Advertisement

அத்தியாயம் -6(2)

அப்பாவுக்கு அழைத்த அபு விஷயத்தை சொல்ல, அவரும் அங்கேயே இருந்து என்னவென பார்த்து விட்டு வா என சொல்லி முடித்துக் கொண்டார்.

ஏதாவது சத்தம் கேட்டால் கூட பெரியவர் போய் விட்டாரோ என அடிக்கடி வெளியில் வந்து பார்த்தான் அபு. ஆனால் அப்படி எதுவும் இல்லை. நள்ளிரவு தாண்டி அவனும் நன்றாக உறங்கி விட்டான்.

காலையில் எழுந்த அபு கால் பந்து விளையாடுவதை மிஸ் செய்தான். சரி நடக்கவாவது செய்யலாம் என்றெண்ணி கிளம்பி வெளியில் வந்தான்.

பெரியவருக்கு காய்ச்சல் விட்டிருக்க உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தகவல் சொன்னார்கள். மருத்துவர் பார்க்க வர அபுவும் தாத்தாவின் அறைக்கு சென்றான்.

தாத்தாவை பரிசோதித்த மருத்துவர் வியப்பாக, “நைட் இருந்த கண்டிஷனுக்கு எவ்ளோ இம்ப்ரூவ் ஆகியிருக்கார்” என்றார்.

தம்பியின் மனைவியும் மகளும் வந்திருப்பதாக சொன்ன ராஜா, தம்பியின் காதல் திருமணம், பல வருட பிரிவு என சுருக்கமாக சொன்னார்.

“அவங்க இவர்கிட்ட எதுவும் பேசினாங்களா?” எனக் கேட்டார்.

“பேசினாங்க, ஆனா அவருக்கு ஒண்ணும் புரிஞ்ச மாதிரி தெரியலை. நினைவில்லாமதான் இருந்தார்” என்றான் அபு.

யார் அவன் என கேட்டுக் கொண்ட மருத்துவர், “இறக்க போறது வரை நீடிக்கிற சென்ஸ் கேட்கிறது மட்டும்தான். அவங்க வந்தது இவருக்கு தெரிஞ்சிருக்கு. ஒரு வாரமா இவரை வந்து பார்க்கிறேன், இன்னிக்கு திடீர்னு இவ்ளோ இப்ரூவ் ஆகியிருக்கார்னா அவங்க வந்ததுதான் காரணமா இருக்கும். நான் மதியமா வந்து பார்க்கிறேன்” என சொல்லி இப்போதைக்கும் ஊசி மருந்து செலுத்தி விட்டு பின்னர் கொடுக்க வேண்டிய மருந்துகள் பற்றி சொல்லி விட்டு புறப்பட்டு விட்டார்.

குடும்பத்தினர் மீண்டும் ஆலோசனை செய்து ஒரு வாரத்திற்கு ஷோபனாவையும் ஆராவையும் அங்கேயே தங்கிக் கொள்ளுமாறு வேண்டி கேட்டனர். ஷோபனாவால் மறுத்து சொல்ல முடியவில்லை. சண்முகம் இருந்திருந்தால் தங்கதானே முனைந்திருப்பார், எனவே ஒத்துக் கொண்டு விட்டார்.

அபுவுக்கும் அங்குள்ள மனிதர்கள் மீது நல் அபிப்ராயம் வந்திருந்தது. ஒரு வாரம் கழித்து வந்து அவர்களை அழைத்து செல்வதாக சொன்னான். காலை உணவுக்கு பின் அவன் மட்டும் புறப்பட தயாரானான்.

ஆரா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள். ஷோபனாவை லோகநாயகி வந்து அழைக்க அவர் சென்று விட அவனும் அவளும் மட்டும்தான் அந்த அறையில் இருந்தனர்.

“உன் தாத்தா அவர், உம்மேல பாசத்துல இருக்கார் போல. நீ டச் பண்ணினதும் சரியாகிட்டு வர்றார். உனக்கு சந்தோசம் இல்லயா?” எனக் கேட்டான்.

“தெரியலை அபூ. நீ ஏன் கிளம்புற, நீயும் எங்களோட இரு” என்றாள்.

“புது இடத்துல எப்படி தனியா விடன்னுதான் நான் வந்தேன். எவ்ளோ நாள் லீவ் எடுக்க முடியும் நான்? அப்புறம் உன் கல்யாணம் வந்தா லீவ் எடுக்க முடியாம போய்டும்” என்றான்.

அவள் அமைதியாக இருக்க, “எதுன்னாலும் கால் பண்ணு, அவங்க எப்படியோ ஒரு உயிர் போயிடக் கூடாதுன்னு கேட்கும் போது நமக்கு வேற வழியில்லை. ஒரு வாரம் ஓடியே போய்டும்” என்றான்.

அவள் மனதிற்கு எதுவோ நெருட, கலக்கமாகவே இருந்தாள். “நகுல்கிட்ட பேசிட்டே இரு, டைம் பாஸ் ஆகிடும்” என்றான்.

“இரு அபூ” என ஆரா சொல்லிக் கொண்டிருக்க ஷோபனா வந்தார்.

“டைம் ஆகிடுச்சு அபு, நேரத்தோட கிளம்பினாதான் ஃப்ளைட் பிடிக்க முடியும், அவளை கண்டுக்காம வா நீ” என்றார் ஷோபனா.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவின் கன்னத்தை வாஞ்சையாக தட்டிக் கொடுத்தவன், “ஏதோ வேற கண்டத்துல விட்டுட்டு போற மாதிரி லுக் விடக்கூடாது. சீக்கிரம் சென்னை வந்திடலாம்” என சொல்லி கிளம்பினான்.

“ரெண்டு நாள்தானே அபூ? அப்புறமா வீக் எண்ட் லீவ் வரும்தானே. போகாத ப்ளீஸ்…” கெஞ்சலாக சொன்னாள் ஆரா.

“கல்யாணம் பண்ணி போகும் போதும் இவனை கூட அழைச்சிட்டு போவியா? வர வர உன் பிடிவாதம் அதிகமாகிடுச்சு, எவ்ளோதான் தொந்தரவு செய்றது அவனை…” ஷோபனா சொல்லிக் கொண்டிருக்க அபுவின் முகத்தை விட்டு பார்வையை நகர்த்தவில்லை ஆரா.

தோளில் இருந்த பேகை இறக்கியவன், “இருக்கேன் போதுமா?” எனக் கேட்டான்.

ஆரா அவனது கையை பிடித்துக்கொள்ள, “இவ கூட சேர்ந்தா உனக்கும் மூளை வேலை செய்யாது. எத்தன நாள் லீவ் போடுவ? போட்ட டிக்கெட் வேஸ்ட் ஆகிடும். நான் பார்த்துக்கிறேன் இவளை, நீ கிளம்புப்பா” என்றார் ஷோபனா.

“இருக்கட்டும் அத்தை, டிக்கெட் சண்டே ஈவ்னிங் ரீஷெட்யூல் பண்ணிக்கிறேன்” என முடிவாக சொல்லி விட்டான்.

“என்னமோ பண்ணுங்க” என சலித்துக் கொண்டே அகன்று விட்டார் ஷோபனா.

யாருமே நினைத்து பாராத வகையில் அன்று மதியம் போல கண்கள் திறந்து பார்த்தார். மகளை அடையாளம் கண்டு கொண்டார். முன் மாலையில் ஓரிரு வார்த்தைகள் பேசவே தொடங்கி விட்டார் மருதாச்சலம்.

இடையில் ஆராவும் ஷோபனாவும் சென்று பேசினார்கள். எதுவும் பேசா விட்டாலும் அழுதார், பின் உறக்கத்திற்கு சென்று விட்டார்.

வந்து பார்த்த மருத்துவரும் தாத்தா பிழைத்துக் கொள்வார் என நம்பிக்கை அளித்தார்.

“எப்படி அபூ இது பாஸிபில்?” என ஆரா ஆச்சர்யம் கொள்ள, “ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ஒழுங்கா கவனிச்சிருந்தா நீ வராமலே குணமாகி இருப்பாரா இருக்கும். இப்ப பேத்தி வந்து தாத்தாவ காப்பாத்திட்டான்னு உனக்கு கிரெடிட் கிடைச்சிடுச்சு” என கிண்டல் செய்தான்.

“அப்பா ஊருக்கு முத தடவை வர்றோம். யாருக்கும் எதுவும் ஆகாம தாத்தா நல்லா ஆனதுல சந்தோசம் அபூ. அப்ப நாம நாளைக்கே கிளம்பலாம்தானே?”

“அத்தைய கவனிச்சியா? அவங்க இங்க மாமாவோட நினைவுகளை தேடுறாங்க. லெட் ஹெர் டிசைட் ஆரா. அவங்க இருக்கணும்னு சொன்னா நீயும் அவங்க கூட இருக்கணும்”

“போர் அடிக்குது அபூ”

“அதானே உன் பிரச்சனை?” எனக் கேட்டவன் கண்ணன் கைபேசிக்கு அழைத்து பேசினான். பின், “வா போலாம், உன் அத்த மகன் ஆத்தங்கரைல ஏரோபிளான் ஓட்டுறாராம் பார்த்திட்டு வரலாம்” என்றான்.

“வெறும் ஏரோ பிளான்தானா? ஆரா அத்தை பையனா இருந்தா ராக்கெட் விடுவான். அவன் அளவுக்கு யாருக்கும் டேலண்ட் போதாது” என கேலி பேசினாள்.

“யாருடி அவன்?” என அவன் கேட்க நன்றாக முறைத்தவள், “நீதான்” என்றாள்.

“புல் அரிக்குது போ” கேலியாக அவன் கைகளை தடவி விட்டுக் கொள்ள, “வா இப்ப புதுசா முளைச்ச அத்தை பையனுக்கு எருமையை குளிப்பாட்டுறதெல்லாம் கை வந்த கலையாம். உன்னையும் நல்லா தேச்சு குளிப்பாட்டினா அரிப்பு நின்னுடும்” என சொல்லிக் கொண்டே அவனுடன் புறப்பட்டாள்.

ஷோபனா பின்கட்டில் மற்ற பெண்மணிகளுடன் இருக்க வெளியே சென்று வருவதாக சொல்லி கிளம்பினார்கள்.

சற்று தூரத்தில் நிஜமாகவே ஆறு ஓடியது. எதிர் திசையில் சற்று உள் நோக்கி நடக்க மல்லிகை தோட்டம் தெரிந்தது. அவர்களை எதிர் கொண்டு வரவேற்றான் கண்ணன்.

நேற்றிலிருந்து கொஞ்ச நேரமே பழகியிருந்தாலும் கண்ணன் அபு இருவருக்கும் நல்ல தோழமை உண்டாகி இருந்தது.

“என்ன கண்ணன் தாத்தாவ தனியா விட்டுட்டு வந்துட்டீங்க? கண்ண தொறக்கும் போதெல்லாம் உங்களைதான் தேடிட்டு இருக்காறாம், உங்க பாசம், நேசம் எல்லாம் காட்ட வேண்டிய நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டான் அபு.

“அட நீங்க வேற… மனுஷன் நல்லா எழுந்திட்டார்னு வைங்க கரும்பு விளைச்சல் என்னாச்சு, நெல் அறுவடை ஆனதா இல்லியா? மல்லிப் பூவை மார்க்கெட் அனுப்பாம எந்த மவராசிகிட்டடா அள்ளி கொடுத்தீங்க… இப்படி அவர் கேட்குற கேள்விக்கு எவனாலுயும் பதில் சொல்ல முடியாது” என்றான்.

அவன் சொன்ன தோரணையில் அபு வாய் விட்டு சிரிக்க பழக்கம் இல்லாதவன் முன்னிலையில் அப்படி சிரிக்க முடியாமல் அபுவின் பின்னால் நின்று சிரிப்பை அடக்கிக் கொண்டாள் ஆரா.

அபுவுக்கும் பின்னால் எட்டி பார்த்த கண்ணன், “கல்யாணம் ஆகாம இருக்கிறதே ஒரே ஒரு மாமன் பொண்ணுதான், அதையும் நிழல் போல தொடர்ந்து வர்றீங்களே, இது நியாயமா?” எனக் கேட்டான்.

ஆரவின் முகம் சுணங்க, “ஹேய் கண்ணன் இவ கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். கிராமத்து கிண்டல் பேச்சு புரியாது. மாமா பொண்ணா பார்க்காம ஃப்ரெண்ட்டா பாருங்க” என்றான் அபு.

“ஓ ஓஹோ… டவுட் இருந்துச்சு, இப்ப க்ளியர் ஆகிடுச்சு” கேலியாக சொன்னான் கண்ணன்.

“என்ன கண்ணன்?” அபு விசாரிக்க, “உங்க ஆள நாங்க எதுவும் கிண்டல் பேசி அழுக விட்ர மாட்டோம். நாங்க தள்ளியே இருக்கோம், நீங்களும் எங்க முன்னாடி கொஞ்சம் தள்ளித்தான் நிக்கிறது” என்றான்.

“அரே கண்ணா! நாங்க ஃப்ரெண்ட்ஸ்” என அபு சொல்ல நம்பாத பாவனையோடு கிண்டல் சிரிப்பை உதடுகளில் தேக்கி தலையாட்டிக் கொண்டே, “உங்கள மாதிரி எவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் பார்த்திருப்போம் நாங்க, எங்ககிட்டயேவா?” நக்கலாக சொல்லிக் கொண்டே முன்னே நடந்தான் கண்ணன்.

“என்னடி இவன்?” என சலித்த அபு அவனிடம் விளக்கம் சொல்ல இரு அடிகள் எடுத்து வைக்க அவன் கையை கெட்டியாக பிடித்தவள், “இல்லை இல்லைனு சொன்னா இன்னும் கிண்டல்தான் செய்வாங்க. இக்நோர் பண்ணு அபூ” என்றாள்.

அவனுக்கும் சரி என பட, “சரி வா உள்ள போய் பார்ப்போம்” என சொல்லி அழைத்து சென்றான்.

சிறிது தூரம் அபுவுடன் நடந்தவளின் கைபேசிக்கு நகுல் அழைக்க அவளுக்கு தனிமை கொடுத்து நடக்க ஆரம்பித்தான் அபு. அவன் கையை பிடித்து நிறுத்தியவள், “அவ்ளோ சீன் இல்ல, இரு” என்றாள்.

அவன் முறைத்துக் கொண்டே அவளது கையை விலக்கி விட்டு நடந்தான். நகுல் அவனது அப்பாவிடமும் தாத்தாவிடமும் சொல்லி விட்டதாகவும் எதிர் பார்த்தது போலவே அவர்கள் சம்மதிக்கவில்லை எனவும் சொன்னான்.

ஆரா மௌனமாகி விட, “கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றேன். இல்லன்னாலும் பிரச்சனை இல்ல. அடுத்த ஒண்ணு ரெண்டு மாசத்துல நம்ம மேரேஜ் நடந்தே தீரும்” என்றான்.

அப்பாவின் ஊருக்கு வந்திருப்பது பற்றி அவள் கூறிக் கொண்டிருக்க தூரமாக அபு யாரோ ஒரு பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு விட்டு, “அப்புறம் பேசுறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு அவர்களிடம் சென்றாள்.

பொறியியல் படித்த பெண் அவள். சென்னையில் வேலைக்கு சேர கண்ணன்தான் அபுவிடம் கேட்க சொல்லியிருந்தான். அபுவின் அருகில் வந்து நின்ற ஆரா உரிமையாக அவன் கையை பிடித்துக்கொண்டு ‘யார் இவள்?’ என கண்களால் கேட்டாள்.

“இவங்க சங்கவி” என அறிமுகம் செய்த அபு எதற்காக தன்னிடம் பேசுகிறாள் எனவும் விவரம் சொன்னான். அந்த பெண் சென்றதும் இருவரும் மீண்டும் நடந்தனர்.

“ஓவர் சிரிப்பா இருந்தது, என்ன வழியிறியா அவகிட்ட?” எனக் கேட்டாள்.

“அப்படியா தெரிஞ்சது? சாதாரணமாதான் பேசிட்டு இருந்தேன்”

“ம்ம்… ரொம்ப வழியாத, அப்புறம் கண்ண நோண்டிடுவேன்” என்றாள்.

நடக்காமல் நின்று விட்டவன் அவளை உற்று நோக்கி, “எத்தன பொண்ண நான் பார்த்து நீ பார்த்த? லூஸு” என்றான்.

“ம்ம்…”

“கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்றியே… என்னை என் பொண்டாட்டி கூடவாவது சிரிச்சு பேச விடுவியா நீ?” விளையாட்டாக அபு கேட்க, ஆரா அதிர அதற்குள் கண்ணன் அழைக்க வருகிறேன் என்பதாக கை காட்டி விட்டு முன்னால் நடந்தான் அபு.

பேய் அறைந்தது போல அதே இடத்தில் நின்றிருந்தாள் ஆரா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement