Advertisement

அத்தியாயம் – 9

வீட்டிற்குள் காலை வைத்ததுமே ஒருவிதக் குளுமையை அவளால் உணர முடிந்தது. தரை முழுவதும் சில்லென்றிருந்தது. வீட்டினுள் தரை சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் பார்வைக்கு அழகாக இருந்தது. வெளிப்புறத்தைப் பார்த்ததும் அவளுக்குத் தோன்றியதுபோலவே அது… வீட்டின் நடுவில் திறந்த வெளி கூடமுடைய வீடாகவே இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இத்தனை அறைகள் இருக்கும் என்று தோன்றாது… ஆனால் அதிகமாகவே அறைகள் இருந்தன.

“வாங்க அக்கா… இது உங்க அறை” என்று தரை தளத்திலிருந்த ஒரு அறையைக் காட்டினாள். கூடுதல் விபரங்களாக “பக்கத்து அறை பாப்பாவோடது… அடுத்தது அம்மா¸ ஐயாவோட அறை. மாடியில் சின்ன ஐயாவோட அறை… மற்ற அறைகள் எல்லாம் விருந்தினர் வரும்போது மட்டும் திறந்திருக்கும்..” என்று அவளாகவே கூறினாள்.

முடித்துவிட்டு “நீங்க குளிச்சிட்டு சாப்பிட வாங்க..” என்று சொன்னாள்.

“மல்லி எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம். நான் அவங்களை பார்த்த பிறகு சாப்பிடுறேன்” என்றவள் தான் கொண்டு வந்த துணிகளை எடுத்து அங்கிருந்த அலமாரியில் அடுக்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மல்லி “கீதாக்கா… நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா?” என்றாள்.

“ம்… சொல்லேன்..”

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…” என்றாள்.

“நீ கூடதான் அழகாயிருக்கே மல்லி… அது மட்டுமில்லாமல் நீ எவ்வளவு அழகா பேசுறே தெரியுமா?” என்றவள்¸ அவளுக்கு சில குறிப்புகள் கொடுத்தாள்.

‘எப்போதும் இப்படி தலைமுடியில் எண்ணெய் வைக்காமல் இருந்தால் முடி உடைந்து பார்க்க நன்றாக இருக்காது. அதனால் போதுமான அளவு எண்ணெய் தேய்க்க வேண்டும். காலிலிருக்கும் வெடிப்பிற்கு கடுகு எண்ணெயுடன் மெழுகை சேர்த்து சூடுபண்ணி தொடர்ந்து போட்டால் சீக்கிரமே சரியாகிவிடும்’ இப்படி சில குறிப்புகளைக் கொடுத்தவளிடம் “சரிக்கா… நீங்க சொன்ன மாதிரியே செய்றேன். இப்போ நீங்க குளிச்சிட்டு வாங்க…” என்று சொல்லி வெளியேறினாள்.

அறையின் வசதிகளைப் பார்த்தவள் ‘பரவாயில்லையே… வேலைக்கு வந்தவளுக்கும் வசதியாகவே எல்லாவற்றையும் செய்யுறாங்க!’ என்று பாராட்டியவாறே குளித்து முடித்து வெளியே வந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு பந்தை போட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தென்பட்டான்.

‘இவன்தான் அந்த சர் சொன்ன… மூன்று வயதுக் குழந்தையோ?’
சிறுவனின் அருகில் சென்றாள்.

தன்னருகே உயரமாக வந்து நின்றவளைக் கண்ட குழந்தை நிமிர்ந்து பார்த்தான். சில நொடிகள் அவளைப் பார்த்திருந்துவிட்டு அவளிடம் கேட்டான் “நீ அம்மாவா…? ஆன்டியா..?” என்று.

‘என்னடா இவன் இப்படிக் கேக்குறான்…’ என நினைத்தவள் ஆன்ட்டி என்றதும்¸ “போ… நான் உன்கூட சண்டை…” என்று ஓடிச் சென்று அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான். மல்லி ஏற்கனவே சொன்ன அந்த வீட்டு அம்மாவுடைய அறை அது.

சில நிமிடங்கழித்து ஒரு வயதான பெண்மனியுடன் வந்தான் சிறுவன்.

அவரைப் பார்த்ததும் கீதா “வணக்கம்!” சொன்னாள்.

புன்னகையுடனே தானும் வணக்கம் சொன்னவர் “பயணம் எப்படி இருந்தது? வீடு எப்படி இருக்கு? சாப்பிட்டாச்சா?” என்று தொடர்ந்து கேட்டார்.

புன்னகையுடன் “பயணம் நன்றாக இருந்தது…” என்று சொல்லிவிட்டு “வீடு இயற்கையான சூழலில் ரொம்பவும் அழகா இருக்கு… சாப்பாடு… உங்களைப் பாத்தப்புறம் சாப்பிடலாம்னு இருந்தேன்” என்று அவர் கேட்ட கேள்விகளுக்கான பதிலை உரைத்தவள் “அப்புறம் உங்க சார் எங்கே நான் இன்னும் பார்க்கவில்லை?” என்று கேட்டாள்.

“அவர் தோப்புக்கு போயிருக்கார்… வரும் நேரம்தான்” என்றவர் சிறுவனை அறிமுகப்படுத்தினார்.

“இவன் பரத்… என்னோட பேரன். இவனோட அம்மா இப்போ இங்கில்லை…” என்றார்.

“உங்க பெயரென்ன மேடம்?” என்று அவரது பெயரைக் கேட்டவளிடம் “யமுனா…” என்றவர் “அதென்னம்மா மேடம் சொல்லிக்கிட்டு… நீ இங்கே என்ன ஆபீஸ் வேலையா பார்க்க வந்திருக்கிறாய்…? வீட்டில் எங்களுக்கு கம்பெனி கொடுப்பதும்¸ என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் போனால் கொஞ்சம் கணக்கு வழக்குகளை பார்ப்பதும் தான் உன் வேலை… அதுவும்கூட என் மகன் இல்லாத நேரங்களில் தான்… அதனால் என்னை மேடம்னு எல்லாம் கூப்பிடாதே…” என்றார்.

“சரி… ஆனால் வேறு எப்படிக் கூப்பிடுவது?” என்று கேட்டு “முதலாளி அம்மா என்று சொல்லவா?” என்றாள்.

“என்ன..! முதலாளி அம்மாவா…! இல்லை அப்படி வேண்டாம்…”

“ஆன்ட்டி சொல்லட்டுமா?” என்று கேட்கவும் “ஏன்? நீ தமிழ்நாட்ல தானே இருக்கே..! நல்ல தமிழில் எப்படி அழைப்பது என்று யோசி” என்றார்.

“அப்போ… பெரியம்மா…?”

“நான் என்ன உன் அம்மாகூட பிறந்தவளா?” என்றார்.

எதைச் சொன்னாலும் வேண்டாம் எனவும் அவளுக்கு சற்று எரிச்சலாக இருந்தது. அதை முகத்தில் காட்டாமல் “அப்போ எப்படிக் கூப்பிடணும்னு நீங்களே சொல்லுங்க… நான் அப்படியே கூப்பிடுறேன்” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு முறுவலித்தவர் தன்னை ‘அத்தை’ என்று அழைக்குமாறு கூறினார்.

“அத்தையா…!” என்று சற்று அதிர்ந்தாள் அவள்.

“ஏன் இவ்ளோ அதிர்ச்சி அடையுறே?” என்றவரிடம் கீதா “நான் எப்படி உங்களை…” என்று இழுக்கவும்¸ “வேறு எப்படி கூப்பிடப் போறே? யமுனா என்றா..?” என்று கேட்டார்.

“இல்லை… இல்லை.. நான் அத்தைன்னே கூப்பிடுறேன்” என்றாள்.

“சரி வா… அங்கே உட்கார்ந்து பேசலாம். இப்போ அவர் வந்துவிடுவார்… வந்ததும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்று அவளை அருகிலிருந்த இடத்தில் அமரச் சொல்லி தானும் அமர்ந்து… இருவரும் பொது விஷயங்களைப் பற்றி பேசலாயினர்.

யமுனா சொன்னதுபோல் சற்று நேரத்தில் நாஞ்சில்நாதன் வந்துவிட்டார். அவரையும் இவளுக்கு அறிமுகப்படுத்திவிட்டு சாப்பிட அமர்ந்தனர்.

சாப்பிடும் போது நாஞ்சில்நாதன் விவசாயம் குறித்து நிறைய பேசினார். தன் வேலைப்பளுவைக் குறிப்பிடும் போது “இந்தப் பையனும் எனக்கு உதவியாக இங்கேயே இருந்து பார்த்துக்கிட்டா எவ்வளவு ஆறுதலா இருந்திருக்கும்?” என்றார்.

கீதாவிற்கு சற்று சங்கடமாக இருந்தது. தனது மகன் குறித்து தனக்கிருக்கும் மனத்தாங்கலை வேற்று நபர் முன்பாகப் பேசுகிறாரே, என்றெண்ணி “அத்தை… நான் வேணும்னா அந்த ரூம்ல இருந்து சாப்பிடவா?” என்று யமுனாவிடம் கேட்டாள்.

“ஏன்? என்னாச்சு?” என்றார் அவர்.

“இல்லை… நீங்க ரெண்டுபேரும் உங்களோட குடும்ப விஷயத்தைப் பற்றி பேசும்போது நான் இருப்பது அவ்வளவு சரியில்லை…” என்று எழுந்தாள்.

“உட்கார்ந்து சாப்பிடும்மா… குடும்ப விஷயம் பேசும்போது நீ இருப்பதை நாங்கள் தவறாக நினைக்கவில்லை… ஏன்னா¸ நாங்க உன்னை வேற்றாளாக எண்ணவில்லை” என்று யமுனாவும் “இந்த வீட்டில் உள்ளவரை நீயும் இந்த குடும்பத்துப் பெண்தான்… அதனால் இந்த மாதிரி நினைத்து சங்கடப்படாதே..” என்று நாஞ்சில்நாதனும் கூற¸

“சரி சர்” என்று அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“என்னம்மா இது? என் மனைவி உனக்கு அத்தை… நான் மட்டும் சாரா?” என்று அவர் கேட்க¸ அவளுக்குப் புரையேறிவிட்டது.

“பார்த்தும்மா… தண்ணீர் குடி…” என்று தம்ளரை கையில் எடுத்துக் கொடுத்துவிட்டு முதுகை நீவிவிட்டார் யமுனா.

“அட! நான் என்ன உன்னை பயமுறுத்தவா செய்தேன்? கண்ணில் நீர் கோர்த்துவிட்டதே..!” என்ற நாஞ்சில்நாதன  அவள் சற்று சரியாகி அவரைப் பார்க்கவும் “இவள் உனக்கு அத்தை என்றால்… நான் உனக்கு மாமா… எங்களை இப்படி உறவுமுறை சொல்லி அழைக்க¸ அந்த சொந்தம் இன்னும் வரலை. நீயாவது அழைத்தால் நாங்க மிகவும் மகிழ்வோம்” என்றார்.

“சரி மாமா… நான் அப்படியே கூப்பிடுறேன்” என்றாள் புன்னகையுடன்.

“ம்.. இதுதான் கரெக்ட்… அப்படியே செய்” என்று முடித்தார் அவர்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் தூங்கச் சென்றுவிட¸ அன்றே தன் பணியைத் தொடங்கிவிடும் எண்ணத்தில் பரத்திற்கு சில வார்த்தைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்றுக் கொடுத்தாள். சில தமிழ்ப் பாடல்கள் முதல் வரிசை எண்களையும் பொதுவான வேறுசில விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தாள்.

அதன்பின் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நல்லபடியாகக் கழிந்தது.
யமுனாவிற்கு கதை புத்தகம் வாசித்துக் காட்டுவாள். ஒவ்வொரு கதையை முடித்ததும் அதைப்பற்றி விவாதிப்பதை இருவரும் வழக்கமாக்கிக் கொண்டனர். நாதனிடம் விவசாயம் தொடர்பாக ஏதேனும் கேட்டுக் கொள்வாள்.

அன்று நாதன் ஓய்வாக வீட்டில் அமர்ந்திருந்த சமயத்தில் கணவனும் மனைவியும் பேசியவாறு அமர்ந்திருந்தபோது போன் ஒலித்தது. அதை எடுத்துப் பேசிய யமுனா சிரித்த முகத்துடனே பேசி முடித்துவிட்டு நாதனிடம் திரும்பினார்.

அவர் கேட்கும் முன்பாக தானே சொல்லத் தொடங்கிவிட்டார். “நம்ம பப்பு இந்த வாரம் இங்கே வர்றானாம்… அவனுக்கு ஒரு வாரம் லீவாம்…” என்று தன் மகிழ்ச்சிக்கான காரணத்தை கணவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

அவர் “இனிமேல் உன்னைக் கையிலே பிடிக்க முடியாதே… அவன் வருவதற்குள் இந்த வீட்டை ரெண்டாக்கிவிடுவாயே…” என்று கிண்டலடித்தார்.

“ம்ப்ச்… உங்களுக்கு என்னை எதாவது சொல்லாமல் பொழுது போகாதே…” என்று செல்லமாக முறைத்தவாறே முகவாயை தோளில் இடித்துக் கொண்டவர் கீதாவை அழைத்தார்.

“என்ன அத்தை?” என்று வந்தவளிடம் “நீ ஹவுஸ் கீப்பிங் படித்ததாகச் சொன்னாயே… இந்த ஹாலை கொஞ்சம் அழகாக மாற்றி அமைக்க முடியுமா?” என்று கேட்க

“அடியே…! வீட்டையே மாத்தி அமைக்கனும்னா இன்ஜினியர் கிட்டத்தான் போகனும். அத்தோட நம்ம பப்புவும் அதுக்கு சம்மதிக்க மாட்டான்… அதனால நீ பொருட்கள் எதையாவது மாற்றி அடுக்க வேண்டும் என்றால் அதைச் சொல்…” என்றார் சிரிக்காமல்.

அங்கு வந்து நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த கீதா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

“ஆனாலும் உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிப் போச்சு… என் பையன் வரட்டும் உங்களை ஓடவிட்டு அதைக் கரைக்கிறேன்… பாருங்க…” என்ற யமுனா தானும் சேர்ந்து சிரித்தார்.

அருமையான கணவன் – மனைவி எப்போதும் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்கிறார்கள்.

“கீதா உன்னோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கும்மா…” என்று மனமாரப் பாராட்டினார் யமுனா.

“நன்றி அத்தை…” என்றவள்¸ இன்னும் இரண்டு நாட்களில் அந்த பப்பு வந்துவிடுவான் என்பதால் மல்லியை அழைத்து உடனே வேலையைத் தொடங்கிவிட்டாள்.

பரத்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ‘நான் இதை எடுப்பேன்… அதை இங்கே வைப்பேன்’ என்று தொல்லை செய்யவும் அவனைத் தூக்கி மேஜைமேல் அமர்த்திவிட்டாள்.

இடையில் அவர்களைப் பார்த்து அவர்களுக்கு குளிர்பானம் எடுத்து வந்த யமுனா “கீதாம்மா… என் பையன் மூணு மாசம் கழித்து வருகிறான்… வருபவன் உன்னுடைய அலங்காரத்தைப் பார்த்ததும் திகைத்துப் போய்விட வேண்டும்” எனவும்¸ அவர் சொன்னதைக் கேட்ட கீதா “என் அலங்காரத்தையா…!” என்று அவள் திகைத்துவிட்டாள்.

“இல்லைம்மா… உன்னுடைய என்றால்… உன்னால் மாற்றமடையப் போகும் இந்த வீட்டு அலங்காரத்தை சொன்னேன்” என்றார்.

“ஓ…!” என்று அவள் சமாதானமாகிவிட¸ மல்லியை மகன் அறைக்குப் போகச் சொன்னார். “மல்லி நீ போய் பப்புவோட ரூமை கிளீன் பண்ணு… கர்ட்டன்¸ பெட்ஷீட்¸ தலையணை உறை எல்லாம் மாற்றிவிடு… இல்லைன்னா அவனுக்கு கோவம் வரும்” என்று அவளை துரிதப்படுத்தினார்.

வார்த்தைக்கு வார்த்தை அவர் ‘பப்பு‘ எனவும் கீதாவுக்கு சிரிப்பு வந்தது. ‘பெயருக்கேற்றாற்போல பப்ளியாக இருப்பான் போல’ என்றெண்ணிக் கொண்டாள்.

Advertisement