Advertisement

அத்தியாயம் – 10
கமிஷனர் ஆபீஸ்.
கமிஷனர் ஜெயராம் முன்பு அமர்ந்திருந்த அஜய் இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை அவரிடம் சுருக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஓ அப்ப கொலையாளி பெண்ணில்லை, ஒரு ஆண்தான்னு கண்டு பிடிச்சுட்டீங்க…”
“எஸ் சார், அநாமிகாங்கற பேருக்குள்ள ஒளிஞ்சிட்டு எதுக்கு இந்த கொலைகளைப் பண்ணறான் or பண்ணறாங்க, கொலையாளி ஒருத்தனா இல்ல பலரா… இதை எல்லாம் இனி தான் விசாரிக்கணும்… விசாரிச்ச வரைக்கும் டாக்டர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப சரியில்லை… சந்தோஷ், பிரகாஷும் அவரைப் போல தானா, எல்லாரும் கூட்டுக் களவானிகளான்னு விசாரிக்கறது தான் அடுத்த மூவ்…”
“ஓகே அஜய், நீங்க புரஸீட் பண்ணுங்க… அவசியம் இருந்தா மிஸ்டர் விவேக்கை போன்ல கான்டாக்ட் பண்ணி ஐடியா கேட்டுக்கங்க…”
“எஸ் சார், நானே கூப்பிடணும்னு நினைச்சிருந்தேன்…”
“இன்னும் டூ த்ரீ டேஸ்ல எனக்கு இந்த கேஸைப் பத்தி ஒரு முழு வடிவம் கிடைச்சிருக்கணும்…”
“வில் டிரை மை பெஸ்ட் சார்…” சொன்னவன் எழுந்து ஒரு சல்யூட்டை உதிர்த்துவிட்டு கதவை நோக்கி நடந்தான்.
தனது அலுவலகத்திற்கு சென்ற அஜய், கிருஷ்ணாவை அலைபேசியில் அழைத்தான்.
“கிருஷ்ணா, இந்த மூணு பேரும் பிறந்தது, படிச்சது எல்லா டீடைல்ஸ் எனக்கு வேணும், மூணு பேருக்கும் நிச்சயம் ஏதோ லிங்க் கண்டிப்பா இருக்கும்… யாரையாவது இந்த டீடைல்ஸ் கலக்ட் பண்ண சொல்லிட்டு நீங்க கிரைம் பிராஞ்ச் ஆபீசுக்கு வந்திருங்க… நாம பிரகாஷ் வீட்டுக்குப் போயிட்டு ஆபீஸ்லயும் என்கொயரி முடிச்சிட்டு வந்திருவோம்…”
“ஷ்யூர் சார்…” சொன்ன கிருஷ்ணா சப் இன்ஸ்பெக்டரிடம்  அந்தப் பொறுப்புகளை கொடுத்துவிட்டு கிளம்பினார்.
****************
அன்றைய நாளிதழைப் பார்த்துக் கொண்டிருந்த மகதியின் அன்னை மாலதியின் முன்னில் டிரைவர் வந்து நின்றான்.
“அம்மா…”
“சொல்லு நாராயணன்…”
“போலீஸ் விசாரணைக்கு வந்திருக்காங்க…” அதைக் கேட்டதும் இருதயத்தின் ஓரத்தில் லேசாய் கலவரம் வெடித்தாலும் காட்டிக் கொள்ளாமல் “ஓ.. சரி, உள்ளே வர சொல்லு…” என்றவர் நிமிர்ந்து அமர்ந்தார்.
பிரகாஷின் போஸ்ட் மார்ட்டம் செய்த உடல் தகனத்துக்கு அனுப்பி இறுதி காரியமும் முடிந்து உறவுகள் கிளம்பிப் போனதில் வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
நாராயணன் சென்ற அடுத்த நிமிடத்தில் அஜய், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவுடன் உள்ளே நுழைந்தான்.
“வா..வாங்க சார்…” வலுக்கட்டாயமாய் புன்னகைத்த மாலதி எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.
“நீங்க…?”
“நான் மாலதி, மகதியோட அம்மா…”
“மிஸ்டர் பிரகாஷ் பத்தி அவர் மனைவி மகதி கிட்ட விசாரிக்கணும், அவங்களை வர சொல்லறீங்களா…?”
“அவகிட்ட என்ன விசாரிக்கணும் சார்..? அவளுக்கு உங்க கேள்வியைப் புரிஞ்சு பதில் சொல்லத் தெரியாது…”
“ஹோ, பரவால்ல, அழைச்சிட்டு வாங்க…”
“ம்ம்… கூட்டிட்டு வரேன்…” சொன்னவர் எழுந்து உள்ளே சென்றார்.
மிகவும் சோர்ந்த முகத்துடன் கண்ணுக்குக் கீழ் கருவளையம் படிந்து, முப்பதுகளில் இருந்த மகதியைக் காண நாற்பதற்கு மேல் தோன்றுமளவுக்கு முதிர்ந்த தோற்றம். பிரகாஷுக்கு மூத்தவள் போல இருந்தாள். தலை கலைந்து, கண்கள் எங்கோ நிலைக்க, கைகள் உதற, தடுமாற்றமாய் நடந்தவளை கை பிடித்து அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினார் மாலதி.
மகதியைக் காணவே பரிதாபமாய் இருக்க, இளகிய மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான் அஜய்.
“இவங்களுக்கு என்னாச்சு…? ஏன் இப்படி இருக்காங்க…?”
“அவளுக்கு பார்கின்சன்னு நரம்புத் தளர்ச்சி நோய் இருக்கு… அஞ்சு வருஷமா இப்படி தான் இருக்கா…?”
“ஓ… எதனால இப்படி ஆச்சு…?”
“அஞ்சு வருஷம் முன்னாடி என் பேத்தி ஒரு விபத்துல இறந்துட்டா, ஆசையா ஒண்ணே ஒண்ணைப் பெத்து அதையும் இழந்ததை அவளால தாங்கிக்க முடியல, அதுல இருந்து தூங்கறது இல்ல, சாப்பிடறது இல்ல, எப்பவும் தனியா உக்கார்ந்து எதையாச்சும் வெறிச்சுப் பார்த்திட்டு உக்கார்ந்திருப்பா… கை, கால், தாடை எல்லாம் நடுங்கும், நடக்க, எழுந்துக்க சிரமப்பட ஆரம்பிச்சா… அப்புறம் தான் நியூரோ டாக்டர்கிட்ட காட்டினோம்…”
“எந்த டாக்டர்…”
“டாக்டர் பிரபஞ்சன், GH ல நியூரோ ஸ்பெஷலிஸ்டா இருந்தார்…” வார்த்தையில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
அஜய் மகதியை நோக்க அவள் உதட்டுக்குள் ஏதோ முனங்கிக் கொண்டு தனக்குள் சிரிப்பது போலத் தோன்றியது.
“அஞ்சு வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்தும் இவங்களுக்கு எந்த மாற்றமும் இல்லியா…?”
“இல்ல சார்…” மாலதி சொல்ல அஜயின் கண்கள் உன்னிப்பாய் மகதியை கவனித்துக் கொண்டிருந்தது.
“மிசஸ் மகதி, இங்க பாருங்க…” அழைத்தும் அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
“கேக்கறேன்னு தப்பா நினைக்காதிங்க, இவங்களுக்கு மனநிலைல எந்தப் பிரச்சனையும் இல்லையே…?”
ஒரு நிமிடம் திகைத்த மாலதி, “இ..இல்ல சார், நரம்புலதான் ஏதோ பிரச்சனைன்னு மாப்பிள சொன்னார்… அதுக்கான ட்ரீட்மென்ட்தான் டாக்டர் கொடுக்கறதா சொல்லிருக்கார்…”
“ஹூம்…” என்றவனின் பார்வை அப்போதும் மகதியின் மேல் சந்தேகமாய் படிந்தது.
“நீங்க எத்தனை வருஷமா இவங்களோட இருக்கீங்க…?”
“அஞ்சு வருஷமா இருக்கேன் சார்…”
“டாக்டர் பிரபஞ்சன் இங்கே வந்திருக்காரா…?
“ரெண்டு தடவை மகதிக்கு செக்கப்க்கு வந்திருக்கார்…”
“டாக்டர் மரணத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க..?”
“என்ன நினைக்கறது…? மாப்பிள்ள மரணம் போலவே அதுவும் எதிர்பார்க்காத ஒண்ணு…! அவர் இறந்தது தெரிஞ்ச அதிர்ச்சி மறையறதுக்குள்ள மாப்பிள்ளைக்கும் இப்படி ஆயிருச்சு…” என்றார் வருத்தத்துடன்.
“ம்ம்… உங்க மாப்பிள்ளைய யார் கொலை பண்ணிருப்பாங்கன்னு நினைக்கறீங்க…?”
“ச…சாரி! எனக்குத் தெரியல சார்…”
“உங்களுக்குத் தெரிஞ்சு அவருக்கு யாரும் உறவுலயோ, தொழில்லயோ எதிரிகள், விரோதிகள்…?”
“தெரியல சார், மாப்பிள்ளையா இருந்தாலும் அவரோட அதிகமா எல்லாம் பேசிக்க மாட்டேன்… என் பொண்ணைப் பார்த்துக்க வேண்டி தான் இங்க இருந்தேன்… இல்லேன்னா வெளிநாட்டுல உள்ள என் மகன் கூட போயிருப்பேன்…”
“நான் மிசஸ் மகதியோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்க்கலாமா…?” அஜய் கேட்கவும் சட்டென முகம் வெளிறிய மாலதி, “கொ…கொண்டு வரேன் சார்…” என்றார்.
அவர் உள்ளே சென்றதும் கிருஷ்ணா, “என்ன சார், இவங்களைப் பார்த்தா மென்டலி பிராப்ளம் உள்ள போல இருக்காங்க, எதுக்கு நியூரோ டாக்டரைப் பார்க்கணும்…”
“ஹும், சம்திங் ராங்… அதுக்குதான் ரிப்போர்ட் கேட்டேன்…” அவர்களுக்குள் ரகசியமாய் பேசிக் கொண்டவர்கள் மாலதி வருவதைக் கண்டதும் வாயை மூடிக் கொண்டனர்.
ஒரு நீல நிற பைலை அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டான். அதைத் திறந்ததும் நிறைய மெடிக்கல் வாசகங்கள் புரியாமல் கண்ணை உறுத்த அதில் முக்கியமான சில வார்த்தைகளை மனதுக்கு ஸ்கேன் செய்து பதிந்து வைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் பார்த்துவிட்டு அவரிடம் நீட்டினான்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உங்க பேத்தி பிரகதி ஒரு விபத்துல இறந்ததா சொன்னிங்க… எப்படி இறந்தாங்கன்னு சொல்ல முடியுமா…?” அதைக் கேட்டதும் அவரது முகம் கோபத்தில் சிவப்பது தெரிந்தது.
“இப்ப எதுக்கு சார் அதெல்லாம்…” என்றவர் தயக்கத்துடன் மகளைப் பார்க்க அவளோ, பிரகதி என்ற பெயரைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து, நெஞ்சில் கை வைத்துக் கொண்டு, “பிரகதி… பிரகதிப் பாப்பா…” என்று தலையை இட வலமாய் ஆட்டிக் கொண்டு உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
“மகதியை ரூம்ல விட்டுட்டு வரேன் சார்…” சொன்னவர் அவளை எழுப்பிக் கூட்டிச் சென்றார்.
மகளை ரூமில் விட்டுவிட்டு வந்த மாலதியின் முகம் இறுகிக் கிடக்க, “உங்களுக்கு என்ன தெரியனும்…? என்றார்.
“உங்க பேத்தி எப்படி இறந்தாங்க…?”
அதைக் கேட்டதும் அவர் கண்கள் கண்ணீரில் நிறைய, “அதை எப்படி என் வாயால சொல்லுவேன்… எந்தப் பொண்ணுக்கும் வரக் கூடாத மரணம்… அதும் பத்து வயசுல பாலியல் கொடுமைக்கு ஆளாகி சாகறது எவ்ளோ பெரிய கொடுமை…” என்றதும் இருவரும் அதிர்ந்தனர்.
“என்ன சொல்லறீங்க மேடம்…?”
“பேப்பர்ல எல்லாம் கொட்டை எழுத்துல வந்த  விஷயம், போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்துட்டு உங்களுக்குத் தெரியாம இருக்குமா…? ஒரு நிமிஷம்…” சொன்னவர் அங்கிருந்த ஷெல்ப் ஒன்றைத் திறந்து அதிலிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து அவனிடம் நீட்டினார். அதில் பார்வையை பதித்தவர்கள் அதிர்ச்சியுடன் வாசிக்கத் தொடங்கினர்.
10 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.
சென்னை அடையாரைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை கனகராஜ்(45) என்பவர் பாலியல் ரீதியாய் துன்புறுத்தியதில் சிறுமி மரணமடைந்தார்.
சிறுமியின் தந்தையின் கம்பெனியில் வேலை செய்து வரும் கனகராஜ் என்பவர், முதலாளியைக் காண்பதற்காய் வீட்டுக்கு செல்லுகையில் அங்கே சிறுமி மட்டுமே இருந்துள்ளார். அன்னை கோவிலுக்கு சென்றிருக்க, நண்பருடன் வீட்டுக்கு வந்த தந்தை, மகளின் முனகல் சத்தம் கேட்டு மாடிக்கு சென்று பார்க்கையில், வேதனையில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் சிறுமியை பலவந்தம் செய்து கொண்டிருந்த கனகராஜைக் கண்டு அதிர்ந்தனர். இவர்களைக் கண்டதும் கனகராஜ் தப்பி ஓடியிருக்கிறார். மரண அவஸ்தையில் போராடிக் கொண்டிருந்த மகளுக்கு உடனே முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் வழியிலேயே உயிர் துறந்தார்.
இதையடுத்து போக்சோ மற்றும் 5 (1) (ஏ) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸார் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கை விசாரித்து, தலை மறவாகி இருந்த கனகராஜை கைது செய்தது. இதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.
அந்த செய்தியை அதிர்ச்சியுடன் படித்துவிட்டு அடுத்த செய்தித்தாளை எடுத்தனர்.
அதில் வழக்கு விசாரணை முடிந்து கனகராஜ்க்கு ஏழு வருட சிறை தண்டனை முடிவு செய்து தீர்ப்பு வந்திருந்தது. கனத்த மனதுடன் படித்து முடித்த இருவரும் மாலதியை நோக்கினர்.
“சாரி மேடம், அஞ்சு வருஷம் முன்னாடி இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியும்… ஆனா அது உங்க வீட்டுப் பொண்ணுக்குன்னு தெரியாது… அதுல பெயரும் போடாததால தெரியல…” என்றான் வருத்தத்துடன்.
“ம்ம்… பெயர் போடாமதான் நியூஸ் கொடுத்தாங்க…”
“இந்த சம்பவத்துக்குப் பிறகு தான் உங்க பொண்ணு இப்படி ஆகிட்டாங்களா…?”
“ஆமாம்…”
“இந்த கனகராஜ் யாரு…? இப்பவும் ஜெயில்ல இருக்கானா…?”
“மாப்பிள்ள கம்பெனில வேலை செய்த கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்… ஜெயில்ல தான் இருப்பான்னு நினைக்கறேன்…” என்றார் மாலதி.

Advertisement