அத்தியாயம் 2

வீட்டின் உணவு மேஜையில் தன் எதிரில் அமர்ந்து கொஞ்சமும் லஜ்ஜையின்றி உணவு வகைகளை ஒரு வழி செய்து கொண்டிருந்த அந்தப் பையனை விழிகளில் ஒருவித சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன்.

சில மணித் துளிகள் முன்பு ஆலமரத்தினடியில் மயக்கமாகக் கிடந்தவனைக் காணவும் பதற்றத்துடன் சென்று வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில் பளீரெனத் தண்ணீரை அடித்து அவன் மயக்கத்தைப் போக்க முற்பட்டான்.

முகத்தில் தண்ணீர் படவும் வெடுக்கென எழுந்து அமர்ந்து, அலங்க மலங்க விழித்துத் கொண்டே தன்னைச் சுற்றிலும் பார்த்தவன், “என்ன? யாரு? எங்கே?” என்று ஏதேதோ உளரவும், அடித்துப் பிடித்து எழவும் முற்பட தண்ணீர் பாட்டிலைக் கீழே வைத்து விட்டு இரண்டு கைகளாலும் அவன் இரண்டு தோள்களையும் இறுக்கமாகப் பற்றியபடியே “தம்பி! உனக்கு ஒன்னுமில்ல.மயக்கடிச்சு விழுந்துட்டே போல.நான்தான் தண்ணியத் தெளிச்சு எழுப்புனேன்”

அவன் தொட்டதுமே மீண்டும் திமிறிக் கொண்டு எழ முற்பட்டவனைப் பிடியில் அழுத்தத்தைக் கூட்டி அடக்கியவன் “ஷ்ஷ்ஷ்…தம்பி! ஒன்னுமில்ல. இங்கன பாரு” என அதட்டலாகக் கூற அவனும் அமுதனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

இளமையாக இருந்த அந்த முகத்தில் பொருத்தமற்றதாக தாடியும் மீசையும் முளைத்துக் காடாக அடர்ந்து கிடந்தது.ஆனால் கண்கள் கள்ளமற்றதாக இருக்க ஏனோ அந்தப் பையனைப் பார்த்ததுமே அமுதனுக்குப் பிடித்துப் போனது.

அமுதனிடம் நம்பிக்கை ஏற்பட்டதுவோ என்னவோ அவன் திமிறலை நிறுத்தி விட்டது தெரிய தன் பிடியையும் தளர்த்தியவன் “செத்தத் தொலவுலதான் என் வீடு.உன்னப் பார்க்க ரொம்ப அலுத்துக் களைச்சுப் போயிருக்கத மாரித் தெரியுது. என் கூட வா! குளிச்சு சாப்பிட்டேன்னாக் கொஞ்சம் தெம்பாவும்.அப்பறம் உனக்கப் ப்ரச்சனை என்னான்னு பார்த்துக்கிடலாம்”

அந்தப் பையனுக்கும் பசி தெரிந்ததோ என்னவோ கையால் வயிற்றைப் பிடித்தவன் ‘சரி’ என்று சொல்வது போல் கையை ஊன்றி எழுந்தான்.

“முதல்ல இந்தத் தண்ணியக் கொஞ்சம் குடி”

மறுபேச்சுப் பேசாமல் அவன் தண்ணீரைக் குடித்து முடித்ததும் தன் வண்டியில் ஏறி அமர்ந்தவன் அந்தப் பையன் ஒரு பக்கமாக அமர முற்பட “ரெண்டு பக்கம் காலைப் போட்டுக்கிடு தம்பி! சோர்ந்து தெரியுற.மறுபடி மயக்கம் வந்து விழுந்துற கிழுந்துறப் போறே”

இப்போதும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் சொன்னது போல் அமர “தோளையும் பிடிச்சுக்கிடு!” என்றவன் பட்டும் படாமல் அவன் பற்றிக் கொண்டதும் வண்டியை எடுத்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வேலையாட்களின் வியந்த பார்வைகளைப் பொருட்படுத்தாமல் கீழே இருந்த ஓரறைக்கு அழைத்துச் சென்றவன் “மொதல்ல குளிக்கியா? இல்ல சாப்பிடுதியா?” எனவும்,

அவன் கண்களில் பசி தெரிய அமுதனே “மொதல்ல கைகாலைக் கழுவிட்டுப் பசியாறு. குளிப்பு சளிப்பெல்லாம் பொறவு பார்த்துக்கிடலாம்” என்றவன் அலமாரியில் இருந்து ஒரு புதிய பூந்துவாலையை எடுத்துக் கொடுத்தான்.

“கண்ணாயிரம்! தம்பிக்குப் பொறக்கடைக்கு வழி காட்டு!”

அவன் முகம்,கை,கால் கழுவி வர உணவு மேஜையில் அமர்ந்திருந்தவன் “வா தம்பி! வந்து பசியாறு” என்றழைக்க அதற்கு மேல் அவனுக்குப் பேசுவதற்கு வேலையே வைக்கவில்லை அந்தப் பையன்.

அமுதன் சிறு வயதிலிருந்தே வயிற்றிற்கு வஞ்சனை செய்யாமல் வாழப் பழகியவன். தொழிலை விஸ்தரித்து அததற்கு என்று ஆள் போட்டு விட்டதன் பின்னர் கடுமையான வேலைகள் செய்யும் தேவை இல்லாவிடினும் உடற்பயிற்சி என்ற பெயரில் உண்ட உணவை எல்லாம் திண்ணென்ற சதைகளாக மாற்றி விடுவதால் அவன் உள்செல்லும் உணவைக் குறித்துக் கவலை கொண்டதேயில்லை.

இட்டிலி என்றால் எட்டு.தோசை என்றால் ஆறு.இடியாப்பம் என்றால் பத்து.சப்பாத்தி, பூரி என்றால் வயிறு நிரம்பும் வரை அது உள்ளே போய்க் கொண்டே இருக்கும். எனவே அவன் வீட்டில் உணவு கொஞ்சம் அதிகப்படியாகவே தயாரிக்கப்படும். மீந்ததை வேலையாட்கள் உண்டு விடுவதால் உணவு வீணடிக்கப்படுமே என்ற கவலையுமில்லை.

சிறு வயதாகத் தெரிந்தாலும் பார்க்கக் கொஞ்சம் மொழுமொழுவென்று இடுப்பு, கால் என வித்யாசம் தெரியாமல் இருந்த அந்தப் பையன், முகத்தைக் கழுவி விட்டு அந்தப் பூந்துவாலையை மார்புக்குக் குறுக்காகத் துப்பட்டா போடுவது போல் போட்டுக் கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

அதற்கு மேல் சுற்றிலும் மனிதர்கள் இருப்பது அவன் கண்ணுக்குப் பட்டதாகவே தெரியவில்லை. அமுதன் உண்ணும் உணவின் அளவில் கிட்டத்தட்ட முக்கால்வாசியை அவன் காலி செய்திருக்க வீட்டின் அனைவருமே அவனை ஆச்சர்யத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக, வாசல் பக்கமும் சமையலறைப் பக்கமும் இன்னும் தோட்டத்தில் இருந்தும் கூட எட்டிப் பார்த்தவர்களைக் கண்டு தொண்டையைச் செருமிக் கொண்ட அமுதன் “இங்க என்ன சர்க்கஸால காட்டுதாவ? யாருக்கும் ஏதும் சோலியில்லையா என்ன?” என ஒரு அதட்டல் போட அனைத்துத் தலைகளும் படக்கென மறைந்தன.

அமைதியாயிருந்த இடத்தில் திடீரென அதட்டல் எழவே திகைத்துப் போன அந்தப் பையனுக்கு விக்கல் வந்து விட்டது.

“விக்! விக்! விக்!”

“அந்தத் தண்ணியை எடுத்துக் குடியாம்டே! கொஞ்சம் மெல்ல உங்கலாம்லா? அவசரம் அவசரமா முழுங்குனா இதாம் நடக்கும்”

ஆலாய்ப் பறந்து கொண்டு உண்டு விட்டோமோ என்று தோன்றியிருக்க அதன் எதிரொலியாய் அந்தப் பையனின் முகம் லேசாக சிவந்தது.

சமாதானம் கூறும் முகமாக “நேத்துக் கால சாப்பிட்டது.அதான் நல்ல பசி”

சின்னக் குரலில் அவன் கூற அமுதனின் முகம் கனிந்தது.

“அதுனால என்னடே.வயத்துக்கு உங்கணும். வஞ்சனையில்லாம ஒழைக்கணும்.அம்புட்டுதான்.மெல்ல, அவசரமில்லாம ஆவட்டும்”

உணவு முடிந்ததும் “வா!” என அவனை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

கீழே இருந்த பழமையையும் மாடியில் இருந்த நவீனத்தையும் ஒப்பு நோக்கிக் கொண்டு நின்றிருந்தவனைப் பக்கத்தில் தட்டிக் காட்டி “உக்காருடே!” என்று விட்டு அந்தப் பெரிய இரும்பு ஊஞ்சலில் அமர்ந்தான் அமுதன்.

அவனோ அமுதனின் அருகே அமராமல் எதிரில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள ஒரு கணம் அவனைக் கூர்ந்து நோக்கிய அமுதன் “க்கும்” என்று கனைத்து விட்டு,

“சரி இப்பச் சொல்லு.ஒனக்கு எந்தூரு? மொதல்ல உம் பேரென்ன?”

“மலர்…விழி…யன்” அவனும் தொண்டையைச் செருமிக் கொண்டு கொஞ்சம் தட்டுத் தடுமாறி உரைக்க,

“எதே! மலரு விழியனா? பொம்பளைப் புள்ள பேரு கணக்கால்லா இருக்கு”

“அது… வந்து… அம்மாவுக்கு…பொம்பளைப் புள்ள வேணும்னு ஆசை.ஆனா நான்…ஆம்பளப் புள்ளையாப் பொறந்துட்டனால அப்படிப் பேரு வச்சுட்டாவ”

தொடர்ந்து நீளமாக அவன் பேசியிருக்க, உருவத்துக்கும், புதர் போல் கிடந்த தாடி மீசைக்கும், குரல் பொருத்தமாக இல்லையே எனத் தோன்ற மீண்டும் அவனைக் கூர்ந்து நோக்கினான்.

அவனோ பார்வையைத் தழைக்க, “ம்ம்ம் சரித்தான். என்னவோ சொல்லுத. எந்தூரு உனக்கு?”

அவன் மீண்டும் தயங்க,

“இங்கன பாருடே! நீ என்ன ஏதுன்னு ஒடைச்சுப் பேசுனியானாத்தான் என்னால ஒனக்கு ஒதவி எதுஞ்செய்ய முடியும்.இப்பிடி மென்னு முழுங்கிகிட்டு இருந்தியானா சோலியாகாது.அங்கன ஊருல எதுவும் தப்பு கிப்புப் பண்ணிட்டு வீட்டை விட்டு ஓடியாந்துட்டியா?” என அவனைச் சீண்ட இப்போது சீற்றத்தோடு நிமிர்ந்தானவன்.

“நான் ஒன்னுந் தப்புச் செய்யல.அவகதான் தப்புச் செய்ஞ்சாக”

“எவக? என்ன தப்புச் செய்தாவ?”

“அது…வந்து…வந்து…எனக்குக் கன்னாலம் கட்டி வைக்கப் பார்த்தாவ. அது புடிக்காமத்தான் சுவரேறிக் குதிச்சு, காரு வண்டிக் கூடப் பிடிக்காம பயந்து பதுங்கி ராத்திரி முச்சூடும் நடையா நடந்து இந்தூரு வந்து சேர்ந்தேன். அதுனாலதான் மயக்கமும் வந்துச்சு”

“எது!  கன்னாலமா? ஒனக்கா? ஒனக்க வயசு என்னடே?”

“பதினைஞ்சு ஆவுது.இப்பத்தான் பத்தாப்பு முடிச்சேன்”

“ஒனக்கே பதினைஞ்சுன்னா ஒன்னைக் கட்டிக்கப் போற பொண்ணுக்கு என்ன பத்து வயசா? பால்வாடிப் பசங்களுக்கெல்லாம் கன்னாலம் பண்ணுவானுவளா? எவன் அவன்?”

அவன் பேசும் மொழி புரியாதது போல் மலர்விழியன் மலங்க மலங்க விழிக்கப் பேச்சை மாற்றினானவன்.

“படிப்புல மட்டமா நீயி? அதுதான் படிச்சது போதும்னு கன்னாலம் கட்டி வைக்கப் பார்த்தவளா ஒனக்க அம்மையும் அப்பனும்?”

மறுபடியும் சீற்றமான பார்வையுடன் ஏறிட்டவன்,

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் ரொம்ப நல்லாப் படிப்பேனாக்கும்”

“ஆஹான்!”

அவன் குரல் நம்பாமையைக் காட்ட “வேணும்னா என் சர்டிஃபிகேட் எல்லாம் காட்டுதேன். பார்க்குறீயளா?”

உடுத்தின உடையுடன் ஊரை விட்டு ஓடி வந்திருந்தவன் சர்டிஃபிகேட்டைக் காட்டுகிறேன் என்றதும் ஒரு கணம் தனக்குத் தெரியாமல் பை எதுவும் எடுத்து வந்தானோ என அமுதன் சுற்றும் முற்றும் தேடுவது போல் பாவனை செய்ய மலர்விழியனோ ஒரு நமுட்டுச் சிரிப்புடன் எழுந்து நின்று தன் பின்னால் கையை விட்டு முதுகில் பேன்டில் செருகி வைத்திருந்த ஒரு கோப்பை எடுத்து அவன் முன் நீட்டினான்.

யோசனையுடன் அவனைப் பார்த்தவாறே அதைக் கை நீட்டி வாங்கியவன் பிரித்துப் பார்க்க முதலிலேயே அவனது பத்தாவது மதிப்பெண் பட்டியல் இருந்தது.

“கணக்குலயும் சயன்சிலயும் நூத்துக்கு நூறு.தமிழ், சோசியல்ல தொண்ணூறுக்கு மேல.இந்த இங்கிலீசு மட்டும்தான் கொஞ்சம் காலை வாரி விட்டுட்டு.இருந்தாலும் மனப்பாடம் பண்ணிப் படிச்சு எழுதினதுல எண்பதுக்கு மேல வாங்கிட்டேன்.அதுல மட்டும் கொறையலைன்னா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துருப்பேனாக்கும்”

தாடையைக் கொஞ்சம் முன்னோக்கித் தூக்கி வைத்தவாறு பெருமிதத்துடன் அவன் சொல்ல அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவன் சான்றிதழ் முழுவதையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “பரவாயில்லயே நல்ல மார்க்குத்தான் வாங்கி இருக்கே! பொறவு தொடர்ந்து படிக்க வேண்டியதுதானடே? எதுக்கு ஒன்னைப் பெத்தவக கன்னாலம் ஏற்பாடு பண்ணினாவ?”

“அது, எனக்குப் பெத்தவக இல்ல.மாமனும் அத்தையும்தான் வளர்த்தாவ. அவகதான் படிச்சது போதும்னு…”

“அறிவு கெட்டவனுக.எந்தூருடே ஒனக்கு? சொல்லு! போய் அவனுவளை நாக்கப் பிடுங்கிக்கிற மாரி நாலு வார்த்தை கேட்டு இழுத்துப் போட்டு நாலு மிதி மிதிச்சாத்தான் எனக்கு மனசு ஆறும்”

“இல்ல.பொறந்ததுல இருந்து சோறு போட்டு வளர்த்தாவ.அவகளை ஒன்னுஞ் செய்ய வேணாம்”

“ம்ம்ம்” என்று உறுமியவன் “சரி இப்போ இனமே நீ என்ன செய்யப் போறே?”

“மொதல்ல சாப்பாட்டுக்கு வழி பார்க்கணும்.இந்தூர்ல ஏதாவது சோலி கெடைக்குமா?”

“கெடச்சு, பொறவு ஒன் படிப்பு என்ன ஆறது?”

“வேல பார்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக் காசு சேர்த்துப் பொறவு படிப்பேன். பன்னன்டாப்புல நல்ல மார்க்கெடுத்து நீட்டுப் பரீட்சை எழுதி மெடிகல் காலேசுல சேர்ந்து டாக்டராவனும்.அதுதான் என் ஆசை”

கண்களில் கனவு மிதக்கச் சொன்னவனைக் கூர்ந்து நோக்கியவன் “சரி அதைப் பொறவு பார்த்துக்கிடலாம்.இன்னும் உனக்கு அசதி போவல.நல்ல வெந்நீர்ல முழுகிட்டுக் கொஞ்சம் படுத்து ஒறங்கு.” என்றவன் “கொஞ்சம் இரி!” என்று விட்டு அவர்களுக்கு எதிராக இருந்த ஓரறையினுள் நுழைந்தான்.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன் மீண்டும் அடுத்து இருந்த அறையினுள் நுழைந்தான். வெளியே வந்தவன் கையில் ஒரு டீஷர்ட்டும் கைலியும் இருந்தது.

“ரூம்புல வெந்நீர் தொறந்து விட்டுருக்கேன். குளிச்சுட்டு இந்த உடுப்பைப் போட்டுக்கோ! இந்தச் சட்டை புதுசுதான். எனக்குச் சின்னதா இருக்குன்னு போடாம வச்சது.இதுவும் ஒனக்குப் பெருசாத்தான் இருக்கும்.ஆனாலும் பரவாயில்லை. வேற வழியில்ல இப்ப.இந்தக் கைலியும் புதுசுதான். ரூம்புல ஏசி போட்டிருக்கேன்.குளிச்சுட்டு வந்து படுத்து நல்லா ஒறங்கி எழு”

இத்தனை உதவி செய்பவனுக்கு என்ன பதிலுக்குச் சொல்வது எனத் தெரியாமல் “தேங்க்ஸ்…ண்ணா” என முணுமுணுக்க அமுதனோ அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கீழே இறங்கிச் சென்று விட்டான்.

அமுதன் கூறியபடியே நல்ல சுடுநீரில் உடல் வலி போகக் குளித்து விட்டு உடை மாற்றி வந்து படுக்க உறக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது.

நன்றாக உறங்கி எழுந்து விழித்துப் பார்க்க அறையே இருட்டாக இருக்க முதலில் திக்கற்ற காட்டில் நிற்பது போல் திகைத்தது மனம். பிறகு சில நிமிடங்கள் போக இருட்டு பார்வைக்குப் பழக எழுந்து கதவைத் திறந்து வெளியே வர அந்த ஊஞ்சலில் தன் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான் அமுதன்.

“நீங்க இதெல்லாம் வச்சு வேலை செய்வீகளா?” ஆச்சர்யத்துடன் வினவ

“அதுக்கு என்னத்துக்குடே அம்புட்டு ஆச்சரியம்? ஏன் இதுலல்லாம் வேலை செய்யக் கூடாதா? இல்ல நாஞ்செய்யுததுதான் ஒனக்கப் ப்ரச்சனையா?”

“இல்ல, இதுல வேலை செய்யல்லாம் படிச்சுருக்கணுமே! அதான் கேட்டேன்.நீங்க என்ன படிச்சுருக்கிய?”

அமுதனின் உடையும், பேச்சும் படிக்காத பட்டிக்காட்டுப் பண்ணையார் என்ற பாவத்தை அளித்திருக்க அவனோ கொஞ்சமும் தாளம் தப்பாமல் “இதுல வேல பார்க்குத அளவுக்குப் படிச்சுருக்கேன்” எனப் பதிலளித்திருந்தான்.

அவன் பதிலில் மலர்விழியன் அவனை முறைக்க அதைக் கண்டுகொள்ளாமல் “சரி! நல்லா ஒறங்கினியா? காலைப் பலகாரம் பலமா இருந்தனால மத்தியானம் பசிக்கலையோ? உங்கக் கூட எழும்பலையே! இப்போ நேரம் அஞ்சாச்சு.ஏதாவது உங்குதியா இல்ல காப்பி கீப்பி…”

“காப்பியே குடிக்கேன்”

“கண்ணாயிரம்!” என உரக்க அழைத்தவன் அவன் கீழிருந்து பதில் கூறும் முன் “எனக்கும் தம்பிக்கும் காப்பி இங்கனேயே எடுத்தா”

“ஆட்டுங்கையா!”

சிறிது நேரத்தில் மணக்க மணக்க வெங்காய போண்டாவும் சுடச் சுடக் காப்பியும் வர மலர்விழியனுக்கு நாவில் நீரூறியது.

“ம்ம்ம் எடுத்துக்கடே! சூடு ஆறிடப் போவுது”

ஒரு போண்டாவை வயிற்றினுள் தள்ளவும்தான் மதியம் உண்ணாததின் பசி தெரிய மேலும் இரண்டு போண்டாக்கள் சத்தமில்லாமல் வயிற்றுக்குள் புகுந்தன.

இன்னொரு தட்டில் அடுத்த ஈடு சூடாக போண்டா வர, உண்ணும் ஆசை இருந்தாலும் அவன் என்ன நினைப்பானோ எனத் தயங்க மலர்விழியனின் மனத்தைப் படித்தவனாக “எடுத்துக்கடே! மத்தியானமும் உங்கலைல்லா” எனவும் மேலும் மூன்று போண்டாக்களை உள்ளே தள்ளிக் காப்பியையும் குடித்து முடித்தான்.

அங்கே ஓரமாக இருந்த கைகழுவும் பேசினை அமுதன் கையைக் காட்ட கைகழுவி விட்டு வந்து அமர,

“இந்த வருசமே பதினொன்னாப்பு சேர முடியும்னாச் சேருதியா?”

மலர்விழியனின் கண்களில் ஒரு கணம் மின்னல் தோன்றி மறைய “ஆனா இப்போ ஜூலை மாசமாகிடுச்சே! இனிச் சேர்த்துக்குவாவளா?”

“ம்ம்ம்.நம்மூருப் பள்ளிக்கூட எச்எம்கிட்டப் பேசிட்டேன்.உன் மார்க்கையும் சொன்னேன்.பத்தாப்பு ரிசல்ட்டே தாமதமா வந்தனால வகுப்பெல்லாம் ஆரம்பிச்சே ஒரு வாரம்தான் ஆச்சாம்.சேர்த்துக்கிடலாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாவ.நாளைக்குக் காலைல கொண்டு போயிச் சேர்த்து விடுதேன்”

கண்களில் ஆர்வமும் நன்றியுமாக அவன் பார்க்க “உனக்குத் தங்கிகிடுததுக்கும் ஒரு எடம் ஏற்பாடு பண்ணுதேன்.அங்கன நீ பிடிச்ச வேலையப் பார்த்துக்கிட்டே படிக்கலாம்”

இப்போது அவன் முகம் நிஜமாகவே பூவாக மலர்ந்ததைக் கண்டவனுக்குள்ளும் ஏதோ நெகிழ்ந்தது.

“க்கும்” எனச் செருமிக் கொண்டவன் “நீ போயி உன் பழைய உடுப்பையே உடுத்திகிட்டு வா. நான் கீழ இருக்கேன்” என்றவன் விறுவிறுவெனக் கீழே போய் விட்டான்.

சில நிமிடங்களில் மலர்விழியனும் கீழே வர இருவரும் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்.

வழியில் அனைவரும் ஆச்சயமாகப் பார்த்து அவர்களுக்குள் பேசிக் கொள்ளவும் குழப்பமாகப் பார்த்தபடியே வந்தவன் “இறங்குடே!” என்ற அமுதனின் குரலில் சுற்றிலும் பார்த்தான்.

பழைய காலத்து வீடு ஒன்றின் முன் நின்றிருந்தார்கள்.மராமத்து செய்திருந்தாலும் புதிதாக வர்ணம் பூசி இருந்தாலும் பிற வீடுகளுக்கும் இதற்கும் வேறுபாடு நன்றாகவே தெரிந்தது.

பழையதாக இருந்தாலும் பெரியதாக இருந்தது. முன்னால் நிறைய இடம், அதில் நிறைய மரங்கள், ஒரு பக்கமாக ஒரு வேப்ப மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டில் ஒன்று கிடந்தது. மாடுகளின் ‘மா… மா…’ என்ற சத்தம் கொல்லையில் இருந்து கேட்டது.

அந்த நேரம் வாசலில் வந்து நின்றார் அந்தப் பெண்மணி.நின்றவர் அமுதனை முறைத்துப் பார்க்க அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இறங்கி அவரருகே சென்றான்.

மலர்விழியனிடம் “இது என் ஆத்தா… மரகதம்” என்றவன் மரகதத்திடம்,

“இந்தப் பையன் இனி இங்கனதான் இருப்பான். நாளைக் காலம்பற நம்மூருப் பள்ளிக்கோடத்துல சேர்த்து விடப் போறேன்.படிச்ச நேரம் போக ஒனக்குக் கூடமாட ஒத்தாசையா இருந்துக்கிடுவான்”

அவனை முறைத்துக் கொண்டே இருந்தவர் கழுத்தை ஒரு நொடி நொடித்து விட்டு மலர்விழியனைப் பார்த்து “நீ உள்ள வாடே!” என்று விட்டு உள்ளே சென்றார்.

மலர்விழியன் அமுதனைக் கடந்து போக அவனோ “இந்தாடே! நாளைப் பள்ளிக்கோடத்துக்கு வருதப்போ போட்டுக்கிட உடுப்பு” எனக் கைகளில் இருந்த பையை நீட்ட, திரும்பி வாங்கியவன், நெகிழிப் பையில் உள்ளிருந்த கண்ணாடித் தாளாலான இரு பைகளில் ஒன்றை வெளியே இழுக்க மயில் கழுத்து நிறத்தில் ரோஜா நிற எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்த சுடிதாரைக் கண்டு அதிர்ந்து போய் நிமிர்ந்து அவனைப் பார்த்தான்(ள்).

அவனோ இதழ்க்கடையில் அடக்கப்பட்ட முறுவலுடன் என்ன என்பது போல் இரு புருவங்களையும் ஏற்றி இறக்க முன்னே பின்னே பொய் சொல்லிப் பழக்கமில்லாத அவளோ காலை முதலே தன் வார்த்தைகளின் ஊடாகவும் செயல்களின் மூலமாகவும் தான் பெண் என்பதை அவனுக்கு உணர்த்தியிருந்தது புரியவும், தன் குட்டு வெளிப்பட்டு விட்டதை அறிந்து செவ்வானமாய்ச் சிவந்து போய் நின்றாள்.

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

இவள் ஆவாரம் பூதானோ நடை தேர்தானோ

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ