் தெரியாதுன்னு தானே சொன்னிங்க…?”

“அன்னைக்கு இருந்த மனநிலைல என்னால எதையும் யோசிக்க முடியலை…”

“அப்ப மெடிக்கல் பீல்டுல உள்ள யாராச்சுமா இருக்கலாம்னு சொன்ன உங்களுக்கு இப்ப மட்டும் எப்படி நியாபகம் வந்துச்சு…”

“இது ரெண்டு வருஷம் முன்னாடி நடந்த விஷயம் தானே, சட்டுன்னு நினைவு வரலை, அப்புறம்தான் யோசிச்சேன்…”

“ஓகே, அந்தப் பொண்ணு அநாமிகா ஒரு கார் விபத்துல இறந்துட்டாங்கன்னு தெரியுமா…?”

“அந்தப் பொண்ணு இறந்திடுச்சா…? எனக்குத் தெரியாதே…” அவள் கண்ணில் உண்மையான அதிர்ச்சி தெரிந்தது.

“உங்களுக்கு லாயர் சந்தோஷ் தெரியுமா…?”

“தெரியும், ரெண்டு பேரும் ஸ்கூல் பிரண்ட்ஸ், ஏதோ ஒரு பிரச்சனைல மனஸ்தாபம் வந்து பேசிக்கிறதில்லைனு சொல்லிருக்கார்… அவரும் இறந்துட்டாராமே…? நேத்து தான் சுபா பேப்பர்ல பார்த்துட்டு சொன்னா…”

“ம்ம், பிரகதி எக்ஸ்போர்ட்ஸ் பிரகாஷ் தெரியுமா…?”

“அவ்வளவா தெரியாது, அவர் ஒயிப்க்கு இவர்தான் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்… ஒரு சமயம் அவருக்கு பிசினஸ்ல பிராப்ளம்னு தற்கொலை பண்ணிக்கப் போயி இவர் பைனான்ஸ் பண்ணி சப்போர்ட் பண்ணதா சொல்லிருக்கார்… என் பிரபா ரொம்ப நல்லவர் சார், எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணி நல்லவனா இருந்தவரை அந்தக் கடவுள் ஏன் அல்பாயுசுல போக வச்சான்னு தெரியல…”

“இவளுக்கு கல்யாணமாகி இத்தனை வருஷத்தில் இன்னும் கணவனைப் புரிந்து கொள்ள முடியவில்லையே…” என வருத்தம் தோன்றினாலும் அவளது எண்ணத்தை மாற்ற அஜய் முயலவில்லை.

“கிருஷ்ணா, எல்லாம் பார்த்துட்டிங்களா…?”

“இந்த மேஜை டிராயர் மட்டும் லாக் ஆகிருக்கு சார்…”

“மேடம், இதோட கீ தர்றீங்களா…” அஜய் கேட்க,

“இதோ, இங்கிருக்கும் சார்…” என்றவள் சாவியை எடுத்துக் கொடுத்தாள்.

சாவியை வைத்துத் திருக்க லாக் திறந்து ஓபன் ஆகியது. மூன்று அடுக்குகளைக் கொண்ட டிராயரில் ஒன்றில் செக் புக், பாஸ்புக், ஆதார், பான் கார்டு என்று பர்சனல் விஷயங்கள் இருக்க மற்றொரு டிராயரில் மருந்து மாத்திரைகள், உபயோகிக்கப் படாத நீடில்கள் குட்டி குட்டி பெட்டிகளிலும் பிளாஸ்டிக் கவரிலும் தெரிந்தது.

மூன்றாவது டிராயரைத் திறக்க அதில் ஒரு டைரி, சில விசிட்டிங் கார்டுகள், மெடிக்கல் சம்மந்தமான புத்தகம் ஒன்று. அதைப் புரட்டிப் பார்த்தவன் கண்ணில் அதற்குள் இருந்த பென் டிரைவ் தட்டுப்பட புத்தகத்தை வைப்பது போல் கீழே குனிந்து அதை எடுத்து பதுக்கிக் கொண்டான்.

டைரியை எடுத்து பேப்பரைத் திருப்ப அதற்குள் நிறைய மெடிக்கல் வார்த்தைகளை கண்டவன், ஒரு இடத்தில் மகதி என்று எழுதி அதற்குக் கீழே ஏதோ எழுதியிருக்க, அதை மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டான்.

தேவிக்கு நன்றி சொல்லிக் கிளம்பினர்.

“அடுத்து எங்க சார்…?”

“ரொம்பப் பசிக்குது, வீட்டுக்குப் போக நேரமில்லை… வழியில ஒரு இளநீர் குடிச்சிட்டு பிரகாஷ் ரூமையும் அலசிடுவோம்… நிச்சயம் அங்கயும் ஏதாச்சும் கிடைக்கலாம்…”

“ஓகே சார்…”

“நீங்க SI கோகுல்க்கு போன் பண்ணி பிரகாஷ்க்கு எங்கெங்கே பாங்கு அக்கவுன்ட் இருக்கு, லாக்கர் பெசிலிடி இருக்குனு விசாரிச்சு வைக்க சொல்லுங்க…”

“சொல்லிடறேன் சார்…”

“அந்த அஸ்வினைப் பத்தி விசாரிக்க சொல்லிருந்தனே…?”

“இப்ப கேட்டுடறேன் சார்…” சொன்ன கிருஷ்ணா மொபைலை எடுத்து கோகுலிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டு வந்தார்.

“நம்ம சந்தேக வளையத்துல இருக்கிற எல்லா ஆளுங்க போனும் மானிட்டர் பண்ணிட்டே இருக்க சொல்லுங்க… எங்காச்சும் ஒரு லிங்க் கிடைக்கும்…” சொன்ன அஜய் ஜீப்பில் அமர கிருஷ்ணா வண்டியை எடுத்தார்.

பிரகாஷ் வீட்டுக்கு சற்றுத் தள்ளி ஜீப்பை நிறுத்தி இறங்கினர்.

முன்னில் இருந்த காரைத் துடைத்துக் கொண்டிருந்த நாராயணன் கேட்டைத் திறந்து உள்ளே வந்தவர்களைக் கண்டு சட்டென்று அதிர்ந்து இயல்புக்கு வந்தாலும் அஜய் பார்வையில் அந்த அதிர்ச்சி சிக்கிக் கொண்டது.

“மிஸ்டர்.பிரகாஷ் மதர் இன் லா இருக்காங்க தானே…?”

“இருக்காங்க சார், கூப்பிடறேன்…” என்று உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் மாலதி பார்வைக்குக் கிடைக்க, “உள்ளே வரலாமா…?” என்றான் அஜய்.

“வாங்க சார், மறுபடி விசாரணையா…?” என்றார் அவர்.

“அன்னிக்கு வந்தப்ப மிஸ்டர் பிரகாஷ் ரூமை செக் பண்ணலை, அதான் இன்னைக்கு பார்க்க வந்தோம்…” சொல்லவும் மாலதியின் முகத்தில் ஒரு விருப்பமின்மை தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “ஓ வாங்க…” என்றார்.

“மிசஸ் பிரகாஷ்…?”

“ரூம்ல இருக்கா… இதான் அவர் ரூம்…” ஒரு அறையைக் காண்பிக்க உள்ளே நுழைந்தனர். சுவரில் இருந்த புகைப்படம் ஒன்றில் அழகான மகதி கணவன் அருகே நாணத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

மேலோட்டமாய் செல்பில் தேடிவிட்டு மேஜை டிராயரை இழுக்க அது பூட்டி இருந்தது.

“இதோட சாவி எங்கே…?”

“அது ரொம்ப நாளா பூட்டி இருக்கு, சாவி எங்கயோ மிஸ் ஆகிருச்சுன்னு பிரகாஷ் சொல்லிருக்கார்…” என்ற மாலதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிருஷ்ணா, “உங்ககிட்ட மாஸ்டர் கீ இருக்கா…” என்றான் அஜய்.

“ஜீப்புல இருக்கு சார்… எடுத்துட்டு வர்றேன்…” என்றவர் சின்னதும், பெரிதுமாய் பலதரப்பட்ட சாவிகள் அடங்கிய மாஸ்டர் கீயுடன் வந்தார். ஒவ்வொரு சாவியாய் அதற்கு கொடுத்து நோக்க ஐந்தாவது சாவிக்கு லாக் விடுபட்டு திறந்து கொண்டது. உள்ளே பார்த்தவர்களின் கண்கள் ஆச்சர்யத்துக்கு சென்றன. பெட்டி பெட்டியாய் பல விதங்களில் சீட்டுக் கட்டுகள் பார்வைக்குக் கிடைத்தன.

Advertisement