Advertisement

அத்தியாயம் – 12

காலையில் அஜய் நியூஸ் பேப்பரை விரித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்க கிட்சனில் காபி கலந்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

“என்னங்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா ஒவ்வொரு விசாரணைக்கும் புதுத் தகவல் கிடைக்குது…?”

“ம்ம்… ஒரு கேசோட விசாரணை மட்டுமில்லையே, இது மூணு கொலைக்கான விசாரணை ஆச்சே…!”

“ம்ம்… அந்த லாயர் பொண்டாட்டி, ஜூனியர் லாயர் சுந்தரோட சேர்ந்து இப்படிப் பண்ணிருப்பான்னு நினைக்கவே இல்ல, அவங்க தொடர்பை எப்படி கண்டு பிடிச்சிங்க…?”

“எப்ப சுந்தர் மேல சந்தேகம் வந்துச்சோ, அப்பவே அவனோட போன் ஹிஸ்டரில இருந்து எல்லாமே குடைய ஆரம்பிச்சோம்… அதேபோல அந்த ஜமுனாவோட போன் ஹிஸ்டரி செக் பண்ணப்பத்தான் ரெகுலரா ஒரு நம்பருக்கு கால் போனது தெரிய வந்தது. அது யாரு பேர்ல இருக்கிற சிம்னு பார்க்கிறப்போ தான் சுந்தரராஜன் பேருல சிம்னு தெரியவும் லாஜிக் மேட்ச் ஆச்சு…”

“ஹூம் கில்லாடி தான், எப்படில்லாம் கண்டு பிடிக்கறீங்க…” என்றவள் இரண்டு கப்பில் காபியுடன் அருகில் அமர்ந்தாள்.

“பின்ன தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா…?”

“அடுத்த விசாரணை யாருகிட்ட…?”

“இப்ப நேரா ஜெயிலுக்கு தான் போறோம், கனகராஜ் பத்தி தெரிஞ்சதும் அவன் தான் பழிவாங்க அநாமிகா பேர்ல இப்படி செய்யறானோன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு… ஆனா அவன் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்ல… அவனை ஜெயில்ல மீட் பண்ணா ஏதாச்சும் க்ளூ கிடைக்கலாம், பார்ப்போம்…”

சொன்னவன் எழுந்து ஷேவ் பண்ண செல்ல, அலைபேசி சிணுங்கி, கிருஷ்ணாவின் பெயர் ஒளிர்ந்தது.

எடுத்து காதுக்குக் கொடுத்த அஜய், “சொல்லுங்க கிருஷ்ணா…” என்றான்.

“சார், அநாமிகா பின்னணியைப் பத்தி விசாரிச்சதுல ஒரு முக்கியமான விஷயம் கிடைச்சிருக்கு…”

“என்ன விஷயம்…?”

“அவளுக்கு அஸ்வின்னு ஒரு லவ்வர் இருக்கான்… அவன் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்… மைக்ரோ பைட்ஸ்ங்கற கம்பெனில டெவலப்பிங்ல இருந்தான்… அநாமிகா இறந்த பிறகு ஜாப்க்கு வர்றதில்லைன்னு சொல்லிருக்காங்க…”

“ஓ… அவனோட அட்ரஸைப் பிடிங்க, கிளம்பிட்டேன்…”

சொன்ன அஜய் அவசரமாய் ஷேவிங்கோடு குளியலை முடித்து சாப்பிடாமலே கிளம்பத் தயாராக, அவன் உடை அணியும் நேரத்தில் முறைப்புடன் இட்லியை ஊட்டி விட்டாள் அவன் மனைவி.

“விட்டா சாப்பிடாமலே ஓடிருவிங்க, புறப்பட்டுட்டே இந்த இட்லியை முழுங்குங்க…” தனக்காய் சீக்கிரம் டிபன் தயார் செய்தவளிடம் மறுக்க முடியாமல் வாயைத் திறந்தான்.

“அச்சு, எனக்கு நீ ஒரு காரியம் பண்ணனுமே…”

“சொல்லுங்க…”

“நான் நாலஞ்சு மெடிக்கல் நேம்ஸ் சொல்லுவேன், உன் டாக்டர் பிரண்டு ராகவி கிட்ட அதை சொல்லி அது சம்மந்தமான டீடைல்ஸ் கேட்டு வைக்கணும்…” என்றதும் உற்சாகமானாள்.

“சரிங்க பெயர் சொல்லுங்க…” என்றதும் எழுதிக் கொடுத்தான்.

அஜய் கிளம்பிப் போகவும் கதவைத் தாளிட்டு வந்தவள் முதலில் வயிற்றை நிறைத்துவிட்டு அலைபேசியை எடுத்து தோழிக்கு அழைத்தாள்.

இவளது கேள்விகளுக்கு அவள் சொன்ன விளக்கமும், பதிலும் வயிற்றில் அட்ரீனல் சுரப்பியை அதிகம் சுரந்து ரத்த அழுத்தம் கூட்ட அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டாள்.

கிண்டி.

வெங்கடாபுரம் பகுதியிலுள்ள சைதன்யா அபார்ட்மென்ட், குடியிருப்பின் பார்க்கிங் ஏரியாவில் புல்லட்டை அணைத்து ஊமையாக்கிவிட்டு அஜயும் கிருஷ்ணாவும் இறங்கினர்.

அங்கிருந்த செக்யூரியிடம் அஸ்வினின் வீட்டு எண்ணை சொல்லி விசாரிக்க, “போர்த் புளோர்ல லாஸ்ட் வீடு சார்… லிப்ட் அங்க இருக்கு…” என்று கை காட்டினார்.

அவர் சொன்னது போல் லிப்டில் ஏறி நான்காவது தளத்துக்கு வந்து இறுதியாய் இருந்த வீட்டின் முன் கதவில் பதித்திருந்த எண்ணை சரி பார்த்து அழைப்பு மணியை அழுத்த, லுங்கி பனியனுடன் ஒருவர் எட்டிப் பார்த்தார்.

அஸ்வினின் தந்தையாய் இருக்க வேண்டும் என்றது அவரது ஐம்பதில் இருந்த தோற்றம்.

“அஸ்வின் வீடு தானே…?”

“ஆமா…! நீங்க..?”

“போலீஸ்…” சொல்லிக் கொண்டே ஐடி கார்டைக் காட்ட சட்டென்று அவர் முகம் மாறியது.

“போ..போலீசா, என்ன விஷயம் சார்…?”

“உள்ள வந்து பேசலாமா…?” கேட்டதும் ஒதுங்கி வழிவிட்டார்.

“யாருங்க…” அங்கங்கே நரைத்த முடியுடன் என்ட்ரி ஆன பெண்மணி அஸ்வினின் தாயாய் இருக்க வேண்டும்.

“நீங்க அஸ்வினோட அப்பா, அம்மாவா.? அவர் இல்லயா…?”

“ஆமா சார்… எதுக்கு அஸ்வினைக் கேக்கறிங்க…?”

“பயப்படாதிங்க, ஒரு சின்ன என்கொயரி… அவ்ளோதான்…”

“அஸ்வின் இங்க இல்ல சார்… மும்பைல இருக்கான்…”

“மும்பைலயா.? இங்கதானே வொர்க் பண்ணிட்டு இருந்தார்..?”

“ஆமா சார், அவன் லவ் பண்ண பொண்ணு ஆக்சிடன்ட்ல இறந்துடுச்சு… பையன் ரொம்ப நொந்துட்டான்… வேலைக்கு கூடப் போகாம வீட்டுல இருந்தவனுக்கு ஒரு மாற்றமா இருக்கட்டும்னு நாங்கதான் வற்புறுத்தி மும்பைல இருக்கிற இவ தம்பி வீட்டுக்கு அனுப்பி வச்சோம்… அங்க ஒரு ஐடி கம்பெனில இப்ப வேலைக்குப் போயிட்டு இருக்கான்…”

“அஸ்வின் லவ் பண்ண பொண்ணு பேரு என்ன…?”

“அநாமிகா… ரொம்ப நல்ல பொண்ணு, GH ல நர்சா இருந்துச்சு, ஏதோ பிரச்சனைல வேலையை விட்டு நிறுத்திட்டதா அஸ்வின் சொன்னான்…”

“நீங்க அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கீங்களா..?”

“ஒருநாள் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தான்… எங்களுக்கும் அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்துச்சு… கல்யாணத்துக்கு கூட சம்மதம் சொல்லிட்டோம்… ஆனா அந்தப் பொண்ணு தான், நான் மறுபடி வேலைக்கு சேர்ந்த பிறகு கல்யாணம் போதும்னு சொல்லிடுச்சு… என் பையன் அந்தப் பொண்ணு மேல உசுரையே வச்சிருந்தான்… அநியாயமா விபத்துல செத்துப் போனதை தாங்கிக்க முடியாம ரொம்ப உடைஞ்சு போயிட்டான், இப்பதான் கொஞ்சம் மீண்டு வர்றான்…”

“அஸ்வின் மும்பை போயி எவ்ளோ நாளாச்சு…?”

“ரெண்டு மாசமாச்சு சார்…”

“அவர் உங்களை கான்டாக்ட் பண்ணிட்டு தான் இருக்காரா…?”

“ஆமா சார் தினமும் டியூட்டி முடிஞ்சு பேசுவான்…”

“அவர் போன் நம்பர் தர முடியுமா…?”

“தர்றேன் சார், எதுக்கு அவனைப் பத்தின டீடைல்ஸ் கேக்கறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…?”

“அடுத்தடுத்து சிட்டில நடந்த டாக்டர், லாயர், பிசினஸ் மேன் மூணு கொலைகள் பத்தி கேள்விப் பட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்…?”

“பேப்பர்ல பார்த்தோம் சார்…”

“அந்த கேசுக்காக தான் இந்த விசாரணை எல்லாம்… கிருஷ்ணா, அஸ்வின் போன் நம்பர் வாங்கிக்கங்க… அப்படியே அஸ்வின் போட்டோ ஏதாச்சும் இருந்தா அதையும் ஒரு போட்டோ எடுத்துக்கங்க…” என்றான் அஜய்.

“சார், என் பையனுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே…?”

“அதெல்லாம் எதுவும் இல்ல, நம்பர் கொடுங்க…” என்ற கிருஷ்ணா அவர் சொன்ன எண்ணை அலைபேசியில் சேவ் செய்து ஹாலில் இருந்த அஸ்வின் போட்டோவையும் மொபைலில் எடுத்துக் கொள்ள கிளம்பினர்.

“சார், இப்பவே டைம் ஆச்சு, அந்த கனகராஜை ஜெயில்ல மீட் பண்ணப் போகணுமே..?”

“ம்ம்..! இப்ப அங்கதான் போறோம்…” சொன்ன அஜய் யோசனையுடன் முன்னில் நடக்க அவர் தொடர்ந்தார்.

சென்னை மத்திய சிறைச்சாலை. மதிய வெயிலில் குளித்துக் கொண்டு பளபளப்புடன் தெரிந்தது.

கிருஷ்ணாவுடன் உள்ளே நுழைந்த அஜய் ஜெயில் வார்டனிடம் கமிஷனரின் பர்மிஷன் லெட்டரைக் காண்பித்தான்.

“வார்டன் சார், கனகராஜ் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப் போறதா சொன்னாங்க… அவரோட தண்டனைக் காலம் முடிஞ்சிருச்சா…?”

“இல்ல மிஸ்டர் அஜய், நன்னடத்தை லிஸ்ட்ல அவர் பேரும் இருந்ததால முன்னமே விடுதலை ஆகப் போறார்…”

“ம்ம்… ஆள் எப்படி…”

“ரொம்ப சாப்ட் கேரக்டர் தான், யாரோடவும் பேச மாட்டார்… தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பார்… இவரா அந்த மாதிரி கேஸ்ல உள்ள வந்தார்னு எங்களுக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கும்…”

“இவரோட குடும்பத்துல யார் இருக்காங்க..? இவரைப் பார்க்க வருவாங்களா…?”

“இல்ல மிஸ்டர் அஜய், இவரை அரஸ்ட் பண்ணி கேஸ்ல தண்டனை உறுதியானதுமே இவரோட மனைவியும், பொண்ணும் தூக்குல தொங்கி தற்கொலை பண்ணிகிட்டாங்க… இப்ப அவருக்குன்னு யாரும் இல்லை…”

“ஓ… ஐ சீ…” என்றவனின் மனம் அவருக்காய் பரிதாபப் பட்டாலும் ஏதேதோ யோசித்துப் பார்த்தது.

“ரங்கசாமி, கனகராஜ் செல்லுக்கு இவங்களை அழைச்சிட்டுப் போங்க…” வார்டன் சொல்லவும் ரங்கசாமி வந்தார்.

நீண்ட வராண்டாவைக் கடந்து மூவரும் நடந்தனர். மதிய உணவு முடிந்த சமயமாதலால் கைதிகள் அவரவர் அறையில் இருந்தனர்.

வரிசையாய் இருந்த செல்லைக் கடந்து கனகராஜின் செல்லின் முன் நின்றவர், பூட்டைத் திறந்து விட்டார்.

“கனகராஜ், இவங்க ரெண்டு பேரும் போலீஸ் ஆபீசருங்க, உன்கிட்ட ஏதோ விசாரணைக்கு வந்திருக்காங்க…” என்றதும் சட்டென்று நிமிர்ந்து நோக்கிவிட்டு, “நான் யாரையும் பார்க்கவோ, பேசவோ விரும்பல…” என்றார் கரகரத்த குரலில்.

ஐம்பது வயதில் தலை முடி முழுதும் நரைத்து, சிரிக்க மறந்த இதழ்களும், இறுக்கமான முகமுமாய் உர்ரென்ற தோற்றத்தில் அறுபது வயது தோற்றம் காட்டியவரை ஆராய்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தான் அஜய்.

“கனகராஜ், இது ஜஸ்ட் என்கொயரி தான்… உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க… அவங்க கேள்விக்கு பதில் சொன்னாப் போதும்…” என்றார் அந்த சிறைக் காவலர்.

“பேசிட்டு வாங்க சார்…” சொன்னவர் வெளியே நின்றார்.

“கனகராஜ், உங்களைப் பத்தி இங்க நல்ல விதமா சொன்னாங்க, நீங்க கூட நன்னடத்தைல அடுத்த வாரமே ரிலீஸ் ஆகப் போறீங்கன்னு கேள்விப்பட்டோம்… இப்படி உள்ள ஒருத்தர் நிச்சயம் பிரகதி விஷயத்துல தப்புப் பண்ணியிருக்க மாட்டிங்கன்னு நம்பறோம்…” என்றதும் அவர் கண்ணில் ஒரு வெளிச்சம் தோன்ற நிமிர்ந்து பார்த்தார்.

“இனி நம்பி என்னாகப் போகுது…” அவர் பட்டென்று கேட்க அஜயும் கிருஷ்ணாவும் திகைத்தனர்.

“சட்டத்துக்குத் தேவை சாட்சியும் ஆதாரமும் தான்… நம்பிக்கை இல்லையே… நம்பி இருந்தா என் மனைவியும், பொண்ணும் இப்ப உயிரோட இருந்திருப்பாங்களே…” என்றவரின் கண்கள் நனைந்து பளபளத்தது.

“அன்னைக்கு உண்மைலயே என்ன நடந்தது…? அதைத் தெரிஞ்சுக்க தான் நாங்க வந்தோம்…”

“வேண்டாம் சார், நடந்த, முடிஞ்ச எதையும் இனி நான் பேசத் தயாரா இல்லை… கேக்க வேண்டிய நேரத்துல கேக்காம, கிடைக்க வேண்டிய நியாயத்தைத் தராம, எல்லாம் முடிஞ்சு போன பிறகு எதுக்கு தெரிஞ்சக்கணும்…? ப்ளீஸ், என்னைத் தொந்தரவு பண்ணாம போயிடுங்க…” என்றார் கையைக் கூப்பிக் கொண்டு.

“ஓகே… நாங்க உங்களை பழைய விஷயம் பேசி சங்கடப் படுத்தல… இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுங்க…” என்றவனை ஏறிட்டார் கனகராஜ்.

“உங்களுக்கு அநாமிகா ன்னு யாரையாச்சும் தெரியுமா…?”

அஜயின் பார்வை கனகராஜின் முகத்தைத் துளைக்க, வினாடிக்கும் குறைவாய் அவர் முகத்தில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.

“தெ..தெரியும்…” கனகராஜ் தயக்கத்துடன் தலையாட்டினார்.

Advertisement