Advertisement

அத்தியாயம் – 2

“என் பெயர் கீதா…” என்று அவள் சொன்னதுமே “ஓ…! நீதான் அந்த கீதாவா? நான் வரும்போதே சொல்லி அனுப்பினாங்க. ‘இப்படி ஒரு பொண்ணு ஒரே பாடத்திற்காக ரெண்டு வருடஷமா இந்த சென்டருக்கு வந்துட்டு இருக்கா நீங்கதான் எப்படியாவது அவளை பாஸ் பண்ண வைக்கணும்’ என்று சொன்னாங்க. உன்னாலதான் வேதநாயகம் சார் வேறிடத்திற்கு வேலைக்கு பொய்ட்டாராம்” என்றவன்

“அது நீதான? ஏன் இப்படி? படிக்க விருப்பம் இல்லைன்னா வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ண வேண்டியதுதானே..! இல்ல…” என்று சொல்லிக் கொண்டே போனவனை “சார்!” என்று அதட்டினாள்.

அவளை எத்தனையோ பேர் கேலி செய்திருக்கிறார்கள். ஆனால் இவனைப் போல் யாரும் அவமானப் படுத்தியதில்லை.

அதட்டலாகப் பேசியவளிடம் “என்ன?” என்று கேட்க “நான் பாஸ் பண்றதும் பண்ணாததும் என்னோட இஷ்டம். நீங்க எதுக்கு வந்தீங்களோ அதை மட்டும் பாருங்க” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டாள்.

“ம்… டீச்சர்ஸ்க்கு நல்ல மரியாதை கொடுக்கிற பொண்ணு போல” என்றவன் மற்ற மாணவர்களிடம் திரும்பி “என்னோட கிளாஸ்ல நான் பாடம் நடத்தும்போது எல்லாரோட கவனமும் இங்க இருக்கணும். அப்படி முடியாதவங்க வெளியே போகலாம்” என்றான்.

‘ம்க்கும்’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கீதா.

“சார் நேரமாகுது” என்றான் கணேஷ் முதல் வரிசை மாணவன்.

“சாரி காய்ஸ்… பாடத்தை ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி என்னைப் பற்றி சொல்லிடுறேன்.

நான் பிரேம்¸ எம்.ஏ.¸ எம்.பில். முடிச்சிருக்கேன். இங்கிலீஷ் லிட்ரேச்சர்…  பி.ஹெச்டி. பண்ணப் போறேன். அப்புறம் காலேஜ் லெக்சுரர் ஆகணுங்கிறது என்னோட சின்னவயசு கனவு” என்று தன்னைப் பற்றி கூறிவிட்டு “இதேபோல நீங்களும் உங்களுக்கென்று ஒரு லட்சியம் வைத்துக் கொண்டு படிங்க. நிச்சயம் உங்க இலக்கை அடைந்துவிடலாம்” என்றான்.

கடைசியாக “அப்புறம் நாளையிலிருந்து கரெக்டா பத்து மணிக்கு கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிடுவேன். அதனால அதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால எல்லாரும் இங்க இருக்கணும்” என்று சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தான்.

ஒரு மணி வரை நடக்கும் வகுப்பில்¸ அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே பாடத்தை முடித்துவிட்டு நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கலானான்.

கீதாவின் முறை வந்தபோது¸ அவள் மிகத் தெளிவாகவே பதிலளித்தாள்.

அவளது ஆங்கிலத்தைக் கேட்டு அவனுக்கு ஆச்சர்யம் உண்டானது. தங்கு தடையின்றி பேசியதைக் கேட்டதும் வியந்தவன்¸ நினைவிற்கு வந்தவனாக ‘ரெண்டு வருஷமா ஒரே பாடத்தைப் படிக்கிறான்னா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ல சொல்லிக் கொடுக்கிறதைவிட அதிகமாக சொல்லிக் கொடுத்திருப்பாங்களே!  அதனால தான் இவ்வளவு ஃப்ளுஎண்டாப் பேசுறா. அப்படி இருந்தும் இவ ஏன் பெயிலாகுறா?’ என்று அவன் சிந்தனை ஓடியது.

பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று சைக்கிளை எடுத்தபோது¸ பிரேமைக் கண்டாள். தனது பைக்கில் சாய்ந்தபடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.

‘சிரிப்பைப் பாரு… கிளாஸ்ல யாரையே அடிக்க போறமாதிரி முகத்தை உர்ன்னு வைத்திருந்தான். இப்போ பல்லு சுளுக்கிற அளவுக்கு சிரிக்கிறான். ஆனால்..¸ இப்போ எவ்வளவு அழகாத் தெரியுறான்’ என்றெண்ணியவள் அவனை அளவெடுக்க ஆரம்பித்தாள்.

‘நல்ல உயரம்¸ மாநிறம்¸ ஒல்லியான உடல்வாகு¸ நீளமான மூக்கு¸ தலைமுடியை கலர் செய்திருந்தான். மீசையும் வைத்து உடம்பில் இன்னும் கொஞ்சம் சதையும் போட்டால் இன்னும் நன்றாக இருப்பான்’ என்றெண்ணியவள் உடனே திகைத்தான்.

‘அவன் மீசை வைத்தால் என்ன? வைக்கலைன்னா என்ன? அவன் எப்படி இருந்தால் எனக்கென்ன வந்தது?’

துப்பட்டாவை பின்புறமாக முடிச்சிட்டுக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கிளம்பியவளை வழிமறைத்து நின்றான் பிரேம்.

“என்ன சார்?” என்றாள் எரிச்சலுடன்.

“ஒன்னுமில்லை… மற்ற பசங்க எல்லாம் பைக்¸ ஸ்கூட்டின்னு போறாங்க… நீ மட்டும் சைக்கிள்ல போறியே…? உன் வீடு எங்கே இருக்கு? போய்சேர லேட்டாகும்ன்னா வீட்ல இருந்து யாரையாவது வர சொல்ல வேண்டியதுதானே?” என்று விசாரித்து¸ ஆலோசனையும் வழங்கினான்.

“வீடு பக்கம்தான்… அரை மணிநேரத்தில் போய் சேர்ந்திடுவேன் சார். எனக்கு லேட்டாயிடிச்சு… அம்மா தேடுவாங்க¸ நான் போறேன்” என்று கிளம்பிவிட்டாள்.

‘பெரிய அக்கறையான விசாரிப்பு… வந்துட்டான் பெரிய இவனாட்டம்… இன்னிக்கு அம்மாகிட்ட எப்படியாவது ஸ்கூட்டி வாங்கி கேட்கணும்’ என்று நினைத்தபடியே சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவளின் முன்பு அவளை இடிப்பதுபோல் வந்து நின்ற பைக்கால் தடுமாறியவள் சமாளித்து நின்றாள்.

சைக்கிளிலிருந்து இறங்கியவள் பைக்கை ஓட்டியவனை “கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்படித்தான் வண்டியை சைக்கிளை இடிக்கிற மாதிரி ஓட்டுவீங்களோ?” என்று திட்டியவாறே¸ அவர்களைத் தாண்டி சைக்கிளை உருட்டிச் சென்றாள்.

“ஏய் நில்லு! உன்னைப் பார்க்க அவ்வளவு தூரத்தில் இருந்து வர்றோம்… நீ கண்டுக்காம போறியே!” என்றான் ஒருவன்.

எரிச்சல் அடைந்தவளாய் “நீங்க எதுக்காக என்னைப் பார்க்க வரணும்?” என்றாள்.

“டேய் மச்சான் சொல்லட்டுமா?” பைக்கை ஓட்டி வந்தவன் பின்னாலிருந்தவனிடம் கேட்டான்.

“சொல்லு ஜெபின்..” என்றான் மற்றவன்.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் சைக்கிளை நகர்த்தினாள்.

“அட நில்லும்மா!  சொல்ல வந்ததை கேட்டுட்டுப் போ” என்றான் அந்த ஜெபின்.

“என்னன்னு சொல்லித் தொலைங்க… எனக்கு நேரமாகுது¸ என் அம்மா தேடுவாங்க” என்றாள்.

“சின்ன பாப்பா… இவளைத் தேடுவாங்களாம்…” என்று மற்றவனிடம் ஜெபின் சொல்ல¸ இருவரும் சிரித்தனர்.

சிரிப்பதைக் கண்டதும் கோபமடைந்தவள் “ஹலோ! என்ன கலாட்டா பண்றீங்களா?” என்றாள்.

“என்ன கீதா லவ் சொல்ல வந்தா… கலாட்டா பண்றதா சொல்றே?” என்றான் அந்த ஜெபின்.

“என்னது லவ்வா!” என்று அதிர்ந்தவள் சைக்கிளை மிதித்து சென்றுவிட்டாள்.

“ஏய் கீதா! நில்லு!” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய இருந்தவனைத் தடுத்து¸ “போகட்டும் விடு” என்றான் அவனது நண்பன் பழனி.

“என்ன மச்சான்… அவள் எதையும் கேட்காமல் போயிட்டா… வா போய் சொல்லிட்டு வரலாம்” என்றவனிடம் “நாளைக்கு வருவால்ல… அப்போ சொல்லிக்கலாம்¸ இப்ப கிளம்பு. காலேஜ் கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க..” என்றவன் பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்து¸ போக மனமில்லாமல் அவள் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனைத் தட்டி “போ ஜெபின்!” என்றான்.

வீடு வந்து சேர்ந்த பிறகும் கீதாவுக்கு படபடப்பு அடங்கவில்லை.

“என்னம்மா… என்னாச்சு? ஏன் ஒருமாதிரியாக இருக்குற¸ தலைவலிக்குதா?” என்று பரிவோடு தலையைத் தடவினார் தாமரை.

தனது பதற்றத்தைப் பற்றி கூறினால் அவரும் பயப்படுவார் என்பதால்¸ அண்ணனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்றெண்ணி காரணத்தை மறைத்து “இல்லைம்மா¸  செம வெயில்… காலையில வேற சரியா சாப்பிடவில்லையா… அதனால கொஞ்சம் ஒரு மாதிரியிருந்தது” என்று சமாளித்தாள்.

“சரி போய் முகத்தை நல்லா கழுவிட்டு வா… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சமையலறைக்கு சென்றார் தாமரை.

“அம்மா உங்க மீன் குழம்பு வாசம் அப்படியே ஆளை தூக்குது… எப்படிம்மா இவ்வளவு நல்லா வைக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“ஐஸ் வைத்ததெல்லாம் போதும்… பேசாமல் சாப்பிடு” என்று மகளின் வாயடைத்தார் தாயார்.

“எப்படிம்மா உடனே கண்டுபிடிச்சிட்டீங்க? அம்மான்னா… அம்மாதான் செம ஷார்ப்…” என்று மற்றுமொரு ஐஸை அவர் தலையில் வைத்துவிட்டு சாப்பிடுவதில் கவனமானாள்.

மாலையில் வந்த கண்ணன் காபி குடித்ததும்¸ தனக்கொரு ஸ்கூட்டி வாங்கித் தருமாறு கேட்டாள்.

“நான் தான் ஏற்கனவே உனக்கு சொல்லிட்டேனே… இந்தப் பாடத்தை பாஸ் பண்ணி எப்போ காலேஜ்க்கு போறியோ அப்போதுதான் உனக்கு ஸ்கூட்டி எடுத்துத் தருவேன்னு… அப்புறம் ஏன் இப்படி திடீரென்று தொந்திரவு பண்றே?” என்றான் அவன்.

“ஐயோ¸ அண்ணா! இன்றைக்கு நான் வரும்போது…” என்று நடந்ததை தமையனிடம் கூறினாள்.

அவள் சொன்னவற்றையெல்லாம் கேட்டுவிட்டு “என்ன ஸ்கூட்டிக்காக பொய்யா?” என்றவன்

“எத்தனை வருஷமா அந்த பக்கம் போயிட்டு வர்றே… ரெண்டு வருஷம்! அப்போதெல்லாம் இல்லாத பிரச்சினை திடீரென்று எங்கிருந்து வந்தது…?  கடைசியாக நீ எழுதிய எக்ஸாமையும் சேர்த்து மொத்தம் ஆறுதடவை எழுதி பெயிலாயிட்டு வந்திருக்கே… ஒழுங்காக அதை எழுதி பாஸ் பண்ணிட்டு வந்து என்கிட்ட வண்டி கேளு¸ மறுநாளே வாங்கித் தர்றேன்” என்று சொல்லிவிட்டு உடைமாற்ற சென்றான்.

மகள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தாமரை மகன் பின்னோடே சென்று “கண்ணா.. அவ மதியம் வந்ததிலிருந்து சரியாவே இல்லைப்பா. அத்தோடு அவள் பொய் சொல்லவும் மாட்டா… இதுக்கு முன்னாடி எப்போதாவது இப்படி சொல்லியிருக்கிறாளா? இல்லையே..! நீ கொஞ்சம் யோசித்துப் பாருப்பா…

எனக்கு கூட தினமும் அவ திரும்பி வர்றவரைக்கும் பயமாவே இருக்கு. நமக்கு ரெண்டு வீடு தள்ளியிருக்கிற அந்த உஷா எவ்வளவு சீக்கிரமே ஸ்கூட்டியில் வந்துடுறா தெரியுமா? அதுக்கப்புறம் இவள் வந்து சேர்றவரைக்கும் மனசு அடிச்சுக்கிட்டே இருக்குப்பா… அவ காலேஜ் போனதும் வாங்கிக் கொடுக்கிறதா சொல்றதை இப்பவே வாங்கிக் கொடேன்” என்றார் தாயார்.

“அம்மா நீங்க புரியாம பேசுறீங்க… எனக்கு என்னவோ அவ வேணும்னே பொய் சொல்ற மாதிரிதான் தெரியுது. இன்னிக்கு காலையில நீங்களே பார்த்தீங்கல்ல… லேட்டாகி எழுந்திருக்க வேண்டியது¸ அப்புறம் அரக்கபரக்க கிளம்பி சைக்கிள்ல போனா சீக்கிரம் போய் சேர முடியுமா?” என்று கேட்டவன்¸ தாயார் அவனை ஒருமாதிரியாகப் பார்க்கவும் அவனே தொடர்ந்தான்.

“முடியாது இல்ல. அதனால தான் இப்படி சொன்னால் பயந்துபோய் வண்டி வாங்கிக் கொடுத்துடுவோம் என்று பொய் சொல்றாம்மா. நீங்க அதைப் போய் பெரிசா நினைச்சிக்கிட்டு…. போங்கம்மா..” என்று தாயாரை அனுப்பி வைத்தான்.

அவன் பேசியதைக் கேட்ட கீதாவிற்கு அழுகை வந்தது. தன் அறைக்குச் சென்று நன்றாக அழுதாள். ‘தங்கை இப்படிப் பொய் சொல்வாளா என்று கொஞ்சமும் யோசிக்காமல் என்ன மாதிரி பேசுறான்? என்னுடைய பழைய அண்ணன் எங்கே போனான்?’ என்று அண்ணனது பழைய அன்பை நினைத்து நினைத்து அழுதாள்.

Advertisement