அத்தியாயம் 7
அன்னையின் வீட்டுக்குச் சென்று விட்டுத் தன் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு உடலெல்லாம் ஏதோ புது வித உணர்ச்சி பொங்கிப் புளகித்துக் கொண்டிருந்தது. உணவு வேண்டாம் என்று வேலையாளுக்குச் சொல்லி விட்டு மாடியில் தன் அறைக்குச் சென்றவன் நேராகக் குளியலறைக்குச் சென்று குளிர் நீரில் பத்து நிமிடங்கள் தலையைக் காட்டிய பின்னர்தான் அவன் உணர்வுகள் சமநிலைக்கு வந்தது.
தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவன் மனம் மட்டும் சிறிது நேரம் முன்னர் உணர்ந்த மணத்திலேயே பிடிவாதமாக நிலைத்து நின்றது.
அவன் மரகதத்தின் வீட்டினுள் நுழைந்த போது தலை ஒரு பக்கம் தொங்கி, வாய் லேசாகப் பிளந்து, அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்த குமுதாவைக் கையைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்த மரகதத்தைக் கண்டவன் வாய் விட்டுச் சிரிக்கவும் அவரும் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பிப் பார்த்தார்.
“ஏ கெளவி! என்ன கொமரியோட மல்லுகட்டிகிட்டுக் கெடக்கே”
“ஏம்ல நீ வேற, நானே இவளைத் தூக்க முடியாமக் கடுப்பில கெடக்கேன்.”
“ஏன் என்னாச்சு? இங்கனயே ஒறங்கிட்டாளா? எழுப்பினா எழும்ப மாட்டுக்காளா?”
“அதையேன் கேக்க? காலைல இருந்து நல்லாத்தான் சுத்தி வாரா.ராவு ஒம்பதானாக் கோட்டி பிடிச்சுக்கிடுது.வந்த மொத நாளே இப்பிடித்தான். இங்கனேயே ஒறங்கிட்டா.உலுக்கு உலுக்குன்னு உலுக்குதேன்,ஒன்னும் சோலியாவலை. கடைசில இங்கனயே ஒறங்குன்னு விட்டுட்டேன்.ஆனாப் பாவம் புள்ளைக்குக் காலைல காலு முதுகெல்லாம் ஒரே கொசுக்கடி”
“ஏன் கொசுக்கடி? அதான் வீடு முழுக்க சன்னலுக்கெல்லாம் கொசுவலை போட்டுத்தான இருக்கு”
“எல்லா ரூம்புலயும் இருக்குலே.இங்கன வாசக் கதவைத் தொறந்தே வச்சுருதோமா, அதுனால கொசு நெறைய வந்துருது. நெதமும் எட்டே முக்கால் ஆகவுமே ரூம்புக்குப் போன்னு சொல்லிருவேன். இன்னைக்குன்னு போனைக் காணோமின்னு கொஞ்சம் தாமசிச்சேன் சமையல்கட்டிலே, வந்து பார்க்கையில ஒறங்கிட்டா”
அவளைத் திரும்பிப் பார்த்தவனின் மனது ‘கிடைத்த வாய்ப்பை விடாதே’ என்றும் ‘உன் ஆசையை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்காதே’ என்றும் இரு கூறாய்ப் பிரிந்து சமரிட, கள்ள மனம் நல்ல மனத்தை வெற்றி கொள்ளச் சட்டென எழுந்தவன்,
“நீ போயி அவ ரூம்புக் கதவைத் தொறந்து வையி” என்று விட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டான்.
உறங்கிக் கொண்டிருந்தவள் முதுகுக்கு அடியில் ஒரு கையும் முழங்கால்களின் கீழே இன்னொரு கையும் கொடுத்து அவளைப் பூக்குவியலாய் அள்ளிக் கொண்டவன் பிறகே அது பூக்குவியல் அல்ல புளிமூட்டை எனப் புரிந்து கொண்டான்.
புரிந்து கொண்டதில் வாய் விட்டுச் சிரிக்கத் தோன்ற, கட்டுப்படுத்திக் கொண்டவனாகக் கொஞ்சம் கைகளை லாவகமாக உதறி விடுத்து வாகாக அவளை ஏந்திக் கொண்டு அவளது அறைக்குத் தூக்கிச் சென்றான்.
மரகதத்தின் வீட்டின் முன் பெரிய மல்லிகைப் பந்தல் உண்டு. மல்லிகையின் வாசத்துக்குப் பாம்புகள் வரும் என்பதால் சிறியாநங்கை, ஆடுதீண்டாப் பாளை, நாகதாளி போன்ற செடிகளையும் அருகில் வளர்த்தனர்.
அந்த மல்லிகை மலர்களை முன்னெல்லாம் இளம்பெண்கள் வந்து பறித்துக் கொண்டு போவர். குமுதா வந்ததிலிருந்து அவளையே பறித்துத் தொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லி மரகதம் சொல்லி இருக்க, மாலையில் அவள் வைத்துக் கொண்டிருந்த மல்லிப்பூவின் மணமும், செயற்கை வாசனைத் திரவியங்கள் எதுவுமின்றி சிகைக்காயும் வெந்தயமும் கலந்து அவள் கூந்தலிலிருந்து வரும் மணமும் அவள் மேனியிலிருந்து வரும் குளியல் பொடியின் மணமும் கலந்து கட்டி வீச முகத்தை அவள் கூந்தலில் புதைத்துக் கொண்டு அந்த நறுமணத்தை நுரையீரலெங்கும் நிரப்பிக் கொள்ள அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் துடிக்க, நடையை விரைவுபடுத்தினான்.
அறையை அடைந்திருக்க அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் அவளை அலுங்காது அவன் படுக்க வைக்க மரகதம் போர்வை கொண்டு மூடி விட்டார்.
விளக்கை அணைத்து விட்டு இருவரும் வெளியேறிக் கூடத்துக்கு வர “ஆமா ஒம்பது மணிக்கெல்லாம் ஒக்காந்த எடத்துலயே ஒறங்குதாளே, இவ எங்கன படிச்சு… மார்க்கு வாங்கி…” அவன் ராகமாக இழுக்க…
“அதென்னலே அப்பிடிச் சொல்லிட்டே.ராத்திரி வெள்ளன ஒறங்குனாலும் கால நாலு மணிக்கெல்லாம் முழிச்சுக்கிடுதாளே! காலைல… இன்னும் பொழுதாகவும் படிப்பு எழுத்துன்னு நல்லாத்தான் படிக்குதா. பள்ளிக்கோடத்துல கூட ஏதோ பரீட்சையில முழுசா மார்க் வாங்கிட்டேன்த்தன்னு சொன்னாளே”
“படிச்சா சர்த்தான்”
“நீ என்ன ஃபேக்டரில இருந்து நேரா இங்கன வாரியா? சாப்பாடு? இங்க உங்குதியா?”
அன்னையின் கையினால் உணவுண்டு நாட்கள், ஏன் மாதங்களே ஆகியிருக்க ஆசை கொஞ்சம் தயக்கம் கொஞ்சமாக அரை மனதாக “ம்ம்ம், சரி” என்றான்.
சமையலறைக்குச் சென்றவர் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கேழ்வரகு மாவில் கலந்து தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அடையாகத் தட்டிச் சுட்டெடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வந்து கொடுக்க அவனுக்கு அந்த மணத்திலேயே நாவில் நீருறியது.
“தாயோடு அறுசுவை போம் தந்தையோடு கல்வி போம் தாரத்தோடு சகலமும் போம்” என்ற ஔவையின் வரிகள் நினைவில் வந்தன அவனுக்கு.
மற்ற இரண்டும் அவன் விஷயத்தில் நடக்கவில்லை என்றாலும் அன்னை அவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு உடல் உரத்துக்கென உண்பவன் ரசித்து ருசித்து உண்பது வெகுவாகக் குறைந்துதான் போய் விட்டது.
அவனுக்குக் கேழ்வரகு அடை பிடிக்கும். அதுவும் அதில் முருங்கை இலை இட்டுச் செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது கீரை கலந்தால் வெந்தெடுக்க நேரமாகும் என்பதால் வெறுமனே செய்திருந்த மரகதத்துக்கு அவன் நாவின் ருசி அத்துபடி.
அவன் உண்டு கொண்டிருப்பதற்குள் அடுத்தடுத்து எடுத்து வந்து அவர் கொடுக்க, நான்கு அடைகளை உண்டு முடித்த பின் “இத்தோட போதும்!” என்றவன் உண்டு முடித்துக் கையையும் கழுவி வந்தான்.
“சரி நான் கெளம்புதேன். கதவச் சாத்திக்கிடுங்க” என்றவன் வீட்டுக்கு வந்து சேர்ந்து குளித்து முடித்த பின்னும் மூளையில் குமுதாவைக் கையில் ஏந்திய போது உணர்ந்த மணம் நின்று சண்டித்தனம் செய்ய தன் உணர்வுகள் செல்லும் வழி அறிந்தவனுக்கு ஆயாசமாக இருந்தது. இனி அவள் இருக்கும் நேரம் அங்கே செல்லவே கூடாது என முடிவெடுத்துக் கொண்டவன் அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.
………………………………………………………………………………………………………….
காலை எழுந்த குமுதா வழக்கம் போல் வேலைகளைச் செய்தாலும் அவள் மனதை முதல் நாள் நடந்த நிகழ்ச்சி அரித்துக் கொண்டேதான் இருந்தது.
‘நான் என் பொண்டாட்டியை அடிச்சுக் கொடுமப்படுத்துனேன்.அவ என்ன விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிட்டா.’ என்ற அமுதனின் வார்த்தைகள் காய்ச்சிய ஈயமாய் அவள் காதுகளுக்குள் புகுந்து அவளைப் புகைய வைத்துக் கொண்டிருந்தன.
அமுதன் மனைவியைக் கொடுமைப்படுத்தினானா? அவன் மனைவி அவன் கொடுமை தாங்காமல் இன்னொருத்தனுடன் ஓடி விட்டாளா? இந்த விஷயம் தெரிந்ததனால்தான் அந்த ஆசிரியை அத்தனை இளக்காரமாக அவளைப் பார்த்தாளா? குமுதாவுக்குத் தாளவே முடியவில்லை.
அமுதன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாளவள். அவளுக்கு உதவி செய்ததால் மட்டுமல்ல.அவள் சொந்த விவரங்கள் கேட்டதும் அவனது கோபம், பள்ளியில் வைத்து அவளிடம் சீண்டிய போது அவள் போதிய எதிர்வினையாற்றவில்லை என்ற அவனது ஆதங்கம், என எல்லாம் சேர்ந்து பெண்ணினப் பாதுகாவலன் அவன் என்பது போன்ற பிம்பத்தை அவள் மனதில் கட்டமைத்திருந்தது.
ஆனால் அவனே அவன் வாயால் மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக ஒத்துக் கொள்ளவும் அவளுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஒருவேளை அவன் மனைவி மிகவும் மோசமானவளோ? அதனால்தான் அமுதன் அப்படிச் செய்தானோ? என அமுதனுக்குச் சாதகமாகவே அவள் மனம் யோசித்தது.
மண்டையை உடைத்துக் கொண்டவள் கடைசியில் மரகதத்திடமே கேட்டு விடலாம் என முடிவெடுத்தாள். அதன் விளைவாக அன்று மாலை இருவரும் வேப்ப மரத்தடியில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த போது
“ஏந்த்தை! உங்க புள்ளைக்குக் கோவம் ரொம்ப வருமோ?”
“ஏளா! என்னத்துக்கு திடும்னு கேக்குத? உன்ட்ட எதுவும் கோவமா நடந்துகிட்டானா? சொல்லு! காதப் புடுச்சுத் திருகிப்புடுதேன் திருகி”
“ஆமா, நீங்க காதைப் புடுச்சுத் திருகிட்டாலும்…ஒங்களுக்கு ஏதோ கோவமிருந்தாலும் புள்ள மேல பாசமிருக்குதுத்த”
மரகதம் மையமாய்ப் புன்னகைத்து “பெத்த புள்ள மேல தாய்க்கு என்னளா கோவம்? அது வந்த சோக்குலயே போயிட்டு.இப்போ இப்பிடித் தனிமரமா நிக்கானேன்னு ஒரு ஆவலாதிதான் மிச்சம் கெடக்கு”
“மாமனுக்கு என்ன வயசாவுத்துத்த?”
“இந்தப் பொரட்டாசி வந்தா இருவத்தி ரெண்டு முடியுதுத்தா.”
“ஹான்! இருவத்தி ரெண்டுதானா? நீங்க பொலம்புததைப் பார்த்து நான் ஏதோ முப்பதுக்கு மேலன்னுல்ல நெனச்சுகிட்டேன்.”
“ஏட்டி! குசும்புதான? என் புள்ளையப் பார்த்தா முப்பது வயசு மாரியா தெரியுது ஒனக்கு?”
அமுதனின் இளமையான முகமும், கம்பீரமான அங்க அசைவுகளும், வலிமையான உடலும், கவர்ச்சியான புன்னகையும், அடித்துப் பேசும் தோரணையும் என அவன் சிறப்புக்கள் எல்லாம் அவள் கண்முன் வந்து போக,
“இல்லதான்.பொறவு ஏன் இந்தப் பொலப்பம் பொலம்புதீய? தனி மரமா நிக்காருன்னா சோடி மரத்தைச் சேர்த்து விட்டாக் கொஞ்ச நாளுல தோட்டம் தொரவுன்னு ஆயிட்டுப் போவுது.”
“அதுக்குத்தான் நான் குடுத்து வைக்கலேயாத்தா”
“என்னத்த சொல்லுதீய? வெளங்குத மாரித்தான் சொல்லுங்களேன்”
“க்கும்… நீ படிக்கப் போலையாக்கும்! இங்கன வாய் பார்த்துக் கத கேக்க ஒக்காந்துட்டே!”
“எல்லாம் நாளைக்கு சனிக்கெழமைதான். நாளை பார்த்துக்கிடுதேன். நீங்க வெவரத்தைச் சொல்லுங்க”
அவரும் சொல்ல ஆரம்பித்தார்.
அமுதனின் தாத்தா முத்துக்குமாரசுவாமிக்குப் பல வருடங்களாகப் பிள்ளையில்லாததால் பல ஊர்க் கோவில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்டனர் அவரும் அவர் மனைவி வேலம்மாளும்.அப்படிச் செல்கையில் மதுரை வண்டியூர் முத்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருக்கும் போது வேலம்மாள் கர்ப்பமாக இருப்பது தெரிய வர அந்த முத்தீஸ்வரர் பெயரையே மகனுக்கு வைத்தார்.
வேலம்மாள் உயிருடன் இருந்தவரை முத்தீஸ்வரரும் நன்றாகத்தான் வளர்ந்தார். அவரது பதின்வயதில் வேலம்மாளுக்குக் கர்ப்பப்பையில் ஏதோ கோளாறு வந்து பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனில்லாமல் அவர் இறந்து போக அதன் பின் முத்தீஸ்வரரின் வாழ்க்கை திசைமாறத் துவங்கியது.
அன்னையை அதிகம் தேடிய அவருக்கு அன்னையைப் போல ஆதரவு காட்டிய ஒரு பெண், சுந்தரவல்லி, பழக்கமாக அவளுடன் சுற்றித் திரிந்தார்.
மகனின் நடமாட்டங்களைக் கண்காணித்த தந்தை அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க, பணக்காரர்களை வளைத்துப் போடும் கும்பல் என்பது தெரிய வர, மகனை எச்சரித்தார். ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த முத்தீஸ்வரர் தந்தையின் அறிவுரைகளைப் பொருட்படுத்தவில்லை.
நாட்கள் செல்ல இறைவனின் கருணையில் அந்த சுந்தரவல்லிக்கு இவரை விடப் பெரிய இடம் கிடைக்க அவளே இவரை விட்டுச் சென்று விட்டாள். இந்த விஷயம் தன்னைப் போல் நடந்திருக்க தனயனோ தந்தையைக் குற்றம் சாட்ட வீட்டுக்குள் விபரீதங்கள் விளையத் தொடங்கின.
ஆனால் ஆரம்பித்தது போலவே அனைத்தும் ஒரு நாள் அமைதியாக, மனம் மகிழ்ந்த முத்துகுமாரசுவாமி மகனின் மனதை திசை மாற்ற ஏழையாக இருந்தாலும் குணவதியாக இருக்க வேண்டும் என்று பெண் பார்த்து மகனும் சம்மதித்தே மரகதத்தை மகனுக்குக் கட்டி வைத்தார். அதன் பிறகே அனர்த்தங்கள் ஆரம்பித்தன.
தந்தையைப் பழிவாங்குவதற்காகவே, ஊரார் முன் அவரது வீட்டில் நடக்கும் விஷயங்கள் பேசுபொருளாக வேண்டும்… ஊரில் உள்ள எல்லோரும் முத்துகுமாரசுவாமியை இளப்பமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே சுந்தரவல்லியை மறந்தது போல் நடித்து அமைதியாக இருந்து திருமணத்தைச் செய்து கொண்டிருந்தார் முத்தீஸ்வரர்.
அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மரகதத்தைக் கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தார். முத்துகுமாரசுவாமி, தனக்கும் சுந்தரவல்லி அவரைப் பிரிந்து போனதற்கும் எந்த தொடர்பும் இல்லை என எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பவில்லை.
மரகதத்தை அடிமை போல நடத்தினார். கூப்பிட்ட நேரம் எதிரில் நிற்க வேண்டும்.அவர் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து முடிக்க வேண்டும்.மறுத்தால் அடி, உதை. ஏன் அவளைக் கொடுமைப்படுத்துகிறாய் என்று முத்துகுமாரசுவாமி கேட்டால் அவரையும் மரகதத்தையும் தொடர்புபடுத்தி அசிங்கமாகப் பேசுவது எனத் தன் கோபத்தை பல விதங்களில் வெளிப்படுத்தினார் முத்தீஸ்வரர்.
இதற்கிடையில் அமுதனும் பிறந்து விட அவன் பொறுப்பை முழுவதுமாக எடுத்துக் கொண்டு விட்டார் முத்துகுமாரசுவாமி. பல வருடங்கள் அவர்தான் தன் தந்தை என்றே நினைத்திருந்தான் அமுதன்.விவரம் புரியப் புரியத்தான் அவர் தன் தாத்தா என்பதும் எந்த நேரமும் கத்திப் பேசிக் கொண்டும் அன்னையை அடித்துக் கொண்டுமிருப்பதுதான் தந்தை என்பதும் புரிய வந்தது.
மரகதமும் அதிகப் பொறுமைசாலியில்லை.அதுவும் தவறேதும் செய்யாத நிலையில் முத்தீஸ்வரர் கோபம் கொள்ளும் போது அவரும் எதிர்த்துப் பேசுவார். அதற்கும் சேர்த்து அடியும் வாங்குவார்.
நாட்கள் நகர்ந்து அமுதனது பதினெட்டாம் வயதில் மாரடைப்பால் காலமானார் முத்தீஸ்வரர். அதீத கோபமே ரத்த அழுத்தத்தை உயரச் செய்து அவர் உயிரைக் குடித்து விட்டது. அதன் பிறகு மரகதம் கொஞ்சம் ஆசுவாசமானார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு ஏழைப் பெண்ணுக்குக் கல்யாணம் என்ற பெயரில் தான் தவறிழைத்து விட்டதாகக் கருதிய முத்துகுமாரசுவாமி இப்போது மரகதம் இருக்கும் வீட்டையும் இன்னும் பல நிலபுலன்களையும் வியாபாரத்தில் பங்குகளையும் எழுதி வைத்தார். என்னதான் அமுதன் பார்த்துக் கொள்வான் என்றாலும் யாரையும் நம்பி மரகதம் இருக்கக் கூடாது என்று அவர் எடுத்த முடிவு நல்லதாகவே போயிற்று.
அமுதன் நல்ல பையனாகவே வளர்ந்தான். அதுவும் தாயைத் தந்தை இழுத்துப் போட்டு அடிப்பதையும் கன்னம் கன்னமாக அறைவதையும் கீழே தள்ளி மிதிப்பதையும் பார்த்தே அவன் வளர்ந்திருந்தததால் கணவரின் இறப்பின் பின் அவனுக்கு மரகதம் நிறைய அறிவுரைகளைக் கூறி வளர்த்தார்.
பெண்ணை மதிக்க வேண்டும். அவள் விருப்பங்களைக் கேட்டு நடக்க வேண்டும்.குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமைகள் அவளுக்குத் தரப்பட வேண்டும். அவள் விரும்பினால் அவளையும் குடும்பத்தின் வியாபாரம் முதலிய விஷயங்களிலும் ஈடுபடுத்த வேண்டும். மொத்தத்தில் சக மனிதியாக நடத்த வேண்டும் என்றெல்லாம் நிறைய அவனிடம் பேசுவார். ஆனால் கேள்வியை விடக் காட்சியே பலம் வாய்ந்தது என்பதை மிகத் தாமதமாகத்தான் அவர் உணர்ந்து கொள்ள நேர்ந்தது.
அமுதனுக்கு இருபது அகவை நிறைகையில் முத்துக்குமாரசுவாமியும் இறைவனடி சேர அதன் பின் குடும்பத்தின் தலைவனானான் அமுதன். எந்த விஷயமானாலும் அன்னையிடம் கேட்டு அவர் சொற்படியே நடந்து கொள்வான்.
அப்படியே அவனுக்கு இருபத்தோரு வயதாகவும் திருமணம் செய்து வைக்க மரகதம் முற்படவும் மனதில் இன்னும் சில வருடங்கள் கழித்து என்ற எண்ணமிருந்தாலும் அன்னையின் ஆசைக்கு அடிபணிந்தான்.
அக்கம் பக்கத்து ஊர்களையெல்லாம் சல்லடையிட்டுச் சலித்து மகனுக்காக மரகதம் கொண்டு வந்த மணப்பெண்தான் வேதவல்லி.
திருநெல்வேலி சுற்றுப்புறங்களில் அப்படி ஒரு பளீர் நிறத்தை அதிகம் பார்த்து விட முடியாது. வேதவல்லி அப்படி ஒரு நிறம்.களையான முகம், கச்சிதமான உடலமைப்பு, கவர்ச்சியான நடை, உடை, பாவனைகள் மொத்தத்தில் கோவில் சிலையைப் போல் திருத்தமாக இருந்தாள்.
அமுதனும் அவள் அழகில் மயங்கித்தான் போனான். வீட்டின் மாடிப் பகுதி முழுவதையும் வருங்கால மனைவிக்காக மாற்றி அமைக்கும் அளவுக்குப் பித்தாகத்தான் சுற்றித் திரிந்தான்.
புகைப்படத்தில் பார்த்தே பாதி மயங்கி இருந்தவன் அவளைப் பெண் பார்க்கப் போன போது பெண் வீட்டார் ‘இதெல்லாம் நம்ம பக்கம் பழக்கமில்ல’ என்று முணுமுணுத்தாலும் பிடிவாதமாக அவளிடம் தனிமையில் பேச அனுமதி பெற்று அவள் வாயாலேயே அவள் சம்மதத்தை அறிந்து கொள்ளும் வரை அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதையெல்லாம் பார்த்த மரகதத்துக்கும் மிகுந்த மன நிறைவே.தான் அனுபவிக்காத இல்லற வாழ்க்கையை மகன் ஆசை தீர அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவர் மும்முரமாகக் கல்யாண வேலைகளில் ஈடுபட்டார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராம மக்கள் எல்லாரும் வியக்கும்படியாகத் திருமணத்தைத் திருநெல்வேலியில் வைத்து அத்தனை சிறப்பாக நடத்தி வைத்தார்.
வேதவல்லியும் அவர்கள் வீட்டுக்கு வாழ வந்தாள்.
திருமணம் முடிந்த முதல் நாளிரவு…இருவருக்கும் சாந்தி முகூர்த்தம். அழகாக, அளவாக அலங்காரம் செய்து வேதவல்லி மாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். வேலையாட்கள் முதற்கொண்டுக் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. மறு நாள் காலை நான்கு மணிக்கு ஊருக்கெல்லாம் விடிந்தது.ஆனால் அவர்கள் வீட்டில்…
வலைய விரிச்சி வச்சு அதுல போய் நானே தான் மாட்டிக்கிட்டேன்
தேடி விலங்கெடுத்து வசமாக நானே தான் பூட்டிக்கிட்டேன்
வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல
வேணான்டா சம்சாரம் ஆமான்னே ஆமான்னே
நான் போறேன் சன்யாசம் வேணானே வேணானே
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ள