Advertisement

அத்தியாயம் -8(2)

மருத்துவர் சொன்னதில் குழம்பிப் போன ராஜரத்தினம், “எங்க பொண்ணுக்கு நினைவு திரும்புமா இல்லியான்னு உடைச்சு சொல்லுங்க சார்” என்றார்.

“உறுதியா என்னால சொல்ல முடியலைங்க, பெரும்பாலும் தற்காலிகமானதாதான் இருக்கும். அரிதா நிலையான அம்னீஷியாவா கூட இருக்கலாம். அவங்க மூளையில இருக்கிற நியூரான்ஸ்தான் அதை தீர்மானிக்கும்” என்ற மருத்துவர் மூளையின் பெரிய வரை படத்தை வைத்துக்கொண்டு ஹிப்போமேட்டஸ், சிறு மூளை என மூளையின் பாகங்கள் பற்றியெல்லாம் விவரித்து அம்னீஷியா பற்றி இன்னும் விளக்கம் கொடுத்தார் .

“அம்னீஷியா குணமாக வாய்ப்பே இல்லைனு இல்லையே, சரியாக கொஞ்சமாவது சான்ஸ் இருக்குதானே?” எனக் கேட்டான் அபு.

நம்பிக்கையின்மையை முகத்தில் காட்டிய மருத்துவர், “இருக்கலாம், இன்னும் ஒரு மாசம் அவங்க இங்கதான் அப்ஸர்வேஷன்ல இருக்கணும். பார்க்கலாம்” என சொல்லி முடித்துக் கொண்டார்.

அனைவரும் ஆராவுக்கு இருக்கும் பிரச்சனையை கிரகித்து உள் வாங்கிக் கொள்ள முயன்றனர். அன்றைய தினம் அப்படியே கடந்தது.

இரு தினங்கள் கழித்து அறைக்கு மாற்றப் பட்டாள் ஆரா. தனது பெற்றோர் பற்றி கேட்டு கேட்டு ஓய்ந்து போனாள்.

பெரியவர்கள் எடுத்த முடிவின் படி ஆராவின் பெற்றோர் அவர்கள் டெல்லி சென்ற புதிதிலேயே தவறி விட்டதாகவும் தாத்தா வீட்டினர் பொறுப்பில்தான் இருந்தாள், கல்லூரி படிப்பு டெல்லியில் ஹாஸ்டலில் தங்கி படித்தாள், படிப்பு முடிந்து இங்குதான் இருந்தாள், மதுரைக்கு ஷாப்பிங் செல்ல பெரியண்ணனோடு செல்லும் போது விபத்து நடந்து விட்டது என மருத்துவரே பொறுமையாக சொல்லி விட்டார்.

 அதையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது உணர்ச்சி வசப் பட வலிப்பு வந்து விட்டது. அதற்குரிய மருத்துகள் கொடுத்து சிகிச்சை செய்தனர்.

அடுத்த நாள் வீட்டு ஆண்களிடம் போய் நின்றார் சாரங்கன்.

ஷோபனாவின் வங்கி விஷயங்கள் சாரங்கனுக்குத்தான் தெரியும். சண்முகம் இறந்த போது கிடைத்த பணம் டெபாசிட்டாக இருப்பதாகவும், ஒரு பிளாட் வாங்க பதிவு செய்திருப்பதாகவும் தகவல் தந்தார். ஷோபனா மற்றும் ஆராவின் நகைகள் இவர் பெயரில் உள்ள லாக்கரில் இருப்பதாகவும் விரைவில் அனைத்தையும் இவர்கள் வசம் ஒப்படைத்து விடுவதாகவும் சொன்னார்.

அபுவுக்கு அப்பாவின் செயலில் அத்தனை கோவம். தனியே அவரை அழைத்து வந்து ஏகத்திற்கும் சத்தம் போட்டான்.

“ஆரா ஆரான்னு அவ மேல அத்தனை பாசம் வச்சிட்டு எப்படி நீங்க அவளை இங்க விட சம்மதிச்சீங்க? அவளை இவங்ககிட்ட விட முடியாது, நம்ம கூட கூட்டிட்டு போலாம்” என்றான்.

“ஆரா மேல எனக்கு அன்பு அக்கறை எல்லாம் அப்படியேதான் இருக்கு. நடைமுறைன்னு ஒண்ணு இருக்குல்ல டா. இவங்க சண்முகத்தோட அப்பா அண்ணா அக்கா. ஆரா மேல உரிமை உள்ளவங்க” என்றார் சாரங்கன்.

“இத்தனை வருஷம் அவங்க யாரும் வரலையேங்க. எப்படி அவளை விட முடியும்? இவங்க யாரும் வரலைனா நாமதானே பார்த்திருப்போம்? இப்பவும் நாமளே கூப்பிட்டு போவோம். நாம இருக்கிற தைரியத்துலதான் ஷோபனா நிம்மதியா கண்ண மூடியிருப்பா” என்றார் அமராவதி.

“எல்லாத்தையும் யோசிச்சுதான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன் அமரா. ஆராகிட்ட டாக்டர் சொன்னதை மாத்த முடியாது. நம்ம கூட இருந்தா நாளைக்கு அவளுக்கு கல்யாணம் செய்யும் போது ஏதாவது பிரச்சனை வரலாம். அப்பாம்மா இல்லாத பொண்ணு, உறவு இல்லாத நாம பொண்ணுக்கு எல்லாத்தையும் நல்லா செய்வோமான்னு எல்லாம் யோசிப்பாங்க, அவளுக்கு நல்ல இடம் அமையறதே கஷ்டமா போய்டும்” என பொறுமையாக சாரங்கன் சொல்ல அதன் உண்மை தன்மையை உணர்ந்து இயலாமையோடு பார்த்தார் அமராவதி.

“அதுதான் உங்களுக்கு பிரச்சனையா? ஆராவை நான் கல்யாணம் செய்துக்கிறேன்” என்றான் அபு.

“விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து ரெண்டு பேர் வாழ்க்கையும் சிக்கலா போகும்” என்றார் சாரங்கன்.

“இல்லப்பா…” என்ற அபு சிறு தயக்கத்துக்கு பின், “ஆராவை லவ் பண்றேன் ப்பா” என்றான்.

அவனது பெற்றோர் நம்பாமல் பார்க்க, “அவகிட்ட கூட சொன்னேன், அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. அதனாலதான் நீங்க கேட்டப்ப வேணாம்னு சொன்னேன்” என்றான்.

குழம்பிய சாரங்கன், “ஆனாலும் ஆராவுக்கு இஷ்டம் இல்லைதானேடா?” எனக் கேட்டார்.

 ஷோபனா அத்தையின் இறுதி விருப்பத்தையும் சொன்னவன், “என்னை தவிர யாருப்பா அவளை நல்லா பார்த்துப்பா? யார்கிட்டேயும் அவளை விட்டுத் தர்றதா இல்லை நான்” என்றான்.

“ஷோபனாவே ஆசை பட்டு கேட்ருக்கும் போது அதை நடத்தி வைக்கணும்ங்க நாம” என்றார் அமரா.

“புரியாம பேசாத அமரா. இப்ப ஆரா ஷோபனா மகளா மட்டும் இல்ல. மருதாச்சலம் ஐயாவோட பேத்தி, அவங்க குடும்பத்து பொண்ணு. நம்மளை விட அவங்களுக்குத்தான் உரிமை…” என சாரங்கன் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களிடம் விரைந்து வந்தான் கண்ணன்.

மூவரும் பயத்தோடு அவனை பார்க்க “ஆராவுக்கு திரும்ப ஃபிட்ஸ், ஐ சி யூ கொண்டு போயிட்டாங்க” மூச்சு வாங்க சொன்னான்.

“நாம அப்புறமா பேசலாம்” என்ற சாரங்கன் ஐ சி யூ விரைய அமராவும் அவர் பின்னால் சென்றார்.

சோர்ந்து போன அபு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து முகத்தை கைகளுக்குள் பொதிந்து கொண்டான்.

“நீங்க வரலையா அபு?” எனக் கேட்டான் கண்ணன்.

முகத்தை துடைத்துக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்த அபுவின் கண்களில் ஈரம் கசிந்திருந்தது.

“பயப்பட எதுவும் இல்லை அபு, சரியாகிடுவா”

“யாரையும் மனசளவுல கூட வேதனை படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறவ. அவளுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்? எல்லாத்துக்கும் மேல என்னை விட உங்க தாத்தாக்கு அவ மேல உரிமை இருக்குன்னு சொல்றார் அப்பா” வருத்தமாக சொன்னான் அபு.

“ஆரா திரும்ப உங்ககிட்டதானே வரப் போறா? உங்கப்பா சொல்ற படி அவங்க பணம் நகை எதையும் இங்க கொண்டு வர வேணாம். வெயிட் பண்ணுங்க. ஆரா வீட்டுக்கு வந்ததும்… கொஞ்சம் எல்லாம் செட்டில் ஆனதும் அவளை கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு போங்க” என்றான்.

“அவ இங்கேர்ந்து டிஸ்சார்ஜ் ஆனதும் என்னோடதான் அழைச்சிட்டு போவேன் கண்ணன். அத்தை இருந்தா கூட அதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்க”

“எமோஷானலா பேசாதீங்க. அதை பத்தி அப்புறம் பார்க்கலாம். வாங்க, ஆரா எப்படி இருக்கன்னு பார்த்திட்டு வரலாம்”

“நான் வரலை கண்ணன். சும்மா பயமுறுத்திட்டே இருக்கா. எதுவும் ஆகாது அவளுக்கு. நல்ல படியாகி வருவா. நீங்க போங்க” என்ற அபு அங்கேயே அமர்ந்து கொண்டான்.

தன் பெற்றோர் இப்போது இல்லை எனும் அதீத அதிர்ச்சி மற்றும் அவளுக்கு ஏற்பட்ட அம்னீஷியா காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அதன் விளைவாக ஃபிட்ஸ் வந்திருக்கலாம் என கூறினார்கள்.

சாரங்கனுக்கு தலை வலித்தது. ஆராவை பிடிக்கும் என ஆரம்பத்திலேயே சொல்லாத மகன் மீது கோவமாக வந்தது. ஆராவை என்ன என சொல்லி அவர்களுடன் அழைத்து செல்ல முடியும்? முதலில் தங்களை இவர்கள் நம்ப வேண்டுமே. ஆரா இருக்கும் நிலையில் எதையும் அதிரடியாக செய்ய முடியாதே.

சாரங்கன் வங்கிக்கு விடுப்பு சொல்லி விட்டு மகனுடனே தங்கி விட்டார். அபுவும் வேலை செய்யாமல் விடுப்பு எடுத்து விட்டான். ஆரா அறைக்கு மாற மேலும் இரு தினங்கள் ஆகின. மருந்துகளின் வீரியத்தால் பெரும்பாலான நேரம் உறக்கத்திலேயே இருந்தாள்.

சாரங்கன் இதுவரைக்கும் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ராஜரத்தினமும் வீரய்யனும் மேலும் அவருக்கு சிரமம் வேண்டாம் சென்னை செல்லுங்கள் என்றனர்.

இந்த நேரம் எதை பற்றியும் பேசுவது சரியாக இருக்காது என்பதால் மகனை சமாதானம் செய்து கிளம்ப சொன்னார் சாரங்கன். ஆரா இங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரைக்கும் இங்கிருந்து நகர மாட்டேன் என விடாப் பிடியாக மறுத்து விட்டான். அரை மனதோடு சாரங்கன் மட்டும் அவரது மனைவியோடு சென்னை புறப்பட்டார்.

இப்போது ஆரா அறையில் இருப்பதால் அவளுடன் விஜயா, லோகநாயகி இருவரும் மாறி மாறி இருந்தனர். கண்ணன் அல்லது சூர்யா இருவரில் ஒருவர் கூட எப்போதும் மருத்துவமனையில்தான் இருந்தனர்.

அபு அறைக்கு வந்தான். ஆரா உறங்கிக் கொண்டிருக்க விஜயா, “பார்த்துக்கோங்க தம்பி, வீட்டுக்கு போன் பேசிட்டு வர்றேன். இங்கேர்ந்து பேசினா முழிச்சிக்க போறா” என சொல்லி வெளியே சென்றார்.

வீரியமிக்க மருந்துகளாலோ என்னவோ முகத்தில் கருமை படர்ந்து பரிதாபமாக உறங்கிக் கொண்டிருந்தாள் ஆரா.

அவளுக்கு விழிப்பு வர அவளது கண் பார்வைக்கு தெரியுமாறு அவளருகில் சென்று நின்றான். அவனை ஆழ்ந்து பார்த்தவள், “அபூ…” என உதடுகள் பிரித்து அழைத்தாள்.

“எவ்ளோ சீக்கிரம் சொல்லிட்ட?” என்றான்.

தலையசைத்து இன்னும் அருகில் அழைத்தாள். அவன் செல்ல, “என்னை உன் கூட அழைச்சிட்டு போகாம தாத்தா வீட்ல ஏன் விட்ட?” எனக் கேட்டாள்.

“தாத்தா வீட்ல இல்ல, டெல்லில படிச்சிட்டு இருந்த நீ. அவங்க பொறுப்பெடுத்துகிட்டாங்க. நான் அப்பா அம்மா எல்லாம் அடிக்கடி பார்க்க வருவோம், லீவ்ல நீயும் நம்ம வீட்லதான் இருப்ப” என்றான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “அப்பாம்மா இல்லாததை யோசிக்க கூட முடியலை என்னால. எப்படி நான் அத தாங்கினேன்? அதெல்லாம் பொய்தானே அபூ? அவங்க நிஜமாவே…” அடுத்த வார்த்தை பேச இயலாமல் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து அவளது கன்னத்தை நனைத்தது.

அவள் முன் உடைந்து போகாமல் தைரியமாக தன்னை காட்டிக் கொண்டவன், “கொஞ்ச நாள் கஷ்ட பட்ட, அப்புறம் சரியாகிட்ட ஆரா. பழசையெல்லாம் திரும்ப ஆரம்பிக்க கூடாது. ஏதாவது குடிக்கிறியா? பசிக்குதுதானே உனக்கு?” என பேச்சை மாற்றினான்.

“எப்ப வீட்டுக்கு போலாம் அபூ?”

“டாக்டர் சொன்னதுக்கு அப்புறம் போய்டலாம். இப்ப நீ நல்லாகிட்டே வர்ற, இன்னும் ஒண்ணு ரெண்டு வாரத்துல போய்டலாம்”

“அவ்ளோ நாள் ஆகுமா?” என்றவள் மீண்டும் அமைதியடைந்து கண்களை மூடிக் கொண்டாள். மூடிய கண்கள் வழியே கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. பெற்றோரை நினைக்கிறாள் என புரிய இயலாமையோடு பார்த்தான் அபு.

அவளது மௌனமான அழுகை நிற்காமல் தொடர, “யாராவது நாலு வருஷம் முன்னாடி நடத்ததை நினைச்சு இப்ப அழுவாங்களா? இன்னும் உடம்ப கெடுத்துக்காத ஆரா” என அதட்டினான்.

யார் என்ன சொன்னாலும் பெற்றோரின் இழப்பை இன்னும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு, “சிவியர் ஹெட் இன்ஜுரி, மேஜர் சர்ஜரி நடந்திருக்கு. இப்படி எமோஷனல் ஆகிட்டே இருந்தா நாங்க மெனெக்கெட்டதுக்கு அர்த்தம் இல்லாம போய்டும் ஆராதனா. கோ ஆபரேட் பண்ணுங்க ப்ளீஸ்” என பொறுமையாக சொன்னார்.

சரி என்ற ஆரா மருத்துவர் சென்றதும் அபுவை தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டாள்.

“எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு, எங்கேயும் போயிடாத” என சொல்லி கண்களை மூடிக் கொண்டாள்.

‘யாரிடமும் உன்னை விட மாட்டேன், உன்னை விட்டும் செல்ல மாட்டேன்’ தீவிரமான முடிவுடன் இமைகள் தட்டாமல் அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான் ஆராவின் அபூ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement