பின்னுரை

ஐந்து வருடங்கள் கழித்து…

தன் புல்லட்டை வாசலில் நிறுத்தி விட்டு இறங்கியிருந்தான் அமுதன்.

அவன் புல்லட் சத்தம் கேட்டதுமே வாசலுக்கு ஓடி வந்த பிள்ளைகள் எழில்குமரன், முத்தழகி இருவரையும் இரண்டு கைகளில் தூக்கியவாறு வீட்டினுள் நுழைந்தான். தன் தாத்தாவின் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரைப் பிள்ளைகளுக்குப் பிரித்துப் பெயரிட்டிருந்தானவன்.

பெரிய கூடத்தில் ஒருபுறம் அமுதனும் குமுதாவும் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்க, அதன் அருகில் இப்போது இருவரும் குழந்தைகளை மடியில் வைத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தது. எதிர்ச்சுவரில் நடுவில் மரகதமும் இரண்டு பக்கமும் அமுதன் குமுதா தம்பதியும், வேதா வில்லியம் தம்பதியும் அவரவர் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படமும் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.

வழக்கம் போல் உள்ளே நுழைந்ததும் தானும் குமுதாவும் மாலையும் கழுத்துமாக இருக்கும் படத்தை விழிகளில் நிரப்பியபடி,

“என்னடே ஒங்கம்மை தயாராயிட்டாளா இல்லையா?”

“அம்மா மேல பொடவை கட்டுதா.”

“பொடவை கட்டுதாளா!”

இரு கண்களிலும் எமோஜிக்களில் வரும் இதயங்கள் வெளியே வந்து துடிப்பது போன்ற பாவனை வந்து போக “சரி! நான் போய்க் கெளம்பிட்டாளான்னு பார்க்குதேன். நீங்க போய் ஆச்சி தயாராயிட்டாவன்னா வரச் சொல்லுங்க” என்றவன் மாடியேறிப் போனான்.

ஐந்து வருடங்கள் முன்பு குமுதா கர்ப்பமாயிருப்பது தெரிந்ததும் மகிழ்ந்தாலும் மருத்துவமனைக்கும் சென்று கொண்டு குழந்தையையும் எப்படிப் பெற்றுக் கொள்வாள் என்று அவன் யோசிக்க, குமுதாவோ அவன் உதவியுடன் எல்லாவற்றையும் அனாயாசமாக சமாளித்தாள்.

ஹௌஸ் சர்ஜன் பணியில் இருக்கும் போது அவர்கள் ஊரில் இரவு நேரம் திடுமென வலி வந்து ஒரு கர்ப்பிணி அவஸ்தைபட, மருத்துவமனை செல்லும் அளவு நேரமில்லாத நிலையில் தானும் கர்ப்பிணியாயிருந்த நிலையிலும் குமுதாவே அந்தப் ப்ரசவத்தை வெற்றிகரமாகப் பார்த்துத் தாயையும் குழந்தையையும் காப்பாற்ற அமுதனுக்குப் பெருமை பிடிபடவில்லை.

உடனே பிள்ளைப்பேறு பார்ப்பதற்கான சகலவசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றை அந்த கிராமத்திலேயே கட்ட முன்னேற்பாடுகளை ஆரம்பித்து விட்டான்.

ஆம்! அவன் செல்வநிலையும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத அளவு அசுர வளர்ச்சியை எட்டி இருந்தது. இப்போது ஊறுகாய்கள் மட்டுமில்லாமல் மரகதத்தின் பல சமையல் குறிப்புக்களை அவன் சந்தைப்படுத்தி இருந்தான்.

கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ மாணவியரும், திருமணமாகாதவர்களும் அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிட ஏதுவாக எளிதில் பயன்படுத்தும் வண்ணம் விதவிதமான பொடிகள், என அவன் அறிமுகப்படுத்திய தயாரிப்புக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய ராணுவத்தின் உணவகங்களுக்கு, பள்ளிகளுக்கு, விற்பனையகங்களுக்கு அவனது தயாரிப்புக்களை விநியோகம் செய்வதற்கு ஏற்பட்ட ஒப்பந்தம் அவன் தொழிலை மிகப் பெரும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது. தொழிலில் வருடாந்திர நிகர லாபம் சில நூறு கோடிகளைத் தொட்டிருந்தது.

ஹௌஸ் சர்ஜன் முடித்த கையோடு மகளிர் மருத்துவத்தில் மேல்படிப்பும் MS (O&G) படித்து முடித்தாள் குமுதா. மேல்படிப்பின் போதே இறுதியாண்டில் மீண்டும் கர்ப்பம் தரித்து முத்தழகியைப் பெற்றெடுத்தாள்.

இந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் சுற்று வட்டாரக் கிராமங்களில் மட்டும் அவள் வெற்றிகரமாகப் பார்த்த பிரசவங்கள் ஐநூறைத் தொட்டிருக்க அதைப் பாராட்டும் விதமாக அன்று ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதற்காகத்தான் குமுதா இப்போது தயாராகிக் கொண்டிருந்தாள். 

அமுதன் அவர்களின் அறைக்குள் நுழைய, மேலே போடும் மடிப்புக்களை வைத்துப் பின் குத்திக் கொண்டிருந்தவளின் பின்னே மெதுவாகச் சென்றவன் அவள் இடையை வளைத்துப் பிடிக்கத் துள்ளிக் குதித்துத் திரும்பியவள் அவன் காலை மிதித்து விட லேசாகத்தான் பட்டது என்றாலும் வலியால் துடித்தவன் போல் நடிக்க ஆரம்பித்தான்.

“ஆ ராட்சசி! ஏண்டி காலை மிதிச்சே?”

“சத்தமில்லாமத் திருட்டுத்தனமா வந்ததுமில்லாமக் காலை ஏன் மிதிச்சேன்னா கேக்குறீக. அதுசரி அதான் ராசாத்தியா இருந்தவ இப்ப ராட்சசியாப் போயிட்டேன்ல”

குரலில் வருத்தம் போல் காட்டி அவள் சொல்ல உடனே அவனுக்கு உருகிப் போயிற்று. அருகில் வந்து அணைத்துக் கொண்டவன் “என் ராசாத்தி, ராட்சசி எல்லாம் நீதானடி.கால் வலிக்குதுன்னு சொன்னாப் பதறிப் போயி என்னா ஏதுன்னு கேப்பேன்னு பார்த்தா…”

“மிதிச்சவளுக்குத் தெரியாதா எம்புட்டு வலிக்குமின்னு…” என்று அவன் கன்னத்தைக் கைகளால் தாங்கி நெற்றியில் முட்ட

“சரி சரி! சீக்கிரம் தயாராவு. பொழுதாயிட்டிருக்கு பாரு”

அவள் கீழே கொசுவம் வைக்க ஆரம்பிக்க மண்டியிட்டு அமர்ந்தவன் இரண்டு விரல்களால் ஒவ்வொரு மடிப்பாக நீவி விட்டான்.

“பட்டுப் புடவை ஏதாச்சும் கட்டிருக்கலாம்லத்தா?”

குனிந்து மடிப்புக்களை சரி செய்து விட்டுக் கொண்டே கேட்டான்.

“டாக்டர்ன்னாக் காட்டன் புடவைதான் கெத்து மாமா.பட்டு கசகசன்னு வேற இருக்கும்”

அவள் வயிற்றை எக்கிக் கொசுவத்தை செருகி முடிக்க மண்டியிட்டு அமர்ந்தவாறே பார்த்திருந்தவனைக் கண்டவள் “என்ன மாமா அப்பிடிப் பார்க்குதீய?”

சரிகைக் கரையிட்ட மரூன் நிறப் பருத்திப் புடவை, அதற்குப் பொருத்தமான இரவிக்கை, மெலிதான தங்க நகைகள் என அணிந்து தேவதையென நின்றிருந்த மனைவியை விழிகளில் நிரப்பியவன்,

“வர வர அழகாயிட்டே போற ராசாத்தி” என்றபடி எழுந்து அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி இதழ்களில் மென்முத்தம் வைக்க முகத்தைச் சுளித்தவள் “இப்ப என்ன பரீட்சையா நடக்கு மாமா? இப்பிடி உப்பு ஒறைப்பில்லாம முத்தம் கொடுக்குதீய” எனவும் ஒரு கணம் புரியாமல் பார்த்தவன் பின் விஷயம் புரிந்ததும் அவளை முறைத்தான்.

“வேணாம்டி! சும்மாக் கெடக்குதவனைக் கெளப்பி விடாத. பொறவு ஒனக்குத்தான் கஷ்டம்”

“க்கும், கஷ்டப்படாமத்தான் ரெண்டு புள்ள பெத்துச்சாக்கும்”

அவள் வார்த்தைகள் உசுப்பி விட அவளை வளைத்துப் பிடித்தவன் வன்மையாய் அவள் இதழ்களைக் கொள்ளை கொண்டான்.

கணவனின் இதழ்ஜாலத்தில் மயங்கியவள் அவன் அணைப்பு இறுக, திமிறி விடுபட்டாள்.

“யோவ் மாமா! முத்தம் குடுன்னாப் பொடவையக் கசக்குறிய”

“நீதானடிக் கஷ்டப்பட்டாக் குத்தமில்லன்னே”

இதற்குள் அவன் அலைபேசி அடிக்க “ராத்திரி இருக்குடி ஒனக்கு.வாயா பேசுத” எனவும் அவள் முகம் சிவக்க “அச்சோ! மாமன் பாவமில்ல. இப்பிடியெல்லாம் செவக்காதடி” எனவும் அவள் முகம் இன்னும் நிறம் கொண்டது.

“ஃபோன் அடிக்கு மாமா. மொதல்ல அதை எடுத்துப் பேசுங்க”

“அம்மைதான்… தயாராயிட்டமான்னு கேப்பா” என்றவன் அழைப்பை ஏற்று “இதா வந்துட்டே இருக்கம்மா” என்று விட்டு வைத்தான்.

ஐந்து நிமிடங்களில் மனைவியையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

விழாவில் தலைமை தாங்கிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்,

“நான் இங்க வர்றதுக்கு முன்னாடிக் கலெக்டர்ஸ் மீட்டிங்க்குக்குப் போயிருந்தேன். அங்க உங்க பழைய கலெக்டர் பார்த்தேன். கோடனூர் போறேன்னு சொன்னதும் அவங்க சொன்ன முதல் விஷயம் அங்க குமுதா இருப்பா மீட் பண்ணுங்கன்னுதான்.குமுதாவுக்குப் பாராட்டு விழாவுக்குத்தான் போறேன்னு தெரிஞ்சதும் அவங்களுக்கு ஒரே சந்தோஷம். எனக்கு முதலிலேயே தெரியும் அந்தப் பொண்ணு பெரிய ஆளா வருவான்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க”

மேலும் குமுதாவைப் பாராட்டிப் பேசி விட்டு அவர் அமர குமுதாவைப் பேச அழைத்தார்கள்.

“அனைவருக்கும் வணக்கம்!

நான் ஏதோ ரொம்பக் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்ததா இங்க எல்லாரும் சொல்றாங்க. ஆனா அது உண்மையில்லை. பெண்கள்னாலே கல்யாணம், குழந்தை, குடும்பம்னு ஒரு கூட்டுப்பறவையா அடைஞ்சுடணும்ங்கிற கோட்பாட்டை எதிர்க்கணும்கிற போராட்ட குணம் எங்கிட்ட இருந்தது உண்மைதான்.எதிர்த்து வெளியே வரவும் செய்ஞ்சேன். ஆனால் இது எல்லாமே என் மாமாவாலதான் எனக்கு சாத்தியம் ஆச்சு.”

“அவர் மட்டும் இல்லைன்னா நான் இந்த நிலைமைக்கு வந்துருக்கவே முடியாதுன்னு என்னால உறுதியாச் சொல்ல முடியும். எனக்குக் கிடைத்தது போல் எல்லாருக்கும் ஒரு கணவன் கிடைப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஆனால் ஒரு அப்பாவோ அண்ணனோ கண்டிப்பாக் கிடைக்க முடியும்.”

“உங்க வீட்டுப் பொண்ணுங்களோட மனசில் இருக்கிற ஆசைகளை, படிக்கணும்கிற அவங்களோட தாகத்தைப் புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு உதவி செய்யுங்க”

“பல வருஷங்கள் முன்னால நான் பன்னிரண்டாவதுல மாநிலத்துலயே முதலாவதாக வந்தேன். நம்ம கிராமத்தைப் பொருத்தவரை அது ஒரு தொடக்கம்தான்.அதற்கு அப்புறம் எத்தனையோ பிள்ளைகள் ஸ்டேட் ரேங்க் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.இப்போ அது சர்வ சாதாரணமாப் போயிடுச்சு.”

“ஒரு பெண் படிச்சு முன்னுக்கு வர்றதுங்கிறது அவளுக்கு, அவளோட குடும்பத்துக்கு மட்டும் நன்மை ஏற்படுத்துற விஷயம் கிடையாது. இந்த மாற்றங்கள் தலைமுறையாய்த் தொடரும்.அந்தப் பிள்ளையைப் போல் நாமும் நம் வீட்டு பெண்ணும் முன்னேறணும்கிற ஆசை எல்லார் மனதிலயும் துளிர் விடும்”

“முதலில் அடி எடுத்து வைக்கிறவங்க கல்லும் முள்ளுமான பாதையில் பயணித்தாலும் அவர்களின் பாதையில் தொடருபவர்களுக்குப் பயணம் எளிதாகும். அதுனால பெண்கள் முதல் அடியெடுத்து வையுங்க.அதுக்கு வீட்டில் இருக்கிற ஆண்கள் உறுதுணையாய் இருங்க.கல்யாணம் குடும்பம்னு பெண்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்காதீங்க. உலகம் பரந்து விரிந்தது.அவங்களுக்கான தேடலில் அவங்க முதல்ல வெற்றி பெறட்டும். அப்புறம் இருக்கவே இருக்குக் கல்யாணமும் குடும்பமும்.நன்றி.”

பேசி முடித்து வந்து அமர்ந்தவளைப் பெருமிதத்தோடு அவன் பார்க்க “நல்லாப் பேசினேனா மாமா?” என்றாள் கிசுகிசுப்பாக.

“கலக்கிட்ட போ. இங்கேயே அப்படியே இறுக்கிக் கட்டிக்கணும் போல இருக்கு எனக்கு” அவன் வார்த்தைகளில் முகம் சிவந்தாலும் “ப்ச்சு. சும்மா இருங்க மாமா” என்றாள்.

இரவு அவன் கைகளில் நெகிழ்ந்திருந்தவள் “நீங்க மட்டும் இல்லைன்னா நான் என்ன செய்திருப்பேன் மாமா? வயத்துப்பாட்டுக்கு ஏதாவது வீட்டு வேலை பார்த்துட்டு முக்கி முக்கி ஒரு பன்னண்டாப்பு முடிச்சிருப்பேனா?”

மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன் “அப்படி இல்லடா. படிக்கணும்கிற வெறி உங்கிட்ட இருந்துச்சு.இங்க்லிஷ்ல ஸ்பார்க்ன்னு சொல்வாகளே. அதுபோல உனக்குள்ள இருந்த பொறி, ஜுவாலையாத் தொடர்ந்து எரிய ஒரு கருவியா நான் பயன்பட்டேன். அம்புட்டுதான். நான் இல்லைன்னாலும் ஒனக்கு யார் மூலமாவது ஒதவி கெடச்சு நீ படிச்சுருப்பே. ஆனா ஒன் எடத்துல வேற யாரும் இருந்துருந்தா இப்பிடி மயங்கிப் போயி பாடம் படிக்க வந்த புள்ளையக் கரெக்ட் பண்ணிக் கன்னாலம் கட்டியிருப்பேனான்னு தெரியாது” என்று அவன் கண்ணடிக்க,

“ஆமா இவரு கரெக்ட் பண்ணினாரு.ஒத்தக் காலுல நின்னு கட்டிகிட்டது ஆராம்?”

“கொஞ்சம் நிதானமா நீ படிப்ப முடிச்ச பொறவு கட்டிக்கிடலாம்னு நெனச்சேன். நீதான் அவசரக் குடுக்கை. ரெண்டு கால்ல நிக்கப் பொறுமை இல்லாம ஒத்தக் கால்ல நின்னு கட்டிக்கிட்ட”

அவனை முறைத்தவள் திரும்பிப் படுத்துக் கொள்ள “ஆஹா மொதலுக்கே மோசமாப் போச்சேடா மாறா” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் ஊடிக் கொண்டிருக்கும் மனையாளிடம் கூடலுக்கு அடிபோட  ஆரம்பித்தான்.

கணவன் மனைவியின் அந்தரங்க விவகாரங்களில் குறுக்கிடாமல் அவர்கள் இப்படியே ஊடலும் கூடலுமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.

                                        நிறைந்தது

பூவு கூட நாரு போல
பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன்
மதுரை வீரன் பொம்மி போலே
சேலையோட நூல போல
சேர்ந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து
தேடித் தந்த சொந்தம்தான்
மாமாவே நீ வேணும்
ஏழு ஏழு ஜென்மம்தான்