Advertisement

அத்தியாயம் – 11

பிரகதி எக்ஸ்போர்ட்ஸ்.

முகப்பில் பெரிய போர்டைத் தாங்கியபடி நின்றது அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கம்பெனி. வகை வகையாய் கிடந்த டீஷர்ட்களைத் தரம் வாரியாய் பிரித்து, சைஸ் ஸ்டிக்கரை சில பெண்கள் ஒட்டிக் கொண்டிருக்க, அது அப்படியே விலை, பிராண்டு ஸ்டிக்கர் போடும் பெண்களின் கைக்கு சென்றது. அடுத்து செக்கிங் முடிந்து பேக்கிங் செக்சனுக்கு அனுப்பினர். ஆணும் பெண்ணுமாய் குறைந்தது முப்பது பேர் அந்தக் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அஜயும், கிருஷ்ணாவும் அந்தக் கம்பெனியை மானேஜருடன் ஒரு சுற்று வந்து கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு அவரது அறைக்கு நுழைந்தனர்.

மானேஜர் – பி.ராகவன், கறுப்பு வண்ண பிளாஸ்டிக் எழுத்துக்கள் பெயர்ப் பலகையில் பளிச்சிட்டது.

“உக்காருங்க சார்…” முன் வழுக்கை மின்ன, மதமதத்த உடம்புடன் இருந்த மானேஜர் ராகவன், எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட அமர்ந்தனர். ஏர்கண்டிஷனின் இதமான ஜில்லிப்பை சில கணங்கள் அனுபவித்து நிமிர்ந்தனர்.

“சார், டீ சாப்பிடறீங்களா…?” ராகவன் கேட்க சம்மதமாய் தலையாட்டினான் அஜய். இன்டர்காமில் அழைத்து சொல்லிவிட்டு இவர்களை ஏறிட்டான் ராகவன்.

“இது சொந்த பில்டிங்கா..?”

“இல்ல சார், வாடகைக்கு எடுத்திருக்கோம்…”

“எத்தன வருஷமா இங்க வொர்க் பண்ணறீங்க…?”

“நான் ஜாயின் பண்ணி அஞ்சு வருஷம் ஆச்சு…”

“அஞ்சு வருஷம் முன்னாடி பிசினஸ் நஷ்டமாகி உங்க எம்டி தற்கொலை வரைக்கும் போனது உண்மையா…?”

“நான் அதுக்குப்பிறகு தான் ஜாயின் பண்ணேன்… ஆனா, இதைக் கேள்விப் பட்டிருக்கேன் சார்…”

“எப்படி அந்த நஷ்டத்தை சரி பண்ணி கம்பெனியை நல்ல நிலமைக்கு கொண்டு வந்தார்னு தெரியுமா…?”

“லோன், பிராப்பர்ட்டி சேல் பண்ணி இங்க இன்வஸ்ட் பண்ணதா எம்டி சொல்லிருக்கார்…” அப்போது டீ டிரேயுடன் வந்த ஒருவர் கப்பை நீட்ட வாங்கிக் கொண்டனர்.

அதைக் குடித்துக் கொண்டே “மிஸ்டர் ராகவன், இங்க வொர்க் பண்ண கனகராஜ் தெரியுமா…?” என்றான் அஜய்.

“கனகராஜ் கேஸ் முடிஞ்சு ஜெயிலுக்குப் போன பின்னாடி தான் நான் இங்கே ஜாயின் பண்ணேன் சார், நான் மட்டும் இல்ல, இங்க உள்ள எல்லாருமே அதுக்குப்பிறகு ஜாயின் பண்ணவங்க தான்…”

“ஓ…” என்றான் அஜய் குழப்பத்துடன்.

“அந்த கனகராஜ் பத்தின ரெகார்ட்ஸ்…? அவங்க பாமிலி…?”

“சாரி சார், அஞ்சு வருஷம் முன்னாடி உள்ள எந்த ரெக்கார்டும் இங்க இல்லை, சார் பொண்ணுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னாடி கேஸ் முடிந்து கனகராஜ் ஜெயிலுக்குப் போகற வரைக்கும் கம்பெனியே ஓபன் பண்ணலன்னு கேள்விப்பட்டேன்… அப்புறம் பிசினஸ் பில்டிங், வேலைக்கு ஆள்னு எல்லாமே புதுசா ஸ்டார்ட் பண்ணார்…”

“ம்ம்…” என்ற அஜய் குழப்பத்துடன் பார்த்திருந்தான்.

“சரி, உங்க எம்டி க்கு தொழில் முறை எதிரி யாராச்சும் இருக்காங்களா…?”

“அப்படிலாம் யாரும் இல்ல சார், இவர் எல்லாரோடவும் நல்லாப் பழகுவார்… நிறைய நண்பர்கள்தான் இருக்காங்க…”

“பிரகாஷோட ரூமை நாங்க பார்க்கணுமே…” என்றதும் அழைத்து சென்றார் ராகவன். அங்கிருந்த மேஜை டிராயரைக் குடைந்தும் உருப்படியாய் எதுவும் கிடைக்கவில்லை.

“ம்ம்… ஓகே, தேங்க்ஸ் பார் யுவர் கோவாப்ரேஷன்… இப்ப கிளம்பறோம், வேற டீடைல்ஸ் வேணும்னா வர்றோம்…”

“வித் பிளஷர் சார்…” ராகவன் சொல்ல கிளம்பினர்.

வெளியே வந்த அஜயிடம் கிருஷ்ணா சலிப்புடன் கூறினார்.

“சார், நாம எதிர்பார்த்ததை விட கேஸ் ரொம்பவே சிக்கலா இருக்கும் போலருக்கு… கொலையாளியைக் கண்டு பிடிக்கிறது ரொம்பவே கஷ்டம் தான்… இதை செய்யறது ஆண்ங்கற விஷயத்தைத் தவிர எதுவுமே தெரியல… கண்ணாடிக்கு முன்னாடி திரை போட்ட போல ஒரே குழப்பமா இருக்கு…” கிருஷ்ணா சொன்னதைக் கேட்ட அஜய் மனதிலும் அதே யோசனை.

“கொலையாளி ரொம்ப சாமர்த்தியமா கேஸிலிருந்து தள்ளி நிக்கறான், எல்லாமே பக்கா பிளானிங்… எங்கயோ நமக்கான நூல் ஒளிஞ்சுகிட்டு ஆட்டம் காட்டுது…” சொல்லிக் கொண்டே புல்லட்டை ஸ்டார்ட் செய்ய அது உருமியது.

“கிருஷ்ணா, நாளைக்கு அந்த கனகராஜை ஜெயில்ல சந்திக்க கமிஷனர் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடுங்க…”

“ஓகே சார்…”

“நர்ஸ் அநாமிகாவோட நெருங்கிப் பழகினவங்க, அப்புறம் அந்த கனகராஜ் கேஸ் ஹிஸ்டரி விசாரிக்க சொன்னனே…”

“எஸ் ஐ கோகுல் கிட்ட சொல்லிருக்கேன் சார்…”

“ஓகே, வக்கீல் சுந்தர் போன் கால் ஹிஸ்டரி லிஸ்ட்…?”

“இப்ப ஸ்டேஷனுக்கு லிஸ்ட் வந்திருக்கும் சார்…”

“ம்ம், ஸ்டேஷன் போயிடுவோம்…” சொன்னவன் புல்லட்டை ஸ்டேஷனை நோக்கி விட்டான்.

மதிய உணவு முடிந்து உண்ட களைப்பில் பல்லைக் குத்திக் கொண்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் சுந்தர். வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்பதைக் கண்டவன் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

அஜய், கிருஷ்ணாவுடன் கோகுலும் உள்ளே வந்தான்.

“வாங்க சார்…!”

“வாங்க தானே வந்திருக்கோம்…” என்றார் கிருஷ்ணா.

அதைக் கேட்டதும் மனதுக்குள் உதறல் எடுத்தாலும் காட்டிக் கொள்ளாமல், “உக்காருங்க சார்…” என்றான்.

“மிஸ்டர் சுந்தர், பிஸி டைம்ல வந்துட்டமா…”

“இல்ல சார், லஞ்ச் டைம் தான்…”

“எங்களுக்கு லஞ்ச் டைம் ஆகல, பை தி பை உங்களுக்கு மிஸ்டர் சந்தோஷ் மனைவி ஜமுனாவைத் தெரியுமா…?”

“தெ..தெரியும்…”

“எப்படித் தெரியும்…?”

“என்ன சார் இப்படிக் கேக்கறிங்க, சந்தோஷ் சார் என்னுடைய சீனியர், அவரோட மனைவிங்கற முறைல தெரியும்…”

“அந்த முறைல மட்டும் தான் அவங்களைத் தெரியுமா…?”

“ஆ..ஆமாம், சார்…”

“ஹூம், உங்க முழுப் பெயர் சுந்தர் ராஜனா…?” சுந்தர் தயக்கமாய் தலையாட்டினான்.

“86686 86686 இது உங்க நம்பர் தானே.?” என்றதும் அதிர்ந்தான்.

“அ..அதுவந்து…”

“உங்க பேருல தான் சிம் இருக்கு, இல்லன்னு சொல்ல முடியாது…” என்றதும் சுந்தர் தவிப்புடன் தலை குனிந்தான்.

“அந்த நம்பர் என்னோடது தான், ஒத்துக்கறேன்…! சார், உங்ககூட கொஞ்சம் தனியாப் பேசணும்…”

“அதுக்காகத்தான் ஜீப்போட வந்திருக்கோம், ஸ்டேஷனுக்குப் போயிடலாமா…?”

“சார்…” அவன் அதிர்ச்சியுடன் அழைக்க,

“சொல்ல வேண்டியதை ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க…” தலை குனிந்து அவர்களைப் பின் தொடர்ந்தான் சுந்தர்.

ஏறக்குறைய அரைமணி நேரம்.

சுந்தர் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். அவனுக்கு முன்னில் மேசை மீது அமர்ந்திருந்த அஜய், ஒன்றும் பேசாமல் கேட்டிருக்க, எதிரே நாற்காலியில் கிருஷ்ணாவும், கோகுலும் அமர்ந்திருந்தனர். அறையில் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது.

“சோ, உங்களுக்கும் லாயர் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..?”

“நிச்சயமா, சத்தியமா நான் செய்யல சார்…”

“அப்படின்னா சந்தோஷைக் பார்க்க வந்த அநாமிகா மாஸ்க் போட்டு லிப்ஸ்டிக் போட்டிருந்தா, மேக்கப்ல வந்தான்னு சொன்னது எல்லாம் பொய்யா..?”

“ம்ம்… ஆமா சார், உண்மைல அப்படி யாரும் வரவே இல்ல…”

“அப்புறம் எதுக்கு அநாமிகான்னு ஒரு புது கிளையன்ட் அவரைப் பார்க்க வெயிட் பண்ணறதா சொல்லி வீட்டுல இருந்த சந்தோஷை ஆபீசுக்கு வர சொன்ன…?”

“அ..அது வந்து சார்…” இழுத்தவன், ச..சந்தோஷைக் கொல்ல அன்னைக்கு தான் நானும் ஜமுனாவும் முடிவு பண்ணி இருந்தோம்…”

“லாயரைக் கொல்லறதுக்கா…?” கிருஷ்ணா அதிர்ச்சியுடன் கேட்க சுந்தர் தொடர்ந்தான்.

“எனக்கும், ஜமுனாவுக்கும் இருந்த இல்லீகல் கான்டாக்ட் லாயருக்கு தெரிஞ்சிடுச்சோன்னு டவுட்டா இருந்துச்சு… அவர் இறக்கறதுக்கு முன்தினம் யாருகிட்டயோ, ஜமுனாவை வெட்டிங் டே அன்னைக்கு போட்டுத் தள்ளிடனும், என் மேல சந்தேகம் வரக் கூடாதுன்னு தான் வைர நெக்லஸ் பரிசு கொடுக்க ஆர்டர் பண்ணிருக்கேன்… இவளை முடிச்சுக் கட்டிடனும்னு போன்ல சொல்லறதை ஜமுனா கேட்டுட்டா… இன்னும் விட்டு வச்சா, சந்தோஷ் முந்திக்குவான்னு தான் கல்யாண நாளுக்கு முந்தின நாளே அவனைக் கொல்ல முடிவு பண்ணினோம்…”

“இதுல அநாமிகா எங்கிருந்து வந்தா…”

“அப்படி யாரும் உண்மைல வரலை சார்… எனக்கு சுஜாதா ஸ்டோரீஸ் ரொம்பப் பிடிக்கும்… அன்னைக்கு படிச்சிட்டிருந்த கதைல ஒரு காரக்டர் நேம் தான் அநாமிகா, வித்தியாசமான பெயரா இருக்கவும் மனசுல நின்னுடுச்சு… லாயரை ஆபீசுக்கு வரவழைக்க வேண்டி அந்தப் பெயர்ல கிளையன்ட் வெயிட் பண்ணறதா சொன்னேன்…”

“அட பிராடுப் பயலே…” மனதுக்குள் தோன்றிய அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்.

“அப்படின்னா, நீங்க சந்தோஷைக் கொல்ல ஆபீசுக்கு வரும்போதே அவர் செத்துக் கிடந்தார்… அப்படி தானே..?”

“ஆமா சார்… அப்படி வந்தப்ப தான் விசிட்டர் லெட்ஜர்ல அநாமிகா பெயரை எழுதி வச்சேன்…” என்றான் சுந்தர்.

“படிச்சு சமூகத்துல நல்ல அந்தஸ்துல உள்ள உங்களுக்கு எல்லாம் ஏன்தான் புத்தி இப்படிப் போகுதோ…?” கிருஷ்ணா சொல்ல தலையைக் குனிந்து கொண்டான் சுந்தர்.

“கோகுல், அந்த ஜமுனா வீட்டுக்கு பெண் போலீசைக் கூட்டிட்டு கிளம்புங்க… அவங்களை அழைச்சிட்டு வந்து நடந்ததை எழுதி சைன் வாங்குங்க…”

“எஸ் சார்…” என்ற கோகுல் எழுந்து விறைப்புடன் சல்யூட் ஒன்றை வைத்துவிட்டு வெளியே சென்றான்.

“சுந்தர், நீங்க எத்தன வருஷமா சந்தோஷ் கூட இருக்கீங்க?”

“மூணு வருஷமா சார்…”

“சந்தோஷ், அநாமிகா அப்படிங்கற பேர்ல ஏதாச்சும் கேஸ் எடுத்து நடத்தி இருக்காரா…” அஜயின் கேள்விக்கு யோசித்தவன், “இல்ல சார்…” என்றான்.

“டாக்டர் பிரபஞ்சன், பிரகதி எக்ஸ்போர்ட்ஸ் எம்டி மிஸ்டர் பிரகாஷ் இவங்களை உங்களுக்குத் தெரியுமா…”

“தெரியும் சார், டாக்டர் சாரும், சந்தோஷ் சாரும் ஸ்கூல் பிரண்ட்ஸ்… மிஸ்டர் பிரகாஷ் பொண்ணு, பிரகதி கேஸை சந்தோஷ் சார் தான் எடுத்து நடத்தினதா சொல்லிருக்கார்…”

“ஓ…!” என்றான் அஜய் யோசனையாக.

“இப்ப ரீசண்டா அவங்க ரெண்டு பேரும் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்…”

“தெரியும் சார்…”

“இதெல்லாம் பண்ணுறது இவங்க மூணு பேருக்கும் பொதுவான எதிரியா இருக்கலாம்னு நாங்க நினைக்கறோம்… ஒரு வக்கீலா நீங்க என்ன நினைக்கறீங்க…?”

“உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பிருக்குனு தான் எனக்கும் தோணுது… சார், ப்ளீஸ், நாங்கதான் சந்தோஷை எதுவும் பண்ணவே இல்லையே, எங்களை இந்தக் கேஸ்ல இன்வால்வ் பண்ணாம விடுவிக்கக் கூடாதா…?”

“கொல்லறதைப் போல கொல்ல முயற்சி பண்ணறதும் குற்றம் தான்… ஒரு லாயரா உங்களுக்கும் இது தெரியும் தானே… இந்தக் கேஸ்ல உங்களோட உண்மையான ஒத்துழைப்பைக் கொடுங்க, அப்புறம் யோசிக்கலாம்…” சொன்ன அஜய் வெளியே வந்தான்.

“கிருஷ்ணா, நான் கிளம்பறேன்… நிறைய கேள்விகளுக்கு சுந்தர் கிட்ட விடை கிடைச்சிருக்கு… அடுத்து நமக்கான பாதை தெளியும்னு நம்பறேன், பார்ப்போம்…” என்றவன் மனதில் வெளிச்சத்திற்கான அறிகுறி தெரியத் தொடங்கியது.

அர்ச்சனா சொல்வதுபோல் மாலையில் மதிய உணவுக்கு வீட்டை நோக்கி வண்டியை விரட்டினான் அஜய்.

Advertisement