Advertisement

அத்தியாயம் – 1
“தேவி…” வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி நுழைந்தான் டாக்டர் பிரபஞ்சன்.
“என்னங்க? உற்சாகமா வர்றீங்க, பத்திரிகை வந்திருச்சா…”
“ஆமா, நீயே எப்படி இருக்குன்னு பாரு…” சொல்லியவாறு கையிலிருந்த பாகைத் திறந்து பத்திரிகையை எடுத்து நீட்டினான். தங்க நிறத்தில் டாலடித்த பத்திரிகையைக் கண்டதுமே கண்களை விரித்தவள் புன்னகைத்தாள்.
“ஆஹா, அமர்க்களமா இருக்குங்க… உங்களுக்கு வைத்தியம் பண்ண மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்…! நல்லா ரசனையா செலக்ட் பண்ணி இருக்கீங்களே…” சொல்லிக் கொண்டே அவன் கன்னத்தில் மெல்லத் தட்டினாள்.
“ஹலோ, டாக்டரா இருந்தா மத்த ரசனைகள் எல்லாம் வறண்டு போயிடுமா என்ன? நானே நாலஞ்சு கடை ஏறி பார்த்துப் பார்த்து இந்த டிசைனை என் மச்சினி கல்யாணத்துக்கு செலக்ட் பண்ணிருக்கேன்… உனக்குப் பிடிச்சிருச்சு, ஓ…கே..! ஆனா, இது சுபாக்குப் பிடிக்கணுமே? மனைவியை இழுத்து மடியில் போட்டவாறு கேட்டான்.
“எனக்குப் பிடிச்சா அவளுக்கும் பிடிச்ச போல தான்…!”
“எப்படி சொல்றே?”
“என் தங்கை டேஸ்ட் எப்படின்னு எனக்குத் தெரியாதா?”
“சரி, அவ வரட்டும், கேப்போம்… எனக்கு ஜூஸ் கொண்டு வா…” சொன்ன பிரபஞ்சன் 35 வயதில் இளமையாய், செழிப்பான தோற்றத்துடன் இருந்தான். இந்த வயதிலேயே மருத்துவத் துறையில் தனக்கென்று இடம் பிடித்து மிகவும் பிரபலமான நியூரோ சர்ஜன் எனப் பெயரெடுத்திருந்தான்.
தேவியின் பெற்றோர் இவர்களின் கல்யாணம் முடிந்த இரண்டு வருடத்தில் ஒரு கார் விபத்தில் இறந்து போக, அதற்குப் பின் மனைவியின் தங்கை சுபா, இவர்கள் பொறுப்பில் தான் இருக்கிறாள்.
சுபாவின் படிப்பு முடிந்ததும், அடுத்த கடமையை நிறைவேற்ற மாப்பிள்ளை பார்த்து இன்விடேஷன் அடிக்கும் வரை சிறப்பாய் பார்த்துக் கொள்ளும் கணவனைப் பற்றி பெருமையுடன் யோசித்தபடி பிரஷ் ஆரஞ்சை ஜூஸ் அடித்து எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தாள் தேவி.
ஜூஸை வாங்கிக் கொண்டவன், “சுபா எங்க, தேவி?” விசாரித்தான்.
“லைப்ரரிக்குப் போறேன்னு சொன்னாங்க, வந்திருவா…” சொல்லும் போதே வாசலில் ஸ்கூட்டி சத்தம் கேட்டது.
“இதோ, வந்துட்டா போலருக்கு…” தேவி சொல்ல உள்ளே நுழைந்த சுபா உயரமாய், வளப்பமாய், அளவான உடல் வளைவுகளுடன் கச்சிதமாய் கொஞ்சம் திரிஷா ஜாடையில் இருந்தாள். அக்கா தேவியை விட பளிச்சென்ற தோற்றம். அத்தானைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.
“ஹாய் அத்தான், உலக அதிசயமா இந்த நேரத்துல வீட்டுல தரிசனம் கொடுத்துருக்கீங்க, இது உங்க டியூட்டி டைம் ஆச்சே?” கேட்டுக் கொண்டே அருகே அமர்ந்தாள்.
“எஸ் சுபா, உன்னோட கல்யாண இன்விடேஷன் ரெடி ஆகிருச்சுன்னு போன் வரவும், உடனே கிளம்பிட்டேன்…”
“வாவ்… எங்கே?” என்றவள் ஆர்வமாய் கேட்க, தேவி புன்னகையுடன் தங்கையிடம் நீட்டினாள். கண்களில் கனவு மின்ன பத்திரிகையில் இருந்த வருங்காலக் கணவன் பெயரை ஆவலுடன் தொட்டுப் பார்த்தாள்.
மணமக்களின் குடும்ப விவரத்தைத் தொடர்ந்து கல்யாணம் கோவிலிலும், மாலையில் ரிசப்ஷன் என்றும் அதில் இருந்த வரிகள் கண்களுக்குள் ஓடியது.
**********
ரிசப்ஷன்.
இதமான மெல்லிசை ஸ்டீரியோவில் வழிந்து கொண்டிருக்க, மாலை நேரத்தில் கலர்புல் லைட்டுகளுடன் அழகாய் மின்னியது அந்த உயர்தர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் இருந்த பங்க்ஷன் ஹால்.
நடுநாயகமாய் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையின் மீது அலங்கரித்த சோபாவில் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர் மணமக்கள். காமிரா அடிக்கடி மேடைக்கும், விருந்தினர்களைக் கவர் செய்யவுமாய் சுழன்று கொண்டிருந்தது. ரோஜா மாலையுடன், புதுக் கணவனின் அருகில் சந்தோஷமாய் நின்றாள் சுபா.
கழுத்தை புதிதாய் உரசிய தாலிச் சரடை மெல்ல வருடுகையில் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பதை உணர்ந்தவள் அருகில் கம்பீரப் புன்னகையுடன் நின்ற கணவனைக் காதலுடன் பார்த்தாள். விழாவுக்கு வந்த உறவினர்களை சிறப்பாய் கவனித்து உபசரித்துக் கொண்டிருந்தனர் பிரபஞ்சனும், தேவியும்.
பிரபஞ்சனின் மருத்துவத் துறை நண்பர்கள் நிறையப் பேர் வந்திருக்க, அவர்களை வரவேற்று, மணமக்களுக்கு அறிமுகப்படுத்தி அமர வைத்தான்.
“என்னங்க, நீங்க இங்க கவனிங்க… நான் டைனிங் ஹாலை எட்டிப் பார்த்துட்டு வர்றேன்… ரெண்டு டைப் ஐஸ்க்ரீம் கொண்டு வர சொல்லிருக்கேன், பார்த்திட்டு வர்ரேன்…”
“சரி, கூட்டம் வரத் தொடங்கிருச்சு, பரிமாறத் தொடங்க சொல்லிடு…” தேவி தலையாட்டி நகர பிரபஞ்சன், அடுத்து உள்ளே வந்தவர்களை கவனிக்க சென்றான்.
“எக்ஸ்கியூஸ் மி சார்…” நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பிரபஞ்சன் திரும்ப, ஹோட்டல் சீருடையில் ஒரு சிப்பந்தி நின்று கொண்டிருந்தான்.
“எஸ்…”
“உங்களுக்கு ஒரு போன் வந்திருக்கு… இண்டர்காம் இங்கே வொர்க் பண்ணல, அதான் ரிசப்ஷனுக்கு வர சொன்னாங்க…” அவன் சொல்லவும் யோசனையாய் நெற்றியை சுருக்கினான்.
“என் போனுக்கு கூப்பிடாம எதுக்கு ஹோட்டல் நம்பருக்கு கூப்பிடணும், யாருன்னு சொன்னாங்களா…”
“ரிலேஷன்னு சொன்னாங்க சார்…”
“யாராச்சும் உங்க போனுக்கு லைன் கிடைக்காம ஹோட்டல் நம்பருக்கு கூப்பிட்டிருக்கலாம், போய் பார்த்திட்டு வாங்க மிஸ்டர் பிரபஞ்சன்…” என்றார் அந்த நண்பர்.
“ஓகே வந்துடறேன், நீங்க போங்க…” அவன் செல்லவும், அருகே இருந்த உறவினர் ஒருவரிடம், “ஹோட்டல் ரிசப்ஷனுக்குப் போயிட்டு வந்துடறேன்… தேவி வந்தா சொல்லிடுங்க…” என்ற பிரபஞ்சன் அந்த ஹாலை விட்டு ஓரமாய் இருந்த லிப்டுக்கு வந்தான். கிரவுண்ட் புளோர் அழுத்தவும், விர்ரென்று கீழே இறங்கி தரை தட்டி நின்றது.
ரிசப்ஷனில் மெழுகு பொம்மை போல் அமர்ந்திருந்த அழகிய பெண்ணை நெருங்கினான்.
“நான் டாக்டர் பிரபஞ்சன், எங்க பங்க்ஷன் மேல நடந்திட்டு இருக்கு, எனக்கு போன் வந்திருக்குன்னு சொன்னாங்க…”
“ம்ம்… எஸ் சார், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு நீங்க வரலேன்னதும் மறுபடி கால் பண்ணறதா சொல்லி டிஸ்கனக்ட் பண்ணிட்டாங்க, நீங்க உக்காருங்க சார்…” விவரத்தை ஒப்பித்து விட்டு கம்ப்யூட்டரில் பார்வையைப் பதித்தாள் அப்பெண்.
“ஓ… கால் பண்ணது யாரு… ஆணா, பெண்ணா…”
“ஒரு பொண்ணு தான் கால் பண்ணாங்க, பேரு கூட அநாமிகான்னு சொன்னாங்க…” என்றாள் குனிந்தபடியே.
“அநாமிகா?…” யோசனையுடன் நினைவடுக்கில் தப்பி நோக்க அந்தப் பெயர் இதற்கு முன் பரிச்சயமில்லை என்று அவனது மூளை அப்டேட் செய்தது.
“யாரா இருக்கும்…?” யோசனையுடனே அழைப்பிற்காய் காத்திருந்தான்.
டைனிங் ஹாலில் இருந்து திரும்பிய தேவி கணவனைத் தேட அவனை ஹாலில் காணாமல் திகைத்தாள்.
அவளைக் கண்ட உறவினர், “பிரபா கீழ ரிசப்ஷன்ல ஏதோ போன் வந்திருக்குன்னு அட்டண்ட் பண்ணப் போனார்…” என்று சொல்ல, “ஓ, சரி…” என்றவள் சிறிது நேரமாகியும் அவன் திரும்ப வராததால் யோசித்தாள்.
“யாரு போன், இன்னும் இங்க வராம என்ன பண்ணிட்டு இருக்கார்…” யோசித்தவள் கணவனின் எண்ணில் அழைக்க அது “நாட் ரீச்சபிள்…” எனவும் குழம்பினாள்.
“போன் ரீச் ஆகாம இருக்க எங்க போயிருப்பார்?”
“தேவி, பிரபா எங்கமா? மாப்பிள்ளை வீட்டுல யாரையோ அறிமுகப்படுத்த கேக்கறாங்க…”
“கீழ ரிசப்ஷனுக்குப் போயிருக்கார்னு சொன்னாங்க மாமா, நான் பார்த்திட்டு வர்றேன்…” என்றவள் வெளியே வந்தாள்.
லிப்ட்டில் இறங்கி கீழே சென்று ரிசப்ஷனில் விசாரிக்க, “போன் வந்தது உண்மைதான், பேசிட்டுப் போயிட்டாரே…” என்றதும் மேலும் குழம்பினாள்.
மீண்டும் மேலே வந்தவளுக்கு, “ஒருவேளை ரெஸ்ட் ரூம் போயிருப்பாரோ…” எனத் தோன்ற ஓரமாய் இருந்த ரெஸ்ட் ரூம் பக்கமாய் நகர்ந்தாள்.
“ஜென்ட்ஸ் அறைக்குள் எப்படிப் போவது?” தயங்கி நின்றவள் சற்றுத் தள்ளி போன் பேசி நின்ற உறவுக்காரப் பையன் ஒருவனைக் காணவே கையசைத்து, அழைத்தாள்.
“சதீஷ், இங்க கொஞ்சம் வா…” அவள் குரலைக் கேட்டவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு வந்தான்.
“என்னக்கா…?”
“சதீஷ், மாமாவை எல்லா இடத்துலயும் தேடிட்டேன் காணோம்… ஒருவேள, ரெஸ்ட் ரூம்ல இருக்காறான்னு தெரியல, பார்த்து சொல்லேன்…”
“சரிக்கா…” என்றவன் ஆண்கள் உருவம் பதித்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
அடுத்த நிமிடத்தில் உள்ளிருந்து அந்தப் பையனின் அலறல் குரல் கேட்டது.
“ஆஆஆ… அக்கா, ஓடி வாங்க…”
சதீஷின் அலறலைத் தொடர்ந்து பதட்டமாய் உள்ளே ஓடிய தேவியின் கண்கள் நிலை குத்தி நிற்க, அழகிய லிப்ஸ்டிக் இட்ட உதடுகள் அதிர்ச்சியில் திறந்து “வீல்ல்ல்…” என ஹை டெசிபலில் கத்தியது.
காலை மடக்கித் தரையில் மல்லாந்து, வாயைத் திறந்து கிடந்த பிரபஞ்சன் எங்கோ வெறித்த விழிகளுடன் உயிரைத் தொலைத்திருந்தான்.
அவனது தலையை சுற்றி குட்டை போல் ரத்தம் தேங்கி நிற்க, வலது கை, வலது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியுடன் தெரிந்தது. மண்டையைத் துளைத்திருந்த தோட்டாவின் ஓட்டை வழியே சூடாய் வெளியேறிக் கொண்டிருந்த புத்தம் புதிய ரத்தத்தின் வாடை, அந்த அறை முழுதும் ஒரு அவஸ்தையான மணத்தை நிரப்பி இருந்தது.
அநாமிகா வருவாள்…

Advertisement