“ஆமா..¸ நானேதான்” என்று அவளை உள்ளேத் தள்ளி அவளது கையைச் சுற்றியிருந்த கட்டை அவிழ்த்ததுதான் தாமதம்… கல்லூரியில் தான் பயின்ற கராத்தே நினைவு வர ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்.
நிலை தடுமாறி கீழே விழுந்தவனைப் பார்த்துவிட்டு ஓடிச் சென்று டேபிள் மீதிருந்த மலர் குவளையை எடுத்துவந்து அவன் தலையில் அடித்தாள்.
“ஆ…!” என்ற அலறல் சத்தம் கேட்டு உள்ளே ஓடிவந்தான் பழனி.
“ஏய்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் ப்ரண்டை அடிச்சிருப்பே?” என்று அவளை நெருங்கினான் அவன்.
தன்னை நோக்கி வந்தவனை அடிக்க… அவள் தன் கையை வீச… அதைத் தடுத்து அவளது கன்னத்தில் அறைந்தான் அவன். அடியை வாங்கியவள் மயங்கி கீழே விழுந்தாள்.
நண்பனிடம் திரும்பியவன் “ரொம்ப வலிக்குதாடா…? ஹாஸ்பிட்டலுக்கு போவோமா..?” என்று கேட்டான்.
கீதாவிடம் அடிவாங்கியதால் முன்னிலும் அதிக வெறி கொண்டிருந்தவன் “நீ அவளைத் தூக்கி அந்த ரூம்ல போடுடா… அவளை நாசமாக்காமல் நான் இந்த இடத்தைவிட்டு கிளம்பமாட்டேன். சீக்கிரம் செய்… நான் வர்றேன்…” என்று நண்பனை துரிதப்படுத்தினான்.
பழனி அவளைத் தூக்கவும் பிரேம் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
பிரேமைக் கண்டதும் அவனை அடிக்க வந்த ஜெபின்¸ அவனது உடல்வலிமைக்கு முன்னால் தோற்றுப்போய் அடிவாங்கினான்.
“சார்…! இவ உங்களுக்கு உயிரோடு வேணுன்னா என் ப்ரண்டை விடுங்க…” என்றான் பழனி.
“டேய்.. வேண்டாம்! அவளை கீழே விடு…”
“முடியாது… மொதல்ல அவனை விடுங்க” என்றவன் கையிலிருந்தவளைக் கீழே கிடத்திவிட்டு உடைந்து கிடந்த குவளையின் துண்டு ஒன்றை எடுத்து அவளைக் குத்துவதற்காக கையை ஓங்கினான்.
அவன் அதை கீதாவின் கழுத்தருகில் கொண்டு செல்ல… அதேசமயம் துப்பாக்கி சுடும் சத்தம் வெகு அருகில் கேட்டதும் பயந்தவன்¸ தன் கையிலிருந்த கண்ணாடித் துண்டை கீழே போட்டான்.
வந்துவிட்ட போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ய பிரேம் கீதாவிடம் ஓடினான்.
“கீதா…!” என்று அவளது கன்னத்தைத் தட்டி எழுப்பியவன்… அவள் எழவில்லை என்றதும் காரிலிருந்த தண்ணீரை கொண்டு வரச் செய்து தெளித்தான்.
முகத்தில் நீர்த்திவலைகள் பட்டதும் பயத்துடனே விழித்துப் பார்த்தவள்… அவனைக் கண்டதும் “பிரேம்!” என்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.
“கீதா… ஒன்னு இல்லைடா… இங்கே பாரு… உனக்கு ஒன்னும் ஆகலை பயப்படாதே..!” என்று அவளது முதுகை வருடி ஆறுதல்படுத்தினான்.
பதற்றம் குறைந்து சூழ்நிலையை உணர்ந்தவள் அவனைவிட்டு விலகினாள்.
அணைப்பிலிருந்து விடுபடப் போனவளை இழுத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான் அவன்.
போலீஸை அனுப்பிவிட்டு உள்ளே வந்த கண்ணன்¸ தன் வரவை தெரிவிக்கும் பொருட்டு “ம்க்கும்…” என்று தொண்டையை செருமினான். கண்ணனின் குரலில் கலைந்து அவளை விலக்கிவிட்டு எழுந்தவன் அவளும் எழ கைகொடுத்தான்.
கண்ணனைப் பார்த்ததும் “அண்ணா! நீங்க எப்படி இங்கே வந்தீங்க?” என்று அவனைக் கட்டிக் கொண்டு சற்று நேரம் அழுதாள்.
அழுது முடித்து நிமிர்ந்தவளிடம் கண்ணன் கேட்டான் “உன்னால எப்படி கீதா எங்களைவிட்டு வர முடிந்தது? அதுவும் அப்படி ஒரு லெட்டரை எழுதி வைச்சிட்டு…?” என்று.
‘அதை எழுத அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று அவளுக்குத்தானே தெரியும்…’
‘அன்புள்ள என்று எழுதுவதைவிட அன்புள்ளது போல் நடித்த கண்ணனுக்கும்¸ உன் மனைவிக்கும் என்று தொடங்கி… என்னை நீங்கள் சும்மா சும்மா தண்டச்சோறு என்று திட்டுகிறீர்கள். ஆனால்… அதே சமயம் சீர் செனத்தியோடு திருமணம் செய்து வைப்பதாகவும் சொல்கிறீர்கள். இது எனக்குப் புரியவில்லை… ஒரு தண்டச்சோற்றுக்கு சீர் செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு தண்டம் அழ வேண்டும் தெரியுமா? அந்தத் தேவை எதுவும் இல்லாமல் என் சாப்பாட்டுக்குத் தேவையானதை என்னால் சுயமாகவே சம்பாதித்து சாப்பிட முடியும். உடன்பிறந்த தங்கை தண்டச்சோறாகிப் போனது போல பெற்ற தாயையும்… அப்படிச் சொல்லி மனதை வருந்த வைத்துவிடாதே..!
இப்படிக்கு¸ கீதா
என்று முடித்திருந்தாள்.
“உனக்குத் தெரியாது கீதா… உன் மதனி ரொம்ப நல்லவள். நான்தான் என் தங்கை கல்யாணப் பேச்செடுத்தாலே வேண்டாம் சொல்கிறாள் என்று வருத்தப்பட்டேன். அதற்கு அவள்தான் நீங்களிருவரும் மாறி மாறி அன்பைக் காட்டினால்¸ உங்க தங்கை எப்படி இன்னொரு வீட்டிற்குப் போய் வாழ முயற்சி செய்வாள் என்று சொன்னாள். அதனால்தான் உன்னிடம் அப்படி நடந்து கொண்டேன்”
“அப்போவாவது இந்த வீட்டிலிருப்பதைவிட திருமணம் செய்து கணவன் வீடு போய்விடலாம் என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதிப்பாய் என்று நினைத்தோமே தவிர… இப்படி எங்களைவிட்டு எங்கேயோ செல்வாய் என்று நினைக்கவில்லை..” என்றான் வருத்தமான குரலில்.
“சாரிண்ணா..! நான் இந்த மாதிரி யோசிக்கலை… என்னை மன்னிச்சிடு..” என்று மன்னிப்பை வேண்டினாள் தமையனிடம்.
“சரி போகட்டும் விடும்மா… நீ இப்படி கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போனாய் என்பது எனக்கும் சித்ராவுக்கும்தான் தெரியும். அம்மாவிடம் நான்தான் உன்னை வெளியே வேலைக்காக அனுப்பி வைத்ததாக சொல்லியிருக்கிறேன்” என்று சொல்லி அவளும் அதையே தொடரும்படி கூறியவன்
“அப்புறம் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா…! ஆறு மாசம் முன்னால பிரேம் வந்து நீ இங்கே இருப்பதாக சொன்ன பிறகுதான் நிம்மதியாக இருந்தது” என்றதும்¸
“நீங்க இதைப்பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லையே..?” என்று பிரேமைப் பார்த்துக் கேட்டாள்.
“சொல்லியிருந்தால் மட்டும் என்ன செய்திருப்பாய்..? அவங்களைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் என்றிருப்பாய்…” என்றான் அவன்.
“ஆமாம்… அந்த நேரத்துல அப்படித்தான் சொல்லிருப்பேன்” என்று அவளும் ஒத்துக் கொண்ட சமயத்தில் ஆண்கள் இருவருடைய செல்போனும் ஒலித்தது.
போனை அட்டென்ட் செய்து “கீதா கிடைத்துவிட்டாள்… அழைத்து வருகிறோம்” என்று சொன்ன இருவரும்… இவளிடம் திரும்பி “போகலாமா மகாராணி..?” என்று கோரசாகக் கேட்டனர்.
“கட்டாயம்…” என்று புன்னகையுடனே அவர்களுடன் நடந்தாள்.
காரில் போகும்போது “விஜயாவை என்ன செய்யச் சொன்னீங்க?” என்று பிரேம் கேட்க¸ “நான் அவளிடம் சொன்னதுபோல… அவளும் எனக்குத் தங்கை போலதான். அதனால் அவள் பெயரை சொல்லவேயில்லை…” என்றான் கண்ணன்.
“கீதா நல்லபடியாகக் கிடைத்துவிட்டதால் பரவாயில்லை… இல்லையென்றால் அவளை நான் சும்மா விட்ருக்க மாட்டேன்” என்று பிரேம் சூளுரைக்க¸ அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவள் “ஏன் விஜயாவைப் பற்றி பேசுறீங்க?” என்று கேட்டாள்.
‘அவள்தான் கடத்தலுக்கு துணைபுரிந்தாள்’ என்று சொல்ல அவளுக்குள்ளும் கோபம்தான் எழுந்தது. அவளது அண்ணன் “அவள் இப்படி செய்வதற்கான காரணம் பிரேம் தனக்குக் கிடைக்காமல் போகப்போவது தான்…” என்று சொல்லவும் சற்று அமைதியானாள்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே இவர்களைக் கண்டு ஓடி வந்த யமுனா கீதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அம்மாடி… நல்லபடியாக வந்துவிட்டாய்!” என்று அவளிடம் பேச ஆரம்பித்துவிடவும்
“பார்த்தியா பிரேம்..¸ உன் அம்மா என்னைக்காவது உன்னை இப்படி ஓடிவந்து வரவேற்றிருப்பாளா..?” என்று கேலி பேசினார் நாதன்.
கணவனை விளையாட்டாக முறைத்துக் கொண்டவர் அப்போதுதான் அவளது கன்னத்தைப் பார்த்தார். “ஐயோ! முகத்தைப் பாருங்களேன்… கைவிரல் பதியுற அளவுக்கு அடிச்சிருக்கான் அந்த சண்டாளன்” என்று கடத்தல்காரனைத் திட்டினார்.
“வலிக்குதாம்மா…?” என்று கேட்க “இல்லை அத்தை… வலி போயே போச்சு…” என்றாள் குதூகலத்துடனே.
“யாரால் வலி போனது..¸ எப்படிப் போனது என்று சொல்லவில்லையே கீதா…?” என்று அவளைச் சீண்டினான் பிரேம்.
செல்லச் சிணுங்கலுடன் திரும்பியவளை… அவ்வளவு நேரமும் சம்பந்தியம்மாள் பேசியதை தடை செய்யவிரும்பாமல் பார்த்திருந்த தாமரை “கீதாக்குட்டி..!” என்று அழைத்தார்.
“அம்மா…!” என்று ஓடிச்சென்று தாயாரை அணைத்துக் கொண்டவள் “எப்படிம்மா இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தாள்.
ஒதுங்கி நின்ற சித்ராவின் கையைப் பிடித்து தன் அருகில் அழைத்து “நீங்க ஏன் இப்படி ஒதுங்கி நிற்குறீங்க மதனி?” என்று கேட்டுக் கொண்டிருந்தவள் அண்ணியாரின் மேடிட்ட வயிற்றைப் பார்த்துவிட்டு “அண்ணா…! குட்டிப் பாப்பா வரப்போவதைப் பற்றி நீ சொல்லவேயில்லை..?” என்று அண்ணனிடம் திரும்பினாள்.
அவன் வெட்கப்பட்டு சிரிக்கவும் “அச்சோ…! இந்த அண்ணன் வெட்கப்பட்டால் பார்க்க சகிக்கலை… மதனி¸ உங்ககிட்ட எப்பவும் இப்படித்தான் வெட்கப்படுவானா?” என்று கேலியில் இறங்கினாள்.
கீதா தன்னை முன்போல மதனி என்றழைத்ததில் மனம் மகிழ்ந்த சித்ரா நன்றாகவே முறுவலித்துவிட்டு நாத்தனாரிடம் மன்னிப்பு கேட்டாள்.
“இல்லை மதனி… நீங்கதான் என்னை மன்னிக்கணும். நான்தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு முட்டாள்தனம் பண்ணிட்டேன்…” என்று அவள் சொல்ல “அதைவிடேன் கீத்தும்மா…” என்றான் கண்ணன்.
“என்ன கீத்தும்மாவா…? மாம்பழக்கீத்துவா… இல்லை பப்பாளிக்கீத்துவா…?” என்று மீண்டும் பிரேம் கேலி செய்ய… செல்லமாக அவனை முறைத்தாள் அவள்.
அவர்களது பேச்சு அதுபோலவே சற்று நேரம் தொடர்ந்தது.
கீதா குளித்து ஆடை மாற்றச் செல்ல… மற்றவர்களும் பயணக் களைப்பு தீர நன்றாகக் குளித்துவிட்டு… மதிய சாப்பாட்டை அனைவரும் ஒன்றாக உண்டனர்.
அதன் பின்னர் பிரேம்¸ கீதாவின் திருமணப் பேச்சு எழுந்தது.
உடனே கீதாவின் முகம் மாறிவிட்டது. அதைக் கவனித்த பிரேம் அவளிடம் சற்று பேசிவிட்டு வருவதாகக் கூறி… அவளை தன்னறைக்கு அழைத்துச் சென்றான்.
“ஏன் கீதா… கல்யாணப் பேச்சை எடுத்தாலே உன் முகம் மாறிவிடுகிறது?” என்று கேட்டான்.
“வந்து… திருமணம் செய்து உங்களுக்கு மனைவியானால் உங்க குடும்பத்திலிருந்து உங்களைப் பிரிக்கும் சுயநலவாதியாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அத்தோடு… இந்த திருமண வாழ்க்கை அதை நினைத்தாலும் பயமாக உள்ளது” என்று தன் பயத்தை அவனிடம் கூறினாள்.
“ஏன்? நான் உன்னிடம் கொடூரமாக நடந்து கொள்வேன் என்று நினைக்கிறாயா?”
“இல்லை…”
“அப்படியானால்… என்னை மணக்கப் பிடிக்கவில்லையா?”
“என்ன..!!!” என்று அதிர்ந்தவள் “நீங்க நினைப்பதுபோல் எதுவும் இல்லை பிரேம்… சின்ன வயதிலிருந்தே டி.வி.யில் பார்த்து கேட்டு¸ பத்திரிக்கைகளில் படித்து என்று… எனக்குள் பதிந்தது. நான் வளர வளர அந்த எண்ணங்களும் பயமும் என்னுடனே வளர்ந்துவிட்டது” என்று தனக்கு பயம் ஏற்பட காரணமானதைக் கூறினாள்.
“அந்த பயத்தைப் போக்க ஏதாவது வழி சொல்லுவீங்கன்னு பார்த்தால்… நீங்க உங்களைப் பிடிக்கலையான்னு கேட்குறீங்க… உங்களைப் பிடிக்கவில்லையென்றால் இங்கு நிற்பேனா?” என்று கேட்டாள்
“ஏய் நெட்டைக் கொக்கு..! இங்கே வா…” என்று தலையசைத்து அழைத்தான்.
அருகில் வந்தவளை அணைத்து தன் நெஞ்சோடு சாய வைத்து “இது உனக்கு பயமாக இருக்கிறதா? பாதுகாப்பாகத் தோன்றுகிறதா?” என்று கேட்டான்.
சிறிது நேரம் கண்மூடி நின்றவள் “பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறது!” என்று தான் உணர்ந்ததை ஆச்சர்யத்துடனே கூறி “எப்படி?” என்று அவனைக் கேட்டாள்.
“அது அப்படித்தான்…” என்றவன் “உனக்காக நான் இப்போ ஒரு பிராமிஸ் பண்றேன்… நம் திருமணத்திற்குப் பிறகு நல்ல நண்பர்களாக இருப்போம். எப்போ உனக்கு இந்த பயம் வரவில்லையோ.. அப்போ நம் திருமண வாழ்க்கையை வாழலாம்… சரியா..?” என்று கேட்டு அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்.
“சரிங்க ‘பனைமரம்’” என்று சிரித்தாள் அவள்.
அணைப்பிலிருந்தவளை விலக்கி “என்ன..! நான் பனைமரமா?” என்று கேட்க¸ “பின்னே நான் மட்டும் நெட்டைக் கொக்கா?” என்றாள் அவள்.
“அம்மா… தாயே! தெரியாமல் சொல்லிட்டேன்” என்று பின்வாங்கிக் கொண்டான் அவன்.
“ம்… அந்த பயம் இருக்கட்டும்” என்று அறையை விட்டு வெளியேற பின்தொடர்ந்தான் பிரேம்.
திருமணம் இனிதே நிறைவுற்றது.
கீதாவை அலங்காரம் செய்து முதலிரவிற்காக கணவன் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே வந்தவளை விழுங்குவது போலப் பார்த்தவனிடம் “என்ன அப்படி பார்க்குறீங்க?” என்று கேட்க.
“ ‘ஏன்டா… அப்படி சத்தியம் பண்ணிக் கொடுத்தாய்?’ என்று இவன் என்னைக் கேட்கிறான்” என்று ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைக் காட்டவும் “பொல்லாத ஆள்தான் நீங்க…” என்று சிரித்தாள் அவள்.
சிரித்தவளைத் தன் அருகில் இழுத்து தன் நெற்றியால் அவளது நெற்றியில் முட்டியவன் “உன் பயம் போற வரைக்கும் அசைவம்தான் கிடையாது… சைவ முத்தமாவது உண்டா?” என்று கேட்டான்.
அவனது சட்டை பட்டனை திருகியவாறே “சைவத்தோட அசைவமும் சேர்த்து சாப்பிடலாம்” என்று சொல்லி வெட்கத்தில் முகம் குனிந்தாள்.
“ஹேய்..! நிஜமாவா! இவ்வளவு சீக்கிரமே நீ ஓ.கே. சொல்றதை என்னால நம்பவே முடியலை…! அப்போ… ரெடி ஸ்டார்ட்…” என்று பிரேமத்துடன் அவளை அள்ளிக் கொண்டான் கீதாவின் பிரேம்.