Advertisement

 

அத்தியாயம் – 11

இரண்டு நாட்கள் கடந்திருக்கும் பிரேம் வீட்டிற்கு வந்து… அன்று கீதா பரத்தை அழைத்துக் கொண்டு வயல்வெளிக்கு சென்றிருந்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் பசுமை. காற்றில் அலையலையாய் அசைந்தாடும் நெற்பயிரைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. சற்று தொலைவில் சில பெண்கள் கடலைச் செடியை பிடுங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் தானும் அந்தச் செடியைப் பிடுங்கும் ஆசையில் முயற்சி செய்த பரத் முடியாமல் போகவே இவளிடம் வந்து அழுதான்.

அவன் அழுவதைக் கண்டு வேலை செய்து கொண்டிருந்த ஒருபெண் சில கடலைகளை எடுத்து அவனிடம் கொடுக்க¸ வேண்டாமென்று மறுத்தவன் கீதாவிடம் “நீங்க பிடுங்கித் தாங்க ஆன்ட்டி…” என்றான் அழுகையுடனே.

அவள் மிகவும் சிரமப்பட்டு ஒன்றை இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது… செடியைப் பிடித்திருந்த அவளது கரங்களையும் சேர்த்துப் பிடித்து இழுத்தன இரு கரங்கள் – பிரேமின் கரங்கள்.

மூச்சடைக்க இழுத்துப் பிடித்து முயற்சித்துக் கொண்டிருந்தவள் அவன் எளிதாகப் பிடுங்கிவிடவும்… தான் விழுவது மட்டுமில்லாமல் அவனையும் சேர்த்து கீழே விழச் செய்தாள். சிறுவனும் மற்ற தொழிலாளர்களும் இவர்கள் விழுந்ததைப் பார்த்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

வந்தவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்காதவள் எப்படி எழுவது என்று பார்த்துக் கொண்டிருக்க… தன்மேல் விழுந்து கிடப்பவளின் இடையைச் சுற்றி கரங்களைக் கட்டிக் கொண்டு அவள் எழுந்துவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

ஒருவருக்கொருவர் இவர்கள் விழுந்ததையே சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்ததால், மற்றவர்கள் இவர்களைக் கவனிக்கவில்லை.

“யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்…? என்னை விடுங்கள்..” என்று மெதுவாக சொன்னாள் அவள்.

சொன்னவளின் முகத்தை சற்று எம்பிப் பார்த்தவன்… அதிலிருந்த வெட்கச் சிவப்பைக் கண்டு “ம்கூம்…” என்று மறுத்தான்.

“ம்ப்ச்.. விடுங்க பிரேம், பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க…” எனவும் “ம்… இப்போ நீ என் பெயரைச் சொன்னதுக்காக உன்னை விடுறேன்” என்று அவளை வளைத்திருந்த தன் கைகளை விலக்கினான்.

அவள் எழுந்ததும் அவளையே பார்த்தவாறு தானும் தரையில் ஒரு கையை ஊன்றி எழுந்தான் பிரேம்.

எழுவதற்காக முயன்றவனின் உள்ளங்கையைப் பதம் பார்த்தது… உரம் போடும் சமயத்தில் பாதி மண்ணிற்குள் மூழ்கிவிட்டிருந்த சிறிய கம்புக் குச்சி.

எழுந்ததும் அவன் வலியில் “ஸ்…!” எனவும் அவனைத் திரும்பிப் பார்த்தபோது¸ தன் கையிலிருந்த குச்சியை மெதுவாக உருவிக் கொண்டிருந்தான் அவன்.

“என்னாச்சு பிரேம்?” என்று அவனருகில் சென்று கையைப் பார்த்தவள்¸ “ஐயோ..! கம்பு குத்திவிட்டதே!” என்றவள், அவன் கையைப் பிடித்து குச்சியை சட்டென்று எடுத்துவிடவும் ரத்தம் வேகமாக வெளியேறியது.

“ஐயோ… ரத்தம்..! யாராவது சீக்கிரம் போய் தண்ணீர் கொண்டுவாங்களேன்” என்றவள்¸ அவன் கையை மென்மையாக ஊதியவாறே வருடிக் கொண்டிருந்தாள்.

அவளது கைகள் நடுங்குவதைக் கண்டவன் “கீதா… இது ரொம்ப சின்ன காயம்தான். வா…, வீட்டுக்குப் போய் மருந்து போடலாம்” என்றழைத்தான்.

“இது சின்ன காயமா..? எவ்வளவு ரத்தம் வருது…!” என்று பேசிக் கொண்டிருந்தவள் திடீரென அவன்மேல் சரிந்தாள்.

அனைவரும் பதற “கீதா…!” என்று அவளை தாங்கிப் பிடித்தவன்¸ தரையில் அமர்ந்து அவளைத் தன் மடியில் கிடத்தினான்.

அந்த நேரத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த பெண்மணியும் வந்துசேர “ஐயா! இந்தம்மாவுக்கு என்னாச்சு?” என்று கேட்டவளை மயங்கிக் கிடந்தவளின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கும்படி கூறினான்.

நீர் முகத்தில் பட்டு விழித்தவள் மீண்டும் அவனது கையைப் பார்க்க முயன்றாள். அது பின்புறமாக மடக்கப்பட்டிருந்தது.

“என்னாச்சு கீதா உனக்கு? ஏன் திடீர்ன்னு விழுந்துட்டே…?”

“அது…”

“சொல்லும்மா… என்னாச்சு உனக்கு? வெயிலில் நின்றது உடம்புக்கு என்னவும் செய்கிறதா?” என்றான் பரிவாக.

“அதெல்லாம் இல்லை…” என்றவள் சற்று தயங்கி “சாரி பிரேம்… நான் ரத்தத்தைப் பார்த்தால்… இப்படித்தான் சில சமயம் விழுந்துடுவேன்” என்று காரணத்தைச் சொல்லிவிட்டு அவனது கரத்தைக் காட்டுமாறு கூறினாள்.

“வேண்டாம்மா… தாயே! நீ என் கையை பார்க்கவும் வேண்டாம்… பார்த்துட்டு இப்படி மயங்கி விழவும் வேண்டாம்” என்று கேலி செய்து சிரித்தான்.

“இல்லை.. நான் மறுபடியும் விழமாட்டேன்¸ காட்டுங்க…” என்றாள்.

“உண்மையாகவே விழுந்துவிட மாட்டாயே..?” என்று உறுதிபடுத்திக் கொண்டவன் கையை முன்புறமாகக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவன் கையைச் சுற்றி கட்டுப் போட்டவள் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். காரிலிருந்து அவன் இறங்கும் முன்பாகவே இறங்கிச் சென்றவள் வாசலிலிருந்து “அத்தை!” என்று அழைத்துக் கொண்டே போக “யாருடி அவ? என் அத்தையை உரிமையா கூப்டிட்டு வர்றது?” என்று திமிராகக் கேட்டவாறே வெளியே வந்தாள் ஒரு பெண்.

தான் வேலையில் சேர்ந்த இத்தனை நாட்களில் அந்தப் பெண்ணை கண்டிராத கீதா சற்று தயங்கினாள். ஆனால் அந்த சில நொடி தாமதத்திற்குள் பிரேமின் கைக்காயம் நினைவு வர, வந்தவளைப் புறக்கணித்துவிட்டு யமுனாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சென்றவளை நோக்கி நெருப்பைக் கக்கும் பார்வையை வீசினாள் புதியவள்.

‘யார் இவள்? இங்கே என்ன செய்கிறாள்? ஏன் இப்படி ஓடுகிறாள்?’ என்று அறிவதற்காக இவள் உள்ளே செல்ல¸ அதற்குள் வெளியே ஓடினாள் கீதா.

எதிரே வந்த யமுனாவிடம் “அத்தை அந்தப் பொண்ணு ஏன் அவ்வளவு வேகமாக வந்தாள்?” என்று கேட்டாள்.

மகனுக்கு கையில் ஏதோ காயம் என்ற பதற்றத்திலிருந்த போதும் “விஜயா.. பிரேமிற்கு கையில் கம்பு குத்தி கை மணிக்கட்டில் வீங்கியிருக்கிறதாம்” என்று பதிலளித்தவாறே ஹாலிற்கு வர¸ பிரேமும் கீதாவுடன் வந்திருந்தான்.

அவனது உள்ளங்கையில் உறைந்திருந்த ரத்தத்தைப் பார்த்த தாயாரும் “என்னப்பா இவ்ளோ ரத்தம் வந்திருக்கு..!” என்று பதறினார்.

தாயாரிடம் “அம்மா இது சின்ன காயம்தான்¸ பயப்படாதீங்க…” என்று அமைதிப்படுத்தியவனது கையை முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த கீதா பிடித்தாள்.

அவளது கைகளை மிருதுவாக விலக்கியவன்¸ தாயாரைப் பார்த்து “அம்மா அவளுக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வந்துடும். அதனால் நீங்களே கழுவி மருந்து வைங்க…” என்றான்.

அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயா “நான் செய்றேன் அத்தான்” என்று வர¸ கீதா அங்கிருந்து விலகிச் சென்றாள்.

டெட்டாலால் காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டு கட்டும்போது… தூரத்திலிருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளால், அவனது முகச்சுளிப்பிலிருந்தே அவனது வலியை உணர முடிந்தது.

கட்டுப் போட்டு முடித்ததும் அவர்களருகில் சென்ற கீதா “அத்தை.. அவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போங்களேன்… கை ரொம்பவும் வீங்கிவிட்டது…” என்றாள்.

அவளைப் பார்த்து முறைத்த விஜயா “எங்க அத்தானை பார்த்துக்க எங்களுக்குத் தெரியும். நீ உன் வேலையை மட்டும் பாரு…” என்றாள் வெட்டுவதுபோல.

முகம் வாடியவளிடம் “நீ போம்மா… போய் குளிச்சிட்டு துணியை மாத்து¸ உன் துணியிலும் ரத்தம் பட்டிருக்குது பார்… நீ வருவதற்குள் நாங்க ஹாஸ்பிட்டலுக்கு பொய்ட்டு வந்திடுறோம்…” என்றார் அவள் மனம் வாடிவிடாதபடி.

புன்னகையுடன் சரி என்பதுபோல் தலையாட்டியவள் உள்ளே போகத் திரும்பியபோது நினைவு வந்தவளாக “பரத்..! அத்தை பரத்…  பரத் என்கூட வயலுக்கு வந்திருந்தான். அவனை அங்கேயே மறந்து விட்டுவிட்டு வந்துட்டேன்…” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த பிரேமின் கண்கள் பளபளத்ததை அவள் அறியவில்லை. அவள் யமுனாவைப் பார்த்துக் கொண்டிருக்க¸ மல்லியை அழைத்தவன் “பரத் வயலில் இருப்பான்… போய் அவனை அழைச்சிட்டு வந்துவிடு” என்றான்.

கீதாவிற்கு தன்மீதே எரிச்சலாக வந்தது. அவளால் நேர்ந்த பிழையல்லவா…! அழைத்துச் சென்ற சிறுவனை இவனுக்கு சிறுகாயம் பட்டதும் மறந்துவிட்டாளே…!

பிரேமிற்கு நன்றி தெரிவித்துவிட்டு தன்னறைக்குச் சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும் “அவள் ஏன் உங்களை அத்தைன்னு கூப்பிடுறா?” என்று யமுனாவிடம் கேட்டாள் வித்யா.

“நான்தான் அப்படி கூப்பிடச் சொன்னேன்…”

“ஏன் சொன்னீங்க?”

“என்னை சித்தி¸ பெரியம்மா என்றெல்லாம் அழைக்க நிறைய சொந்தம் இருக்கு. அத்தை என்று அழைக்கத்தான் அண்ணன்¸ தம்பி பிள்ளைகளோ… அவருக்கு அக்கா¸ தங்கை பிள்ளைகளோ இல்லை. அதனால்தான் கூப்பிடச் சொன்னேன்” என்றார் அவர்.

“நான் இருக்கிறேனே அத்தை… உங்களை ஆயுள் முழுவதும் அத்தை என்று அழைப்பதற்கு…” என்றான் அவள் உள்ளர்த்தத்துடன்.

புரிந்து கொள்ளாததுபோல “நீ எப்போதாவது வருவாய்… ஆனால் கீதா அப்படியில்லை தொடர்ந்து இங்கேயே இருப்பா” என்று சொன்னவரிடம்¸ மீண்டும் அவள் ஏதோ சொல்ல முயல…

பேச்சு நீண்டு செல்வதை விரும்பாத பிரேம் இருவரது கவனத்தையும் கலைக்கும் விதமாக “அம்மா கை வலிக்குது…!” என்றான். தாயாரின் கவனம் தன்னிடம் திரும்பியதும் “வாங்க… ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து நிதானமா பேசலாம்…” என்று அழைத்துச் சென்றான்.

‘வந்த கொஞ்ச நாளிலே யமுனாவை அத்தை என்று அழைப்பவள்¸ பிரேமை மட்டும் எப்படி விடுவாள்? ம்கூம்… கூடவே கூடாது. அப்படி எதுவும் நடக்க நான் விடமாட்டேன்’

பின்னோடு சென்று அவர்கள் போவதைப் பார்த்தவள், தன் வீட்டிற்கு போன் செய்து இங்குள்ள விபரம் தெரிவித்தாள். தனக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வருமாறு தந்தையிடம் கூறிவிட்டு நிம்மதியாக உள்ளே சென்றாள்.

மருத்துவமனையிலிருந்து தாயும் மகனும் திரும்பி வந்ததும்¸ விஜயா தான் அங்கு சிலநாட்கள் தங்கப் போவதாகக் கூறினாள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள் “சரி…” என்று ஒருசேரக் கூறினர்.

இரவு சாப்பிட்டிற்குப் பின் முன்னறையில் அமர்ந்து பரத்திற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கீதா. அவளை அழைத்த யமுனா “உங்க மாமாவுக்கு போன் செய்து எப்போது வருவார் என்று கேளும்மா…” என்றார்.

அந்தப் பணியை அவள் முடித்து “மாமா கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்களாம்…” என்று சொன்னதும்¸ தான் கையில் வைத்திருந்த மாத்திரைகளை கீதாவின் கையில் கொடுத்தவர் “இந்த மாத்திரையை பிரேமிற்கு கொடுத்துட்டு வாம்மா… சாப்பாடு கொடுத்தபோது இதை குடுக்க மறந்துட்டேன். நான் போகலாம் என்றால் எனக்கு கால் வலிக்கிறது… படியேறினால் அதிகமாகிவிடும்…” என்று அவள் மறுத்துவிடாதபடி காரணத்தைக் கூறினார்.

“சரி அத்தை…” என்று சொன்னவள் போகாமல் அப்படியே நிற்க… பரத்திடம் “வாடா குட்டி… நாம போய் தூங்கலாம். தாத்தா இப்போ வந்திடுவாங்க…” என்று சிறுவனையும் அழைத்துக் கொண்டு தங்களறைக்குச் சென்றுவிட்டார் யமுனா.

‘மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது இந்த நேரத்துல போய் அவனறைக்குப் போக வேண்டுமா…? இந்த அத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே நாஞ்சில்நாதன் வந்துவிட்டார்.

ஹாலில் நின்று கொண்டிருந்தவளைக் கண்டு “என்னம்மா… நீ இன்னும் தூங்கப் போகலையா?” என்று கேட்க¸ அவள் பிரேமிற்க்கு மாத்திரை கொடுக்க வேண்டியிருப்பதைக் கூறினாள்.

“சரிம்மா.. சீக்கிரம் போய் குடுத்துடு… தூங்கிடப்போறான்” என்றவர் தானும் அறைக்குள் புகுந்துகொண்டார்.

தயங்கித் தயங்கியே படியேறினாள் கீதா.

மருத்துவமனை சென்று வந்த பின்னர் அவனைப் பார்க்கவில்லை… சாப்பிடுவதற்காவது வருவான் என்று நினைத்திருந்தாள் அவள். ஆனால் அவனை அலைக்கழிக்க விரும்பாத யமுனா இருவேளை உணவையும் அவன் அறைக்கே அனுப்பி வைத்துவிட்டார்.

Advertisement