Advertisement

அபூவின் ஆரா 

அத்தியாயம் -1

“அபு டேய் அபூ!” சாரங்கனின் காட்டு கத்தலுக்கு கூட அசைந்து கொடுக்காமல் கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் அவரது மகன் அபு என்கிற அபூர்வன். 

“அவன்தான் ஃபோன்ல பேசிட்டு இருக்கானே, பேசி முடிச்சதும் நீங்க பேசுங்க” என்ற அமராவதி, தன் மகனை கணவர் சிறிது நேரம் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கும் பொருட்டு அவரது கையில் காபி குவளையை திணித்து விட்டு சென்றார். 

தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் மானேஜராக பணி புரியும் சாரங்கனின் கையில் மணக்க மணக்க முதல் ஃபில்டரில் இறங்கிய டிக்காஷனில் போட்ட டிகிரி காபி இருந்தது. திருமணம் ஆனதிலிருந்து மனைவியின் இந்த காபிக்கு அவர் அடிமை. 

காபிக்கொட்டையை வறுத்து அரைத்து அதில்தான் அமராவதி காபி போடுவார். துளி துளியாக அவர் காபியை ரசித்து குடிக்க கடைக்கண்ணால் அப்பாவை பார்த்த அபுவுக்கு மெல்லிய சிரிப்பு. 

அவர் காபியை காலி செய்யும் முன் அவர் பக்கத்தில் வந்தமர்ந்த அபு, “எதுக்கும் அடிமையா இருக்கிறது நல்லதுக்கு இல்லப்பா” என்றான்.

அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவர் பதில் சொல்லாமல் கடைசி வாய் காபியையும் கண்ணை மூடிக் கொண்டு தொண்டையில் இறக்கினார். 

சாரங்கன் இத்தனை ரசித்து குடிக்கும் காபியை அபு அருந்துவதில்லை. அரை ஸ்பூன் சர்க்கரை கலந்த பால்தான் அருந்துவான். அதுவும் அடிக்கடி இல்லை, காலையும் இரவும் மட்டுமே. உடல் நலனை சீரும் சிறப்புமாக பேணும் வாலிபன். 

வீட்டின் அருகில் உள்ள மைதானத்திற்கு தினமும் காலை நேரம் கால் பந்து விளையாட சென்று விடுவான். விளையாட என்றே சிலர் ஒரு குழுவாக இருக்கின்றனர். மழை நாட்கள் தவிர ஞாயிற்று கிழமை காலையில் கூட தவறாமல் விளையாடுவார்கள். கடந்த சில வருடங்களாக இதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதன் காரணமாக அபுவின் உடல் கட்டுக் கோப்பாக இருக்கும். 

“என்னப்பா எம்பேரை அத்தனை முறை ஏலம் விட்டுட்டு இப்போ அமைதியா இருக்கீங்க, என்ன சொல்ல வந்தோம்னு மறந்து போச்சா? சரி நீங்க யோசிச்சு வையுங்க, எனக்கு வேலை இருக்கு” என சொல்லிக் கொண்டே எழப் போனான் அபு. 

மகனின் கையை பிடித்து எழ விடாமல் செய்தவர், “ரெண்டு நிமிஷம் பொறுக்க முடியாதா உனக்கு?” எனக் கோவப்பட்டார்.

“நீங்கதான் ஒண்ணும் சொல்லாம வெறுப்பேத்துனீங்க” என்றான். 

“அரை மணி நேரமா உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேன், வந்து பேசிட்டு அப்புறமா உன் போன்ல பேசினா என்னடா?” 

“முத முறை கூப்பிட்டப்பவே அரை மணி நேரம் ஆகும்னு சொன்னேன்ல ப்பா. கிளைண்ட் கால், அப்படிலாம் கட் பண்ணிட்டு வர முடியாது” என்றான். 

“பெரிய கிளைண்ட்!” 

“ம்ம்… பெரிய கிளைண்ட்தான், நீங்க சொல்ல வந்தத சொல்லுங்கப்பா” 

உடனே முகத்தை மென்மையாக மாற்றிக் கொண்டவர், “ஆராதனா வர்றாடா சென்னைக்கு. நாளைக்கு பதினோரு மணி போல ஏர்போர்ட் வந்திடுவா. நாளைக்குன்னு பார்த்து என்னால பேங்க் விட்டு நகர முடியாத படி வேலை. நீ போய் ரிசீவ் பண்ணி அழைச்சிட்டு வந்திடு” என்றார். 

அவள் வருகிறாள் என்பதில் உள்ளுக்குள் மகிழ்வாக இருந்த போதிலும் இதுவரைக்கும் அவள் மீதிருந்த கோவமும் எட்டிப் பார்க்க, முகத்தை கர்ண கொடூரமாக மாற்றிக் கொண்ட அபு, “இவ்ளோ நாள் இல்லாம இப்போ திடீர்னு அவளுக்கு இங்க என்ன வேலை?” எனக் கேட்டான். 

“எதுவும் வேலை இருந்தாதான் அவ இங்க வரணுமா? நம்ம ஆரா டா”

“நம்ம ஆரா!” கோவமும் கிண்டலுமாக சொல்லியவன், “எத்தனை முறையோ நான் கூப்பிட்டும் பத்து மாசமா எட்டிக் கூட பார்க்கலைதானே அவ? எதுவும் வேலை இருக்க போய்தான் வர்றா” என்றான். 

“நீ கூப்பிட்டதும் வந்து குதிக்க சும்மாவா இருக்கா? படிக்கிற பொண்ணுடா அவ, எப்ப முடியுமோ அப்பதான் வருவா” 

“அவளுக்கு லீவ் இருந்தப்பதான் வர சொன்னேன். ஒரு வேலையும் இல்லாம வேணும்னே வரலை”

“அட போடா! ஏதாவது கற்பனையா பேசிக்கிட்டு… எப்படியோ இப்ப வர்றாதானே? நீ கூப்பிட போ”

“அவளுக்கு இங்க வீடு வர வழி தெரியாதா? நான் போக முடியாது. டாக்சி பிடிச்சிட்டு வர சொல்லுங்க” என்றான். 

மகனின் தோளில் தட்டியவர், “அது நல்லா இருக்குமாடா? எனக்கு முக்கியமான வேலையா போச்சு, இல்லன்னா உன்கிட்ட போய் கெஞ்சிட்டு இருப்பேனா? நீ போற” என்றார். 

இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டே வந்த அமராவதி, “அவளை பார்த்து எவ்ளோ மாசமாகிடுச்சு, நீ போய் கூட்டிட்டு வாடா” என நயமாக மகனிடம் சொன்னார். 

“ஆ ஊ ன்னா ஷோபனா அத்தைகிட்ட வீடியோ கால்ல பேசுறதானே நீ? அப்பல்லாம் அவகிட்டேயும்தான் கொஞ்சி குலாவுற. சும்மா பார்த்து எவ்ளோ நாளாச்சுன்னு சோக டயலாக் பேசாத” கடுப்பாக சொன்னான் அபு. 

“என்ன இருந்தாலும் நேர்ல பார்க்கிறது போல ஆகுமாடா?” அம்மா பாவமாக கேட்க, “இவன்கிட்ட ஏன் டி கெஞ்சனும்? உனக்கு கேப் புக் பண்ணி தர்றேன், நீ போ ஏர்போர்ட்டுக்கு. ஹ்ம்ம்… சொல் பேச்சு கேட்குற மாதிரி இன்னொரு புள்ள பொறந்திருக்கலாம், என்னவோ நமக்கு கடவுள் கிருபை கிடைக்கல” என்றார் அப்பா. 

அபூர்வன் அவர்களுக்கு ஒரே மகன். அதீத செல்லம் இல்லா விட்டாலும் கண்டிப்பும் கிடையாது. இவனும் அதிக அடம் பிடிக்கும் ரகம் இல்லை, அனாவசிய கெட்ட சேர்க்கை இல்லை, தீய பழக்கங்கள் அறவே இல்லை என்பதால் அவர்களுக்கு மகனை பற்றிய கவலைகள் இல்லை. 

படிப்பில் ஆஹா ஓஹோ பேர்வழி இல்லை என்றாலும் அரியர்ஸ் இல்லாமல் தேர்ச்சி பெற்று விடுவான். ஆனால் நினைத்ததை என்ன செய்தாவது  நடத்திக் கொண்டு விடும் சாதுர்யம் உள்ளவன். 

பொறியியல் படித்திருப்பவன் ஒரு எம் என் சி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறான். தந்தை மகன் உறவுக்குள் கூட சிக்கலாக எதுவும் இருந்ததில்லை. நண்பர்கள் போலதான் பழகுவார்கள். ஆனால் ஆராதனா என வந்து விட்டால் சாரங்கன் மகனை கூட பெரிதாக நினைக்க மாட்டார். உயிர் நண்பனின் மகள் மீது அவருக்கு அலாதி பிரியம். 

“உங்களை நானா இன்னொரு புள்ள பெத்துக்க வேணாம்னு சொன்னேன்?” ஆற்றாமையாக கேட்டான் அபு. 

“அதான் கடவுள் அருள் இல்லேன்னு சொல்லிட்டேனே” என்றார் சாரங்கன். 

“சும்மா இருங்க, அவர் ஆசி இல்லாமதான் நம்ம புள்ள பொறந்தானாக்கும், இவன் பொறந்த பிறகுதான் பேங்க்ல மேல மேல நல்ல பொஷிஷனுக்கு போனீங்க” கணவரை அடக்கிய அமராவதி, மகனை பார்த்து, “ப்ளீஸ் டா” என கெஞ்சினார். 

“போறேன், இவர் சொன்னதுக்காக இல்ல, உனக்காக போறேன் மா” என ஒரு வழியாக ஒத்துக் கொண்டான் அபு. 

அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான் அபூர்வன். டெல்லியிலிருந்து வரும் விமானம் அங்கு நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக தாமதமாக வருவதாக அறிவிப்பு வந்தது. 

‘லேட்னு அங்கேயே தெரியாதா அவளுக்கு, ஒரு மெசேஜ் பண்ணி தொலைக்கிறதுக்கு என்ன?’ அபுவுக்கு கோவம் வந்தது. 

இந்த நேரம் என குறிப்பிட்ட நேரத்துக்குள் இவனுக்கு அலுவலகம் செல்ல வேண்டிய தேவையில்லை, பனிரெண்டு மணிக்குள் சென்று விட்டால் போதும், கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் அதுதான் அங்கு கருத்தில் கொள்ளப் படும். ஆகவே இவளை வீட்டில் விட்டு மெதுவாக அலுவலகம் செல்ல எண்ணியிருந்தான். இப்போது அரை நாள் விடுப்பு எடுத்தாக வேண்டும் போல தோன்ற இன்னும் இன்னும் எரிச்சல் வந்தது. 

காத்திருக்கையில் அவளை பற்றிய நினைவுகள் அவனை சுற்றி வந்தன. எப்போதிலிருந்து அவனுக்கு அவளை தெரியும் என்றால் அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எனதான் சொல்வான். அவனை விட ஐந்து வயது சின்னவள். சிறு வயதில் அவனுடைய விளையாட்டு பொம்மையே அவள்தான். 

பள்ளி முடித்து வந்த பின் வீட்டு பாடங்களை விரைவாக செய்து விட்டு அம்மாவை நச்சரித்து அவளது வீடு சென்ற நினைவு வர தானாக சிரிப்பு உதயமாகியது. விடுமுறை நாட்களில் அவளது வீட்டில்தான் கதியாக கிடப்பான்.

 கைகுழந்தையாக இருக்கும் ஆராவை அவளது அம்மாவோ பாட்டியோ குளிக்க வைத்து வர இவன்தான் அவளுக்கு ஆடை மாற்றி பவுடர் போட்டு மை வைத்து விடுவான். அவனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு அது. 

வளர்ந்த பிறகு கூட அவளுக்கு ரெட்டைக் குடுமிகள் இவன்தான் போடுவேன் என சொல்லி ஏனோ தானோ என போட்டு விடுவான். அவனிடம் தலையை கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்திருப்பாள் ஆரா. 

இவனது வீட்டின் பின் பக்கத்தில் மாமரம் ஒன்று உள்ளது. அதில் அமரும் படி சிறிதாக ஊஞ்சல் ஒன்றை கட்டி வைத்தார் சாரங்கன். அதில் விளையாடுவது என்றால் ஆராவுக்கு கொள்ளை பிரியம். 

Advertisement