Advertisement

அவள் வளர்ந்த பின் அவளது பதினைந்தாவது பிறந்த நாளில் பாக்கெட் மனியை சேர்த்து வைத்து பெரிய நெட் வாங்கி மரக் கிளையில் கட்டி அவளை அழைத்து வந்து காட்டினான். 

“உன் பர்த்டேக்கு இதுதான் என்னோட கிஃப்ட்” என்றான். 

அதை ஆசையாக பார்த்தாலும், “கிஃப்ட் என் கைல தராம இது என்ன இங்க கட்டி வச்சிருக்க?” என கேள்வி கேட்டாள். 

“உன் வீட்ல எங்க இப்படி இடம் இருக்கு? நினைக்கிறப்போ எல்லாம் இங்க வந்து ஆடு, இதுல படுத்துக்கிட்டே உன் ஃபேவரைட் காமிக்ஸ் படி, இதிலேயே படுத்து தூங்கு. எங்க இருந்தா என்ன?” என அபு சொல்ல உடனே அதில் ஏற முயன்றாள்.

 உயரம் போதாமல் தடுமாறிக் கொண்டிருந்தவளை அவனே தூக்கி நெட் ஊஞ்சலில் விட ஆவலாக அதில் படுத்துக் கொண்டாள். 

வெயிலாக இருந்தாலும் மரக் கிளைகள் வழியே ஆங்காங்கே சூரியனின் கதிர்கள் பட்டனவே தவிர சுள் என்ற சூடு இல்லை. அது கூட நன்றாகத்தான் இருந்தது. பின்னர்தான் அவள் ஏற வசதியாக குட்டி ஸ்டூல் ஒன்றையும் வாங்கி போட்டான். 

அந்த நெட் ஊஞ்சல் பத்திரமாக இப்போதும் அவனிடம் உள்ளது. சொந்தக்கார குழந்தை யாரோ வந்த போது அபுவிடம் ‘அந்த ஊஞ்சலை கட்டி விடுடா’ என அமராவதி கேட்ட போது கூட ‘அதெல்லாம் எங்க கிடக்குதோ, வேற விளையாட சொல்லும்மா’ என சொல்லி விட்டான். 

அப்படி விலை உயர்ந்த பொருள் ஒன்றும் இல்லை. அது அவளுக்காக அவன் வாங்கியது என்பதை விட ஆசையாக அவள் உபயோகித்தது என்பதால் அவனை பொறுத்த வரையில் சிறப்பு வாய்ந்ததாக போய் விட்டது. தன்னை தவிர யாரும் அதில் ஏறக் கூடாது என அவளே சொன்னதில்லை. யாராவது சிறு குழந்தைகள் வந்தால் அவளே ஏற்றி விட்டு விளையாட வைப்பாள். 

ஆனால் அவள் சென்ற பின் அதை பத்திரமாக எடுத்து வைத்து விட்டான். என்னவோ வேறு யாருக்கும் கொடுக்க அவனுக்கு மனம் வருவதே இல்லை. சிறு பிள்ளைத் தனமான தனது அந்த செயலை நினைத்து இப்போதும் அபுவுக்கு சிரிப்பு வந்தது.

 ஆரா என்றால் அபுவுக்கு தனிதான். அவளுக்கும் இவன் அப்படித்தான். இருவருக்குள்ளும் ஆழமான பிணைப்பு இருந்தது. 

இவன் ஏதாவது சேட்டை செய்து சாரங்கனோ அமராவோ கண்டிக்க நேரிட்டால் அவனுக்கு முன் உதடுகள் பிதுக்கி அழ ஆரம்பித்து விடுவாள். சும்மா அவனை அடிப்பது போல சாரங்கன் கை ஓங்கி இவளிடம் விளையாட்டு காண்பிப்பார். அவரது கால்களை கட்டிக் கொண்டு ‘வேணாம் மாமா வேணாம் மாமா’  என கெஞ்சும் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு, “இவனுக்கு எங்கள விட நீ அதிக செல்லம் கொடுக்கிறடா ஆரா குட்டி. உனக்காகவே அவனை அடிக்கல” என சொல்லி கொஞ்சுவார். 

அப்படி பட்ட அபு அழைத்தும் இங்கு வர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தவள் இன்றுதான் வருகிறாள். அதில் கோவமாக இருக்கிறான் அபு. 

பனிரெண்டே காலுக்கு விமானம் வந்து சேர, பனிரெண்டே முக்காலுக்கு ஆராதனா வெளிப் பட்டாள். 

வரிக் குதிரையின் உடலில் காணப் படுவது போல கருப்பு வெள்ளையில் கோடுகள் கொண்ட அவளணிந்திருந்த கவுன் அவளின் கணுக்காலுக்கு மேல் இருந்தது. உச்சி வெயிலின் தாக்கத்தில் முகம் சுளித்தவள் அணிந்திருந்த கோட்டை கழட்டி விட ஸ்லீவ்லெஸ் கவுனில் இன்னும் வசீகரித்தாள். 

கருப்பு கண்ணாடி எடுத்து அணிந்து கொண்டவள் குதிகால் உயர செருப்புகளில் நிதான நடை போட்டுக் கொண்டே டிராலியை இழுத்துக் கொண்டு வந்தாள். 

அபு ரசித்தான், ஆமாம் இத்தனை நேரம் இருந்த கோவத்தை மறந்து விட்டு அணிந்திருந்த கூலர்ஸ் வழியாக அணு அணுவாக அவளை ரசித்தான். தான் ரசிப்பது  அவளுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தான். 

அவனை கடந்து அவள் செல்ல, கண்ணாடியை கழட்டி விட்டு கோவமாக அவளை பார்த்தவன், “ஹேய் ஆரா!” என சத்தமாக அழைத்தான். 

பர பரப்பாக இருந்த அந்த இடத்தில் சத்தம் எந்த பக்கத்திலிருந்து வருகிறது என தெரியாமல் அவள் சுற்றும் முற்றும் பார்க்க இன்னொரு முறை அவளது பெயரை சொல்லி அழைத்தான். 

நன்றாக பின்னால் திரும்பியவள் அப்போதுதான் அவனை கவனிக்கிறாள் என்பது அவளது முக பாவத்திலிருந்து தெரிய, அப்படியொன்றும் அவள் தன்னை அலட்சியம் செய்து விடவில்லை என்பதில் திருப்தி கொண்டவனாக, “ஹாய்!” என்றான். 

“ஹாய் அபூ! மாமா வருவாங்கன்னு நினைச்சேன், எப்படி இருக்க நீ?” எனக் கேட்டுக் கொண்டே அவனிடம் வந்து நின்றாள். 

கையில் இருந்த கண்ணாடியை மீண்டும் அணிந்து கொண்டவன், “நல்லா இருக்கேன், அத்தை எப்படி இருக்காங்க? ஏன் மாமா வந்தாதான் வருவியா?” எனக் கேட்டான். 

“உன் அத்தைக்கு உன்னை பார்க்க ரொம்ப ஆசை, அவங்க ரொம்ப பிஸி, நீ டெல்லி வாயேன்” என அழைப்பு விடுத்தவள் நாசூக்காக அவனது இன்னொரு கேள்விக்கு பதில் தராமல் தவிர்த்து விட்டாள்.

வருகிறேன், வரவில்லை எனும் விதமாக எதுவும் சொல்லாமல் அவளது டிராலியை வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தான் அவன். 

சென்னையின் பேருந்து நெரிசலில் நிதானமாக கார் சென்று கொண்டிருக்க அவ்வப்போது ஆராதனாவை பார்த்துக் கொண்டான் அபூர்வன். ஏதாவது பேச வேண்டுமே என அவளும் சென்னை பற்றி ஏதேதோ கேட்டாள். 

பதில் சொன்னவன் ஒரு கட்டத்தில், “ஓ கமான் ஆரா, நார்மலா இரு, பேசு” என்றவன் சிறு இடைவெளி கொடுத்து, “வேணும்னுதானே இவ்ளோ நாள் இங்க தலை காட்டாம இருந்த?” எனக் கேட்டான்.

பெயருக்காகவாவது இல்லை என அவள் சொல்லியிருக்கலாம். அமைதியாக இருந்து ஆம் என சொல்லாமல் சொன்னாள். 

“குட், நான் ஏதோ வகையில உன்னை அஃபெக்ட் பண்ணிட்டே இருக்கேன்ல?” என்றான். 

“நீ இன்னும் மாறலையா? ஐ மீன்…” முதலில் சொல்ல இயலாமல் லேசாக திணறியவள், “என் விஷயத்தை… என்னை மறக்கலையா?” எனக் கேட்டாள். 

“உன்னை மறக்கிறதா, அதெப்படி மறக்க முடியும்?” என அபு கேட்ட விதத்தில் கலவரம் கொண்டாள் ஆராதனா. 

“உனக்கு விருப்பமில்லைனு சொன்னதோட என் எண்ணத்தை மாத்திகிட்டேன். நான் வர்றதா இல்லை இன்னிக்கு, அப்பாக்கு முக்கியமான மீட்டிங், அவரால வர முடியலை. பதினோரு மணிக்கெல்லாம் நீ வந்திட்டியான்னு கால் பண்ணி கேட்டார், ஒரு மணி வரைக்கும் அவரால கால் பண்ண முடியாது, அதான் இன்னும் அவர் கால் பண்ணல. உன் மேல அவ்ளோ பாசம் அவருக்கு. அவர் கேட்டுகிட்டதுக்காக வந்தேன். உன்னை டிஸ்டர்ப் செய்ய இல்ல, ஸோ பழைய மாதிரி இரு, இனியாவது முடியறப்போலாம் வா” என்றான். 

குரலை செருமிக் கொண்டவள், “யாருக்கும் தெரியாதுதானே?” எனக் கேட்டாள். 

“எது? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டு உன் முகரைக்கு எல்லாம் நான் வேணுமா முடியாது போடான்னு நீ சொன்னதா?” என சிரிக்காமல் கேட்டான். 

கலவரமும் கோவமும் அவள் முகத்தில் தென்பட, “நீ இன்னும் நார்மல் ஆகல. இல்லைனா இந்நேரம் என்கிட்ட சண்டைக்கு வந்திருப்ப” என்றான். 

“எனக்கு அப்படி தாட் இல்லைனு ரொம்ப ஜெண்டிலா நோ சொன்னேன் நான். நீ சொல்ற மாதிரி இல்ல” என்றாள். 

“ஜெண்டிலா… ஆமாம் ரொம்ப ஜெண்டிலா. அப்புறம் அந்த நகுல்… நகுல மஹாராஜா நல்லா இருக்கானா?” என சீற்றமாக கேட்டான். 

அவனது கோவத்தில் அவள் முகம் வெளிறிப் போக, அவனுக்கும் என்னவோ போலானது. 

சாலையில் வாகன நெரிசல் இல்லாதிருக்க  “சாரி ஆரா” என மட்டும் சொல்லி காரின் வேகத்தை அதிக படுத்தினான். அவளும் அமைதியடைந்து விட்டாள். 

வீட்டை நெருங்கும் நேரம், “நம்ம ரெண்டு பேர் தவிர யாருக்கும் தெரியாது” என மட்டும் சொன்னான். 

“ம்… இனியும் தெரிய வேணாம்” 

“ஏன் தெரிய போகுது? ஆனா தெரிஞ்சா அப்படி என்ன ஆகிடும்னு இவ்ளோ பயப்படற நீ?” 

“பயம்தான்”

“அதான் ஏன்?”

“உன் விருப்பம் அத்தைக்கு தெரிஞ்சா போதும், உடனே என் அம்மாகிட்ட பேசுவாங்க. அம்மா மாமாகிட்ட பேசுவாங்க. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாரும் என்னை ஃபோர்ஸ் பண்ணினா என்னால எப்படி மறுக்க முடியும்?” எனக் கேட்டாள். 

வீட்டின் முன் காரை நிறுத்தியவன், “இப்ப என்ன சொல்ல வர்ற நீ? உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் போட்டு தர்றியா எனக்கு?”  நக்கலாக கேட்டான். 

அதிர்ந்து பார்த்தவள், “நீ அப்படிலாம் செய்ய மாட்டேன்னு நம்புறேன்” என்றாள். 

வில்லங்கமாக சிரித்தவன், “நம்பு நம்பு, அந்த நம்பிக்கையை மட்டும் விட்ராத” என்றான். 

“அபூ!”

“வந்த வேலைய மட்டும் பாரு, தேவையில்லாம கன்ஃப்யூஸ் ஆகிக்காத. என்னை தெரியாதா உனக்கு?” அவனது பேச்சு அவளை என்னவோ செய்தது. 

அமராவதி காரின் அருகிலேயே வரவேற்பாக வந்து நிற்க அபுவிடம் மேலும் பேச முடியாமல் இறங்கிக் கொண்டாள் ஆரா. 

“நீயும் வாயேன் டா” என மகனை அழைத்தார் அமராவதி. 

“இல்லம்மா, இவளை கவனி, நைட் வர்றேன்” என அம்மாவிடம் சொன்னவன் ஆராதனாவை பார்த்து பிரத்யேகமான புன்னகை செய்து இரு கண்களையும் சிமிட்டி விடை பெற்றான். 

Advertisement