Advertisement

அத்தியாயம் -6(1)

“வாம்மா உள்ள வா, நாயகி உன் மருமகளை உள்ள அழைச்சிட்டு வா” அபுவின் கையை பிடித்துக்கொண்டு நின்ற ஆராவை பார்த்துக் கொண்டே மனைவியிடம் கூறினார் வீரய்யன்.

“யாரும்மா இந்த தம்பி?” எனக் கேட்டுக் கொண்டே ஆராவின் கையை தான் பிடித்துக் கொண்டார் லோகநாயகி.

“சண்முகம் மாமாவோட ஃப்ரெண்ட் பையன். ஃபேமிலி ஃப்ரெண்ட்” என தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டான் அபு.

ஹாலில் இருந்தனர் அனைவரும். வந்தவர்களுக்கு குடிக்க பானங்கள் கொண்டு வந்து கொடுத்தாள் திருநாவுக்கரசுவின் மனைவி நளினி. சில நிமிடங்கள் சென்றதும், “பெரியவரை பார்த்திடலாமே” என்றான் அபு.

சண்முகத்தின் அப்பா மருதாச்சலம் இருந்த அறைக்கு அழைத்து சென்றனர். சண்முகம் வயோதிகம் அடைந்திருந்தால் இப்படித்தான் இருக்க கூடும் என்பது போலான தோற்றம். மார்புக் கூடு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவரை கவனித்துக் கொள்ள என ஒரு வேலையாள் கூடவே இருந்தான்.

அவரது தலைமாட்டில் சென்று நின்ற ராஜரத்தினம் குனிந்து அவரது காதில் “ஐயா… ஐயா…” என அழைக்க அவரது கையிலும் காலிலும் லேசான அசைவுகள்.

“தம்பியோட சம்சாரமும் அவன் பொண்ணும் வந்திருக்காங்க” என அவருக்கு புரியும் விதமாக இரண்டு மூன்று முறை சொல்ல இப்போதும் அவரது கை கால்கள் அசைவு கொடுத்தன.

ஆராவை பார்த்து அருகில் வரும் படி சைகை காட்டினார் ராஜா. அவள் தயங்கிக் கொண்டே அபுவை பார்க்க அவளது கை பிடித்து அழைத்து சென்று அவரின் பக்கத்தில் நிறுத்தினான். ஆராவின் கையை எடுத்து பெரியவரின் கையை பிடிக்க வைத்தார் ராஜா.

“ஏதாவது பேசும்மா” என ராஜா சொல்ல, “தாத்தா…” என நலிந்த குரலில் அழைத்தாள். அந்த சத்தம் அவரது காதுகளை சென்றடையவே இல்லை.

ஷோபனாவை அருகில் நிறுத்தி பேச சொன்னார்கள். இதுவரை நேரில் கண்டே இராத ஆனால் கடுமை நிறைந்தவர் என கேள்விப்பட்டிருந்த மருதாச்சலத்திடம் அவர் நினைவு தப்பிய இந்த நேரத்தில் கூட பேச பயந்தார் ஷோபனா.

“பேசும்மா, மாமான்னு கூப்பிடு” என சொல்லிக் கொண்டு லோகநாயகி அருகில் வந்து நிற்கவும் ஷோபனாவும் “மாமா…” என இரு முறை அழைத்தார்.

“ஐயா… சண்முகத்தோட பொண்டாட்டி வந்திருக்கு, தெரியுதா? கேட்குதா குரலு” என சத்தமாக பேசினார் லோகநாயகி. பெரியவரிடம் மாற்றம் இல்லை. பின் இருவரையும் அவருக்கு துளசி தண்ணீர் கொடுக்க வைத்தனர். ஒரு துளியாவது உள்ளே சென்றதா தெரியவில்லை. கடை வாய் வழியே வழிந்தது.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது அறை. திடீரென பெரியவரின் உடல் தூக்கிப் போட ஆரம்பிக்க வேலையாள் என்னவென பார்க்க, பயந்து போன ஆரா வெளியேறி விட்டாள்.

வீரய்யன் அவரது மகன் கண்ணனுக்கு அழைத்து மருத்துவரை கையோடு அழைத்து வர சொன்னார். பத்து நிமிடங்களில் கண்ணனும் ராஜரத்தினத்தின் இளைய மகன் சூர்யாவும் இளம் மருத்துவர் ஒருவரோடு வந்து சேர்ந்தனர்.

பரிசோதித்த மருத்துவர், அதிக காய்ச்சல் காரணமாக வலிப்பு வந்திருப்பதாகவும் அதற்கு மருந்து செலுத்தியிருப்பதாகவும் சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கும் படி அறிவுறுத்தினார்.

“ஹாஸ்பிடல் சேர்த்தா காப்பாத்திடலாமாங்க?” என ராஜா கேட்க, உறுதியாக சொல்ல முடியாது. வாயோதிகம் காரணமாக எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஆனால் வீட்டிலேயே வைத்திருந்தால் இன்று இரவை தாண்டுவதே சிரமம் என சொல்லி சென்று விட்டார்.

பெரியவர்கள் கலந்து பேசி போகும் உயிரை சிரம படுத்தாமல் அவர் வாழ்ந்த வீட்டிலேயே நல்ல மாதிரியாக வழியனுப்பி வைப்போம் என முடிவு செய்தனர்.

“ஹாஸ்பிடல் போனா பெட்டர்தானே?” என நாவுக்கரசுவிடம் கேட்டான் அபு.

“காய்ச்சல்னு வந்தப்பவே மேலூர்ல பெரிய ஆஸ்பத்திரிலதான் காட்டினோம். ரெண்டு நாள் அங்கேயே வச்சிருந்தோம். பொழைக்க மாட்டார்னு சொல்லவும்தான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திட்டோம். வந்திட்டு போறவர் நம்ம ஊர் ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரி டாக்டர்தான். உபசாந்தியா வைத்தியம் பார்த்திட்டு போவார். கண்டிப்பா பொழைப்பார்னு தெரிஞ்சா ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி பார்க்கலாம். வயசான காலத்துல நிறைய டியூப் போட்டு உடம்பெல்லாம் ஊசி குத்தினு ஏன் சிரம படுத்தணும்னு விட்டுட்டோம். எத்தன பெருசுகளை பார்த்திருக்கேன், நாளைக்கு சாந்தி ஆகிடுவார் தாத்தா” என சொன்னான் நாவுக்கரசு.

அன்றே புறப்படலாம் என அபு எண்ணியிருக்க தற்போதைய சூழலில் முடியாது என புரிந்தது.

“ரொம்ப தூரத்திலேர்ந்து வந்திருக்கீங்க, அந்த ரூம் ரெடி பண்ணி வச்சிருக்கு, அங்க இருங்க” என ஒரு அறையை காட்டி நாவுக்கரசு சொல்ல மூவரும் அங்கு சென்றனர்.

“ஏதாவது ஆனா திரும்பவும் வர்ற மாதிரி இருக்கும், இன்னிக்கு இங்கேயே ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு நைட் கிளம்பலாம் அத்தை” என்றான் அபு.

 ஷோபனாவுக்கும் அதுவே சரியென பட ஆராதான், “இங்க என்னவோ போலிருக்கு அபூ, நைட் மதுரைல தங்கிட்டு காலைல வரலாமே” என்றாள்.

“ஒத்துப்பாங்களா தெரியலை ஆரா. நாம கேட்டாலும் நல்லா இருக்காது” என்றான்.

“நீ கேட்டு பாரு” அடமாக சொன்னாள்.

“அவர் உன் தாத்தா, உன் அப்பா வாழ்ந்த இடம் இது. குழந்தை மாதிரி பிஹேவ் பண்றது நிறுத்து ஆரா. உனக்கு என்னவோ போல இருந்தாலும் இங்கதான் தங்குறோம்” கடுமையான தொனியில் அதட்டினார் ஷோபனா.

ஆரா முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, “அத்தை எமோஷனலா இருக்காங்க. பெருசா எடுக்காத” என்றான் அபு.

“இல்ல அபூ, உனக்கு தெரியாது. நகுல் பத்தி தெரிஞ்சதிலேர்ந்து அம்மா என்கிட்ட வித்தியாசமாதான் நடந்துக்கிறாங்க. திட்ட ஏதாவது சாக்கு கிடைக்காதான்னு பார்க்கிறாங்க. அவங்களுக்கு நகுலை பிடிக்கல” என குற்றம் சொன்னாள் ஆரா.

“உன் தாத்தா உயிர் போற நிலைல இருக்கும் போது என்னடி உனக்கு நகுல் பத்தின பேச்சு? அவ்ளோ செல்ஃபிஷ் ஆகிட்டியா நீ?” ஷோபனா சத்தமில்லாமல் கடுமையாக பேசினார்.

‘நான் சொன்னேன்ல?’ என்பது போல அபுவை பார்த்தவள் முகம் கலங்கி சிவந்திருந்தது.

“நீங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணுதானே? மாமியார் மருமக இல்லையே?” சிரிக்காமல் அபு கேட்க, “எந்த நேரத்துல காமெடி பண்ற நீ? சகிக்கல” என்றாள் ஆரா.

“சகிக்காது எப்படி சகிக்கும். கண்ணுக்கு முன்னாடி இருக்குமாம் கோமேதகம், கட்டம் சரியில்லைனா அத விட்டுட்டு களி மண்ணதான் கைல எடுக்க தோணுமாம்” பொரிந்தார் ஷோபனா.

“டெல்லி ப்ரொஃபஸர் உவமைலாம் ஓவரா இருக்கு” என அபு சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழுகையை அடக்க முடியாமல் அங்கிருந்த படுக்கையில் குப்புற படுத்துக் கொண்டு தேம்பினாள் ஆரா.

ஷோபனா இன்னும் எரிச்சல் கொள்ள, “அத்தை ப்ளீஸ். என்னாச்சு உங்களுக்கு?” என அதட்டினான் அபு.

“அவர் வாழ்ந்த இடம் அந்நியமா படுதா இவளுக்கு? இவளை வளர்க்க தெரியாம வளர்த்திட்டேன் அபு. என்ன வேணும் இவளுக்கு… இங்கேர்ந்து போகணும் அவ்ளோதானே? நானே போய் கேட்கிறேன், இங்க எல்லாரும் என்னை பத்தி ரொம்ப நல்லா நினைச்சுக்கட்டும்”

“நீங்க இருங்க அத்தை, நான் பேசிட்டு வர்றேன்” என்றவன் அறை வாசலுக்கு வர அவனது கண்களில் தென்பட்டான் கண்ணன். அவனிடம் இவன் செல்வதற்கு முன் அவனே இவர்களை நோக்கி வந்தான்.

ஏதோ பேச வருகிறான் என உணர்ந்து வாங்க என சொல்லிக் கொண்டே அறைக்குள் வர வழி விட்டான் அபு.

அந்நியர் யாரோ வரப் போவதை தெரிந்து எழுந்து அமர்ந்து முகத்தை துடைத்துக் கொண்டாள் ஆரா.

உள்ளே வந்த கண்ணன், “அத்தையும் அவங்க பொண்ணும் இங்க தங்கட்டும், நீங்க தங்க பக்கத்து ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கு. ரெண்டு மூணு மணி நேரத்துல தாத்தா மூச்சு நின்னுடும் போல. அதுவரைக்கும் வேணும்னா ரெஸ்ட் எடுங்க, அப்புறம் எதுவும் முடியாது” என சொல்லி சென்றான். அதற்கு பின் என்னவென கேட்பது. அங்கேயே தங்கிக் கொள்ள ஆயத்தம் ஆனார்கள்.

“ஜாக்கிரதை ஆரா, நான் சொன்ன மாதிரியே உன் அத்தைக்கு பையன் எல்லாம் இருக்கான். தாத்தாவை விழுந்து விழுந்து கவனிக்கிறான். அத்தை அத்தைனு உருகுறான். அத்தை வேற பாசமா பார்க்கிறாங்க” என ஆராவை சமாதானம் செய்கிறேன் பேர்வழி என அபு சொல்ல அவனை முறைத்து வைத்தாள்.

“உங்க பேச்சுல என்னை ஏன் இழுத்து விடுற. அந்த பையன் முகம் கூட மனசுல பதியல எனக்கு. ரொம்ப மரியாதையா நடந்துக்குறான். எங்களுக்கு கல்யாணம் ஆனப்போ இந்த பையன் ஆறு மாச கைகுழந்தை. என்னை பத்தி சொல்ல அவர் ஊருக்கு புறப்பட்டப்போ இவனுக்கு அவ்ளோ பொம்மை வாங்கி கொடுத்து விட்டேன். இவனுக்கு பேர் கூட உன் மாமா வச்சதுதான், அக்கான்னா அவருக்கு ரொம்ப பிரியம்” என பழைய நினைவுகளை பகிர்ந்தார் ஷோபனா.

“எனக்கு ஒரு அத்தைதானா ம்மா?” எனக் கேட்டாள் ஆரா.

“கூட பொறந்த சிஸ்டர் இவங்க ஒருத்தர்தான். ஆனா நிறைய சொந்த பந்தம் இருக்கு, அப்படி பார்க்கும் போது நாலைஞ்சு அத்த இருப்பாங்க” என்றார் ஷோபனா.

“எல்லாருக்கும் பசங்க இருப்பாங்க. திடீர்னு வந்து குதிச்ச மாமா பொண்ண பார்க்க நாளைக்கு எல்லாரும் க்யூல நிக்க போறாங்க” என்றான்.

“எல்லாருக்கும் பொண்ணுங்களும் இருப்பாங்க அபூ” என்றாள் ஆரா.

“இருந்து என்ன பிரயோஜனம்? எனக்கு சிஸ்டர் முறை ஆவாங்கல்லடி அவங்க எல்லாம்” என ஆராவிடம் சொன்னவன், ஷோபனாவிடம், “மாமாக்கு நாவுக்கரசு அப்பா தவிர வேற பிரதர்ஸ் எத்தன பேர் அத்தை, அவங்களுக்கு பொண்ணுங்க இருப்பாங்கதானே?” எனக் கேட்டான்.

“எல்லாரும் அவருக்கு மூத்தவங்கதான், எனக்கு தெரிஞ்சு எல்லாருக்குமே அப்பவே கல்யாணம் ஆகியிருந்தது அபு. அவங்களுக்கு பொண்ணுங்க இருந்தா கூட அவங்களுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும்” என ஷோபனா சொல்ல முகத்தை கவலையாக மாற்றிக் கொண்டான்.

“போதும் விளையாட்டு, மூஞ்ச நல்லா வை. கல்யாணம் பண்ணிக்க சொல்லி அத்தை கேட்டா முடியாதுன்னு சொல்லிட்டு சைட் அடிக்க பொண்ணு தேடுற. அப்புறம் உன் உளறலை நிறுத்திக்கோ, கண்ணன் காதுல விழுந்தா ஃபீல் பண்ண போறார்” என்றாள் ஆரா.

“கவனிச்சியா ஆரா, இந்த கண்ணணை விட அவன் அம்மாதான் பயங்கரமா உன்னை கவனிக்கிறாங்க. டிமாண்டிங் மருமக நீ. எல்லாம் என் அப்பாம்மாவை சொல்லணும். அவங்களும் வீட்ட எதிர்த்து லவ் மேரேஜ் பண்ணி ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்கு போய் இப்படி தாத்தா வீடு, அத்தைக்கு ரெண்டு மாமாக்கு ரெண்டுன்னு கண்ணுக்கு இதமா நாலு முறை பொண்ணுங்கன்னு…” கற்பனையாக நினைப்பது போல சொன்னவன், பின் தருமி டோனில், “உனக்கில்ல அபு உனக்கில்ல…” என சொல்ல ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு சிரித்தாள் ஆரா.

ஷோபனாவும் சிரித்துக் கொண்டே, “சும்மா இரு அபு. கவலையே இல்லாம சிரிச்சிட்டு இருக்கோம்னு தப்பா நினைக்க போறாங்க” என்றார்.

“அம்மாவும் பொண்ணும் இப்படியே வாயெல்லாம் பல்லு தெரியுற மாதிரி இல்லாட்டியும் அழுகாட்சி சீன் போட்டு என்னை டென்ஷன் பண்ணாதீங்க. அப்புறம் மொக்கை ஜோக் சொல்லி உங்க ரெண்டு பேரையும் கதற விட்ருவேன். எதுவும் வேணும்னா கால் பண்ணுங்க” என சொல்லி பக்கத்து அறைக்கு சென்று விட்டான் அபு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement