Advertisement

7. தாய் கௌசல்யை தவிப்பு.

மாளிகையின் வெளியே நின்றிருந்த தனது தேரையும், பரிவாரங்களையும் வேண்டாமென ஒதுக்கி, கால்நடையாக தாய் கௌசல்யாவின் மாளிகைக்கு சென்றார் ராமர். இளவல் லக்ஷ்மணனோ மனதிலிருந்த துக்கத்தை கஷ்டப்பட்டு வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு ராமரை பின் தொடர்ந்து சென்றார்.  நிர்மலமான முகத்தோடு பற்றற்ற முனிவரைப்போன்ற தோற்றத்துடன் இருந்த ராமர், கௌசல்யாவின் மாளிகைக்கு சென்றபோது அவர், ராஜ்ய பாரம் ஏற்கப்போகும் மகனுக்காக விஷ்ணுவை வேண்டி  பூஜையில் இருந்தார்.

ராமரைப் பார்த்ததும், கௌசல்யா தேவி அவரை உச்சிமுகர்ந்து, “மகனே வாழி நீ பல்லாண்டு! தர்மம் தவறாது, பெரியோர்களின் ஆசியோடு தீர்க்க ஆயுளோடு அனைத்து சம்பத்துகளும் பெற்று, உனது தந்தையின் வாக்கின் படி ராஜ்ய பரிபாலனம் செய்வாய்”, என்று மனதார வாழ்த்தினார்.

தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த ராமர், மெல்ல தலை நிமிர்த்தி அன்னையைப் பார்த்து, “தாயே! உங்களுக்கும், சீதைக்கும், தம்பி லக்ஷ்மணனுக்கும் வேதனை தரும் செய்தி ஒன்று தெரிவிக்கப்போகிறேன். நான் இப்போது தண்டகாரண்யம் செல்லப்போகிறேன், பதினான்கு ஆண்டுகள் இந்த சுகங்களைத் துறந்து, ஆளரவமற்ற காட்டில் கிடைக்கும் நீர்,கிழங்கு, கனிகள் உண்டு வாழ தந்தை என்னை பணித்திருக்கிறார். பரதன் யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஏற்ப்பான் என்பதும் அவரது கட்டளையே. இதை காலத்தின் கோலமாக எண்ணி எனக்கு விடை கொடுங்கள்”, என்றார்.

ராமரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அனலிட்ட மெழுகாய் துடித்தார் கௌசல்யா, அடியற்ற மரம் போல அவர் கீழே சாய, அன்னையைக் கையால் தாங்கி நிறுத்தினார் ராமர். அன்னையின் கண்களில் கண்ணீர் ததும்ப, “ராமா! நீ எனக்கு பிறக்காமல்  இருந்திருக்கலாம். அப்போது மலடி என்ற அவச்சொல் இருந்தாலும் தாங்கிக் கொண்டிருந்திருப்பேன். இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மனவேதனையை வார்த்தையில் வடிக்க இயலவில்லை, மகனே! உனது தந்தையின் பட்டமகிஷியாக ஒருநாளும் நான் பெருமை அடைந்ததில்லை. பட்டாபிஷேகம் செய்து கொள்ளப்போகும் உனது தாயாக விம்மிதம் கொள்ளும் இந்த வேளையில், நீ கானகம் செல்கிறேன் என்கிறாய்”

“நீ இங்கிருக்கும்போதே நான் அவமத்திக்கப்பட்டவளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீயும் சென்றுவிட்டால் எனக்கு ஏற்படப்போகும் அவமரியாதைகளைச் சொல்லவும் வேண்டுமோ?”

“எப்போதும் கடுகடுவென்றிருக்கும் கைகேயியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் துரதிர்ஷ்டத்தை எவ்வாறு தாங்குவேன்? இனி அவளின் வேலைக்காரிக்கு நிகராகவோ அல்லது அதற்கும் கீழாகவோ நான் இருக்கப்போகிறேன் என்பது திண்ணம். என்மீது அன்புள்ளவர்கள், கைகேயியின் மகனான இளவரசன் பரதனை நினைத்து என்னுடன் பேசவும் தயங்குவர். இந்த துயரத்தை என்னால் தாங்க முடியாது”

“எத்தனை விரதங்கள் இருந்து உன்னை அருமை பெருமையாய் வளர்த்தென்ன? அத்தனையும் வீணாயிற்றே? உன் முகம் காணாமல் நான் எப்படி உயிர் தரிப்பேன்? காலன் இன்னமும் என்னை கொண்டு போகவில்லையே? இன்னமும் என்  இதயம் வெடித்துச் சிதறாமல் சிலையாய் இருக்கின்றதே? என்ன சொல்லி ஆவதென்ன? துன்பத்தில் இருக்கும் மனிதன், விரும்பும்போது எமலோகம் செல்லலாம் என்று விதித்திருந்தால் கன்றை விட்டு பிரிந்த பசுபோல, உன்னைவிட்டு என்னால் இருக்க இயலாதென்பதால், அக்கணமே என் உயிரை விடுவேன். அல்லது உன்னோடு நானும் காட்டுக்கு வருகிறேன்”, என்று மகனிடம் புலம்பி மாலை மாலையாக கண்ணீர் உகுத்தார் கௌசல்யா.

இதை அருகிருந்து பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மணன், “ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு இவ்வாறு முடிவெடுப்பது எனக்கும் ஏற்புடையதாக இல்லை”, என்று கூறி, “தசரத மன்னருக்கு வயதாகிவிட்டது, பெண்ணாசை அவரை பீடித்து ஸ்திரமற்ற மனம் உடையவராக அவரை மாற்றி, இவ்வாறு  உத்தரவிட வைத்து இருக்கிறது. இல்லாவிட்டால், மனதாலும் மற்றவர்க்கு தீமை செய்யாத ராமரை காட்டிற்கு அனுப்ப துணிவாரா? இதற்கு காரணம் ஏதேனும் உண்டா?ஒரு பெண்ணால் ஆட்டி வைக்கப்படுகிறவராக, தர்மத்திற்கு விரோதமாக நடக்கிறபடியால் அவர் என்னால் கொல்லத் தகுந்தவராகிறார். அவர் கட்டளையை எவன் ஏற்பான்?”, என்று கௌசல்யா தேவியிடம் கூறினார்.

உடனே ராமரைப் பார்த்து, “ஆட்சியை நீங்கள் கைப்பற்றுங்கள், உங்களுக்கு அரணாக எமன் போல் நான் நிற்கின்றேன். யார் நம்மை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.  அயோத்தி மக்களோ, பரதனுக்கு ஆதரவாக எவருமோ வந்தால் அவர்கள் என் அம்புக்கு இரையாவார்கள். ஒருவேளை நமது தந்தை கைகேயியினால் தூண்டப்பட்டு எதிர்த்து வந்தாரானால், அவரை சிறையில் அடைப்பேன், ஏன் கொன்றே கூடப் போடுவேன். சரி தவறு பேதமறியும் தன்மையில் இருந்து நழுவி, அதர்மமான வழி செல்லும் யாராக இருந்தாலும் அது ஆச்சார்யராக (குருவாக) இருந்தாலும், பெற்ற தந்தையாக இருந்தாலும் கண்டித்து ஒடுக்கத் தக்கவர் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. சொல்லுங்கள், உங்களுக்குண்டான ராஜ்யத்தை பரதனுக்கு தர முடிவெடுத்த காரணம் யாது? அப்படி முடிவெடுக்க என்ன அதிகாரம் அவருக்கு உள்ளது?”, என்று ராமரிடம் கேட்டு..பின் மீண்டும் கௌசல்யா தேவியைப் பார்த்து சொல்லலானார்.

“ராமர் என்னால் பூஜிக்கத்தகுந்தவர், அவரிடம் நான் வைத்திருக்கும் பக்தி அளவிட முடியாதது. நான் பேசும் சத்தியத்தின் மீதும், இதுவரை செய்த தானத்தின் மீதும், என் அசையா தெய்வபக்தியின் மீதும்,  கையில் வைத்திருக்கும் எனது வில்லின் மீதும் ஆணையிட்டு சொல்கின்றேன். ராமர் காட்டிற்கு சென்றாலும் சரி, செந்தழலுக்குள் வீழ்ந்தாலும் சரி, அவருக்கு முன் நான் அதில் வீழ்ந்திருப்பேன். நீங்கள் கவலைப்படாதீர்கள், உங்கள் துக்கத்தை நான் எனது ஆயுத பலத்தால் அழித்து ஒன்றுமில்லாமல் செய்கின்றேன். என் வீரத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்”, என்று ஆவேசத்தோடு சொன்னார்.

லக்ஷ்மணனின் பேச்சைக் கேட்ட கௌசல்யை, “ராமா! லக்ஷ்மணன் கூறியதைக் கேட்டாயல்லவா? இனி என்ன செய்யவேண்டும் என்று நீயே முடிவு செய்து கொள். ஆனால் எக்காரணத்தினாலும், கைகேயி கூறியதை போல் காட்டிற்கு செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன். யுவராஜாவாக அல்லாமல், ராஜ்ஜியம் துறந்து நீ இங்கே வீட்டிலேயே விரதங்களை அனுஷ்டித்து, எனக்கு பணிவிடை செய்து கொண்டிரு. காஷ்யபர் அவ்வாறு தான் பெரும் துறவிகளுக்குடைய தகுதியை அடைந்தார்”.

“மகனே கேள், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தசரதர் சொல்லுக்கு நீ கீழ்ப்படிகிறேன் என்றால், தாயாரை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. நீ கானகம் செல்வதை தாயான நான் அனுமதிக்கவில்லை. என் வார்த்தையின்படியும் நடக்க நீ கடமைப்பட்டவன். இந்த ராஜ்யமும் வேண்டாம் உனக்கு பட்டமும் வேண்டாம். நீ என் அருகிருந்தால் மட்டும் போதும் புல்லைத் தின்றானும் உயிர்வாழ்வேன், இல்லாவிட்டால் நான் பட்டினி கிடந்தது இறந்துபோவேன். அந்த பாபமும் உன்னையே வந்து பீடிக்கும்”, என்றார் உருக்கமாக.

ராமர் தாயைப் பார்த்து,”அன்னையே, நான் தந்தையின் சொல்லுக்கு மட்டுமன்றி  உங்கள் சொல்லுக்கும் கட்டுப்பட்டவனே. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டையும் செய்ய இயலாது, தவிர தந்தையின் ஆணை தங்களது ஆணைக்கு முந்தையது, எனவே முதலில் அதை நிறைவேற்றுவதே சரி. தங்களை வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன், நான் வனவாசம் செல்ல அனுமதி தாருங்கள்”

“இது உங்களுக்கு சிறிது காலத்திற்கு துன்பமுண்டாக்கும் செயல் என்றாலும் தந்தையின் ஆணை என்பதால் இதைச் செய்ய கடமைப்பட்டவனாகிறேன். முற்காலத்தில் தர்ம நெறிகளை அறிந்த கண்டு மகரிஷி, தன் தகப்பன் உத்தரவின் பேரால் பசுவை கொல்லவில்லையா? அவர் தபஸ்வி, ஞானியும் கூட, இருந்தும் அவ்வாறு செய்யத்துணிந்தது தந்தையின் ஆணை என்பதால் மட்டுமே. அவ்வளவு ஏன்?, நம் குலத்தில் உதித்த சகர சக்ரவர்த்தி சொன்னார் என்பதற்காக, அவரது அறுபதினாயிரம் புத்திரர்களும் பூமியை வெட்டி கடைசியில் கபில முனிவரின் கோபத்தால் சாம்பலானார்கள் அல்லவா?”

“பரசுராமர், தந்தை ஜமதக்கினியின் வார்த்தைக்கிணங்கி தாய் ரேணுகாவை கோடரியால் வெட்டினாரல்லவா? எனவே முன்னோர்கள் கடைபிடித்த தர்மத்தை நானும் கடைபிடிக்கிறேன். தங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல, தந்தையின் வாக்கை நிறைவேற்றும்போது தாய்க்கு சிறிது துக்கமேற்பட்டாலும், அதனால் அழிந்தவன் இந்த உலகத்தில் எவனுமில்லை”, என்று இனிமையாக அதெ சமயம் தன் கருத்தில் உறுதியாக பேசினார் ராமர். பின் தம்பி லக்ஷ்மணனைப் பார்த்து, “நீ என்மீது கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பையும், உனது பராக்கிரமத்தையும் நான் அறிவேன். சத்தியத்தையும், தர்மத்தையும் புரியாமல் தாயார் குழம்பி இருக்கிறார். ஆனால், தர்ம ரகசியத்தை அறிந்த நீ இவ்வாறு கூறுவது முறையாகாது.

“தந்தையாயிருந்தாலும் அவரைக் கொன்று இந்த ராஜ்யத்தை ஆள்வோம்”, என்று நீ கூறுவது அதிகேவலமான க்ஷத்ரியர்களுக்குரிய புத்தி, முதலில் அதை விடு. பெற்றோர்களுக்கோ ப்ராமணர்களுக்கோ ஒரு சத்தியம் (வாக்கு) கொடுத்துவிட்டு பின் அதிலிருந்து வழுவுவது தர்மத்தில் ஆசையுள்ளவன் செய்யும் காரியமாகாது. தந்தையின் ஆணை என்று கைகேயி என்னை தண்டகாரண்யம் போகச் சொன்னார். அதை மீற சக்தியற்றவன் நான். நீ சொன்ன சாத்திரம் சத்தியமே ஆனாலும் அது அவரவர் தர்மத்தின் படி இருக்க வேண்டும், தர்மத்திற்கு ஒவ்வாத சத்தியத்தை ஒருநாளும் அனுசரிக்காதே”, என்று கூறிவிட்டு, பின் தாய் கௌசல்யையிடம் திரும்பி, கைகூப்பி நமஸ்காரம் செய்து, “அம்மா, தாங்களும், நானும், சீதையும், லக்ஷ்மணனும், சுமித்ரா தேவியும் தசரதரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள். அவர் கூற்றின் படி முதலில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து விட்டு, இங்கு வந்ததும் தங்களுடைய விருப்பப்படி உங்களுக்கு பணிவிடை செய்கிறேன். தயவு செய்து உங்கள் துக்கத்தை அடக்கி எனக்கு அனுமதியளியுங்கள்”, என்று வேண்டி நின்றார்.

[இங்கே சின்ன விளக்கம் தேவைப்படுவதாக எண்ணுகிறேன் அதென்ன சாத்திரம் சத்தியம் தர்மம்?

தன்னைக் தாக்க வரும் நாகத்தை மனிதன் கொலை செய்யலாம். -இது சாத்திரம்.

எதிர்பாராமல் காட்டில் வழி தெரியாது நாகத்தின் எதிரே மாட்டிக்கொண்ட மனிதனுக்கு இந்த சாத்திரம் பொருந்தும். எனவே இது சத்தியமும், அவன் செய்யத்தகுந்த தர்மமும் ஆகிறது.

அதே மனிதன் தன் வீட்டில் இருக்கும் கரையான் புற்றை இடிக்கும்போது, அதில் வசிக்கும் நாகம், அங்கிருந்து வெளியேற வாய்ப்பளிக்காமல், இவனைப் பார்த்து சீறும்போது அதைக்  கொல்வதென்பது…, சாத்திரப்படி சரியே, சத்தியமும் கூட (ஏனெனில் அம்மனிதன் வசிக்கும் வீட்டில் நாகம் இருப்பது அவனுக்கு அச்சமூட்டும் விஷயம்), ஆனால் தர்மப்படி தவறு. எப்படி? சற்றே புற்றை இடித்தால் அந்நாகம் எச்சரிக்கையாகி வெளியேறி இருக்கும். அப்போது சிறிது நேரம் அங்கிருந்து விலகி நின்றால், நாகம் வெளியேற வாய்ப்பளித்தது போலாகும். அதாவது ஒரு அனாவசிய உயிர் வதை தவிர்க்கப்பட்டிருக்கும்.]

“ராமா, நீ ஆயிரம் சமாதானம் கூறினாலும் என் மனவேதனை தீரப்போவதில்லை. உன்னை சுமந்து பெற்று சீராட்டி வளர்த்த என்னை நீ உன் தந்தைக்கு சமமாக எண்ண வேண்டும், என் சொல் கேள். மீளாத்துயரில் இங்கே என்னை விட்டு, நீ காட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கமாட்டேன். நீயில்லாத இந்த மாளிகையில் நான் உயிரோடிருப்பதில் எந்த பயனும் இல்லை”, என்றார் கௌசல்யா.

தாயின் வார்த்தைகளைக் கேட்ட ராமர், அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்பது புரியாமல் தம்பி லக்ஷ்மணனைப் பார்த்து, “மனைவிக்கும் மகனுக்கும் அறம் என்ன என்பது தெரியாமல் புலம்பி தவிக்கும் என் தாயாரோடு நீயும் சேர்ந்து குழம்பாதே. ஒரு பெண்ணிற்கு கணவனின் சொல் படி நடப்பதே அறம், அதன் மூலம் அவளுக்கு இன்பமும், மக்கட்ச்செல்வமும் கிடைக்கும். பின்னர் வீடுபேறு. அதுபோலவே தசரதரின் மகனான நமக்கு அறம், அவர் வார்த்தையை பின்பற்றி நடப்பதே. அஃதில்லாமல், நாடு, செல்வம் இவற்றிற்கு ஆசைப்பட்டு அனைத்திற்கும் மேலான அறத்தில் இருந்து நழுவ மாட்டேன். உன் கோபத்தையும் மனசஞ்சலத்தையும், பட்டாபிஷேக நினைவையும் விட்டொழி”.

“நம் அன்னையுள் ஒருவரான கைகேயியின் மனம் கோணாமல் நட, அவருடைய அபிலாஷை ஈடேறுமோ ஆகாதோ என்ற ஐயப்பாடு அவருக்கு இருக்கின்றது. நான் மரவுரி உடுத்து கானகம் சென்றால்தான் அவரது இந்த சஞ்சலம் நீங்கும். அப்போதுதான், தசரதருக்கு சொன்ன சொல்படி நடப்பவர் என்ற சிறப்பு நிற்கும். நான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், தாயாருக்கு மனவருத்தம் மேலோங்கும்”

“பட்டாபிஷேகம் என்ற நிலையாகட்டும், இப்போது காடேக வேண்டும் என்ற நிலையாகட்டும் அனைத்துமே வினைப்பயன். இல்லாவிட்டால், இதுநாள்வரை பரதனுக்கும் எனக்கும் வித்தியாசம் பாராட்டாத அன்னை கைகேயி இன்று தடம் புரள்வானேன்? இது இறையின் செயலன்றி வேறில்லை. இதற்கு யாதொரு காரணமும் பகுத்துக் கூற இயலாது. இறையின் செயலை எதிர்த்து போர் செய்யும் வல்லமை படைத்த மனிதன் இப்பூவுலகில் கிடையாது”

“நினைவில் வைத்துக்கொள், எந்த ஒரு இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ, பிணிக்கோ, கோபத்திற்கோ எப்போது நம்மால் ஏற்கக்கூடிய காரணத்தை கூற முடியவில்லையோ அது ஈஸ்வரன் செயல் என்று கருதவேண்டும். நிறைவான நிகழ்வாக ஆரம்பித்த பட்டாபிஷேகம் தடைபட்டு நேர்மாறாக முடிகிறதென்றால் இது தெய்வச்செயலே. இந்த கோணத்தில் என் மனம் பார்ப்பதால் எனக்கு சஞ்சலமில்லை, நீயும் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்”.

“எனது பட்டாபிஷேக நிகழ்வுக்காக தருவிக்கப்பட்ட திரவியங்கள் கொண்டே எனது வனவாசம் ஆரம்பமாகட்டும். நாட்டில் இளவரசனாக வாழ்வதை விட காட்டில் துறவியாக இருப்பது சிறந்தது. [அப்போ ராமர் துறவியாகறதுக்கு ஆசைபட்டாரா ன்னு கேள்வி வரலாம், இன்றைய சூழ்நிலைல நமக்கு எது கிடைக்கிறதோ அதுவே சிறந்ததுங்கிற மனப்பக்குவம் இங்க சொல்லப்படுதுன்னு நினைக்கிறேன்] இவையனைத்திற்கு காரணம் கைகேயி அல்ல, இறையே என்பதை நீ அறிவாய்” என்றார் ராமர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன், பாம்பு போன்ற சீற்றத்துடன் பெருமூச்சு விட்டார். அதில் அடக்கப்பட்ட சிங்கத்தின் கோபம் இருந்தது. “இந்த நேரத்தில் அறம் பற்றிய பேச்சும், உலகோர் பழிப்பார்களே என்ற எண்ணமும் தகுதியில்லாதவர்களுக்கு சாதகமாய் போய்விடும். மன உறுதியை என்றும் கைவிடாத சத்ரிய குல திலக, இப்போது நீங்கள் இறை செயல் பற்றி கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இந்நேரத்தில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டு தெய்வச் செயலாகவே இருந்தபோதும் அது சக்தியற்றது. கைகேயியின் பேராசையால் விளைந்தது. வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடந்த நாடகம். இல்லையென்றால் தந்தையால் எப்பொழுதோ கொடுக்கப்பட்ட இரண்டு வரங்கள் இப்போது கேட்கப்படுவானேன்? இதுநாள்வரை அவ்வரங்கள் இன்றைய தினத்திற்காக காத்திருந்தனவா? “

“அண்ணா உங்களது இந்த அமைதியான அணுகுமுறை எனக்கு மனக்கசப்பைத் தருகிறது. கைகேயியின் சொல்படி நடந்து கொண்டிருக்கும் நம் தந்தை, தர்மத்துக்கு விரோதமாக செயல்பட துணிந்திருக்கிறார். அதை உங்கள் பராக்கிரமத்தாலேயே தடுத்துவிடும் வல்லமை இருந்தும், அவர்கள் சொல்படியே நடப்பேன் என்று வாதம் புரிகிறீர். இது ஏளனத்துக்குரியது. உங்கள் பட்டாபிஷேகம் நின்றது தெய்வச்செயல் என்றால், அதை என் மனித சக்தியால் மக்கள் மகிழ்வுறும் வகையில் நடத்திக் காட்டுகிறேன். யானையை சிறிய அங்குசத்தால் அடக்குவது போல, மணிவிழாவிற்கு ஏற்பட்ட இடையூறை எனது முயற்சியால் விலக்குகிறேன்”

“உங்களுக்கு பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது என்று மூவுலகமும், அஷ்டதிக் பாலகர்களும்  ஏன் எவருமே சொல்லமாட்டார்கள், இந்த இருவரைத் தவிர. நீங்கள் அல்ல வனவாசம் சொல்லவேண்டியது. ரகசியமாக உங்களை கானகம் அனுப்ப திட்டமிட்டார்களே அவர்கள் தான் காட்டிற்கு செல்ல வேண்டியவர்கள். அட்டி செய்யாதீர்கள், கைகேயியின் ஆசையையும் அதற்கு ஒப்புக்கொண்ட தசரதரின் எண்ணத்தையும் வேரோடு களைகிறேன். இறைசக்தியால் ஏற்பட்ட கொடுமையை விட, நான் இப்போது செய்யப்போவது மேலாக இருக்கும்”

“நீங்கள் பல்லாண்டு காலம் அரசாட்சி செய்து மூப்பெய்த பின் , உங்கள் பிள்ளைகளிடம் ராஜ்யபாரத்தை ஒப்படைத்து, அதன் பின்னர் வனவாசம் செல்லலாம். திடசித்தம் கொண்டவரே, பட்டாபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை தடுப்பவரை அழிக்க நான் ஒருவன் போதும். என் உடைவாள் அலங்காரத்திற்காக இல்லை. என் நீண்ட கைகள் அழகுக்காக படைக்கப்படவில்லை.  வில் எனது ஆபரணமோ அல்லது அம்பறாத்துணியில் இருக்கும் அஸ்திரங்கள் கைத்தடிகளோ அல்ல. உங்களை எதிர்ப்பவர்களை அழிப்பதற்காகவே இவை என்னிடம் உள்ளன.  இது நாள் வரை தான தர்மங்கள் செய்யவும், வாசனாதி திரவியங்களை பூசிக்கொள்ளவும், பெரியவர்களை துதிக்கவும் மட்டுமே பயன்பட்ட எனது கைகள், இப்போது உங்களுடைய பட்டாபிஷேகத்தை எதிர்க்க நினைப்பவர்களை பூண்டோடு அழிக்க பயன்படப்போகின்றன. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன், தயவு செய்து ஒரு வார்த்தை சொல்லுங்கள்”, என்று இறைஞ்சி நின்றார் லக்ஷ்மணன்.

தீர்மானமாக உறுதியான குரலில், “லக்ஷ்மணா, ஸ்ம்ருதிகள் புத்திரனுக்குண்டான தர்மமாக, பெற்றோர்கள் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்து  நடக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றன. அதில் எனக்கு பரிபூரண நம்பிக்கை இருப்பதால் அதை மீறி ஒருபோதும் நடக்க மாட்டேன்”, என்று கூறினார்.

பின் தாய் கௌசல்யயைப் பார்த்து, “ஏற்கனவே கைகேயியின் செயலால் வருத்தப்பட்டுவண்டிருக்கும் தந்தையை தாங்களும் புறக்கணித்தால், உயிர் தரிக்க மாட்டார். கணவனை விட்டு நீங்குவதென்பது ஒரு பெண் செய்யக்கூடாத பெரும் பாவம். அதை நீங்கள் மனதாலும் நினையாதீர்கள். மணமான பெண்ணுக்கு கணவனே எஜமானன், அவருக்கு பணிவிடை செய்வதே பெண்ணின் உயர்ந்த தர்மம். இறை பக்தி இல்லாதவளாயிருப்பினும், மணாளனுக்கு மனப்பூர்த்தியாக தொண்டு செய்யும் பெண் நல்ல உலகங்களை அடைகிறாள்”

“தசரதர் பெரியவர், நம்மை காப்பாற்றுபவர், பூஜைக்குரியவர், நமக்கு அரசர், உங்களுக்கு கணவர், எவ்விதமாயும் அவரது சொல் மீறத்தக்கதல்ல. தவிர பரதனோ, அன்பானவன், தர்மத்தின் பாதையிலிருந்து வழுவாதவன், அவன் உங்களிடமும் அன்பாகவே நடந்து கொள்வான்.”

“நான் இல்லாத துக்கம் தந்தைக்கு வராத வகையில் அவருக்கு தொண்டு செய்யுங்கள். பதினான்கு ஆண்டு காலம் முடிந்ததும் திரும்பி வருவேன் அதுவரை பொறுமையுடன் இருங்கள்”, என்று சொன்னார்.

என்ன சொன்னாலும் மகனின் மனம் மாறப்போவதில்லை என்பதை உணர்ந்த கௌசல்யை, “விதியை வெல்ல யாரால் இயலும், உன் தீர்மானத்தை மாற்ற இயலாதென்பது தெரிகிறது. நீ அயோத்திக்குத் திரும்பிய பிறகுதான் நான் நிம்மதியான உறக்கம் கொள்ள முடியும் என்பதை மட்டும் மனதில் வை. இப்போதிருக்கும் மனஉறுதி எப்போதும் உனக்கு துணை நிற்கட்டும். எல்லா நேரங்களிலும் உனக்கு நன்மையே நடக்கட்டும். நீ வனவாசம் முடித்து மீண்டு வருங்காலம் இப்போதே வந்துவிடாதா என்று என் மனம் பேதலிக்கிறது”

“தர்மத்தைக் காக்கிறவர்களை அந்த தர்மமே துணை நின்று காக்கும். மகனே, பெரியோர்கள் காட்டிய வழி நட. நீ பெரியவர்களுக்கு செய்த பணிவிடைகள் உன்னை அரணாக நின்று காக்கட்டும். விஸ்வாமித்திரரிடம் நீ கற்ற அஸ்திரங்கள் துணையாய் நிற்கட்டும். உன் உண்மையான நன்னடத்தையும், நீ வணங்கும் மக்களும் ரிஷிகளும் உனைக் காப்பார்களாக. இயற்கை உன்னைக் கருணையோடு காத்து நிற்கட்டும்”

“இந்திரன் முதலான தேவர்களும், அஷ்டதிக் பாலகர்களும், ஆறு ருதுக்களும், எல்லாக் காலங்களிலும் உனக்கு நன்மையே செய்யட்டும். உலகில் உள்ள எல்லா படைப்புகளும், எல்லா கிரகங்களின் அதி தேவதைகளும் உன்னுடன் இருந்து காக்கட்டும். நீ செல்லும் வழியில் அச்சமற்று இருக்கட்டும், காட்டு விலங்குகள் உன்னை நெருங்காதிருக்கட்டும். தேனும் தினையும், கிழங்கும் உனக்கு அபிரிதமாக கிடைக்கட்டும். மகனே , மகிழ்வோடு சென்று வா”, என்று கனத்த மனதுடன் கூறி,  அந்தணர்களை வரவழைத்து நன்மை தரக்கூடிய மந்திரங்களை சொல்லி ராமரை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்.

பின் விசேஷமான விசல்யகரணி என்ற மூலிகையைக் கொண்ட ரக்ஷையை ராமரின் கையில் கட்டி, “திட சித்தமுடையவனே, சென்று வா, தந்தை சொல் காத்து உன் விரதத்தை முடித்து வா. உன் வரவுக்காக, அந்த நன்னாளிற்காக  நான் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன். சர்வேஸ்வரனை பணியும் அனைத்து தெய்வங்களும், ரிஷிகளும் தேவதைகளும் உனக்கு நன்மை புரிவாராகுக”, என்று கண்ணீர் மல்க ராமனுக்கு விடை கொடுத்தார்.

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம்

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து.

Advertisement