அத்தியாயம் 10
கோடனூர் கிராமமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
“நம்ம மரகதம் அக்காவோட அண்ணன் பொண்ணுன்னு ரெண்டு வருசமின்ன வரல, கொஞ்சம் பூசுனாப்ல, ஒயரமா, செவத்த தோலோட போவுமே அந்தப் புள்ளதான், மாநிலத்துலயே மொதலா வந்துருக்காம்”
“அதும் அப்பிடியா? நல்லாக் களையான புள்ளதான். படிப்புலயும் சோட போகல.எவனுக்குக் குடுத்து வச்சுருக்கோ?”
“ம்ம்ஹூம்…டாக்டருக்குப் படிக்கணுமாம் அந்தப் புள்ளைக்கு. சேக்காளிங்ககிட்டச் சொல்லுமாம். எம்பொண்ணு பத்தாப்புப் படிக்கால்ல அங்கனதான். அவதான் வெவரஞ் சொன்னா”
“படிக்கட்டும்.படிக்கட்டும்.”
அன்று விவரம் தெரிந்தது முதல் ஊருக்குள் எல்லா வீடுகளிலும் இதுதான் பேச்சாக இருந்தது.
அன்று காலை விடிந்ததுமே அமுதனுக்குத் தலைமையாசிரியர் மூலம் தகவல் எட்டி விட்டது.
அடுத்த நிமிடம் அன்னையின் வீட்டில் இருந்தான்.
வாசலில் புல்லட் சத்தம் கேட்கவும் மல்லிகைப் பந்தலின் அடியில் நின்றிருந்தவள் ஆவலுடன் எட்டிப் பார்க்க வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவனும் ஆவலாய் அவள் முகம் பார்த்தான்.
இளம்பச்சை நிறச் சுடிதாரில் துப்பட்டா போடாமல், தலைக்குக் குளித்திருந்ததால் தலையில் துவாலை கட்டி நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க மங்களகரமாக வீட்டுத் தோற்றத்தில் நின்றிருந்தவளைக் கண்டவன் கணத்துக்கும் மேலாக அவளை ரசித்துப் பார்த்தான்.
இரண்டு வருடம் முன்னர் பார்த்ததற்கு உயரம் கொஞ்சம் கூடி, உடல் கூட முன்னைப் போலல்லாமல் தேவையான இடத்தில் சதைப்பற்று வைத்து மற்ற இடங்கள் மெலிந்து கச்சிதமான உடலமைப்புடன் ஒசிந்து நின்றவளைக் கண்டவனுக்கு உடலில் என்னென்னவோ மாற்றங்கள் உருவாக, அருகில் சென்று நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு ‘சாதிச்சுட்ட ராசாத்தி’ என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள உடலின் ஒவ்வோர் அணுவும் பரபரக்க மெதுவாக நடந்து அவளருகே சென்றான்.
‘இவ்வளவு விடிகாலை வந்திருக்கிறானே! ரிசல்ட் வந்து விட்டதோ? மார்க் குறைந்து விட்டதோ? அதனால்தான் மெல்ல நடந்து வருகிறானோ?’ என ஒரு நிமிடத்துக்குள் ஓராயிரம் எண்ணங்கள் அவள் மனதில் அலைபாய அதற்குள் அருகில் வந்திருந்தவன் வலக்கையை அவளை நோக்கி நீட்ட மந்திரித்து விட்டவள் போல் அவளும் தன் கையை நீட்டினாள்.
பஞ்சன்ன வெண்டைப் பிஞ்சு விரல்களல்ல அவளது விரல்கள்.சிறுவயது முதலே பாத்திரம் கழுவி, துணி துவைத்து, கிணற்றில் நீரிறைத்து, வறட்டி தட்டி, களத்து மேட்டில் நாற்று நட்டு, கதிரறுத்து, என வேலை பார்த்துப் பார்த்துக் காப்புக் காய்த்துப் போன கை அது.ஆனாலும் அவள் கையைப் பற்றவும் உடலில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததைப் போலிருக்க ஒரு கணம் அந்த உணர்வை அனுபவித்தவன் பின்,
“வாழ்த்துகள்! மாநிலத்துலயே மொதலாவதா வந்திருக்கே. ஒன்னால நம்ம ஊர்ப் பள்ளிக்கோடத்துக்கு மாத்திரமில்ல, ஊருக்கே பெருமை” என்றவன் இன்னொரு கையால் அவள் கையை மூடி தன் இரு கைகளுக்குள் பொதிந்திருந்தான்.
பரீட்சை எழுதியதிலிருந்தே நல்ல மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்தே இருந்தாலும் அது நடப்பாக நிகழ்கையில் அந்த நிமிடத்தின் கனம் தாங்காமல் அவள் கண்கள் குளம் கட்டிக் கன்னத்தில் வழிய,
“ஏய்! சீ! என்னதிது?” என்றவாறு இடது கையை அவள் தோளைச் சுற்றி இட்டு மெலிதாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். ஏதேதோ மனதில் கற்பனை செய்திருந்தாலும் அந்த நிமிடம், அது மகளை ஒரு பாசமுள்ள தகப்பன் பெருமிதத்துடன் அணைத்துக் கொள்ளும் அணைப்பாகவே இருக்க அவளும் அது போல் உணர்ந்தாளோ என்னவோ அவனிடம் இயல்பாக ஒண்டினாள்.
புல்லட்டின் சத்தம் கேட்டு நேரமாகி இருக்க இன்னும் மாறனைக் காணவில்லையே எனப் பார்க்க வந்த மரகதத்தின் பார்வையில் மல்லிகைப் பந்தலின் அருகே நின்றிருந்த மாறன் பட “எலே! அங்கன என்ன பண்ணுத?” என அவர் குரல் கொடுக்க அவன் தேக்கு மர தேகத்தால் முழுதாக மரகதத்தின் பார்வையிலிருந்து மறைந்திருந்த குமுதா சட்டென முன்னே விலகி நின்றாள். விலகி நின்றாலும் சற்று முன் அவனோடு ஒன்றி நின்றதை நினைத்து அவள் முகம் சிவந்து போக மெலிதாகப் புன்னகைத்தவன்,
“நான் உள்ள போறேன். நீ ரெண்டு நிமிசம் செண்டு வா” என்று விட்டுத் திரும்பி வீட்டை நோக்கி நடந்தான்.
“ஏ கெளவி! வெவரம் தெரியுமா? ஒம் மருமக ஸ்டேட் ஃபர்ஸ்ட் அதாவது தமிழ்நாட்டுலயே பன்னண்டாப்புல மொதலா வந்துருக்கா”
மரகதத்துக்கு வாயெல்லாம் பல்லானது.
“நெசமாவா? பொறவு வராம? எம்புட்டுச் செரமப்பட்டுப் படிச்சுது புள்ள” என்றவர் அவன் முதுகுக்கு அப்பால் எட்டிப் பார்த்து விட்டு,
“மலரு எங்கே?” எனவும்
“நாஞ்சொன்னதும் அழுக வந்துட்டு அவளுக்கு.மொகத்தைத் தொடச்சுட்டு வான்னு சொல்லிட்டு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குமுதா வீட்டினுள் நுழைய ஆவலாய்ச் சென்று அவளை அணைத்துக் கொண்டார். அவளோ அவர் கால்களில் விழுந்து பணிந்தாள்.
“எழும்புத்தா! என் தங்கம்! நல்லா இருப்ப நீயி! நல்லாப் படிச்சுப் பெரிய டாக்டராகணும்” என்றவர் அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்.
அவர் தோளுக்கு மேலாகப் பார்த்தவள் அமுதனின் விழிகளில் ஏதோ வேறுபாடு தெரிய என்ன என்பதைப் போல் புருவம் உயர்த்த அவனோ ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்துப் புன்னகைத்தான். பின்னே அவர்கள் இருவரும் அணைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு பொறாமையாய் இருக்கிறது என்று உண்மையைச் சொல்ல முடியுமா என்ன?
“யம்மோவ்! ஏதாவது இனிப்பு செய்ஞ்சு குடு ஒம் மருமகளுக்கு.”
“இதா ரெண்டே நிமிசம்” என்று அவர் அடுக்களைக்குள் நுழைய அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவனைக் கண்டு அவள் பார்வையைத் தழைத்தாள்.
லேசாகச் செருமிக் கொண்டவன் “கொஞ்ச நேரத்துல பள்ளிக்கோடத்துக்குப் போகணும்.அங்கன பெரிய பெரிய டீவி சேனல்ல இருந்தெல்லாம் பேட்டி எடுக்க வருவாகளாம். ஒங்க எச்எம் சொன்னாக.கொஞ்சம் நல்லதா உடுத்திக்க”
அவள் தலையாட்டிய போது அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வர அவன் எடுத்துப் பேச ஆரம்பித்தான். அவளோ இப்போது வைத்த கண்வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள்.
இவன் மட்டும் இல்லையென்றால் அவள் என்ன செய்திருப்பாள்?
அனாதையாக வந்து நின்றவளுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அவள் முகம் கோணாதபடி ஏற்பாடு செய்ததோடு நன்றாகப் படிப்பவள் என்று தெரிந்த நிமிடமே அவள் படிப்பைத் தொடரத் தேவையானவற்றை ஆவன செய்து, அவள் படிக்க ஏற்பாடு செய்து, அது மட்டுமா… சென்று போன ஆறு மாதங்களும் அவள் படித்தாள் என்றால் அதில் அவனது பங்கும் இல்லாமலா…
இரவு ஒன்பது மணிக்கே உறங்கி விடுகிறாள் என்பதை அறிந்தவன் ஒரு நாள் அவளை அழைத்து வைத்துப் பேசினான்.
“ஒரு பத்து மணி வரை உக்காந்து படிக்க முயற்சி பண்ணுத்தா”
அவள் தலையைச் சொறிய,
“வெளங்கிரும். ஒன் வயசுக்கு ஆறு மணி நேரத் தூக்கம் போதும். ஆனா நீயி ஒம்பது மணிக்குத் தூங்கி நாலு மணிக்கு எழும்புதே.பத்து மணிக்குப் படுத்தா இன்னம் கொஞ்சம் கூடப் படிக்கலாமில்ல”
“நான் என்ன செய்ய மாமா? அதென்னவோ என்னயும் அறியாம ஒறங்கிடுதேன்”
“சர்த்தான். அப்ப இன்னொன்னு செய். கால மூணுக்கு எழும்பிடு”
அவள் முகம் விளக்கெண்ணை குடித்தது போலாயிற்று. ஏற்கனவே அவள் ஒரு முறை இப்படி முயற்சி செய்து அலாரத்தை அமர்த்தி விட்டு உறங்கியதுதான் நடந்தது.
“ஏன் மாமா? நாந்தான் நல்லாப் படிக்கேனே!”
“போதாதுத்தா. இனமே ஒவ்வொரு நிமிசமும் மார்க்கா மாறும்.”
சில வினாடிகள் தாடையைத் தடவியபடி யோசித்தவன் “ஒன்னு செய்யலாம். அம்மை ஒறங்கப் போறப்போ அவ போனை ஒம் பக்கத்துல வச்சுட்டுப் படுக்கச் சொல்லுதேன். கால மூணு மணிக்கு நான் போன் போடுதேன். பொறவு எப்பிடி நீ ஒறங்குதேன்னு பாக்கேன்.”
சொன்னது போலவே தினமும் காலை மூன்று மணிக்கு அவளை அலைபேசியில் அழைத்து எழுப்பி விட்டு அவள் முகம் கழுவி வந்து படிக்க அமரும் வரை தொடர்பிலேயே இருப்பான்.
“படிக்க உக்காந்துட்டேன் மாமா!” எனச் சொன்ன பிறகே அழைப்பைத் துண்டிப்பான்.
மேலும் ஆங்கில ஆசிரியையிடம் பேசி தினமும் ஒரு மணி நேரம் அவர் வீட்டுக்கே சென்று ட்யூஷன் படிக்க ஏற்பாடு செய்தான்.
அவன் கொடுத்த அலைபேசியில் இணையத்தைப் பயன்படுத்த முடியுமே தவிர அதில் சிம்கார்டு போடாததால் அழைக்கவோ பேசவோ முடியாது. சிம்கார்டு போட்டுக் கொடுத்தால் பிறகு தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் கவனம் சிதறிப் போகுமெனச் சொன்னவன் தன் அலைபேசியின் இரண்டு சிம் கார்டுகளில் ஒரு எண்ணைப் பயன்படுத்தி அவளுக்கு வாட்ஸாப் செயலியைப் பயன்படுத்த மட்டும் ஏற்பாடு செய்திருந்தான். அதன் மூலம் அவள் அனைத்து ஆசிரியைகளுடனும் தொடர்பில் இருந்தாள்.
தினமும் அதில் அவர்கள் குறிப்புக்கள் அனுப்ப, அதைப் படிக்க, கேள்வித்தாள்களை அனுப்ப, அவள் விடைகளை எழுதிக் கொண்டு சென்று பள்ளியில் கொடுத்து அவர்கள் திருத்திக் கொடுக்க என ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் மேல் அவளைத் தேர்வுகள் எழுத வைத்திருந்தான் என்றால் அது மிகையாகாது.
இப்படி அவள் செய்த அனைத்து முயற்சிகளிலும் அவனும் உடன் நின்று அவளை ஊக்குவித்து இன்று அவள் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள் என்றால் அது அவனில்லாமல் நடந்திருக்காது.
நன்றியையும் பிரியத்தையும் கண்களில் தேக்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் எண்ண அலைகள் அவனைத் தாக்கியதோ என்னவோ பேசிக் கொண்டிருந்தவன் சட்டென அவளை நோக்கித் திரும்பினான்.
நான்கு விழிகள் எதிர்பாராமல் மோதிக் கொண்டதும் அல்லாமல் ஒன்றோடொன்று கட்டுண்டன.
“கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்”
என்ற கம்பரின் கலாரசனைக்கேற்ப, காவியம் ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
அலைபேசியின் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவர் “ஹலோ! ஹலோ!” என அலறியதில் தன்னினைவு பெற்றவன் “நான் அப்புறம் கூப்பிடுதேன் அண்ணாச்சி” என்று வைக்கவும் மரகதம் இரண்டு கிண்ணங்களில் சுடச் சுடக் கேசரியுடன் வரவும் சரியாக இருந்தது.
பார்வைப் பரிமாற்றம் தடைப்பட்டதில் இருவருக்குமே ஏமாற்றமே. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் மறைத்து சிறிது நேரத்தில் அவள் பள்ளிக்குக் கிளம்ப அவனும் தொழிலைப் பார்க்கக் கிளம்பினான்.
ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே மரகதத்திடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
“யய்யா மாறா! இந்தப் பத்திரிக்கக்காரவுக எல்லாம் வீட்டு முன்னால கூடி நிக்காகளே.நீ கொஞ்சம் வந்து பாருய்யா”
“வாரேன் மா” என்றவன் ‘இவனுங்க எதுக்கு வீட்டுக்கெல்லாம் வாரானுக? ஸ்கூலோட முடிச்சுக்க வேண்டியதுதான’ என்று எண்ணியவண்ணம் வண்டியைக் கிளப்பி அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டிலிருந்தான்.
ஒலிவாங்கியை வாயில் இடிப்பது போல் வந்தவர்கள்,
“சார் நீங்க கடற்சுவை ஊறுகாய் ஓனராமே! உங்க சொந்தக்காரப் பொண்ணுதான் குமுதான்னு சொன்னங்க.எங்க டீவிக்கு எக்ஸ்க்ளூசிவா குமுதாவும் நீங்களும் ஒரு பேட்டி தர முடியுமா சார்?”
நின்று நிதானமாக அவனை ஏறிட்டவன்,
“கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க” என்று விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான்.
உள்ளே சென்றவனை அழாத குறையாக எதிர்கொண்ட குமுதா,
“ஸ்கூல்ல வச்சு ஃபோட்டோ, பேட்டி எல்லாம் எடுத்துட்டாக மாமா! நான் கெளம்பினதும் எம்பின்னுக்கவே வீட்டுக்கு வந்துட்டாக.நான் வேணாம்னு சொல்லியும் கேக்கல”
“சரி விடு! அவகவக டீவிக்கு ஆடியென்சை ஏத்தணும்.முதல் மதிப்பெண் பெற்ற குமுதா இங்குதான் உட்கார்ந்து படிப்பார்.இங்குதான் சாப்பிடுவார் அப்பிடின்னெல்லாம் போட்டாத்தான அவகளுக்கு ஆதாயம்” எனக் கேலியாக அவன் கண்சிமிட்டிச் சொல்ல அத்தனை நேரம் இருந்த இறுக்கம் வடிந்து அவளும் புன்னகைத்தாள்.
“அப்போ ப்ரச்சனை ஒன்னும் இல்லையா மாமா?”
“என்னதான் சொல்லுதானுவன்னு கேப்போமே, இப்ப என்ன” என்றவன் “நீ உள்ள இரி. நான் போய் வெவரம் கேட்டுட்டு வந்து பேசுதேன்”
வெளியே வந்தவன் அங்கிருந்த சில பத்திரிக்கையாளர்களைப் பார்த்து “உங்களுக்குத் தான் ஸ்கூல்லயே வேண்டியது சொல்லிட்டாங்களாமே. அப்புறம் ஏன் தொல்லை பண்றீங்க?”
“இல்ல சார்! இப்படி அவங்க வாழ்ந்த சூழலைக் காட்டினா இன்னும் நேட்டிவிட்டியோட இருக்கும்”
“நேட்டிவிட்டி சரிதான்… ஆனா இது அவங்க ப்ரைவசில நுழையுற மாதிரி இல்லையா?” என்றவன் “சரி! இப்ப என்ன உங்களுக்கு வீட்டை சுத்திக் காட்டணும் அவ்வளவுதானே! வாங்க நான் காட்டுறேன்” என்று அழைத்துச் சென்றான்.
இடங்களை மட்டும் படமோ காணொளியோ எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு “தனியாப் பேட்டிலாம் இன்னொரு நேரம் பார்த்துச் சொல்றோம். அப்ப வாங்க” எனக் கையெடுத்துக் கும்பிட்டு விட, பத்திரிக்கையைச் சேர்ந்தவர்களும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்று விட்டனர்.
வேறு யாரும் வந்து தொல்லை செய்யாமல் அன்று முழுவதும் அங்கேயே இருந்தவன் அவர்களுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அவளது சிறிய அளவிலான பேட்டிகளைப் பார்த்து, கேலி செய்து கொண்டு இருந்ததைக் கண்ட மரகதத்துக்கு மனம் நிறைந்து போனது. மனத்திற்குள்ளாகவே மகன் எப்போதும் இப்படிச் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என வேண்டுதல் வைத்துக் கொண்டார்.
மறுநாள் காலை “அத்த! நான் செல்லக்கிளி வீட்டுக்குப் போய் வாரேன். அவ இங்க்லிஷ்ல ஃபெயில் ஆயிட்டான்னு அழுதுகிட்டே இருக்காளாம். அவக அம்ம ஒங்க ஃபோன்ல இப்பத்தான் கூப்பிட்டுச் சொன்னாவ”
“சரிளா! கவனமாப் போய் வா”
மனம் துள்ளிக் கொண்டிருக்க அது நடையிலும் வெளிப்படக் கிட்டத்தட்ட மேகங்களில் மிதந்து கொண்டு சென்றவளை அந்தக் குரல் மலையிறக்கியது.
“பிச்சை எடுத்துச் சாப்பிட்டாலும் ஆட்டமும் பாட்டமும் இன்னுங் கொறையல ஒனக்கு” என்ற சிவஞானத்தின் குரலில் அதிர்ந்து போய்த் திரும்பினாள் குமுதா.
“அடியே மேனாமினுக்கி!இங்கன பக்கத்துக் கிராமத்துல இருந்துகிட்டுத்தான் இத்தன நாளா என்ன ஏய்ச்சுகிட்டு இருந்தியோ?” என்று கண் சிவக்கச் சொன்னவனைப் பார்த்து ஒரு கணம் மிரண்டுதான் போனாள் குமுதா. ஆனால் அடுத்த கணமே அவள் மனக்கண்களில் அமுதனின் உருவம் எழ தைரியம் பெற்றவளாய் சிவஞானத்திடம் பேச ஆரம்பித்தாள்.
“இந்த பாருங்க மாமா! நீங்க கன்னாலம் ஏற்பாடு பண்ணுதப்போ எனக்குப் பதினைஞ்சு வயசுதான் முடிஞ்சுருந்துச்சு.அதுவே சட்டப்படித் தப்பு. நான் போலீசுல ப்ராது கொடுத்துருந்தா உங்களுக்குத்தான் தண்டனை கெடச்சிருக்கும்.நான் அப்பிடிப் பண்ணலியேன்னு சந்தோசப்பட்டுக்கிடுங்க.”
“யாரு? நீயி? பண்ணல…அங்கன இருக்கிற என் தோஸ்துகிட்ட ப்ராது குடுக்கப் போனவதான நீயி. நீ ஓடிப் போனப்புறம்தான் அவன் வந்து வெவரஞ் சொன்னான். மொதவே சொல்லி இருந்தான்னா நானும் கொஞ்சம் கெவனமா இருந்திருப்பேன்.பழைய கதை எதுக்கு? மருவாதையா இப்போ என்னோட கெளம்பு! நாளைக்கே ஒனக்கும் எனக்கும் கன்னாலம்”
அவள் அதிர்ந்து போனாள்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். அது கொஞ்சம் உள்ளடங்கிய தெரு.ஆட்கள் நடமாட்டமும் பெரிதாக இல்லை. வீடுகளில் இருப்பவர்களும் வயலுக்கு, பள்ளிக்கு எனப் போயிருக்க அவன் அருகில் வந்து விடாது தடுக்கக் காலைப் பின்புறம் எடுத்து வைத்தாள்.
அவனோ அவள் முயற்சி புரிந்தவனாக ஒரே எட்டில் அவளருகே வந்திருந்தான்.
ஒரு கையால் அவள் கையைப் பற்றிக் கொண்டு “என்னடி மாய்மாலம் காட்டுத? இங்க எவனோ ஒரு பண்ணையார்ப் பயலப் பிடிச்சுருக்கியாமே! எங்கிட்டக் காசு பணம் இல்லைன்னுதான் அவங்கிட்ட ஓடி வந்துட்டியோ? காசு பணம் இல்லைன்னா என்னடி? அவங்கிட்ட இல்லாதது ஒன்னு எங்கிட்ட இருக்கு”
பெரிதாக அவன் பேச்சைச் செவி மடுக்காமல் சுற்றிலும் பார்த்துக் கொண்டும் தப்பிக்கும் வழிகளை ஆராய்ந்து கொண்டும் இருந்தவளின் செவிகளில் மிக மெலிதாக புல்லட்டின் உறுமல் சத்தம் கேட்க அவள் மனம் துள்ளியது.
அதே உற்சாகத்துடன் சிவஞானத்தின் பக்கம் திரும்பியவள் குனிந்து அவள் கையைப் பற்றியிருந்த அவன் கையில் மணிக்கட்டுப் பக்கம் அழுத்தமாகத் தன் பற்களைப் பதிக்க “ஆஆஆஆ…” என்று தன்னை மறந்து அலறியவன் அவள் கையை விடுவித்து அடுத்த கையால் அவள் கற்றைக் கூந்தலைப் பற்றிக் கொள்ள அதே நேரம் “எட்றா கையை!” என்ற உறுமல் கேட்க பற்றிய கையை விடாமலே திரும்பிப் பார்த்தான்.
வேட்டியை மடித்துக் கட்டியபடியே அருகில் நெருங்கியிருந்த அமுதன் செருப்புக் காலால் ஓங்கி ஒரு உதையை சிவஞானத்தின் நெஞ்சிலேயே விட, சற்றுத் தள்ளி நின்றிருந்த இடிந்திருந்த ஒரு சுவரின் மீது கையையும் காலையும் பரப்பிக் கொண்டு போய் விழுந்தான்.
அவன் கையிலிருந்து விடுபட்ட வேகத்தில் “மாமா!” என்ற கூவலுடன் அமுதனின் நெஞ்சில் வந்து விழுந்தாள் அணங்கவள்.
“ஒன்னும் இல்லடா! வண்டில உக்காரு.இவனை ஒரு வழி பண்ணிட்டு வந்துருதேன்” அவள் கூந்தலை ஒதுக்கி விட்டபடியே கூறியவனையும் அவர்கள் நெருக்கத்தையும் பார்த்த சிவாவுக்குப் பற்றிக் கொண்டு வர சுற்றிலும் பார்த்தவனின் கண்களில் அந்தச் சுவற்றின் அருகில் கிடந்த கழிகள் பட, குதித்தெழுந்தவன் ஒரு கழியைக் கையில் எடுத்துக் கொண்டான்.
அமுதனின் புல்லட் நுழைந்த போதே பலரும் பின்னோடு ஓடி வந்திருக்க இப்போது தெருவில் கூட்டம் கூடியிருந்தது. அதில் அமுதனின் ஆதரவாளன் ஒருவன் “எங்க ஐயாவைப் பார்த்துக் கம்பத் தூக்கிகிட்டு வாரியால?” என இன்னொரு கம்பைத் தூக்க அவனைத் தடுத்த அமுதன் “விடுடே! நான் பார்த்துக்கிடுதேன்” என அவன் கையிலிருந்த கம்பை வாங்கிக் கொண்டு சண்டைக்கு ஆயத்தமானான்.
இருவரும் சண்டையிட ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் சிவஞானத்தின் கழி அமுதனால் தட்டி விடப்பட்டிருக்க அவனும் குப்புறடித்து அமுதனின் கால்களில் விழுந்திருந்தான்.
எங்கிட்ட தான் போட்டி போடுறவன் வேட்டி
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்
ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்
அன்பான உள்ளம்தான் உள்ளவரு
சூராதி சூரரும் தீரரும் யாரு
கோதாவில் ஒத்தையா நிக்கிறாரு
யாராச்சும் முட்டின மோதினா போச்சு
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு
அட படபடவென அடிக்கட்டுமா
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா
அத்திரி பச்சா கத்திரி பச்சா
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க
ஒன் இடுப்புல போடுற போடுல
ஒக்காத்தி உன்ன நான்
முக்காடு போட வப்பேன்