Advertisement

அபூவின் ஆரா -16

அத்தியாயம் -16 (1)

நகுல் பேசி விட்டு சென்ற பின்னர் ஆரா அழைத்தது கூட மறந்தவனாக அங்கேயே நின்றிருந்தான் அபு. இன்னும் ஆரா பேசிய ஆடியோ அவன் காதில் எதிரொலித்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.

தன் மீதான ஆராவின் அன்பு அவளிடமிருந்து பிரிக்க முடியாத அளவுக்கு நம்பிக்கை எனும் இழை கொண்டு அவளது ஆன்மாவோடு சேர்த்து தைக்கப் பட்டிருப்பதை உணர்ந்து கொண்ட அபு சிலிர்த்து போய் நின்றிருந்தான்.

கைகளை விரித்து ஆழமாக மூச்சு எடுத்துக் கொண்டான். ஆரா என கத்த வேண்டும் போல இருந்தது. சுற்றம் பார்த்து சிரித்தவன் “எப்பவுமே இந்த அபூவோட ஆராதான்டி நீ” என அவளுக்கு சொல்வது போல சொல்லிக் கொண்டான்.

மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தவனுக்கு ஆராவின் விபத்து குறித்து யோசனை ஓடியது. உடனே கண்ணனுக்கு அழைத்து பேசினான். நல விசாரிப்புகளுக்கு பின், “அந்த ஆக்ஸிடெண்ட் நிஜமா ஆக்ஸிடெண்ட்தானா?” எனக் கேட்டான்.

“என்ன அபு திடீர்னு? ஆரா எப்படி இருக்கா? வேற எதுவும் பிரச்சனையா?” என விசாரித்தான் கண்ணன்.

“பிரச்சனைலாம் இல்லை கண்ணா. நீங்க முன்னாடியே டவுட் இருந்ததுன்னு சொன்னீங்களே…”

“நல்லா விசாரிச்சுதான் நான் டவுட் பட்டவன் செய்யலைன்னு சொன்னேனே அபு”

“அது… நீங்க டவுட் பட்டவன் செய்யலைனா வேற யாரும் கூட செய்திருக்கலாம் இல்லயா? திடீர்னு அதை பத்தி ஒரு யோசனை, இன்னும் கூட நல்லா விசாரிச்சு நிஜமாவே ஆக்ஸிடெண்ட்தானான்னு க்ளியர் ஆகிட்டா நிம்மதியா இருக்கலாம்ல கண்ணா?”

“ஓகே, திரும்ப சல்லடை போட்டு சலிச்சிடுறேன், நீங்க கவலை படாம என் மாமன் பொண்ண நல்லா பார்த்துக்கோங்க” என சொல்லி வைத்தான் கண்ணன்.

ஆராவுக்கு நடந்தது விபத்தாகத்தான் இருக்க வேண்டும், வேறு யார் அவளுக்கு எதிரிகள் என சிந்தித்தவனுக்கு திடீரென ஏதோ தோன்ற மீண்டும் கண்ணனுக்கு அழைத்தான்.

அபு சொல்வதை கேட்டு திகைத்த கண்ணன், “இப்படி நான் யோசிக்கல அபு. ரெண்டே நாள்ல விவரம் சொல்றேன்” என உறுதி கொடுத்து வைத்தான்.

மீண்டும் ஆரா அழைக்க தன்னை இயல்பாக்கிக் கொண்டு கீழே சென்றான் அபு. அவனை கண்டதும் வேகமாக அவனிடம் வந்தவள், “எங்க போயிட்ட நீ? யார் கூட பேசிட்டிருந்த? உனக்கு தெரிஞ்சவங்களா? என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல?” என கேள்விகளாக அடுக்கினாள்.

அவளது எந்த கேள்விக்கும் பதில் தராமல், “நீதான் உன் ஃபிரெண்ட்ஸோட பிஸியா இருந்த. எங்க அவங்க எல்லாம்? எதுக்கு கூப்பிட்ட என்னை?” என கேட்டான்.

“லஞ்ச் சாப்பிட போயிருக்காங்க. உனக்கு பசியில்லையா? நாமளும் போலாம் வா. ஆனா வந்து அது சாப்பிட கூடாது இத தொடக் கூடாதுன்னு ரூல்ஸ் போடக்கூடாது. எல்லாமே அளவா சாப்பிடலாம்னு டாக்டர் சொல்லிட்டார்” என சொல்லிக் கொண்டே அவனை இழுத்துக் கொண்டு உணவுக்கூடம் சென்றாள்.

இருவரும் சேர்ந்து சாப்பிட ஆரா பயந்தது போல அவள் எதையும் சாப்பிட தடை சொல்லவில்லை அபு. அவன்தான் நகுல் பற்றியும் அவன் சொன்னவை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தானே.

ஆராவும் தன்னை விரும்பியிருக்கிறாள், தனக்காக நகுலை வேண்டாம் என சொல்லி விட்டாள் என்ற விஷயம் தரும் சந்தோஷத்தை மிஞ்சியிருந்தது ஆராவை விபத்துக்குள்ளாக்கியது யார் என்ற கேள்வியால் விளைந்த மண்டை குடைச்சலும் அவளுக்கு ஆபத்து இருக்கிறதோ என்ற பயமும்.

“அபூ… டக்குன்னு பார்க்காத, அங்க ஆப்போசிட் லைன்ல லாஸ்ட்ல உட்கார்ந்திருக்காங்க பாரு ரெண்டு லேடிஸ்…” என்றாள்.

அவனும் பார்த்து விட்டு அவர்களுக்கு என்னவென கேட்க, தன்னை அவர்கள் பையனுக்கு பெண் பார்த்தார்கள் என விவரம் சொன்னாள்.

“கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றதுக்கு என்னடி?” எனக் கொஞ்சம் கோவமாக கேட்டான்.

“முதல்ல எதுக்கு வந்து என்கிட்ட பேசுறாங்கன்னே தெரியலை, புரிஞ்சதுக்கு அப்புறம் என்னை பேசவே விடலை அவங்க. நீ பேசிப் பாரு அவங்ககிட்ட, நான் ஸ்டாப்பா அவங்க மட்டும்தான் பேசுறாங்க. தட் வாஸ் ஒன் வே கம்யூனிகேஷன்” என்றாள்.

“அவங்க என்ன உன்னை பேச விடுறது? நீதான் அவங்கள ஸ்டாப் பண்ணியிருக்கணும், எல்லாத்துக்கும் தயங்கினா இப்படித்தான் பொண்ணு பார்ப்பாங்க உன்னை. கட் அண்ட் ரைட்டா பேசத் தெரியாதா உனக்கு?”

“என்ன அபூ? ஏன் என்னவோ போல பேசுற நீ?” திகைப்பாக கேட்டாள் ஆரா.

“அப்புறம் என்ன? நீ என்ன நினைக்கிறேன்னு நீயே புரிஞ்சுக்கலைன்னா அடுத்தவங்களுக்கு எப்படி புரியும். தெளிவா இல்லைனா நிறைய கஷ்டம் ஆகிடும் ஆரா” என்றான்.

“என்னடா சொல்ல வர்ற நீ?”

“ம்ம்… கோதுமை பாயசம் சூப்பர்னு சொல்றேன்” என்றவன் அவளுடையதையும் எடுத்து பருகினான்.

“டயட்ல இருக்கிறவன் எதுக்கு என் பாயசத்தை எடுக்கிற? நான் டேஸ்ட் பண்ணவே இல்லை, பக்கத்து இலைக்கு பாயசம் வேணும்னு கேட்டாவது எனக்கு வாங்கி தா. இல்லைனா வீட்டுக்கு போறதுக்குள்ள நமக்குள்ள தேர்ட் வேர்ல்ட் வார் வந்திடும்” என மிரட்டல் போல சொன்னாள்.

ஆரா பேசியதில் அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு. பாயசம் ஊற்றிக் கொண்டிருந்தவரை அழைத்து அவளுக்கு ஒரு கப் பாயசம் வாங்கிக் கொடுத்தான்.

பருகி முடித்தவள், “போடா, முந்திரி திராட்சை எதுவும் இல்லை. இந்த பாயசத்துக்கு அவ்ளோ ஸீனும் இல்லை” என்றாள்.

உணவு முடியவும் பேசிக் கொண்டே திருமண அரங்குக்கு வந்து கொண்டிருந்தனர். அபுவுக்கு அலுவலக விஷயமாக கைபேசியில் அழைப்பு வர சற்று தள்ளி நின்று பேசலானான். மீண்டும் அந்த பெண்களிடம் தனிமையில் சிக்கிக் கொண்டாள் ஆரா.

அம்மாவின் கைபேசி எண் தா நாங்கள் பேசிக் கொள்கிறோம் என அவர்கள் அவளை பேசவே விடாமல் கேட்க, “ஆன்ட்டி எனக்கு கல்யாணமாகி எட்டு மாசம் ஆச்சு” என எப்படியோ சொல்லி விட்டாள்.

“அப்படியா! இவ்ளோ நேரம் சொல்லவே இல்லையேம்மா” ஏமாற்றமாக சொன்னார் அந்த பெண்.

“நீங்க சொல்ல விட்டாதானே?”

“நல்ல அழகா இருக்கவும் ஆசையா வந்து பேசினேன். போகுது, எங்களுக்கு கொடுப்பினை இல்ல. பையன் என்ன செய்றார்மா? நல்ல வேலையா? எந்த ஊரு?” விடுவேனா என அவரும் விசாரிப்பு படலத்தை நீட்டிக் கொண்டே சென்றார்.

எரிச்சலடைந்த ஆராதனா சற்று தூரமாக நின்று கைபேசியில் பேசிக் கொண்டிருந்த அபுவை காட்டி, “அவன்தான் என் புருஷன்” என சொல்லி அவனை பற்றிய விவரங்களையும் சொன்னாள்.

இவளைத்தான் அவனும் கவனித்துக் கொண்டிருந்தான். வா என இவள் கை காட்ட விளையாட எண்ணி வேண்டுமென்றே அவளை தெரியாதது போல காட்டிக் கொண்டே அவர்களை கடந்து சென்றான்.

ஆராவின் உச்சியில் திலகம் இல்லை, காலில் மெட்டி இல்லை, தாலி செயின் கூட மெலிதானதாக இருக்க அவள் பொய் சொல்வதாக எண்ணிக் கொண்டனர் அந்த பெண்கள்.

“நாங்க பேசுறது எதுவும் பிடிக்கலைன்னு இப்படி பொய் சொல்றியாம்மா நீ? பார்க்க நல்லா இருக்கவும் ஆர்வத்துல வந்து பேசிட்டோம். என் பையனை நேர்ல பார்த்தா இப்படி பேச மாட்ட” என அந்த பெண்மணி பேசிக் கொண்டிருக்க, அவளுக்கோ அவரை விட அபுவின் மீதுதான் கோவமாக வந்தது.

எப்படி என்னை விட்டு செல்லலாம் என மனதில் பொருமியவள் அவர்கள் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இவளது முக மாற்றத்தை கவனித்தவன் வேகமாக அவளருகில் வந்து நின்று தோளில் கை போட்டுக் கொண்டான்.

கோவத்தில் வேக மூச்சுகளோடு அவள் நிற்க, “சொல்லுங்க, இவ்ளோ நேரம் என் வைஃப்கிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க?” என அவன் கேட்க அவர்கள் ஒன்றுமில்லை என சொல்லி சென்று விட்டனர்.

தன் தோளில் இருந்த அவனது கையை வேகமாக எடுத்து விட்டவள் மூக்கு விடைக்க, உதடுகள் துடிக்க அவனை பார்த்தாள்.

“ஹேய் சும்மாடி, நீயே சமாளிக்கணும்னு நினைச்சு போனேன்” எனும் போதே அழுது விட்டாள்.

“ஆரா என்ன இது?” என்றவன் அவளது கண்களை துடைக்க போக, தன்னை அவன் தொட விடாமல் செய்து சென்று விட்டாள். அவளை தொடர்ந்து அவன் செல்ல அவளோ நண்பர்கள் குழுவோடு நின்று கொண்டாள்.

அதற்கு பின் அபுவை கண்களால் கூட தேடவில்லை அவள். சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். காரின் பின் பக்கம் ஏறியவளை முன்னே வர சொல்லி இவன் கேட்க உறக்கம் வருவதாக சொல்லி விட்டாள். ஆனால் நிஜத்தில் வெறுமனே கண்களை மட்டும்தான் மூடியிருந்தாள், உறங்கவே இல்லை.

வீடு வந்த பின் வேகமாக உள்ளே வந்தவளிடம் எப்படி நடந்தது விஷேசம் என அமரா விசாரிக்க அடக்கி வைத்திருந்த அழுகை வெளி வந்து விட்டது. சாரங்கனும் பயந்து போய் என்னவென விசாரிக்க அதற்குள் அபு வந்து விட்டான்.

இன்னும் அழுகையை அவள் நிறுத்தியிருக்கவில்லை. அபுவின் பெற்றோர் மகனை முறைத்தனர்.

நடந்ததை சொன்னவன், “கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லி அவங்கள கட் பண்ண தெரிய வேணாமா இவளுக்கு? என்ன செய்றா எப்படி சமாளிக்கிறான்னு பார்ப்போம்னு சும்மா டூ மினிட்ஸ் தெரியாதது போல நடந்துகிட்டேன், கோச்சுக்கிட்டா” என விளக்கம் சொன்னான்.

ஆரா அழுது கொண்டே இருக்க, “சாரி ஆரா. இவ்ளோ சீரியஸா எடுப்பேன்னு நினைக்கல” என சமாதானம் செய்தான் அபு.

சாரங்கன் மகனை திட்ட அமராவும் சேர்ந்து கொள்ள அழுத விழிகளோடு அவர்களை பார்த்தவள், “இட்ஸ் ஓகே, ஏன் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு இவ்ளோ திட்டுறீங்க? பாவம் அவனை திட்டாதீங்க” என்றாளே பார்க்கலாம்.

“இவளுக்கு பரிஞ்சுக்கிட்டு பேசவே கூடாதுங்க, நம்மள கோமாளி ஆக்கிடுவா. போங்க ரூமுக்கு, ரெஸ்ட் எடுங்க” என எரிச்சல் கொண்டார் அமரா.

“அதுக்கு ஏம்மா ஷௌட் பண்ற? நார்மலா பேச தெரியாதா உனக்கு? என்ன சொல்லிட்டா இப்போ? தள்ளுங்க உங்கள யாரு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டா?” என அபுவும் சத்தம் போட்டான்.

“வந்த உடனே உன் பொண்டாட்டிதான் அழுதா. அப்ப கேட்கத்தான் செய்வோம்” என்றார் அமரா.

“அழதானே செஞ்சா, என்னை குறை சொன்னாளா?” எனக் கேட்டான் அபு.

மருமகளை பார்த்தவர், “சொல்லுடி இவனாலதானே அழுத நீ? யாருன்னு தெரியாதவங்ககிட்ட விட்டுட்டு எதுக்கு போறான் இவன்? இவன் மேலதான் தப்புன்னு சொல்லு” என்றார் அமரா.

அத்தையின் கையை பிடித்துக் கொண்டவள் அபுவை குற்றம் சொல்ல முடியாமல் அவரை பாவமாக பார்க்க, கணவரை பார்த்த அமரா, “நான் சொல்லலை… நீங்க வாங்க” என சொல்லி அவரை கையோடு அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

“இது தேவையா? என்கிட்ட சண்டை போடாம என்னடி இதெல்லாம்?” என ஆராவை அபு கேட்க, “என்னை தெரியாதவன் மாதிரி போனதானே நீ? அப்படியே நிஜம் போலவே இருந்துச்சு, எப்படி போலாம் நீ?” எனக் கேட்டாள்.

“அதான் சொன்னேனே…” என அபு சொல்லிக் கொண்டிருக்க கோவமாக அவளது அறைக்கு சென்று விட்டாள்.

முதலில் அம்மாவை பார்க்க சென்றான் அபு. அவர் மகனை முறைத்துக் கொண்டே, “இவனை எதுவும் சொல்லக்கூடாதுன்னு அவ சமாளிக்கிறா. அவளை பார்க்காம இங்க வர்றான் பாருங்க உங்க புள்ள. என்னங்க பார்த்துக்கிறான் அவளை?” என கணவரிடம் குறை பட்டார்.

“அம்மா தாயே! நீ போட்ட சத்தத்துலதான் இன்னும் டென்ஷன் ஆகிட்டா அவ. என்ன பார்த்துக்கிறேன்னு என்னை கேட்காத நீ. எப்படி நீ அவகிட்ட கோவமா பேசலாம்?” என கோவப்பட்டான்.

“போடா போய் அவளை சமாதானம் செய். நான் பேசுறதெல்லாம் கணக்குலேயே எடுக்க மாட்டா அவ. உன் பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்ன இருந்து ஆரா எனக்கு பழக்கம். அவகிட்ட கோவப்பட எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. நீ கேட்க கூடாது அதை. இன்னொரு முறை அவளை அழ விட்டீனா அப்புறம் இருக்கு உனக்கு” என அமரா சொல்லிக் கொண்டிருக்க அவரை முறைத்துக் கொண்டே வெளியேறினான் அபு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement