Advertisement

6. ராமரை வனம் செல்ல கைகேயி கூறியது

சுமந்திரர் ராமரை அழைத்து வர கைகேயியின் மாளிகையிலிருந்து வெளியே வர, அங்கு மக்கள் தசரதருக்காக பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். அவர்களைக் கடந்து சபா மண்டபத்தை நெருங்கிச் செல்லும் போது அங்கு குழுமியிருந்த சிற்றரசர்களை பார்த்தார் சுமந்திரர். இவரைக்  கண்டதும், “பட்டாபிஷேகத்திற்கான வேளை நெருங்கி விட்டதே, இன்னமும் ஏன் மன்னரும், இளவலும் மணடபத்திற்கு வரவில்லை?”, அவர்கள் கேட்டனர்.

“மன்னரின் உத்தரவின் பேரில்தான் ராமரை அழைத்து வர சென்று கொண்டிருக்கிறேன், ஆயினும் நீங்கள் மன்னரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள், நீங்கள் வந்து அவர்களுக்காக காத்திருப்பதாக மன்னரிடம் உடனே தெரிவித்து விடுகிறேன்”, என்று சொல்லி, மீண்டும் கைகேயியின் மாளிகைக்கு சென்று தசரதரிடம், “அரசே! படைத் தலைவர்களும், கிராம மக்களும், சுற்றியிருக்கும் சிற்றரசர்களும், நகர்ப்புற மாந்தர்களும் வந்து விட்டார்கள், அனைவரும் உங்களுக்காக காத்து நிற்கின்றனர்”, எனக் கூறினார்.

“நான்  விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன், ஏற்கனவே கூறியபடி, ராமரை உடனே இங்கே அழைத்து வாருங்கள்”, என்று தசரதர் பதிலுரைத்தார்.

சுமந்திரரும் அரசரின் ஆணைக்கேற்ப, ராமரின் மாளிகைக்கு சென்றார், வாயிற்காப்போனிடம் விபரம் சொல்லி அனுப்பியதும், சற்றும் தாமதியாமல் அவரை உள்ளே வர அனுமதித்தார் ராமர்.  சீதையோடு அளவளாவிக் கொண்டிருந்த ராமர், சித்ரா பௌர்ணமியன்று, சித்திரை நட்சத்திரத்தோடு கூடிய சந்திரனைப்போல பிரகாசமாக இருந்தார். அவருக்கு வந்தனங்கள் தெரிவித்த சுமந்திரர், “தங்களுடைய தந்தையும்  கைகேயியும் உங்களைக் காண வேண்டுமென ஆவலாக இருக்கிறார்கள், உடனடியாக வரும்படி சொல்லி அனுப்பினார்கள்”,என்று அவர் வந்த காரணத்தைத்   தெரிவித்தார்.

ராமர் அருகில் இருந்த சீதையைப் பார்த்து, “பட்டாபிஷேக நிகழ்வுக்காக தந்தையும் தாய் கைகேயியும் என்னிடம்  ஏதோ பேச நினைக்கிறார்கள் போலும், சென்று என் நலம் நாடும் கைகேயி அன்னையை பார்த்துவிட்டு மங்களகரமான செய்தியோடு வருகிறேன், நீ சற்று நேரம் காத்திருப்பாயாக”, என்று தந்தையைக் காண ஆயத்தமானார்.

“விரைவில் நற்காரியம் நடக்கப்போகும் உங்களுக்கு..,  கிழக்குத்திசையில் காவலாக இந்திரன் இருக்கட்டும், வருணன் மேற்கிலும், குபேரன் வடக்கிலும், தெற்கில் எமதர்மனும் நின்று உங்களை பாதுகாக்கட்டும்”, என்று காப்பு சொல்லி  சீதை வாயில்வரை சென்று கணவனை வழியனுப்பினார்.

அங்கே அண்ணனுக்காக காத்திருந்த லக்ஷ்மணன், ராமரை பின் தொடர.., இருவருமாக தேர் ஏறி கைகேயியின் மாளிகையை அடைந்தனர். வழியெங்கும் மக்கள் வெள்ளம் திரண்டு நின்று வாழ்க! வாழ்க! என கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

மாளிகையின் உள்ளே சென்ற ராமர், தந்தை தசரதர் கைகேயி அருகே ஒரு இருக்கையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்ததை பார்த்தார். மனம் சற்றே துணுக்குற்றாலும் அதை மனதில் இருத்தி,  தந்தை சிற்றன்னை இருவரையும் வணங்கினார்.

தர்மத்தின் உருவமாக தன் சாயலை வரித்த மகன் ராமன் முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்த தசரதருக்கு “ராமா!”, என்ற வார்த்தையைத் தவிர அடுத்து பேச நா எழவில்லை, கிரஹண கால சூரியனைப்போல பொலிவிழந்து, காவி அணிந்தும் பொய் உரைத்த முனிவரைப்போல (கவனிக்க.. காவி தரித்து பொய் உரைத்தல் மஹாபாபமாம்), கொந்தளிக்கும் அலைகளால் ஆர்ப்பரிக்கும் கடல் போல அவரது மனம் நிலையின்றி தவித்தது.

தந்தையின் இருண்ட முகம் கண்ட ராமருக்கு மனதில் கவலை சூழ்ந்தது. ‘தந்தைக்கு என்னாயிற்று? ஏதேனும் கோபம் இருந்தாலும் என்னைக் கண்டதும் அதை மறந்து விடுவாரே? ஆனால் இன்றோ நானே அவர் துன்பத்திற்கு காரணம் போலல்லவா தோன்றுகிறது? என்னைக்கண்டு இன்னமும் துயருவதுபோலத தெரிகிறதே? இத்தனை தெளிவில்லாத முகத்தோடு கவலை சூழ்ந்த வதனத்தோடும் தந்தை இருந்து இதுவரை நான் பார்த்ததில்லையே?’ என்ற சிந்தனையோடு கைகேயியைப் பார்த்து,”தந்தை ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபமுற்றவர் போல இருக்கிறார்? நான் என்னையறியாமல் ஏதேனும் தவறிழைத்தேனா? நீங்கள் அவர் மனம் வருந்தும்படி ஏதேனும் பகன்றீரா? உடல் மற்றும் மன உபாதைகள் இவரை நெருங்காதே, அவ்வாறிருக்க மன்னர்  ஏன் துயருற்றிருக்கிறார்? எதுவாகினும் சரி, அவர் துயர் களைவது தனையனான என் கடமை. அவர் மன வருத்தத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும் அதை நிவர்த்திக்கிறேன். அவரை எவ்வாறேனும் சமாதானம் செய்யுங்கள்”, என்று ராமர் சொன்னார்.

‘தசரதர் பேசும் நிலையில் இல்லை, இனியும் தாமதித்தால் காரியம் ஆகாது’, என்று எண்ணிய கைகேயி, “ராமா! மன்னருக்கு கோபமொன்றுமில்லை, உடல் உபாதையுமில்லை. அவருக்கு உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டியுள்ளது. அவரது அன்பிற்கு பாத்திரமாகிய உனக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமென்பதால் சொல்ல தயங்குகிறார். ஆனால் அவர் குடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நீ இருக்கிறாய்”, என்று தானே துவங்கினாள்.

தொடர்ந்து.. “முன்பொருமுறை உனது தந்தை என் பணிவிடையை மெச்சி எனக்கு இரு வரங்கள் தந்தார், தற்சமயம் அவற்றிற்கான சந்தர்ப்பம் வாய்க்க, மன்னரிடம் அவ்வரங்களைக் கேட்டேன், நிச்சயம் தருவதாக வாக்களித்துவிட்டு இப்பொழுது சாமானியனைப்போல நிலை தடுமாறி நிற்கின்றார். சொன்ன சொல்லில் நிற்பது தான் மோட்சத்திற்கான வழி என்பதை அறிந்தும் சித்தம் கலங்கி நிற்கின்றார். அவர் குடுத்த வாக்கை நிறைவேற்றுவதாக நீ உறுதியளித்தால் அது என்ன வாக்கு என்று உனக்கு கூறுவேன்”, என்று தீஞ்சொற்களை மொழிந்தார் கைகேயி.

“அன்னையே மன்னரின் ஆணை என்றால் நான் கடலில் வீழ்வேன், தீயில் குதிப்பேன், ஆலகால விஷமாகினும் புசிப்பேன். இவ்வாறான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது. உங்களுக்கு இப்படி எண்ணம் எழ என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை, ஆயினும் ஒன்று கூறுகிறேன், முதலில் ஒன்றுகூறி,  பின்னர் அதை மறுத்து மற்றொன்று பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. மன்னரின் வாக்கு என்ன என்று நீங்கள் சொல்லுங்கள் அதை இப்போதே நிறைவேற்றுகிறேன்”, என்று ராமர் கூறினார்.

“ராமா! முன்பொரு சமயம் தேவாஸுர யுத்தத்தின் போது, அம்புகளால் துளைக்கப்பட்ட மன்னரை ஆபத்தில் இருந்து நான் காப்பாற்றினேன். அப்போது அதை பாராட்டி உனது தந்தை இரண்டு வரங்கள் தந்தார். இப்போது அவ்விரு வரங்களை கேட்டேன். பரதன் நாடாளவும், நீ வனவாசம் செல்ல வேண்டும் என்பதும் நான் கேட்ட வரங்கள்”

“உனது தந்தையின் வாக்கை காப்பாற்ற விரும்பினால், பரதனுக்கு பட்டாபிஷேகம் நடக்க வேண்டும், நீ பதினான்கு வருடங்கள் காட்டில் வசிக்க வேண்டும்.

(பதினான்கு வருடங்கள் ஒருவன் அவனது உடமையானதில் [பொருளோ / பதவியோ / பூமியோ எதுவாயிருந்தாலும்] இருந்து விலகி இருந்தானேயானால், அவனுக்கு அதன் மீதான உரிமை இழந்தவனாக த்ரேதாயுகத்தில் கருதப்படுவான். எனவேதான் கைகேயி பதினான்கு வருடங்கள் ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்று குறிப்பாக கேட்க நினைத்தது. அப்போதுதான் வனவாசம் முடித்து ராமர் வந்தாலும் அயோத்தி நாடாளும் உரிமையை இழந்தவராகிறார்).

ஆனால் அவ்வாறு கேட்க நினைத்த கைகேயின் நாவில் வாக்தேவதைகள் விளையாடி, ‘சாதுர்தச வர்ஷானி’ என்று வருவதற்கு பதிலாக “நவ பஞ்சக வர்ஷானி’ என்று சொல்ல வைத்தனவாம்.

சாதுர் – நான்கு + தச – பத்து = பதினான்கு ;

நவ – ஒன்பது +பஞ்சக – ஐந்து = பதினான்கு;

नव पञ्च च वर्षाणि दण्डकारण्यमाश्रितः

அயோத்யா காண்டம், சர்க்கம் 11, ஸ்லோகம் 26 )

“நீ மரவுரி உடுத்தி, காட்டில் வாழ வேண்டும், பரதன் செல்வம் கொழிக்கும் இந்த பூமியை ஆள வேண்டும், இதை உன்னிடம் சொல்லத்தான் அவருக்கு தயக்கம். அவரது வாக்கை காப்பாற்றி அவரை ‘சொன்ன சொல் தவறாத மன்னன்’ என்ற பெயர் நிலைக்குமாறு செய்”, என்று கைகேயி ராமரைப் பார்த்து சொல்ல அதைக் கேட்ட தசரதருக்கு மேலும் மேலும் துக்கம் பெருகிற்று.

“என் தந்தையின் வாக்கை நிச்சயம் காப்பாற்றுவேன், இன்றே இப்பொழுதே சடை முடி  தரித்து, மரவுரி உடுத்தி உடனே கானகம் செல்கிறேன். ஆனால் மன்னர் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கின்றாரே? செய் என்றால் செய்யவேண்டியவன் நான். அப்படியிருக்க அவர் வார்த்தையை மீறுவேன் என்ற சந்தேகம் மன்னருக்கு ஏன் வந்தது? அதுதான் என் மனதை மிகவும் வருத்துகிறது. அவர் ஒரு வார்த்தை சொல்லி அதை நான் மறுப்பேன் என்று நினைக்கும் அளவு என் நடவடிக்கை இருந்ததோ என்று என் மனம் மிகவும் வேதனையுறுகிறது”

“உடனடியாக பரதனை அழைத்துவர தூதுவர்கள் கைகேய நாட்டுக்கு செல்லட்டும். நான் வனம் புறப்பட ஆயத்தமாகிறேன்”, என்றார் ராமர்.

“பரதனை அழைத்துவர தூதுவர்களை நான் அனுப்புகிறேன். அது ஒருபுறம் இருக்கட்டும் அதற்காக நீ காலம் தாழ்த்த வேண்டாம், மன்னர் உன்னிடம் நேரடியாக எதுவும் கூறவில்லையே என்று நீ தாமதிக்க வேண்டாம், அது உன்மீது அவர் கொண்ட அன்பு மிகுதியல்லவா? . ஆனால், நீ எப்போது காட்டிற்குப் புறப்படுகிறாயோ அப்போதே அவர் நீராட செல்வார், அதுவரை உணவும் உட்கொள்ள மாட்டார்”, என்று ராமரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். ஒருவேளை காலம் தாழ்த்தினால் ராமர் மனம் மாறிவிட வாய்ப்புண்டோ என்ற எண்ணத்துடன், தேரோட்டி எவ்வாறு குதிரையை சவுக்கால் அடித்து விரட்டுவாரோ அப்படி துரிதப்படுத்தினார்.

கைகேயி ராமரிடம் பேசுவதை வெறும் பார்வையாளராக ஏதும் செய்ய இயலாதவராக பார்த்துக் கொண்டிருந்த தசரதர், “உடனிருந்தே கொல்லும் இந்த விரோதியை வெல்ல முடியாதவனாகி விட்டேனே?”, என்ற மன வருத்தம் மேலோங்க அமர்ந்திருந்தார்.

கைகேயியின் வார்த்தைகளை மற்றவர் கேட்டிருந்தால் மனம் கலங்கியிருப்பாரோ என்னவோ, ஆனால் ராமர்,  அன்றலர்ந்த மலர் போல இருந்த பூரண சந்திரனைப் போன்ற முகம் சிறிதும் வாடாமல், கவலையின் ரேகை கூட தீண்டாத கலங்காத மனத்துடன், “தந்தைக்கு  பணிவிடை செய்வது, அவர் வார்த்தையை நிறைவேற்றுவது இவற்றைவிட உலகத்தில் வேறு சிறந்த தர்மம் ஏதுமில்லை,  பொருளைக் கருதி ஒரு காரியம் செய்பவனல்ல நான். என்னிடம் நேரடியாக தந்தை கூறாவிட்டாலும், உங்கள் வாயிலாக வந்த அவரது அபிலாஷையை, உயிரைக் கொடுத்தேனும் நிறைவேற்றுவேன். ஆயினும் எனக்கு நேரடியாக கட்டளையிடும் உரிமையுடைய நீங்கள் என்னிடம் இதை செய் என்று சொல்லியிருந்தாலே, நான் நிறைவேற்றியிருப்பேன். அதைவிட்டு மன்னரை வேண்டியிருக்கிறீர்கள். பரவாயில்லை, இதோ கௌசல்யா மாதாவிடம் விடை பெற்று, சீதையை தேற்றி இன்றே வனவாசம் புறப்படுகிறேன். தங்கள் ஆணைப்படி பரதன் நாடாளட்டும், தந்தைக்கு பணிவிடை செய்து நலமுடன் இருக்கட்டும், வருகிறேன்”, என்று அமைதியாக சொன்னதும்,

தான் மன்னன் என்பதையும் மறந்து, வேதனை தாளாமல் தசரதர் உரத்த குரலில் வாய்விட்டு அழுதார். அழுதழுது மூர்ச்சித்து விழுந்த அவரையும் கைகேயியையும் வலம் வந்து இருவரையும் வணங்கி ராமர் புறப்பட்டார். வாயிலில் பெருக்கோபத்துடன் முகம் சிவந்து, ஆற்றாமையால் கண்களில் நீர் பெருக நின்றிருந்த லக்ஷ்மணனைக் கண்டார்.

****************

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம்

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து.

Advertisement