Advertisement

அபூவின் ஆரா -8

அத்தியாயம் -8(1)

திருநாவுக்கரசு டிஸ்சார்ஜ் ஆகி வீடு சென்ற பின் இது விபத்தாக இருக்காதோ என சந்தேகம் இருப்பதாக அபுவிடம் சொன்னான் கண்ணன்.

அபு கண்களை சுருக்கிக் கொண்டு கேள்வியாக பார்க்க, “நாவுக்கரசு மாமா அப்படித்தான் சொல்றார். ஊராட்சி எலெக்ஷன் வருதுல்ல… அதுல மாமா நிக்கிறதா இருந்தார். எதிர்த்து நிக்கிறவன் கூட அடிக்கடி உரசல் இருந்துச்சுதான். ஆனா இந்த அளவுக்கு போவான்னு யோசிக்கல நாங்க” என்றான்.

“ஆனா ஆக்சிடென்ட்தான்னு போலீஸ் உறுதி பண்ணிட்டாங்களே கண்ணன்?”

“அவன் நேரடியா செய்யல. ஆதாரமும் இல்லையே நம்மகிட்ட. விடுங்க… எங்க டவுட் கன்ஃபார்ம் ஆகட்டும், போலீஸ் துணையெல்லாம் தேவையில்லை, எப்படி பார்க்கணுமோ அப்படி பார்த்துக்கிறேன் நான்”

“வேணாம் கண்ணன். வயலன்ஸ் எதுவும் வேணாம். நேர் வழில மூவ் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி இது ஆச்ஸிடெண்ட்டா இல்லையான்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க. சாதாரண பஞ்சாயத் போர்ட் எலெக்ஷனுக்காக இந்த அளவு போவாங்களா கண்ணன்?”

“அவன் அப்படி பட்ட ஆளுதான். நான் உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன்”

“ம்ம்…”

“அத்தை இல்லாம போயிட்டதைதான் ஜீரணிக்க முடியலை அபு” என கண்ணன் சொல்ல அபுவின் கண்கள் கலங்கிப் போயின. ஷோபனாவின் நினைவுகள் வரிசைக் கிரமம் இல்லாமல் கலவையாக நினைவுகளில் வந்து போக கண்களை இறுக மூடிக் கொண்டான்.

“சீக்கிரம் நீங்கதான் தேறிக்கனும் அபு. ஆராவுக்கு நினைவு திரும்பும் போது நீங்கதான் அவளை சமாளிக்கணும்” என சொல்லி சென்று விட்டான் கண்ணன்.

அடுத்த நாள் காலையில் வெளி வந்த ஆங்கில நாளிதழில் ராஜஸ்தான் ராஜ பரம்பரையை சேர்ந்த சாயா என்ற பெண்ணின் நிச்சயதார்த்தம்தான் பிரதான செய்தியாக இருந்தது. மாப்பிள்ளை வேறு யாருமில்லை, நகுல்தான்.

சாயாவும் நகுலும் பாரம்பரிய உடையில் நாளிதழின் முழு பக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டு நின்றனர். பெண் மகிழ்ச்சியாக காணப்பட்டாலும் நகுலின் முகம் வேதனையை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

தான் அறிந்த நகுல்தானா இவன் என சந்தேகம் கொண்டு செய்தியை நன்றாக படித்தான் அபு. நகுல் படித்த படிப்பு மற்றும் ஏனைய குடும்ப விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தன. வெகு விரைவில் இருந்தது திருமண தேதி. அதற்கு மேல் எதையும் படிக்காமல் தினசரியை சுருட்டி மூலையில் போட்டான் அபு.

இதுவரைக்கும் நகுல் ஒரு முறை கூட அபுவின் கைபேசிக்கு அழைத்திருக்கவில்லை என்பது நினைவில் வந்தது. ஆராவின் கைபேசி விபத்தில் முழுதாக சேதமடைந்திருந்தது. ஆனால் இவனது எண் நகுலிடம் உண்டு.

 நகுலுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிர்ச்சியிலிருந்த அபுவுக்கு தோன்றாமல் போய் விட்டது. ஆனால் ஆராவை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் அவன் எனக்கு அழைத்திருக்க வேண்டுமே, அப்படி இல்லையென்றால் எதுவோ சரியில்லை என்றுதானே அர்த்தம் என யோசித்தான்.

அவனது கைபேசி எடுத்து நகுலின் எண்ணுக்கு முயற்சி செய்தும் பிரயோஜனம் இல்லை. ரிங் செல்லவே இல்லை.

ஒரு வேளை இது விபத்து அல்லாது கண்ணன் சொன்னது போலவே திட்டமிடப் பட்டு நடந்த செயலோ என யோசித்தவனின் உள் மனம் அப்படித்தான் என அடித்து கூறியது.

வீட்டினர் சம்மதம் இல்லாமல் கூட ஆராவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்த நகுல் இத்தனை விரைவில் வேறு பெண்ணுடன் நிச்சயம் வரை செல்கிறான் என்றால் அப்படித்தானே இருக்க வேண்டும்?

இவ்வாறுதான் நடக்கும் என முன்பே தெரியாதா அவனுக்கு? சிறு பெண்ணுக்கு ஆசை காட்டி அவள் அம்மாவின் உயிரை பறித்து அவளையும் படுக்க வைத்து விட்டானே என அவன் மீது கோவமாக வந்த அதே நேரம் அவனும் என்ன செய்வான், பாவம் உண்மையாக விரும்பிய பெண்ணை அவளது நலனுக்காகவே விட்டு விட்டான் என பரிதாபமும் வந்தது.

ஆராவை நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது. எத்தனையைதான் தாங்குவாள்? நியாயம் கேட்கும் உயரத்திலா இருக்கிறான் நகுல்? அத்தைக்கு இப்படித்தான் ஆகும் என கணிப்பு இருக்க போய்த்தான் ஆராவை என் பொறுப்பாக்கி விட்டு மறைந்து விட்டாரோ?

நல்ல வேளையாக வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஆராவுக்கும் இப்போதைக்கு இதை சொல்ல வேண்டாம், அவள் தேறிய பின்னர் மெதுவாக சொல்லி புரிய வைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

மருத்துவமனை வளாகத்திலேயே இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்கினான். தினம் இங்குதான் வருகிறான். ஆராவை சரி செய்து கொடுத்து விடு என மனமுருக பிரார்த்தனை செய்கிறான்.

இன்றும் ஆராவுக்காக வணங்கி விட்டு கூடுதலாக அவளுக்கு வேதனை தரும் படி நடந்த அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மன தைரியத்தையும் அவளுக்கு கொடு என வேண்டுதல் வைத்தான்.

அலைக்கழிந்து கொண்டிருந்த அவனது மனம் சமன் அடைய வேண்டி அங்கேயே அமர்ந்து விட்டான். சிறிது நேரத்துக்கு பின்னர் தைரியத்தை திரட்டி கொண்டு ஆராவை காண சென்றான்.

கழுத்தில் நரம்பு ஊசி போடப்பட்டு அதன் வழியாகத்தான் மருந்துகள், குளுக்கோஸ் எல்லாம் சென்று கொண்டிருந்தன. தலை மழிக்க பட்டு கன்னங்கள் ஒட்டிப் போய் அடையாளம் தெரியாத அளவுக்கு படுக்கையில் கிடந்தாள் ஆரா. மீண்டு வருவாள் என்ற நம்பிக்கையோடு அவளது நெற்றியில் சிறு கீற்றாக திருநீறு வைத்து விட்டு வெளியேறினான் அபு.

கண்களை திறந்து பார்த்து விட்டு மங்கிய வெளிச்சத்தில் எதுவும் புரியாமல் குழம்பிய ஆரா சில நொடிகளில் மீண்டும் மயக்கம் உற்றாள்.

அடுத்த நாள் கண்ணனிடம், “இது ஆக்ஸிடெண்ட்டாதான் இருக்கணும் கண்ணன். தேவையில்லாம வேற சிக்கலை இழுத்து விடாதீங்க” எனக் கேட்டுக் கொண்டான் அபு.

“விசாரிச்சு நானே தெரிஞ்சுக்கிறேன் அபு” என்றான் கண்ணன்.

நகுலை பற்றி இவனிடம் சொன்னால் மற்றவர்களுக்கும் தெரிய வரலாம். சரியான புரிதல் இல்லாமல் ஆராவை பற்றி தவறாக எதுவும் நினைப்பார்களோ என எண்ணியவன், நகுலை பற்றி எதுவும் சொல்லாமல், “ஓகே கண்ணன், ஆனா நல்லா தெரியாம அவசரப் பட்டு யார்கிட்டேயும் வம்பு வச்சுக்காதீங்க” என மட்டும் அறிவுறுத்தினான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஆரா நன்றாக விழித்துக் கொண்டதாக சொல்லப் பட இருவரும் அவளை காண விரைந்தனர்.

சில நிமிடங்களில் ஐ சி யூ விலிருந்து திரும்பிய இருவரும் உச்ச கட்ட அதிர்ச்சியில் இருந்தனர். பின்னே இவர்களை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

மாலை போலதான் அவளுக்கு பழைய விஷயங்கள் மறந்து போய் விட்டதாக அதிகார பூர்வமாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவளது மறதி எந்த வகை, எந்தளவு மறந்து போயிருக்கிறாள் என சொல்ல முடியும். அவளுடைய ஒத்துழைப்பும் அதற்கு அவசியம். அவளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல என கூறி விட்டனர்.

எப்படி அவள் என்னை மறக்க கூடும் என அபுவுக்கு அப்படியொரு கோவம். அப்பாவுக்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்து உடனே புறப்பட்டு வர சொல்லி விட்டான். அடுத்த நாளே அவர்கள் வந்து விட்டனர். கண்கள் சுருக்கி பார்த்து விட்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்டாள் ஆரா. ஆனால் ஏன் இப்படி தோற்றம் மாறிப் போய் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டாள்.

அபூ எங்கே? அப்பாவும் அம்மாவும் எங்கே? என வேறு கேட்டாள். மொத்தமாக குழம்பிப் போனவர்கள், “உனக்கு அடி பட்ருக்கு, ரெஸ்ட் எடு. தூங்கு” என சொல்லி வெளியில் வந்து விட்டனர்.

அவளது உடல்நலம் மற்றும் மன நலம் ஒத்துழைப்பு கொடுத்த வரை அவளிடம் சில பரிசோதனைகள் செய்து உரையாடல் நடத்தினார்கள் மருத்துவர்கள்.

அதன் படி ஆராவுக்கு ஏற்பட்டிருக்கும் அம்னீஷியாவால் கடந்த சில வருட நினைவுகளை மட்டும் அவள் மறந்து விட்டதாக கூறினார்கள். அவளுக்கு பள்ளிப் பருவம் வரை மட்டுமே நினைவில் இருக்கிறது என்றனர்.

“ஐயோ டாக்டர், அப்போ அவ குழந்தை மாதிரியா இப்போ?” என பதறிப் போனவனாக கேட்டான் அபு.

“இல்லயில்லை, அவங்களுக்கு அதுவரை மட்டும்தான் நினைவில் இருக்கு. மூளையில நினைவுகளுக்குன்னு இருக்கிற பகுதி பாதிக்க பட்டதால இப்படி ரீசண்ட் பாஸ்ட் மெமரிஸ் மட்டும் மறந்து போயிருக்காங்க. அவங்க குழந்தை கிடையாது. கொஞ்சம் உடல் நலம் தேறின பிறகு கொஞ்சம் கொஞ்சமா நடந்ததை நினைவு படுத்த பார்க்கலாம். அவங்க இருந்த கண்டிஷனுக்கு உயிர் பொழச்சதே பெரிய விஷயம். மறதி அவங்களுக்கு சவாலான விஷயம்னாலும் கூட இருக்கிறவங்க சப்போர்ட் பண்ணினா அதை ஓவர்கம் பண்ணி அவங்களால நார்மலா வாழ முடியும்” என்றார்.

“என்னை அவளுக்கு சின்னதிலேர்ந்து தெரியும். சொல்லப் போனா அவளுக்கு நினைவு தெரிஞ்சதிலேர்ந்து தெரியும். என்னை அடையாளம் தெரியலையே அவளுக்கு?” எனக் கேட்டான்.

“உங்க உருவ மாற்றம்தான் காரணம். அவங்களுக்கு அவங்க ஃப்ரெண்ட் அபூர்வனை தெரியும், இப்போ இருக்கிற இந்த வளர்ந்த பையனை சில நாள் மயக்கத்துக்கு அப்புறம் பார்க்கவும் உடனே அடையாளம் தெரியல” என்றார் மருத்துவர்.

“அவ அப்பா இறந்ததையே மறந்து போயிருக்கா, இப்ப அம்மாவும் இல்ல. இத அவளுக்கு எப்படி சொல்றது டாக்டர்?” எனக் கேட்டார் சாரங்கன்.

ராஜரத்தினம் மற்றும் கண்ணன் இருவரும் உடனிருந்தாலும் அவர்கள் குறுக்கீடு செய்யாமல் கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்தனர்.

“இல்லாத ஒருத்தவங்கள இருக்கிற மாதிரி ப்ரொஜக்ட் செய்ய முடியாது. உண்மையை மெதுவா சொல்லிடலாம். முதல்ல அவங்களுக்கு நினைவிழப்பு ஏற்பட்டிருக்கிறதை புரிய வைக்கலாம். அவங்கள அமைதியா வச்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதனால ரொம்ப குழப்பாம அவங்க பேரெண்ட்ஸ் ரெண்டு பேரும் முன்னாடியே இறந்ததா சொல்லலாம், இப்ப அவங்க பீஸ்ஃபுல் லைஃப்ல இருந்தது போல நம்ப வைக்கலாம். ஃப்யூச்சரை டிஃபிகல்ட்டீஸ் இல்லாம அவங்க ஃபேஸ் பண்ண ஈஸியா இருக்கும்” என யோசனை சொன்னார்.

“அப்ப அவளுக்கு நினைவு திரும்ப வாய்ப்பு இல்லயா டாக்டர்?” பரிதவிப்பாக கேட்டான் அபு.

“இன்னிக்கு மெடிக்கல் ஃபீல்ட் அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. ஆனாலும் மூளை மருத்துவம் இன்னும் சவாலான ஒண்ணாதான் இருக்கு. மூளை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமா செய்ய முடியலையே. நம்ம உடல்ல இருக்க உறுப்புகளிலேயே ரொம்ப சிக்கலான உறுப்பு மூளை. நான் சர்ஜரி பண்ணின பேஷண்ட்ஸ்ல வேறு மாதிரியா உடல் ரீதியான சைட் எஃபெகட்ஸ் ஏற்பட்டவங்க இருக்காங்க. அம்னீஷியா ஏற்பட்டது ஆராதனாவுக்குதான்”

“அம்னீஷியால பல வகை இருக்கு. சிலருக்கு விபத்து நடந்ததக்கு அப்புறமா உள்ள எதையும் நினைவு வச்சுக்க முடியாது. எதையும் புதுசா கத்துக்கவே முடியாது. அது போல இருக்கும் போது தினசரி வாழ்க்கையே கஷ்டமா போய்டும். சிலருக்கு பழசு எதுவுமே சுத்தமா நினைவிருக்காது, அதாவது அவங்க யாரு என்னனு கூட தெரியாத அளவுக்கு இருப்பாங்க. அப்படிலாம் பார்க்கும் போது ஆராதனா அதிர்ஷ்டசாலிதான்”

“சில மாசங்களுக்கு முன்னாடி ஆராதனா கண்டிஷன்ல இருந்த ஒருத்தருக்கு ஆபரேஷன் முழுசும் சக்ஸஸ் ஆகல, அதாவது உயிரோட இருக்காங்க, ஆனா படுக்கை நோயாளி, உங்களுக்கு தெரியுமா அந்த பேஷண்ட் வயசு பதினேழுதான். அதனால நீங்க எல்லாரும் ஆராதனா உயிர் பிழைச்சு வந்திருக்காங்கன்னு பாசிட்டிவா நினைங்க” என பெரிய விளக்கம் கொடுத்தார் அந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement