அத்தியாயம் 3
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோடனூர்.
தலைமை ஆசிரியரின் அறைக்கு முன் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அவள்.
கண்களோ வலது பக்கமிருந்த பெரிய நுழைவு வாயிலை அடிக்கொருதரம் தொட்டு மீண்டு கொண்டிருந்தன.
மனமோ முதல் நாள் மாலை நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.
முந்தைய தினம் மாலை அமுதன் அவள் கையில் அந்தப் பைகளைக் கொடுத்ததும் மனதில் எந்த முன் எண்ணமுமில்லாமல்தான் பிரித்துப் பார்த்தாள். ஆனால் அதில் சுடிதாரைக் கண்டதும் சட்டென மின்னல் தாக்கியது போல் தன் நிலை புரிய அதிர்ந்து போய் அவனைப் பார்க்க அவனோ ‘உன்னைக் கண்டுகொண்டேன்’ என்பது போல் அவளைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கத் தன் திருட்டுத்தனத்தை அவன் அறிந்து கொண்டதைக் கண்டு அவளுக்கு முகமெல்லாம் சிவந்து போக அவனோ வாய் விட்டுச் சிரித்தான்.
அவன் சிரிப்பொலி கேட்டு வெளியே வந்த மரகதத்தின் முகத்தில் அப்படியொரு வியப்பு.அவன் சிரித்துப் பார்த்தேயிராதது போல் அவன் முகத்தை அவர் பார்ப்பதைக் கண்டவன் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரோ இப்போது ஏன் சிரித்தான் என்பது போல் எதிரில் நின்றவளைப் பார்த்தார்.
“என்ன? குமுதமலர்விழி, உடுப்புப் பிடிச்சிருக்குதா?”
குரலில் நக்கலும் நையாண்டியும் கலந்து அவன் வினவ
“என்னது குமுதமலரா? என்னலே பையனைப் பார்த்துப் பொட்டப்புள்ள பேரு வச்சுக் கூப்பிடுத?”
அவன் அவளைக் குறிப்பாகப் பார்க்க அவளுக்கு மீண்டும் முகம் சிவக்க ஒரு கையால் முகத்தில் இருந்த தாடி மீசையையும் தலையில் மாட்டியிருந்த பொய்முடியையும் அவள் கழற்ற, சுருட்டி மேலேற்றிச் செருகியிருந்த கார்கூந்தல் அலையலையாய்ப் பரவித் தோள்களில் சரிந்து விழ ஒரு கணம் அதிர்ந்து நின்ற மரகதம் வியப்புடன் நாடியில் விரல் வைத்து “அடியாத்தி! நானும் கூட ஒரு நிமிசம் ஏமாந்துல்ல போனேன். பொட்டப்புள்ளையா நீயி? என்னத்துக்காத்தா இந்த வேசம் கட்டினே?”
அவள் அமைதியாக இருக்க “ஏ கெளவி! மொதல்ல அவளுக்கு ரூம்பைக் காட்டு! உடுப்பு மாத்திக்கிட்டு வரட்டும்.நான் அங்கன கட்டில்ல உக்காருதேன். பொறவு கேக்கலாம் சமாச்சாரத்தை.”
அவன் கிழவி என்றதில் அவனை முறைத்தாலும் அவன் சொன்னதைச் செய்யக் குமுதாவை உள்ளே அழைத்துச் சென்றாரவர்.
சில நிமிடங்கள் பொறுத்து அவன் வாங்கிக் கொடுத்திருந்த சுடிதாரில் ஒன்றை அணிந்து அவள் வெளியே வருகையில் அவன் கட்டிலிலும் மரகதம் வேப்பமரத்தில் முதுகைச் சாய்த்தும் அமர்ந்திருந்தனர்.
அவளைப் பார்த்ததும் அவர் “வா! வந்து இங்கன இரி!” என ஒரு நாற்காலியைக் காட்ட அவளோ அவர்களுக்கு எதிரில் நாற்காலியில் அமரக் கூச்சப்பட்டுக் கொண்டு சதுரமாகக் கிடந்த ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டாள்.
“இப்பச் சொல்லு குமுதமலர்விழி.”
அவன் மேலே பேசும் முன் இடைமறித்தவள் “எம் பேரு குமுதமலர்விழின்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
அவள் குரலிலேயே மிரட்சி தென்பட அதைப் புரிந்து கொண்டவனாக “பயப்படாத ஆத்தா.உன்னையோ உன்னைச் சேர்ந்தவங்களையோ எனக்கு முன்னமேல்லாம் தெரியாது.காலைல படிக்காத இந்தப் பட்டிக்காட்டுப் பண்ணையாருக்கு என்ன தெரியப் போவுதுன்னு நினைச்சு உன் சர்டிஃபிகேட்டைக் காட்டினியே, அப்போ பார்த்துப் படிச்சுத் தெரிஞ்சுகிட்டேன்”
சின்னச் சிரிப்புடன் அவன் கூற அவளுக்கோ பூமி பிளந்து தன்னை உள்வாங்கிக் கொண்டு விடாதா என்னுமளவிற்கு அவமானத்தில் முகம் கன்றிக் கருத்தது.
மரகதமோ “எது…படிக்காத பட்டிக்காடா! எந்த எடுபட்ட சிறுக்கி மக எம்மவனப் பார்த்து அப்பிடிச் சொன்னது?”
“இந்தா கெளவி! நீ ஒடனே ஆரம்பிக்காத.யாரும் அதெல்லாம் ஒன்னும் சொல்லிக்கிடல.”
“அதான பார்த்தேன்.எவளுக்கு நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேசுத தைரியம் இருக்குங்கேன்”
“இந்தா! நீ செத்த வாய மூட மாட்ட.மொதல்ல அந்தப் புள்ள என்ன நடந்துச்சுன்னு சொல்லட்டும்” என்றவன் குமுதாவிடம் “நீ சொல்லாத்தா. காலம்பற நீ சொன்னதெல்லாம் நெசமா? இல்ல பேரு மாதிரி அதுவும் அந்த நேரத்துக்கு…”
“இல்ல இல்ல நாஞ்சொன்னதெல்லாம் நெசந்தான்.காலைல உங்க வீட்டுக்கு வந்தப்போ நான் பொண்ணுன்னு சொல்லிடலாம்னுதான் முதல்ல நினைச்சேன்.அப்புறம் பொண்ணா இருக்கிறதை விடப் பையனா இருக்கிறது பாதுகாப்புன்னு தோனுச்சு.அதான் அமைதியா இருந்துட்டேன்”
“நீங்க படிச்சவகன்னு எனக்குத் தெரியாது.வேட்டி கட்டி நம்மூருத் தமிழ் வேற நல்லாப் பேசுதியளா! படிக்காதவகன்னு நெனச்சுட்டேன்.ஆனா நீங்க கம்ப்யூட்டர் வச்சு வேலை பார்த்தப்பவே எனக்குப் புரிஞ்சுருக்கணும். கோட்டிச் சிறுக்கி நானு!” என மெலிதாகத் தலையில் தட்டிக் கொண்டாள்.
“உங்களை ஏமாத்தணும்கிற நெனப்பெல்லாம் எனக்கில்ல.ஒரு நல்ல இடமாத் தங்கிக்கிடக் கெடச்சுட்டுன்னா நெசத்தைச் சொல்லிடணும்னுதான் இருந்தேன்.எப்பிடியும் நாளைப் பள்ளிக்கூடத்துக்கு வாரப்போச் சொல்லி இருப்பேன்”
அவன் பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் “நீங்க என்னை நம்பலையா? நான் ஏமாத்துக்காரின்னு நெனக்கிறியளா?”
“ஏமாத்துக்காரின்னெல்லாம் நெனக்கலைத்தா.அப்படி ஏமாத்துற அளவுக்கு ஒனக்குத் தெறமையும் இல்ல. ஆனா இன்னும் நீ உன்னைப் பத்தி ஒன்னுமே சொல்லலயே.மொதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லு. பொறவுதான என்ன பண்ணன்னு யோசிக்க முடியும்”
அவளும் சொல்லத் தொடங்கினாள்.
“எங்கூரு மன்னவனூர். எங்கம்மை நான் பொறந்ததுமே குமுதமலர்விழின்னு பேரு மட்டும் வச்சுட்டுச் செத்துப் போயிருச்சாம். எங்கப்பன் அம்மை நெனப்புலயே குடிச்சுக் குடிச்சு அதுவும் செத்துப் போச்சு…”
“பொறந்தது மொதல்ல என்னை வளர்த்தது அம்மையோட அண்ணனும் மதினியும்தான்.அவகளுக்குப் பொட்டப் புள்ள இல்லாத கொறைக்கு நல்லாத்தான் வளர்த்தாக என்னை.ஆனா நான் பொறக்கும் போதே அவகளுக்குப் பதினைஞ்சு வயசுல பையனிருந்தான்.சிவஞானம்னு பேரு”
“அவங்கிட்ட யாரோ என்னைக் காட்டி இது உம்மொறைப்பொண்ணுன்னு சொல்லிட்டாக. அதுனால எம்பின்னுக்கவே திரிவான்.சின்ன வயசுல எனக்கு ஒன்னும் தோனல.ஆனா பத்து பன்னெண்டு வயசாவவும் ‘எம்பின்னாலயே வராத மாமா.சங்கடமா இருக்கு’ன்னு சொல்லுவேன் ஆனா அவன் கேட்டுக்கிட மாட்டான்”
“பதினாலு வயசுல நான் வயசுக்கு வந்ததும் அவன் தொல்லை அதிகமாச்சு.அத்தை மாமங்கிட்டச் சொல்லலாம்னு பார்த்தா ஒத்தப் புள்ளன்னு அவன்னா அம்புட்டுச் செல்லம் அவகளுக்கு.அது மட்டுமில்லாம நானே அந்த வீட்ல ஒண்டிகிட்டுக் கெடக்கேன். ஊட்டுப் பிள்ளைய எப்பிடிக் கொறை சொல்லுததுன்னு இருந்தேன்”
“ஒரு நா திடீர்னு எங்க ரெண்டு பேருக்கும் கன்னாலம் கட்டி வைன்னு அத்தைமாமங்கிட்டச் சண்டை போட்டான். அவக ‘அது சின்னப் பிள்ளடே ஒனக்கு வேற பொண்ணைப் பார்த்துக் கட்டி வைக்கோம்’னு சொன்னதுக்கு அன்னிக்கே ஒடம்புல மண்ணெண்ணைய ஊத்திக்கிட்டு தீய வச்சுக்குவேன்னு ஒரே மெரட்டா மெரட்டிப்புட்டான். அதுல அத்தையும் மாமனும் மனசு மாறிட்டாவ.தங்கச்சி புள்ள வாழ்க்கைய விடத் தம்புள்ள வாழ்க்கை முக்கியம்னு நெனக்கிறது சகசந்தானே! நானும் அவனைக் கன்னாலம் கட்டிக்கிட ஒத்துகிட்டேன்”
“எதே! பதினைஞ்சு வயசு வித்யாசம் இருக்கிறவனைக் கன்னாலம் கட்டிக்கிட ஒத்துகிட்டியா?”
அவன் அதிர்ந்து போய்க் கேட்க “வேற வழி ஏதும் எனக்குப் பொலப்படலையே.ஆனா அத்தை மாமங்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டேன்.எனக்கு நல்லாப் படிச்சு டாக்டராவணும்.கன்னாலம் கட்டிக்கிட்டாலும் படிக்க மட்டும் வைங்கன்னு…அவகளும் ஒத்துகிட்டாவ.”
“பத்தாப்பு முடிச்சு ரிசல்ட் வந்த பின்னால கன்னாலம்னு சிவா மாமாவைக் கெஞ்சிக் கூத்தாடி ஒத்துக்க வச்சேன். அந்த ஒரு வருசமும் அவங்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்க நான் பட்ட பாடு.”
இத்தனை நேரம் தைரியமாக சற்று நிமிர்வுடனே பேசிக் கொண்டு வந்தவளின் கண்களில் கரகரவெனக் கண்ணீர் வழிய மரகதம் அவளை நோக்கிக் கையை நீட்ட அவர் கையைப் பற்றியபடி அவர் அருகிலேயே அமர்ந்தாள்.
ஆறுதலாக அவள் முதுகை அவர் வருடி விட அவனுக்கோ அந்த சிவஞானத்தை தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் போலிருந்தது.
“வீட்ல ஆளில்லைன்னு தெரிஞ்சா மூக்கு வேர்த்து சில்மிஷம் பண்ண வந்துருவான்.நானும் அப்படி இப்பிடின்னு போக்குக் காட்டித் தப்பிச்சுருவேன். ராத்திரி மட்டுந்தான் அவன் அவக நெலத்து பக்கம் இருக்கிற தோப்பு வீட்ல படுத்துக்குவாங்கிறனால நிம்மதியா ஒறங்குவேன்.”
“இந்தக் கண்ணாமூச்சி வெளயாட்டுக்கு இடையிலேயே நல்லாவும் படிச்சேன். பரீட்சை நெருங்கிகிட்டு இருக்குதப்போ ஒரு நா பள்ளிக்கோடம் விட்டு சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டேன்.அத்தையும் சிவாவும் உள்ள பேசிகிட்டு இருந்தாவ.மலரு, படிப்புன்னு கேக்கவும் வாசல்படியிலேயே நின்னு கேட்டேன்”
“அப்போதான் தெரிஞ்சது அவகளுக்கு என்னக் கன்னாலத்துக்கு அப்பறம் படிக்க வைக்கிற எண்ணமெல்லாம் இல்லைன்னு.அதுவும் அந்த சிவா ‘கன்னாலத்துக்கு அப்புறம் அவளுக்கு வருசத்துக்கு ஒரு புள்ளையக் குடுத்து அவ இடுப்பை நான் ஒடைக்கேன்.பொறவு எப்பிடிப் படிக்குதான்னு பார்க்கேன்.இவ மெடிகல் காலேசுக்குப் போயி பசங்களோட ஒன்னு மன்னாத் திரிவா.நான் ஊட்ல உக்காந்து புள்ள வளர்க்கணுமான்னு அசிங்க அசிங்கமா ஏதேதோ பேசிகிட்டு இருந்தான்”
“அப்போதான் எப்பிடியாவது அங்கே இருந்து தப்பிக்கணும்னு முடிவு செஞ்சேன்.ஆனா அது சுளுவா இல்ல.எப்படியும் பத்தாப்புப் படிச்சு முடிக்கணும். நான் அதுக்கு முன்னால கெளம்ப முடியாது…அதுனால பத்தாப்பு பரீட்சை முடிஞ்சு ரிசல்ட் வார வரை காத்திருந்து மார்க் ஷீட்டு, டிசி எல்லாம் வாங்கிட்டு வந்தேன்”
“அன்னில இருந்து பத்தாம் நாக் கன்னாலம் வச்சுருந்தாக.நான் பிடிக்காத மாரி எதுவும் காட்டிக்கிடாமலே இருந்தேன். ஆனா வீட்ல ஒறம்பறைங்க (உறவு முறைகள்) வந்து போக இருந்தனால என்னால கெளம்பிக்கிடவே முடியல. கடசில கன்னாலத்துக்கு மொத நாள் ராத்திரிதான் எல்லாரும் ஆளுக்கொரு வேலல இருக்க என்ன ஆரும் கண்டுக்கிடல”
“பள்ளிகோடத்துல வேஷம் போட வச்சுருந்த உடுப்பு, தலைக்கு விக்கு, தாடி, மீசைலாம் வச்சுத் தயாராகி சுவரேறிக் குதிச்சேன்.சிவா மாமன் ஏதும் பின்னால வந்துருமோன்னு பதுங்கிப் பதுங்கித்தான் ஊரை விட்டு வெளிய வந்தேன்.பாதி ராத்திரில பொண்ணு இல்லைன்னு தெரிஞ்சா ஊரே ஒன்னு கூடித் தேடுவானுவன்னு பஸ், காரு, லாரின்னு எதுலயும் ஏறாம நடந்தே வந்தேன்.ஒருவழியா இந்தூருக்கு வந்து சேர்ந்தேன்”
அமுதனுக்கோ அத்தனை ஆத்திரம். பாதி குமுதாவின் உறவினர்கள் மீதென்றால் மீதம் அவள் மீது…
“உனக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு கிறிவு இருக்குதாத்தா? படிச்சுருக்கேம் மார்க்கு வாங்கியிருக்கேம்னு நெஞ்சை நிமிர்த்திகிட்டுச் சொல்லிகிட்டா மட்டும் காணுமா? எதுக்குப் படிக்கோம் ஏன் படிக்கோம்கிற வெவரம் வேணாம்?”
இவன் தனக்கு ஆறுதல் சொல்வான் என்று பார்த்தால் தன்னையே திட்டுகிறானே என எதுவும் புரியாமல் அவள் மலங்க மலங்க விழிக்க அதில் கொஞ்சம் தணிந்தவன்,
“ஒனக்கோ பதினைஞ்சு வயசுதான் ஆவுது.உங்கூருப் போலீசு ஸ்டேசனில ஒத்தப் புகார் குடுத்தா மொத்தக் குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சுருப்பானுவல்ல”
ரோஷத்துடன் நிமிர்ந்தவள் “அதெல்லாம் குடுத்துப் பார்த்தேன்.அங்கன இருந்த எஸ்ஐ அந்த சிவாவுக்கு வேண்டப்பட்டவன்.என் புகாரையே வாங்கிக்கிட மாட்டேன்னுட்டான்.ஏதோ பெரிய மனசு பண்ணி சிவாகிட்டச் சொல்லாம விடுதேன்.இனியேதும் இந்த மாரி வேல பார்த்தா அம்புட்டுத்தான்னு மெரட்ட வேற செய்ஞ்சான். பஞ்சாயத்துல சொல்லலாம்னு கூடப் போனேன்.அங்கனயும் அந்த சிவா ஆளுங்களை வளைச்சுப் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது.பொறவுதான் தப்பிக்க முடிவு செய்ஞ்சேன்”
ஒரு நீண்ட பெருமூச்சில் தன் உணர்வுகளை சமநிலைக்குக் கொணர்ந்தவன் “இப்ப என்ன செய்யலாம்? நானும் கூட வாரேன். மன்னவனூரு போயி உன் மாமன் குடும்பத்து மேலப் புகார் குடுத்துக் கம்பி எண்ணிக் களி திங்க வைக்கலாமா?”
சில நிமிடங்கள் யோசித்தவள் “வேணாம்! என்னதான் இருந்தாலும் நடுத்தெருவில விடாம இத்தனை வருசமா என்னைக் காப்பாத்தினவக. அவக இல்லைன்னா நான் ரொம்பத் தும்பப்பட்டுருப்பேன்.அவக இல்லாம சிவா மாமா மேல மட்டும் புகார் குடுத்தாக் கூட மாமனும் அத்தையும் வருந்துவாகல்ல.பரவாயில்ல போகட்டும்.இனி எனக்கு ஆபத்தில்லைல்ல”
உறுதிக்காகக் கேட்பது போல் அவன் முகம் பார்க்க அவனும் ஆறுதலளிக்கும் மென்புன்னகையுடன் “இங்கன ஒனக்கு ஒரு ஆபத்தும் வராது.எங்க அம்மை ஒருத்தி போதும்.வாரவனைக் காலாலயே சவட்டித் தள்ளிருவா.என்ன கெளவி?”
“ஆமாலே! மொதல்ல நீ வா! ஒன்னையச் சவட்டுதேன்.சும்மா எப்பம் பாரு கெளவி கெளவின்னுட்டு.” என்று நொடித்துக் கொண்டவர் குமுதாவை ஆறுதலாக அணைத்துக் கொண்டு “மன்னவனூர்னதும் எனக்கும் பழசெல்லாம் நெனப்பு வருது ஆத்தா.என் பெரியம்மை மவன். சந்திரன்னு பேரு.வேத்து சாதிப் பொண்ணை விரும்பி அவளைத்தான் கட்டிக்கிடுவேன்னு ஒத்தைக் கால்ல நின்னு ஊரை விட்டு ஓடிப் போனான்.பொறவு ரொம்ப நாக் கழிச்சு மன்னவனூர்ல அந்தப் புள்ளையக் கன்னாலம் கட்டி இருக்கிறதாப் பார்த்தவக சொன்னாக.அதன் பொறவு ஒரு சேதியுமில்ல”
சந்திரன் என்ற பேரைக் கேட்டதும் குமுதா பரபரப்படைந்தாள்.
“சந்திரனா? எங்கப்பா பேரு சந்திரன்தான் ஆத்தா.அந்தப் பொண்ணு பேரு என்னன்னு தெரியுமா?”
“அது நெனப்பில்லையேட்டி.ஏதோ பூவு பேரு சொன்னாவ. மல்லியோ தாமரையோ…”
“அல்லி. அல்லிமலர்தான் எங்கம்மை பேரு”
“அடியாத்தி! என் அண்ணன் மவளா நீயி? எலே மாறா! ஒனக்கு மொறப் பொண்ணுடா”
அவனோ அவரை முறைத்தான்.
“இப்பத்தாம் ஒருத்தங்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துருக்கா. மறுக்கா மொறப்பொண்ணு பையன்னுகிட்டு.சும்மாக் கெட கெளவி.அது நல்லாப் படிக்கட்டும்”
“ஆமாத்தா.இனி ஒன்னும் வெசனப்படாத. அத்த நானிருக்கேன்.இது ஒன் வீடு.இங்கன உரிமையா இரி.நல்லாப் படி.மத்ததெல்லாம் அந்த ஆண்டவன் விட்ட வழி”
மிகுந்த மகிழ்ச்சியோடு உறங்கப் போனவள் அன்று காலை அமுதனைப் பேச்சு வாக்கில் ‘அண்ணா’ என அழைத்ததை நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்.
“மாமோய்! அமுது மாமோய்” தனக்குள் மெலிதாக அழைத்துப் பார்க்க என்னவோ சுகமாக இருந்தது. அருகிலேயே இருந்தும் சிவாவின் பெயரைச் சொல்ல, ஏன் நினைத்துப் பார்க்கக் கூடத் தோன்றாது அவளுக்கு. இப்போது இந்த ஆசையும் ஆர்வமும் இதமும் என்னவென்று புரியாவிட்டாலும் ஏதோ ஒரு பரவசம் தோன்றத்தான் செய்தது.அந்த உணர்வுடனேயே உறங்கியவள் காலை எப்போதும் போல் நான்கு மணிக்கே விழித்துக் கொண்டாள்.
வெளியே பசு மாடுகளின் ‘மா மா’ என்ற ஓசையில் கொல்லைப்புறம் வந்தவள் பெரிய கொட்டிலைக் கண்டு திகைத்து நின்றாள்.
மொத்தம் பத்துக்கு மேல் மாடுகள் இருக்கும்.
மெல்ல நகர்ந்து சென்று பார்க்க அப்போது வாசல் பக்கமிருந்து மரகதம் பின்னே வந்தார்.
“என்னாத்தா இம்புட்டு வெள்ளன எழுந்துகிட்டே”
“எப்பவும் எழுந்துருவேனாத்தா.அத்த”
“அத்தைன்னே கூப்பிடு தாயி” என்று அவள் தாடையைக் கொஞ்சி முத்தம் வைத்தவர் “சரி! போயிக் குளிச்சு கிளிச்சுத் தயாராவு.பள்ளிக்கோடம் போகமனுல்லோ”
அவர் சொன்னதற்குச் சரியெனத் தலையாட்டியவள் வாசல் பக்கம் செல்ல அங்கே ஒரு பெண் கோலம் போடத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அவரிடமிருந்து கோலப்பொடி டப்பாவை வாங்கியவள் அழகான தாமரைக் கோலத்தை நிமிஷமாய்ப் போட்டு முடிக்க அந்தப் பெண் வியப்பினால் வாய்பிளந்து “யாரு புள்ள நீயி? இம்புட்டு அழகாக் கோலம் போடுதே! மரகதம் அக்காவுக்கு ஒறவா?”
அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்திருந்த மரகதம் “ஏட்டி! உன்னைப் போயிக் குளிச்சுக் கெளம்பிக்கிடச் சொன்னா இங்கன வந்து என்னட்டி செய்யுத? நீ என்னத்த வாயப் பொளந்து பார்த்துகிட்டு நிக்குதே”
“யக்கோவ்! ஒனக்கு ஒறவுக்காரப் புள்ளையாமில்ல.என்ன அழகாக் கோலம் போட்டிருக்குது பாரு”
மரகதத்துக்குக் கோலம் போட வராது.கோலமென்று இல்லை, நுண்கலைகள் எதுவும் வராது.நூறு பேருக்குக் கூட வாய்க்கு ருசியாகச் சமைப்பது, வயலில் இறங்கி அலுப்புப் பாராமல் உழைப்பது, மாடுகளின் கொட்டிலைக் கூட்டிக் கழுவி சாணியள்ளிப் பராமரிப்பது என்று எல்லாம் செய்பவர் வரைவது, கோலமிடுவது, கூடை முடைவது போன்ற கொஞ்சம் பொறுமையாய்ச் செய்யும் வேலைகளில் சொதப்பி விடுவார்.
அதனாலேயே நக்கலாக அந்தப் பெண் வினவ “என்னளா கொழுப்பா? எனக்கு ஒறவுன்னாக் கோலம் போடத் தெரியக் கூடாதா? ஆமா எனக்கு ஒறவுக்காரப் புள்ளதான்.இனி இங்கனதான் இருந்து பள்ளிக்கோடம் போகப் போகுது. காணுமா வெவரம்? போயி வேலையைப் பாப்பியா, வந்துட்டா வெறும் வாய மென்னுகிட்டு”
குமுதாவும் சென்று குளித்துத் தயாராக ஆரம்பித்தாள். அப்படித் தயாராகும் போதே இன்றும் அமுதன் வந்து அவன் வண்டியில் அழைத்துச் செல்வானோ என்று தோன்ற ஏனோ உள்ளுக்குள் படபடத்தது. ஆனால் அவள் எண்ணியது நடக்கவில்லை. அவளை அழைத்துப் போக வந்தவன் கண்ணாயிரம். அவனுடன் சேர்ந்து நடந்து சென்று பள்ளியை அடைந்தவள் அமுதனின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
கனவோடு சில நாள் நனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பேய்ஞ்சா
மழை பேய்ஞ்சா வெத வெதச்சி நாத்து நட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ